13/03/2011

தமிழில் கொள்ளையர் கதைப்பாடல்கள் - முனைவர். ஒ. முத்தையா

காலங்காலமாக வாய்மொழியாகவே நாட்டுப்புற மரபுகளையும் பண்பாடுகளையும் நிலை பெறச் செய்து வரும் பெருமை நாட்டுப்புற இலக்கியங்களுக்கு உண்டு. மக்கள் இலக்கியங்களாக அந்தந்தப் பகுதி மண்ணுடன் சேர்ந்தே வளம் பெற்று வளர்ந்து வந்துள்ளன. சமூகப் பொருளாதாரச் சூழலின் காரணமாக, சமூக ஒழுக்கத்திலிருந்து மாறிக் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, தங்களின் வீரதீரச் செயல்களினால் மக்களின் நினைவுகளில் தங்கிவிட்ட கொள்ளையர் பற்றிய கதைகளும், பாடல்களும், கதைப்பாடல்களும் இன்றளவும் பேசப்பட்டும் பாடப்பட்டும் இலக்கியங்களாகப் பரிணமித்திருக்கின்றன. நாட்டுப்புறவியல் ஆய்வில் காலந்தாழ்த்தியே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட இக்கொள்கையர் கதைப்பாடல்கள் பற்றியத் தரவுகளை முன் வைக்கிறது.

தமிழகத்தில் ஜம்புலிங்கம், சந்தனத்தேவன், காசித்தேவர், கவட்டைவில் கருவாயன், கதிர்வேல் படையாச்சி, சிப்பிப்பாறை கந்தசாமி நாயக்கர், மணிக்குறவன், ஆத்துக்காட்டுத் தங்கையா, சன்னாசித் தேவர், குமரி லட்சுமணத் தேவர், சீவலப்பேரிப் பாண்டி, மலையூர் மம்பட்டியான், அருவாவேலு, கொடுக்கூர் ஆறுமுகம், தீச்சட்டி கோவிந்தன் என்ற பதினைந்திற்கும் மேற்பட்ட கொள்ளையர்களின் கதைகள் பாடலாகவும், கதைப்பாடலாகவும் கதையாகவும் வழக்கில் இருந்து வருகின்றன. இவற்றில் நூல்வடிவம் பெற்றிருப்பவை மிகமிகக் குறைவு. இவர்களில் கவட்டைவில் கருவாயன், மணிக்குறவன் ஆகிய இருவரைத் தவிர ஏனைய அனைவரும் கிராம சமுதாயத்திலிருந்து தோன்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கொள்ளையர் தோன்றுவதற்கான சமூகச் சூழல்

கொள்ளையர் உருவாவதற்குப் பல்வேறு சமூகப் பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக அமைகின்றன. பஞ்சம், பருவமழை பொய்த்தல், வேலை வாய்ப்பின்மை, போலீஸ் அடக்குமுறை போன்ற சூழல்கள், திருட்டு, கொள்ளை நிகழ்வதற்கும், கொள்ளையர் உருவாவதற்கும் காரணமாக அமைகின்றன. 1860 லிருந்து 1940 வரை உள்ள காலகட்டத்தில் சென்னை மாநிலத்தில் கிராமப் பகுதிகளில் நிகழ்ந்த குற்றச் செயல்களை ஆராய்ந்த டேவிட் ஆர்னால்ட் ''பஞ்சமே கிராமப்புறக் குற்றங்களின் முக்கியக் காரணம்'' என்று குறிப்பிடுகின்றனர். வலுவான உடற்கட்டுடைய மனிதர் அனைவருக்கும் வேலை தருமளவிற்குக் கிராமப் பொருளாதாரம் இருப்பதில்லை. குறைந்த அளவு வேலைவாய்ப்பே கிராமங்களில் உள்ளது. ''கிராமங்களில் நிலவும் வேலையற்ற உபரி மக்கள் தொகை கொள்ளையரின் தோற்றத்திற்கு முதலாவதும் மிக முக்கியமான அம்சமாகும் என்றும் தனிப்பட்ட முறையில் இழைக்கப்படும் அநீதிகளும் ஒருவனைக் கொள்ளையனாக மாற்றக்கூடும்'' என்கிறார் ஹாப்ஸ் பாம். ஏதாவது ஒரு சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டுதான் எந்தவொரு மனிதனும் கொள்ளையனாக மாறுகின்றான். அந்த நிகழ்ச்சி அப்படி ஒன்றும் பெரியகாரியமாக எல்லாக் காலங்களிலும் இருப்பதில்லை. ஆனால், அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவன் சமுதாயத்திற்கு வேண்டாதவனாக ஒதுக்கி வைக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது. குற்றத்தைப் பார்க்காமல் ஆளை மட்டும் குறி வைத்து உண்டாக்கப்படும் காவல் துறையினரின் குற்றச்சாட்டு, பொய் சாட்சியும், திரிபு கொண்டு நிலை நாட்டப்படும் நீதிமன்றத் தீர்ப்பு அல்லது நீதியை முடக்கிப் போட்ட சதி, நியாயமற்ற தண்டனை மூலம் பெற்ற சிறைவாசம், அநியாயம் தனக்கே இழைக்கப்பட்டுவிட்டதாக எண்ணுகின்ற மனத்தின் பொறுமல் இவையெல்லாம் ஒரு நபரைக் குமுற வைத்து சமுதாயத்திற்கு வேண்டாதவனாகக் கொள்ளையனாக உருவாக்கி விடக்கூடும். இது பொதுவாக அனைத்துக் கொள்ளையருக்கும் பொருந்தும் என்று குறிப்பிடுகின்றார் ஹாப்ஸ் பாம். மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில், சமூகக்கொடுமை, பஞ்சம், சுரண்டும் வர்க்கத்துடன் ஏற்பட்ட பகையுணர்வு, தனி மனித அநீதி போன்ற தாக்கங்களால் தனி மனிதன் சமூகக் கொள்ளையனாக உருவாக்கப்படுகின்றான் என்பதை உணரலாம். சுயநலத்தோடு கொள்ளையடித்துப் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டும் செயல்படும் கொள்ளையர்களின் செயல்பாடுகளிலிருந்து ஆளும் வர்க்கத்தால் அநீதி இழைக்கப்பட்டு கட்டாயக் கொள்ளையர்களாக்கப்பட்ட கொள்ளையர்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக வேறுபடுகின்றன. சமூகச் சூழலாலும், சமூகக் கொடுமையாலும் கொள்ளையர்களாக மாறியவர்களில் சிலர், தங்களை இந்நிலைக்கு ஆளாக்கிய ஆதிக்க வர்க்கத்துடன் பகையுணர்வும், தம்மையொத்த ஏழைகளிடம் நட்புணர்வும் கொண்டிருந்தனர். இதனால் இவர்கள் நிலக்கிழார், அநியாய வட்டிக்குப் பணம் கொடுத்து மக்களைச் சுரண்டுபவர்கள், கையூட்டுப் பெற்று வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு அதிகாரிகள் ஆகியோரைத் தண்டித்துக் கொள்ளை அடிப்பதுடன் மட்டுமின்றி அக்கொள்ளைப் பொருட்களை ஏழைகளுக்கு வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டனர்.

ஜம்புலிங்கம்:

பண்ணையாரைப் பகைத்ததன் விளைவாகப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை பெற்று ஜெயிலிலிருந்து தப்பியோடித் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொள்ளைக்காரனாக மாறியவன் ஜம்புலிங்கம். வீரச்செம்புலி ஜம்புலிங்கம் என்று அழைக்கப்படும் இவன் நெல்லை மாவட்டத்தில் வள்ளியூருக்குத் தெற்கே உள்ள வடலிவிளை என்னும் கிராமத்தில் பிறந்தவன். ஜம்புலிங்கத்தின் கொள்ளைச் செயல்களைப் புகழ்ந்து பாடுவதாக ஐம்பத்தைந்து பாடல்கள் கி.வா.ஜ தொகுத்த மலையருவியில் இடம்பெற்றுள்ளன. 1929இல் ஜம்புலிங்க நாடார் ''துர்விளையாடற் சிந்து'' என்ற பெயரில் பெரிய எழுத்துப் புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் ஜம்புலிங்கத்தின் வரலாறு முழுமையாகச் சொல்லப்படவில்லை. அவன் வாழ்க்கைச் சம்பவங்கள் ஒரு சில மட்டுமே பாடலாய் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

வடலிவிளையைச் சேர்ந்த பண்ணையார் ஏழைப் பெண்ணொருத்தியை மானபங்கம் செய்ய முயன்றபோது ஜம்புலிங்கம் தடுத்துப் பண்ணையாரின் செயலைக் கண்டித்தான். இதனால் கோபம் அடைந்த பண்ணையார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஜம்புலிங்கம் தன் வீட்டில் பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டிப் போலீசாரைக் கொண்டு அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தார். செய்யாத குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற அவன் சிறையிலிருந்து தப்பி வந்து பண்ணையாரைப் பலி வாங்கினான். பின்பு தலைமறைவாகிக் கொள்ளைக்காரனாக மாறினான். இதையே வேறு ஒரு இடத்தில் நடந்த கொள்ளைச் செயலில் ஜம்புலிங்கத்திற்கும் தொடர்பு உண்டு என்று துரைராஜ் என்பவனால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு ஜம்புலிங்கம் சிறை சென்றதாகக் கூறுகிறார் ஆ. சிவசுப்பிரமணியன். மேற்கூறிய இரண்டு நிகழ்ச்சிகள் வேறுவேறாக அமைந்திருந்தாலும் ஜம்புலிங்கம் கொள்ளையனானதற்குப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, சிறை சென்றதே அடிப்படை என்பது தெளிவாகின்றது.

ஜம்புலிங்கம், வசதி படைத்தவர்களைக் கொள்ளையடித்துக் கிடைத்த பொருள்களை ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்து உதவி செய்து கொள்ளையனாகத் திரிந்தான். ஜம்புலிங்கம் தனியாக அல்லாமல் தன்னுடன் சில கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு கூட்டமாகக் கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. போலீசாருக்குச் சிம்ம சொப்பனமாய் விளங்கிய அவன் போலீசாரையே துரத்தியடித்திருக்கின்றான். இறுதியில் போலீசாரின் அச்சுறுத்தலால் தன் ஆசைநாயகியால் காட்டிக் கொடுக்கப்பட்டுத் தப்பியோடும் வேளையில் சுட்டுக் கொள்ளப்படுகின்றான். அரசாங்கத்தால் கொள்ளைக் குற்றம் சாட்டப்பட்ட அவன் மக்களால் பாதுகாக்கப்பட்டான், பாடப்பட்டான்.

சந்தனத்தேவன்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள போத்தம்பட்டி என்ற கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் சந்தனத்தேவன், சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலைகாரனாகித் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு, ஒரு பத்தினியின் சாபத்தால் அவல முடிவை அடைந்தவன்.

சந்தனனும், அவன் மனைவி மூக்காயியும் மறுவீடு சென்றிருந்த நேரத்தில், சந்தனனின், மாமன் கருப்பத்தேவன், ஆடு திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஊர்க் கூட்டத்தில் கட்டி வைக்கப்படுகின்றான். மாமனை விடுவிக்கச் சென்ற சந்தனனுக்கும் அந்த ஊர் வஸ்தாபிக்கும் தகராறு ஏற்படுகின்றது. தகராறில் வஸ்தாபி இறந்துவிட சந்தனன் மேல் கொலைக்குற்றம் சுமத்தப்படுகிறது. போலீசாருக்குப் பயந்து சந்தனன் தலைமறைவாகின்றான். பின்பு கொள்ளையனாக மாறுகின்றான். சந்தனனின் கொள்ளைச் செயல்களில் அவனுடைய அண்ணன் மாயாண்டியும் சேர்ந்து கொள்கிறான். இருவரும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து கொண்டு கொள்ளைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். நாளுக்கு நாள் சந்தனன், மாயாண்டியின் கொள்ளைச் செயல்கள் அதிகமாகவே, போலீசார் சந்தனனைப் பற்றித் துப்புகொடுப்பவர்களுக்குச் சன்மானம் தருவதாக ஊர் ஊராகச் சென்று சாட்டுகின்றனர். இந்நிகழ்ச்சியைக் கீழ்வரும் பாடல் சுட்டுகிறது.

சந்தனனைப் பிடிப்பவர்க்கு சர்க்காரில் வேலை தாரோம்

மாயாண்டியைப் பிடிப்பவர்க்கு மேனேசர் வேலை தாரோம்

மூன்னூறு ரூபாய் தாரோம் முன்சீப்பு வேலையும் தாரோம்

நானூறு ரூபாய் தாரோம் நாட்டாண்மை வேலையும் தாரோம்

இன்னும் பணமும் தாரோம் இன்ஸ்பெக்டர் வேலையும் தாரோம்.

சந்தனத் தேவனின் கொள்ளைச் செயல்கள் கதைப்பாடலில் இடம் பெற்றிருக்கின்றன.

வீரபாண்டி ஏட்டுகளாம்

விதவிதமாய்ச் சிப்பாயாம்

தொவரங்காயத் தின்னச் சொல்லித்

தொழுக்கீட்டானாம் சந்தனமும்

ஏட்டை அடிச்சுவச்சான்

இன்சுப் பெட்டரைக் கட்டி வச்சான்

சிப்பாயிமார்களையெல்லாம்

தோப்புக்கரணம் போடவச்சான்

என்று வரும் பாடல் சந்தனன் காவலரைத் துச்சமென மதித்துத் துணிச்சலாகச் செயல்பட்டதை வெளிப்படுத்துகின்றன.

கவட்டைவில் கருவாயன்:

மதுரை மாவட்டத்தில் சந்தனத் தேவனுக்கு அடுத்த நிலையில் பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டவன் கருவாயத் தேவன். துணிச்சலும் அரசு அதிகாரிகளுக்கு அஞ்சாத தன்மையும் தன்னைச் சார்ந்தவர்களுக்குச் செய்த உதவிகளும் இவனைக் கதைப்பாடல் தலைவனாக்கியிருக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டம் புன்னைவாசல் என்ற கிராமத்தில் பிறந்த கருவாயனின் இயற்பெயர் அருணாச்சலம். பிழைப்பு தேடி மதுரைக்கு வந்த அவன் உழைக்க மறுத்து பேட்டை இரவுடியாக இருந்து பின் கொள்ளையனாக மாறினான். கூட்டாளிகள் இல்லாமல் தனியாகவே கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டான். இவனது கொள்ளைச் செயல்கள் சுயநலமுடையதாகவும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவுவதுமாகவே இருந்திருக்கின்றன. மாறுவேடமிட்டுப் போலீசாரை ஏமாற்றுதல், போலீசாரிடம் பிடிபட்ட நிலையில் தப்பித்துச் செல்லுதல், கவட்டை வில்லால் எதிரியை அடிக்கும் திறமை போன்ற துணிச்சலான செயல்பாடுகள் மக்களைக் கவர்ந்து உள்ளன. இறுதியில் காட்டிக் கொடுக்கப்பட்டு, தப்பித்துச் செல்லும் வேளையில் காவலரால் சுடப்பட்டு இறந்து விடுகின்றான். இவனது பிணத்தைப் பார்ப்பதற்கு கூட உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இராஜாராணி ஆட்டக் கலைஞர்கள் கருவாயன் கதையை இன்றும் விரும்பிப் பாடி வருகின்றனர். எசப்பாட்டுப் பாடுவதைப் போல் ஆணும் பெண்ணும் மாறி மாறிப் பாடும்முறையில் இக்கதைப் பாடல் பாடப்படுகிறது.

''கொள்ளையர்களின் செயல்பாடுகளை வைத்து அவர்களை மாபெரும் விடுதலை வீரர்களாகவோ கிளர்ச்சியாளர்களாகவோ முத்திரை குத்திவிடக் கூடாது. கொள்ளையர்களின் செயல்பாடுகளின் சமூக எதிர்ப்பு ஓங்கியிருந்தாலும் அது ஒழுங்குபடுத்தப்பட்ட சமூக எதிர்ப்பல்ல'' என்பார் ஆ. சிவசுப்பிரமணியன்.

கொள்ளையரை மக்கள் போற்றுவதற்கான காரணங்கள்:

கொள்ளைச் செயல் சமூகத்தில் குற்றமாகக் கருதப்பட்டாலும் கொள்ளையர்களின் நிலவுடமையாளர்களை, ஏழைகளின் உழைப்பைச் சுரண்டும் பண்ணை ஆதிக்க சக்திகளைக் கொள்ளையடித்தல், கொலை செய்தல், அநியாய வட்டிக்குப் பணம் கொடுத்து மக்கள் உடமைகளைச் சுரண்டும் வட்டித் தொழில் புரிவோரைக் கொள்ளையடித்தல்; காவலரைக் கண்டாலே அஞ்சி ஓடுகின்ற கிராம மக்களின் முன்னிலையில் காவலர்களின் அடக்குமுறையை எதிர்த்துத் துணிச்சலாகச் செயல்படுதல், கொள்ளையடித்த பொருள்களை ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்துதவுதல். ஆபத்துக் காலங்களில் அவர்களுக்குப் பக்க பலமாக இருத்தல் போன்றவை மக்களிடம் கொள்ளையர்கள் செல்வாக்குப் பெறுவதற்கும் போற்றப்படுவதற்கும் பாடப்படுவதற்கும் காரணமாய் அமைந்திருக்கின்றன என்று கூறலாம். தனியொரு மனிதன் ஒரு கலகக்காரனாகக் கிளர்ந்தெழுந்து கொலை, கொள்ளை, போன்றவற்றைச் சுரண்டும் வர்க்கத்தின் மீது நடத்தும்போது, பொதுமக்கள் தங்களால் முடியாத ஒன்றைத் துணிவுடன் மேற்கொண்டமைக்காக கொள்ளையர்களை போற்றுகின்றனர். இங்கு கொள்ளைச் செயலை விட அவர்களது துணிச்சல் மக்களால் போற்றப்படுகின்றது என்று கூறுவார் ஆ. சிவசுப்பிரமணியன். கொள்ளையர்களின் வீரம், துணிவு, கொலை, கொள்ளை போன்றவை கதைகளிலும் கதைப் பாடல்களிலும் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன என்றாலும், இவர்கள் உயிர் பெற்று எழுவதாகவோ, சிறு தெய்வமாக வணங்கப்படுவதோ கூறும் மரபு காணப்படவில்லை.

நன்றி: கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும்.

 

கருத்துகள் இல்லை: