13/03/2011

அகராதிகள்: செம்பதிப்பும் நம்பதிப்பும் - பெருமாள்முருகன்

அகராதி வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒருவர் யாழ்ப்பாணம் மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள். அவருடைய ''தமிழ் மொழியகராதி'', 1981ஆம் ஆண்டு முதல் தொடங்கி ''ஆசியன் எஜுகேஷனல் சர்வீஸஸ்'' வெளியீடாகப் பலமுறை மறுபதிப்புகள் வெளிவந்துள்ளன. அவ்வகராதியை 2003 ஆம் ஆண்டு ''சாரதா பதிப்பகம்'' செம்பதிப்பு என்னும் குறிப்புடன் வெளியிட்டது. அதுவும் இப்போது இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது. ''ஆசியன்'' வெளியீட்டில் அவ்வகராதி உருவான வரலாறு பற்றி எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. பொதுவாக ஏற்கனவே வெளியான ஒரு நூலை அப்படியே நகலச்சு எடுத்து வெளியிடும் பணியைத்தான் ''ஆசியன்'' செய்துவருகிறது. ஆகவே அவ்வெளியீட்டின் பதிப்பில் அகராதி வரலாறு எதிர் பார்ப்பது பொருத்தமானதல்ல. ஆனால் ''செம்பதிப்பு'' என்னும் குறிப்புடன் வந்துள்ள ''சாரதா'' பதிப்பில் அகராதி வரலாறு, ஆசிரியர் வரலாறு, அகராதி தமிழ்வரலாற்றில் பெறும் முக்கியத்துவம் ஆகியவை விரிவாக இடம்பெற்றிருக்கும் என எண்ணுவதில் தவறில்லை. ''செம்பதிப்பு'' என்றால் அதற்குரிய லட்சணங்கள் பொருந்தியிருக்க வேண்டுமல்லவா?

நா.கதிரைவேற்பிள்ளையின் அகராதி முதலில் 1899ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அகராதியை முழுவதுமாக அவரே தயாரிக்கவில்லை. 1842இல் சந்திரசேகர பண்டிதர் என்பவரால் தொகுக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்ட அகராதி ''பெயரகராதி'' என்பதாகும். இது வீரமாமுனிவரின் சதுரகராதியில் உள்ள முதல் பகுதியாகிய ''பெயரகராதி''யை விரிவுசெய்வதே. ''யாழ்ப்பாணத்து அகராதி'', ''மானிப்பாய் அகராதி'' என்றெல்லாம் வழங்கப்பட்ட சந்திரசேகர பண்டிதரின் இவ்வகராதியை மேலும் விரிவுபடுத்தி ''பேரகராதி'' என்னும் பெயருடன் 1893 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு, வேதகிரி முதலியார் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இந்தப் பேரகராதியின் விரிவாகத்தான் 1899ல் ''தமிழ்ப்பேரகராதி'' என்னும் பெயரில் நா.கதிரைவேற்பிள்ளையின் அகராதி வெளியாயிற்று. இந்தத் ''தமிழ்ப்பேரகராதி'' 1901, 1905 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்புகளாக வந்தது. 1907ஆம் ஆண்டு கதிரைவேற்பிள்ளை காலமானார். அவரது வாழ்நாளில் மூன்று பதிப்புகள் வெளியான இவ்வகராதியின் பெயர் ''தமிழ்ப் பேரகராதி'' என்பதே.

கதிரைவேற்பிள்ளையின் இவ்வகராதியை 1901, 1905 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டவர் பி.வே.நமச்சிவாய முதலியார் என்பவர். அவரே 1911ல் காஞ்சி நாகலிங்க முதலியாரைக் கொண்டு மேலும் திருத்திய பதிப்பாக வெளியிட்டார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் மேரி அரசியாரும் தில்லியில் முடிசூட்டிக்கொண்ட நிகழ்ச்சியை ஒட்டி இப்பதிப்பு வெளியானதால் ''காரனேசன் தமிழ் டிக்சனரி'' எனவும் குறிப்பிடப்பட்டது. 1911ம் ஆண்டுப் பதிப்பு 1935ஆம் ஆண்டுவரை தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்தது. ''தமிழ் மொழியகராதி'' என்னும் பெயர் 1911ஆம் ஆண்டு முதல் வழங்கி வருவதாகத் தெரிகிறது.

தற்போது கிடைக்கும் ''ஆசியன்'' வெளியீட்டில் ''நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழியகராதி'' ''திருத்தியது காஞ்சி நாகலிங்க முதலியார், ஆறாம் பதிப்பு'' என்னும் குறிப்புகள் உள்ளன. 1911ல் வந்த பதிப்பின் தொடர்ச்சியான ஆறாம் பதிப்பை மூலமாகக் கொண்டு ''ஆசியன்'' வெளியிட்டிருக்க வேண்டும் என்று அறியலாம். இப்பதிப்பில் ''பி.வே.நமச்சிவாயன்'' எழுதிய பதிப்புரை ஒன்று உள்ளது. அவ்வுரையில் ''இத்தமிழ் மொழியகராதி என்னும் அரிய பெரிய நூலை மகாமாக்ஷ’மை தங்கிய இந்திய சக்கரவர்த்தியவர்கள் முடிசூட்டுத் திருவிழா ஞாபகச்சின்னமாக அர்ப்பணம் செய்கிறேன்'' என்று உள்ளது.

ஆனால் பதிப்புரை எழுதிய தேதி 1.11.18 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1918ஆம் ஆண்டு மறுபதிப்பு வெளியிடப்பட்டபோது 1911 இல் எழுதிய முன்னுரையின் தேதியை மட்டும் மாற்றியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

பெயரகராதி, பேரகராதி, தமிழ்ப் பேரகராதி, தமிழ் ''மொழியகராதி'' எனப் பெயரிடப்பட்டும் மானிப்பாய் அகராதி, யாழ்ப்பாணத்து அகராதி, காரனேஷன் தமிழ் டிக்சனரி எனத் துணைப் பெயர்களைக் கொண்டும் அழைக்கப்பட்டு வந்த இந்த அகராதிக்கு நீண்ட வரலாறு உண்டு. இவ்வகராதியோடு தொடர்புடைய அறிஞர்கள் பலர். விரிவாக்கியவர்கள், வெளியிட்டவர்கள் எனப் பலர் உழைப்பைப் பெற்றுத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட சிறப்புடையது இவ்வகராதி. ஆங்காங்கே குறிப்புகளாகக் கிடைக்கும் தகவல்களை மட்டும் நம்பாமல், முந்தைய பதிப்புகள் பலவற்றைப் பார்த்து ஆராய்ந்தால் இவ்வகராதியின் முழுமையான வரலாற்றை நம்பகத்தன்மையுடன் வெளிக்கொணர முடியும்.

''தமிழ்ப் பேரகராதி'' என்னும் பெயருடன் வெளியான இவ்வகராதியின் மூன்று பதிப்புகளோடு தொடர்புடையவர் நா.கதிரைவேற்பிள்ளை. தமிழ்த்தென்றல் என்று போற்றப்படும் திரு.வி.கவின் ஆசிரியர் இவர். திரு.வி.க எழுதிய முதல் நூல் இவரது வரலாற்றைக் கூறுவதுதான். மேலும் கதிரைவேற்பிள்ளையின் அகராதிக்கு வேறோர் சிறப்புமுண்டு. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ''அருட்பா - மருட்பா'' விவாதத்தோடும் இவ்வகராதியைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். 1899 ஆம் ஆண்டு வெளியான தம் அகராதிப் பதிப்பில் ''வேளாளர்'' என்னும் சொல்லுக்குச் ''சூத்திரர்'' எனப் பொருள் கொடுத்திருந்தார் கதிரைவேற்பிள்ளை. அப்பொருள் வேளாளர்களை இழிவுபடுத்துகிறது என வெகுண்டெழுந்தனர் அக்கால வேளாள சாதித் தமிழ் அறிஞர்கள். 1901இல் அடுத்த பதிப்பு வெளியானபோது கதிரைவேற்பிள்ளை பொருளை மாற்றிக்கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். இவ்வகராதிக்கு வந்த எதிர்ப்புகளை ''வருண சிந்தாமணி'' (சி.சுப்பிரமணிய பாரதியாரின் சிறப்புப்பாயிரம் இடம்பெற்ற நூல் இது) என்னும் நூல் வழியாக அறிய முடிகிறது.

1860ஆம் வருசம் அச்சிட்ட வீரமாமுனிவர் சதுர் அகராதியிலும் பின்னஞ் சிற்சிலர் அச்சிட்ட அகராதிகளிலும் வேளாளர் ஈகையாளரென்றும், பூவைசியரென்றும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இங்ஙனமிருப்ப, 1899ஆம் வருசத்தில் ஈழநாட்டுச் சூத்திரராகிய நா.கதிரைவேற் பிள்ளையென்பார் தாம் அச்சிட்ட அகராதியில் அதை மாற்றிச் சூத்திரரென அச்சிட்டிருக்கின்றார். இது இவரது முதற் புரட்டெனக் கொள்க. பின்னர் 1901ஆம் வருசம் இரண்டாம் முறை அச்சிட்ட யாழ்ப்பாண அகராதியில் வேளாளர் சூத்திரரென முன்னெழுதியதைத் தாமே புரட்டி ஈகையாளர், பூவைசியரென வெளியிட்டிருக்கின்றனர். இது இரண்டாம் புரட்டெனக் கொள்க. (விவகார காண்டம், ப.59)

வேளாளர் பற்றி எழுந்த இந்த விவாதத்திற்கும் ''அருட்பா - மருட்பா'' சண்டைக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதலாம். ''மருட்பா'' குழுவுக்கு மையமாக விளங்கி ''மருட்பா'' என்னும் தலைப்பிலேயே நூல் எழுதியவர் நா.கதிரைவேற்பிள்ளை. அவரைக் கொலை செய்ய முயற்சி நடைபெறும் அளவுக்கு இந்தப் பிரச்சினை முற்றியதை ''மறைமலையடிகள் வரலாறு'' மூலம் அறிய முடிகிறது.

இவ்வாறு பலவித வரலாறுகளோடு தொடர்புடையது நா.கதிரைவேற்பிள்ளையின் அகராதி. இவ்வகராதிக்குச் ''செம்பதிப்பு'' என்றால், இவ்வரலாறுகளோடு அகராதிக்கு உள்ள தொடர்பை விளக்கும் வகையில் விரிவான பதிப்புரை இடம்பெற்றிருக்க வேண்டும். கதிரைவேற்பிள்ளையின் அகராதி இன்றைய தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் காண விரும்புவோர்க்கும் உதவும் அன்றாடப் பயன்பாட்டு அகராதி அல்ல. அத்தகைய பயன்பாட்டுக்குப் பல அகராதிகள் இன்று உள்ளன. கதிரைவேற்பிள்ளையின் அகராதி வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இன்று ''செம்பதிப்பு'' காண விரும்புவோருக்கு இந்த வரலாறு உணர்வு இருக்க வேண்டியது அவசியம். சாரதா பதிப்பக வெளியீட்டில் இந்த உணர்வு சிறிதும் இல்லை. ''காஞ்சி நாகலிங்க முதலியார்'' பெயரை நீக்கிவிட்டு, ''s.கௌமாரீஸ்வரி, R.கார்த்திகா தேவி ஆகியோரைப் பதிப்பாசிரியர், உதவிப் பதிப்பாசிரியர் என்றும் ஆசிரியர் குழு என்றும் பலர் பெயரைப் போட்டுக்கொண்டது தான் நடந்திருக்கிறது. ''செம்பதிப்பிற்கான பதிப்புரை'' என்று ஒன்றுள்ளது. தலைப்பினால் ஏமாற்றும் சந்தை வித்தை தெரிந்தோர் இப்பதிப்பகத்தார் என்பதற்கு இதுவே சான்று. ''சொற்பிழை, பொருட்பிழை ஆகிய களைகள் களையப்பட்டுள்ளன'' என்று அப்பதிப்புரையில் குறிப்பிடப்படுகிறது. இவர்கள் களைந்ததற்கு ஏதாவது சில சான்றுகளைக் கொடுத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். ஒப்பிட்டுப் பார்த்ததில அப்படி எதையும் களைந்த மாதிரித் தெரியவில்லை. அகராதியின் ஒவ்வொரு பக்கத்தின் கீழும் ''ஜெய் ஜ“னா'' என்றொரு முழக்கம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் விளக்கம் பதிப்பாசிரியர்களுக்கே வெளிச்சம்.

செம்பதிப்பு என்னும் சொல் சமீபகாலமாகத் தமிழ்ப் பதிப்புலகில் பிரபலமாக இருப்பதால் அதனைத் தம் வெளியீட்டுக்குப் போட்டுப் புத்தகச் சந்தையில் விற்பனையைப் பெருக்கிக்கொண்ட இப்பதிப்பகம் ''நம்பதிப்பாக'' ஓர் அகராதியையும் வெளியிட்டிருக்கிறது. செம்பதிப்பு விலை ரூ.350/- (நூலகப் பதிப்பு ரூ.450/-) செம்பதிப்பை வாங்க முடியாத வாசகர்களுக்குக் குறைந்த விலையில் (ரூ.125/-) இந்த ''நம்பதிப்பு'' செம்பதிப்பில் மூன்றில் ஒரு பகுதிப் பக்கங்களைக் கொண்டது ''நம்பதிப்பு'', நா.கதிரைவேற்பிள்ளை அகராதியை வெளியிட்டிருக்கிறோம் என்று குறிப்பிட மறந்துவிட்டதைத் தவிரக் குறையொன்றுமில்லை.

இந்த ''நம்பதிப்பு''க்குக் ''கௌரா தமிழ் அகராதி'' என்று பெயரிட்டுள்ளனர். பதிப்பாசிரியர், வழக்கம்போல ''எஸ்.கௌமாரீஸ்வரி''தான். பதிப்புரை எதுவுமில்லை. அகராதிச் சொற்களுக்கு மூலம் பற்றி அறிய வாசகருக்கு எந்தச் சிறுகுறிப்பும் தரப்படவில்லை. கதிரைவேற்பிள்ளை அகராதி,

அவனாலே முத்தமி ழென்றும் துலங்கும்

அவனாகும் இன்னூற் காண்

என்னும் மேற்கோளோடு தொடங்குகிறது, ''கௌரா தமிழ் அகராதி''

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

என்னும் ''புரட்சிக்கவி'' மேற்கோளோடு தொடங்குகிறது. வெவ்வேறு மேற்கோள்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கதிரைவேற்பிள்ளை அகராதியிலிருந்து வேறானது என்று காட்ட இத்தகைய முயற்சிகள் ஆங்காங்கே செய்யப்பட்டுள்ளன. அவ்வகராதிச் சொற்களே இந்த அகராதியிலும் உள்ளன. ஆனால் பொருள் கொடுக்கும் போது, சில பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ''அஃகாமை'' என்னும் சொல்லுக்குக் ''குறையாமை, சுருங்காமை'' எனக் கதிரைவேற்பிள்ளை அகராதி பொருள் தருகிறது. கௌரா தமிழ் அகராதியில் ''நுணுகாமை'' என்றொரு பொருளும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய ''பொருள் கடைச் செருகல்கள்'' பல உள்ளன.

கதிரைவேற்பிள்ளை அகராதியில் உள்ள பொருள்களில் சிலவற்றை நீக்கிவிடுதலும் நடைபெற்றுள்ளது. ''செக்கல் - செவ்வானம், மாலை நேரம்'' என்பதில் ''செவ்வானம்'' விடப்பட்டுச் ''செக்கல் - மாலைநேரம்'' என்று மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய விடுபாட்டு வேறுபாடுகளும் இரண்டு அகராதிகளுக்கும் உள்ளன. கூறப்பட்டுள்ள சில பொருள்களுக்குக் கூடுதலாகச் சில சொற்களைச் சேர்த்துச் சொல்லலும் உண்டு. ''அஃது - ஒரு சுட்டுப் பெயர்'' என்றிருப்பதை ''அஃது - அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயர்'' என்று கொடுத்தால் அதுவும் ஒரு வேறுபாடல்லவா?

கதிரைவேற்பிள்ளை அகராதி ஒரு சொல்லுக்குப் பல பொருள்களைத் தருகிறது என்று கொள்வோம். அப்பொருள்களை அவர் ஒரு வரிசைக்கிரமத்தில் கொடுத்திருப்பார். அது மாற்றமுடியாத வரிசையா என்ன? அந்த வரிசையை முன்பின்னாக மாற்றினால் அதையும் ஒரு வேறுபாடாகக் காட்டலாம். ''காகப்புள் - அவிட்ட நாள், காக்கை என்றுள்ளதை ''காகப்புள் - காக்கை; அவிட்டநாள்'' என்று மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் பலவிடங்களில் நடந்துள்ளன. இந்த ''முறைமாற்றம்'' முக்கிய வேறுபாடுதானே.

பழைய சொல் வழக்குகளைச் சற்றே எளிமைப்படுத்தி ஏதாவது சில இடங்களில் கொடுத்துவிட்டால் அதுவும் ஒரு வேறுபாடாகக் கணக்காகிவிடும். ''அஃறிணை - இழிதிணை'' என்பதில் இழிதிணை என்றால் சரியாக விளங்காது. ''பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும்'' என்று சிறு விளக்கம். இத்தன்மை எங்கேனும் சில இடங்களில் காட்டப்பட்டுள்ளது.

கதிரைவேற்பிள்ளையின் பெரிய அகராதியைச் சுருக்குவது என்றால் ஏதாவது ஒரு முறையைக் கையாள வேண்டும். எத்தனையோ முறைகள் இருக்கின்றன. பழைய சொற்களை அதாவது இன்று வழக்கில் இல்லாத இலக்கியச் சொற்களைத் தவிர்த்துவிட்டு நவீன மொழிக்குரிய சொற்களை மட்டும் எடுத்துக்கொடுத்தால் இன்றைய வாசகருக்குப் பயன்படும் வகையிலான சுருக்க அகராதியாக அது விளங்கும். பழைய இலக்கியங்களில் அதிகமாகப் பயின்றுவரும் பொதுச்சொற்களையும் சேர்த்தெடுத்துச் சுருக்க அகராதி தயாரித்தால் இலக்கியம் பயிலும் மாணவர்க்கும் பயன்படும். இவையெல்லாம் சற்றே கடினமான வேலை. பெரிய அகராதியிலிருந்து சுருக்கமான அகராதி தயாரிப்பதற்கு எளிமையான முறை ஒன்றிருக்கிறது. பெரிய அகராதியில் உள்ள சொற்களில் ஆங்காங்கே ஐந்துசொற்கள், பத்துச் சொற்கள் என்று வரிசையாக நீக்கிவிட்டால் போதும். இடையிடையே சில சொற்களை விட்டுவிடுவதன் மூலம் அகராதி அளவைச் சுருக்கி விட முடியும். அதைத்தான் ''கௌரா தமிழ் அகராதி'' செய்திருக்கிறது. அ, அஆ, அஃக, அஃகம், அஃகரம், அஃகல், அஃகாமை, அஃகான், அஃகியஇ, அஃகியஉ, அஃகியஐ, அஃகியஒள, அஃகிய தனிநிலை அஃகியமகான், அஃகியவறிவு, அஃகு, அஃகுதல், அஃகுல்லி, அஃகுள், அஃகேனம், அஃதான்று, அஃதி, அஃது, அஃதை, அஃபோதம், அஃறிணை - இது கதிரைவேற்பிள்ளை அகராதி வரிசைச் சொற்கள். அ, அஆ, அஃக, அஃகம், அஃகரம், அஃகல், அஃகாமை, அஃகான், அஃகுல்லி, அஃகுள், அஃகேனம், அஃதான்று, அஃது, அஃதை, அஃபோதம், அஃறிணை - இது கௌரா தமிழ் அகராதி வரிசைச் சொற்கள். அஃகான், அஃகுல்லி ஆகிய சொற்களுக்கு இடையே உள்ள ஒன்பது சொற்களை ''கௌரா தமிழ் அகராதி'' விட்டுள்ளது. பின் ஆங்காங்கே ஒவ்வொரு சொல், இப்படித்தான் சுருக்க அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது.

ஓர் அகராதிக்கும் இன்னோர் அகராதிக்கும் இத்தகைய சிற்சில வேறுபாடுகள் தவிர பெரிய வேறுபாடுகள் இருக்க முடியுமா? பொது அகராதியில் சொற்பொருள் ஒரே மாதிரிதானே அமையும். இலக்கியப் படைப்பு என்றால் ஒன்றைப் போல இன்னொன்று இருக்காது. அகராதி அப்படி அல்ல. ஒரு சொல்லுக்கு வெவ்வேறு பொருள்களை அகராதிகள் வழங்க முடியாது. ஆகவே ஒன்றைப் போல இன்னொன்று இருப்பதுதான் அகராதிகளின் இயல்பு எனத் தோன்றலாம். இது உண்மைதான் இந்த இயல்பைப் பயன்படுத்திக் கொண்டுதான் அகராதிகள் திருடப்படுகின்றன. ''திருடன் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்வான்'' என்னும் திருட்டு விதிப்படி இந்த அகராதித் திருட்டிலும் முக்கியச் சான்று ஒன்று உள்ளது.

தொடக்க கால அகராதிகளில் அகர வரிசை, உயிரெழுத்து, உயிர்மெய் எழுத்து, மெய்யெழுத்து, என்னும் வரிசைப்படி அமையும். ஆ, ஆக, ஆக்கம் - இத்தகைய வரிசைமுறையே பின்பற்றப்பட்டிருக்கும். ஆனால் தற்கால அகராதிகள் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்னும் முறைப்படிதான் அகரவரிசை அமைக்கின்றன. ஆ, ஆக்கம் ஆக - இந்த வரிசையே இப்போதைய அகராதிகளின் அமைப்பு முறையாகும். கதிரைவேற்பிள்ளையின் ''தமிழ் மொழியகராதி'' பழைய அகர வரிசையைக் கொண்டதாகும். ''கௌரா தமிழ் அகராதியின் முதல் பதிப்பு டிசம்பர் 2003. இந்த அகராதி புதுமுறைப்படி (இதுவும் 1950க்கு முன்பே உருவாகிவிட்ட முறைதான்) அமைந்திருக்க வேண்டும். ஆனால் கதிரைவேற்பிள்ளை அகராதியை அப்படியே உருவிக்கொண்ட காரணத்தால் பழைய அகரவரிசை முறையையே கொண்டிருக்கிறது. வ்ருக தூமம், வ்ருகோதரன் முதலிய ''வ்'' எழுத்தில் தொடங்கும் சொற்கள் ''வ்'' வரிசைக்குமுன் அமைய வேண்டும். ஆனால் கௌரா அகராதியில் ''வெள'' எழுத்துக்குப் பின்தான் ''வ்'' வரிசை உள்ளது. அகராதி முழுவதும் இத்தகைய பழைய அகரவரிசையே, உள்ளது. கதிரைவேற்பிள்ளையின் ''தமிழ் மொழியகராதி'' யைச் சுட்டது'' தான் ''கௌரா தமிழ் அகராதி'' என்பதற்கு இந்தச் சான்றே போதுமானது.

பெரிய அகராதி ஒன்றை மூலமாகக் கொண்டு சுருக்க அகராதி தயாரிப்பதில் தவறில்லை. அந்த உண்மையைச் சொல்லிவிட வேண்டும். அத்தோடு சுருக்க அகராதி எந்தப் பயன்பாட்டை முன்னிறுத்திச் செய்யப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். அகராதியை ''ஏதோ ஒன்று'' எனக் கருதும் வாசகர்களுக்காகவே இந்த அகராதி வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி: காலச்சுவடு

 

கருத்துகள் இல்லை: