14/03/2011

நாட்டுப்புறப்பாடல்களில் உளவியல் கூறுகள் - முனைவர் கா.மு. பாபுஜி

உலகில் மனித இனம் என்று தோன்றியதோ அன்றே நாட்டுப்புறவியல் தோன்றியது. மனிதனின் வாழ்க்கையைக் கூட்டு வாழ்க்கையாக உருவாக்குவது மொழியாகும். எனவே மனிதன் பேசத்தெரிந்த விலங்கு என்பர். மனிதனுடைய உணர்ச்சி பாட்டாக வெளிப்பட்டது. இப்பாடல்களே நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும். அடி மனத்தில் தோன்றும் ஆசைகளை மேல் மனத்தினால் அடக்கி ஆளப்படுகிறது. அவைகள் நாளடைவில் கனவாகவும் கதைகளாகவும் உருவாக்கம் பெறுகின்றன. இவற்றில் அடக்கப்பட்ட ஆசைகள் குறியீட்டு நிலையில் அமைந்திருக்கும். அதனை உளவியல் ஆய்வு முறையில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உளவியல் என்பது உள்ளம் தொடர்பான செய்கைகளை, நிகழ்வுகளை ஆராயும் அறிவியல் சார்ந்த முறையாகும்.

உள்ள இறுக்கம்:-

உள்ள முறிவு எவ்வகைத் தீர்வுமின்றி நெடுங்காலம் தொடருமானால் உணர்வியல் சார்ந்த, முற்றிய விறைப்பு நிலை தோன்றும். அந்நிலையை "உள்ள இறுக்கம்" என்று உளவியலார் கூறுகின்றனர். (1) உள்ளத்தில் முறிவு, போராட்டம், விறைப்பு நிலை, அழுத்தம், இறுக்கம் இத்தகைய நிலைகள் அனைத்தும் உள்ள இறுக்கத்திற்கு உட்பட்டதாகும்.

தான் விரும்பிய பொருள் கிடைக்காத போது அவர்களுக்கு உள்ள இறுக்கம் ஏற்படுகிறது. இதற்குச் சான்றாக பல நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. குறிப்பாக காதல் தோல்வி பாடல்களைக் கூறலாம். அடுத்ததாக குழந்தை இல்லாதவர்கள் உள்ள இறுக்கத்திற்கு உட்படுகிறார்கள். பிள்ளையில்லாக் குறை பெண்ணுக்குப் பெருங்குறையாகும். இந்நிலையில் ஓடிவிளையாடப் பிள்ளை இல்லையே என்று கவலையுடன் பாடுகிறாள்.

''கொஞ்சறத்துக்குப்பிள்ளையில்லை - கண்மணியே

கொள்ளி வைக்கப் பிள்ளையில்லை

என்ன பாவம் செய்தேனோ அம்மா - கண்மணியே

ஏது பாவம் செய்தேனோ அம்மா,

மெழுகி வைத்த வீட்டுக்குள்ளே - கண்மணியே

விளையாடப் பிள்ளையில்லை

கூட்டி வைத்த வீட்டுக்குள்ளே - கண்மணியே

குப்பை போடப் பிள்ளையில்லை''

இவ் உள்ள இறுக்கம் நீங்க இறைவனை வழிபடுபவர் என்பதனைப் பின்வரும் பாடல் மூலம் அறியலாம்.

''...நான்

திங்கள் முழுகி - என் கண்ணே

திருத்தணிக்குப் போகையிலே

திருத்தணி முருகா - என் கண்ணே

திருவுளத்தில் கொண்டாரோ''

உள்ள முறிவு:-

உள்ள முறிவு என்பது விரும்பிய இலக்கினை அடைவதில் நேரும் தடைகளாலோ குறுக்கீடுகளாலோ நேரிதான குறிக்கோள் ஒன்று இன்மையாலோ விளைவதாகும் என்ற உளவியலார் விளக்குவர் (2) ஒவ்வொரு பெண்ணும் தன் உள்ளத்தினைக் கவர்ந்த ஒருவனை மாலையிட்டு இல்லறம் மேற்கொள்ளலாம் என்று விரும்பியிருப்பாள். இவ்வாறாகக் கனவுகாணும் கன்னிப்பெண்ணுக்குத் தடையாக பெற்றோர்பட்ட கடன் குறுக்காக வருகிறது. கடனுக்காக வயதான நிலக்கிழார்க்கு வாழ்க்கைப்பட்டு துன்பப்படுகிறாள். இந்நிலையில் அவளுக்கு உள்ளமுறிவு ஏற்படுகிறது. அந்நிலையில் அவள் உள்ளம் ஒடிந்து பின்வருமாறு புலம்புகிறாள்.

''பச்ச பச்ச கரியாப்பிள்ளை

நானும் ஓர் அரியாப்பிள்ளை

கட்டிக் கொடுத்தீங்க

கடனுக்குத் தள்ளினீங்க

முண்டப்பையன் வாசலிலே''

ஓர் அழுத்தமான தேவையும் அதனை எய்தி நிறைவேற இயலாத உணர்வும் உடனியையும் போது நேரும் அனுபவமே உள்ள முறிவு என்று பிரித்தானியக் கலைக்களஞ்சியம் கூறுகிறது. (3) இக்கூற்றுப்படி இளம்பெண் தனக்கு ஓர் இளைஞன் மணமகனாக வருவான் என் அழுத்தம் தேவை. அவளுக்கு நிறைவுறாத போது அவள் உள்ள முறிவுக்குத் தள்ளப்படுகிறாள். இது போன்று பல பாடல்கள் உள்ளன.

ஆசை நிறைவேறாமலோ, நிறைவேறுவதற்குத் தடை ஏற்பட்டோ இருக்கும் நிலைமையில் ''மனம் இடிதல்'' உண்டாகும் என்பது ஓர் உளவியலாளரின் எளிமையான விளக்கம் ஆகும். (4) ஓர் இளமையான மங்கையின் ஆசை நிறைவேறவில்லை. இதற்குத் தடையாக இருப்பது வறுமையாகும். இந்நிலையில் அவள் மனம் இடிதல் நிலைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது அவள் தன் பெற்றோரை எதிர்க்க முற்படுகிறாள்.

''சோளச் சோறு தின்ன மாட்டேன்

சொன்னபடி கேட்கமாட்டேன்

நரைச்ச கிழவங்கிட்ட

நானிருந்து வாழமாட்டேன்''

இப்பாடல் மூலம் தன் உள்ள முறிவை எடுத்துக் கூறுகின்றாள்.

இக்கருத்துகளைத் தொகுத்துக் கருதினால் எண்ணிய எண்ணியாங்கு எய்த இயலாத நிலையில் உள்ளமுறிவு நேர்கிறது எனச் சுருங்க கூறலாம்.

பின் நோக்கம்:-

வாழ்வில் விரும்பத் தகாத நிகழ்ச்சிகள் நிகழும் போதும் விருப்பங்கள் முறிவுள்ள உள்ளப்போராட்டம் மிகும்போது உள்ளம் தன்னையறியாமல் இறந்தகாலத்தின் இயல்பிற்குச் சென்றுவிடுகிறது. இத்தகைய நிலையை ''பின்னோக்கும்'' என்பர், நன்றாக வளர்ந்த வயதில் தனக்குச் சில இடையூறுகள் அல்லது துன்பங்கள் ஏற்படும் காலங்களில் தம் வாழ்க்கையின் முன்னர் நிறைவளித்த நிகழ்ச்சிகளை உள்ளம் நினைத்து மகிழ்ச்சிக் கொள்கிறது என இந்நிலையைப் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் கூறுகிறது.

(5) செல்வகுடியில் பிறந்த ஒருத்தி, இளமையில் சிறப்புடன் வாழ்கிறாள். பின்னர் தன் மனம் விருப்பமின்றி பெற்றோரின் விருப்பத்திற்கு வேறொருவனை மணக்கின்றாள். சில ஆண்டுகளுக்குப் பின் தன் மாமனைக் காண்கிறாள். அவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் அவள் உள்ளம் தன் இளமைப் பருவத்தில் செல்வாக்குடன் வளர்ந்ததை எண்ணும்போது மனம் பின்னோக்கிச் செல்கிறது. இதனைப் பின்வரும் பாடல் மூலம் தெரிவிக்கிறாள்.

''செம்பிலே சிலை எழுதி - மாமா

செல்வத்திலே நான் பிறந்தேன்

வம்பிலேதான் கைகொடுத்து - மாமா

வார்த்தைக்கு இடம் ஆனேனே

ஆசைக்கு மயிர் வளர்த்து - மாமா

அழகுக்கு ஒரு கொண்டை போட்டுச்

சோம்பேறிப் பயிலுக்கு நான் - மாமா

சோறு ஆக்க ஆள் ஆனேனே''

உணர்வொதுக்கம்:-

விரும்பத்தகாத துன்பச் சூழலை மறுக்கவும் ஒடுக்கவும் உள்ளம் விழைகின்றது. அது இயலாமல் போகுமானால் அனுபவத்தையும் உணர்ச்சியையும் பிரிந்துக்கொண்டு அனுபவத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு அதனோடு இயைந்த உணர்வுகளிலிருந்து உள்ளம் ஒதுக்கம் பெறும் செயல்முறை தோன்றுகிறது. இவ்உளவியல் கருத்தைப் பின்வரும் பாடல் மூலம் அறியலாம்.

''நந்தவனத்திலோர் ஆண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தானொரு தோண்டி - அதை

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி''

இப்பாடலில் அனுபவத்தையும் உணர்ச்சியையும் பிரித்து அனுபவத்தை ஏற்றுக் கொண்டு உணர்ச்சியை உள்ளம் ஒதுக்கப் பெறுவதைக் காண முடிகிறது.

உணர்வொதுக்கம் என்னும் செயல்முறையை ஓர் அனுபவத்தைத் தீங்கற்றதாக வகைமாற்றம் செய்வதற்கு அந்நிகழ்ச்சியோடு முன்னர் இயைந்திருந்த உணர்வை, அகம் அந்நிகழ்ச்சியில் இருந்து பிரிந்து விடுதல் எனப் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் விளக்குகிறது. இக்கூற்றுபடி மரணம் என்ற மரபாக இயைந்துள்ள துயர உணர்வை, நிகழ்ச்சியில் இருந்து பிரிக்கும் நிலை பல ஒப்பாரி பாடல்கள் காணலாம்.

ஆளமைப் பண்புகள்:-

ஆளமை என்பது ஒரு ஒட்டு மொத்தமான எல்லா நற்பண்புகளின் வெளிப்பாடு என்று கூறலாம். சிறுவயதிலேயே பல நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறுவர்களின் உள்ளத்தில் தொக்கி நிற்கும் சில உயர்குணங்களை அவர்கள் நாட்டுப்புற விளையாட்டுக்களின் வாயிலாக வளர்த்துக் கொள்கிறார்கள். உறுதியான உள்ளத்தையும் வீரத்தையும் வளர்த்துக் கொள்ள சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுக்கள் பயன்படுகின்றன. சிறுவயதிலேயே தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள சில விளையாட்டுக்கள் உதவுகின்றன. சான்றாக பந்தாட்டம், சடுகுடு முதலான பல நாட்டுப்புற விளையாட்டுக்களைக் கூறலாம்.

ஏட்டில் எழுதாக் கவிதைகளாகிய இந்நாட்டுப்புறப் பாடல்கள் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்த பாடல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி எனலாம். மனிதனின் உள்ளத்து உணர்வுகளான இன்பதுன்ப உணர்வுகள் மனதின் உள் நின்று அழுத்துகின்றன. நாட்டுப்புற பாடல்களின் மூலம் வாய்விட்டுப் பாடும்போது உள்ளத்தின் அழுத்தம் குறைகிறது. இதனால் உள்ளம் சுமை நீங்கி இலேசாகிறது. இது போன்ற உளவியல் கூறுபாடுகள் ஒவ்வொரு நாட்டுப்புறப் பாடலிலும் பொதிந்திருப்பதை உணர்ந்து நம் முன்னோர் வளர்த்தனர். நாமும் நாட்டுப்புறப் பாடல்களை வளர்ப்போம் இன்பம் பெறுவோம்.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை: