14/03/2011

வட்டார நாவல்களும் நாட்டுப்புறக் கூறுகளும் (புதிய மொட்டுகள்) - வெ. சத்யநாராயணன்

ஒரு பொதுமொழி வழங்கும் பரந்த பரப்பில் அங்கங்கு மொழியில் ஏற்படும் வழக்கு வேறுபாடு வட்டார வழக்கை உருவாக்கும். இவ்வேறுபாடு, நிலவியல் அமைப்பு, தொழில், சமூகம், முதலிய காரணங்களால் ஏற்படும். எனவே பொதுமொழியுடன் சிதைந்த வடிவமே வட்டாரவழக்கு மொழியாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியை நிலைக்களமாகக் கொண்டு, அப்பகுதிவாழ் மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் நோக்குடன், மக்களின் வழக்கு மொழியுடன் படைக்கப் பெறும் நாவல்கள் வட்டார நாவல்கள் ஆகும்.

இத்தகைய, ஒரு பிரதேச மக்களின் வாழ்க்கைமுறையைப் படம்பிடித்துக்காட்டும் வட்டார நாவல்களில், அப்பிரதேச மக்களின் கலாசாரம், பண்பாடு வழக்காறுகள் இடம்பெறுகின்றன. வட்டாரத்தின் உள்ளார்ந்த பண்புகளைக் கொண்டிருக்கும் நாவல்களில் அதன் நாட்டுப்புறவியல் கூறுகள் இயல்பாகவே இடம்பெற்று விடுகின்றன. வட்டார நாவல்களில் நாட்டுப்புறக் கூறுகள் மிகுந்துள்ள தன்மையைப் பொன்னீலனின் புதிய மொட்டுகள் என்னும் நாவலின் துணைக்கொண்டு இக்கட்டுரை படைக்கப்பட்டுள்ளது. இந்நாவல் நாஞ்சில் வட்டாரத்தைச் சேர்ந்தது. அவ்வட்டாரத்தின் நாட்டுப்புறக் கூறுகளை நாவல் பிரதிபலிக்கும் தன்மையை நிலலே காணலாம்.

நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு:-

கிராமங்களில் வழிபடப்பெறும் தெய்வங்கள் சிறுதெய்வங்கள் எனப் பெறும். இத்தெய்வங்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை. இத்தெய்வங்களுக்கு உரிய பூசை செய்யாவிட்டால் தீமை நேரும் என நம்புவர். இத்தகைய தெய்வங்களாகப் புதிய மொட்டுகள் நாவலில் மாரியம்மன், காலசாமி, சுடலைமாட சாமி, இசக்கியம்மை ஆகியன சுட்டப்பெறும், காலசாமி அம்மனுக்கு ஏவல் செய்யும் குறுந்தெய்வமாகும்.

வெள்ளிக்கிழமையில் இசக்கியம்மைக்கு வழிபாடு நிகழ்த்தப்பெறும். தனியாகச் சென்று வழிபட அச்சந்தரும் இந்த தெய்வத்தின் தோற்றத்தை ஓங்கின வலக்கையில் ஒரு கடாரி இடக்கையில் பச்சப்புள்ள வாயில நீண்ட பல்லுக் கெடையில் இன்னும் ஒரு பச்சபுள்ள தீ வளர்ரதுபோல தலமுடி பந்துபோல நெஞ்சு. அரையில செவப்புத் துண்டு என ஆசிரியர் வருணிக்கிறார்.

இவையேயன்றி இறந்த முன்னோரின் கல்லறையில் உருவப்படம் வைத்து வழிபடுவதை கதைத்தலைவன் நினைவுநாள் வழிபாட்டின் மூலம் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

திருவிழாக்கள்:-

கிராமங்களின் பாரம்பரிய அடையாளம் திருவிழாக்கள். இவை தெய்வங்களுடன் தொடர்புடையனவாகவே பெரும்பாலும் அமைகின்றன. ஆய்வுக்குரிய நாவலில் திருவிழா கொடை எனக் குறிக்கப்பெறும். திருவிழாத் தொடக்கம் முன்பு தலைக்கு இத்தனை ரூபாய் என வரி நிர்ணயித்து மக்களிடம் தொகையைப் பெறுவர்.

சுடலைமாடன் திருவிழா வெள்ளிக்கிழமைத் தொடங்கும். இதற்காகப் பூசாரி வீட்டில் வைத்திருந்த ஏழு பிரிவுடைய குழுமரத்தை சாமி முன் நட்டு வைப்பர். சனிக்கிழமை உச்சிபூசையில் ஏழு கரிய சேவல்களை அதில் உயிருடன் குத்திவைப்பர். பூசாரி வெறியாட்டம் ஆடியபின் கோழிகளின் கழுத்தைக் கடித்து இரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

மற்றொரு திருவிழா அம்மன்கோயில் திருவிழா ஆகும். இத்திருவிழாவில் அம்மன், காலசாமி ஆகிய தெய்வங்கள் ஆவேசத்துடன் மனிதர் மீது இறங்குவர். அம்மனிதர்கள் ஆட்டம் முடிந்த பின்பு மஞ்சள் நீர் கொதிக்கும் பானையை ஏந்தி தீ மிதிப்பர். தீ மிதிக்கும் முன்பு, அம்மன் பீடத்திலிருக்கும் தென்னம்பாளை, கழுகம்பாளையைக் கையில் ஏந்தி மஞ்சள் நீரில் முக்கி எடுப்பர். தீ மிதியுடன் திருவிழா முடியும். அதன் பின் அம்மனுக்கு கிடாவெட்டிப் பங்குவைப்பர்.

தண்டனைகள்:-

கிராமிய வாழ்வின் அடையாளமாக ஊர்ப்பெரியவர் பங்கேற்கும் பஞ்சாயத்து அமையும். இப்பஞ்சாயத்து ஊரில் நிகழும் குற்றங்களுக்குத் தண்டனைகளைத் தீர்மானிக்கும். நாட்டுப்புற மக்களிடையே வழங்கிவந்த தண்டனைகளை புதிய மொட்டுகள் நாவலும் குறிப்பிடக் காணலாம். கதைத் தலைவன் சுதந்திரராசன் முதலாளியை எதிர்க்கிற சூழல்களில் இத் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

1. தேங்காய் உடைத்தல் என்னும் தண்டனை தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பதற்குரிய வகையில் விளங்கும். தேங்காய் எண்ணிக்கையை பஞ்சாயத்துத் தலைவரே நிர்ணயிக்கிறார். ஒரு முறை ஊருக்காக இருபத்தோரு தோங்காயும் மறுமுறை ஊருக்கு ஒன்று, காலசாமிக்கு ஒன்று, அம்மனுக்கு ஒன்று என்று மூன்று தேங்காயும் உடைக்குமாறு விதிக்கப்படுகிறது.

2. கரும்புள்ளி, செம்புள்ளி குத்துதல் அளவிற்கு அதிகமான குற்றம் செய்வதை அவமானப்படுத்தும் தண்டனையாக இது அமைகிறது. நாவலில் சுதந்திர ராஜனுக்கு ஒருமுறை தண்டனையாகவும், மறுமுறை விதிக்க வேண்டும் என்ற வற்புறுத்தலாகவும் இவ்வழக்கம் குறிப்பிடப்பெறுகிறது. இத்தண்டனை முறையே ஊர்க்காரர் கூற்றாக, இவனை மொட்டையடிச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி எருக்கல மால போட்டுக் கழுத மேல ஏத்துங்கல என்று ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.

3. அபராதம் விதித்தல் ஊர் வழக்கத்திற்கு மாறான ஒன்றைச் செய்யும் நிலையில் அதற்குரிய தண்டனையாக அபராதம் விதித்தல் அமைந்துள்ளது.

4. விலக்கி வைத்தல் ஊர்க்கட்டுப்பாட்டுக்கு அடங்காத பஞ்சாயத்துத் தண்டனைகளை மதிக்காத நிலையில் ஊரிலிருந்து குற்றம் செய்ததாகக் கருதப்படுபவரை, குடும்பத்தை விலக்கிவைக்கிறார்கள். இது விதித்த தண்டனையை ஏற்கச் செய்யும் முயற்சியாகும். இவ்வாறு விலக்கப்பட்டவர்களுக்கு ஊர் நீர் நிலையிலிருந்து நீரெடுக்க உரிமை இல்லை. ஊர்குடிகளான சலவைக்காரர் சவரக்காரர் ஆகியவர்கள் விலக்கப்பட்டவர்களுக்குரிய பணிசெய்யக் கூடாது. இத்தகைய தண்டனையைக் கதைத்தலைவன் சுதந்திரராஜனும் துரைச்சாமி என்பவன் குடும்பமும் அடைந்ததாக நாவல் குறிப்பிடும்.

5. கதவு பறித்தல் ஊருக்கு உரிய வரியைக் கட்டாவிட்டால் கட்டாதவருடைய வீட்டின் கதவைப்பறித்துவிடும் தண்டனை ஒன்றும் நாவலில் சுட்டப்பெறுகிறது. உரிய வரியைக் கட்டிய பிறகே கதவை மீட்டுக் கொள்ளமுடியும்.

நாட்டுப்புறக் கதை:-

நாட்டுப்புற இலக்கியங்களில் ஒன்று கதை. இது வழிவழியாகத் தொடர்ந்து கூறப்பட்டு வரும். தன் வட்டார அளவிலான மக்களிடையே பயின்று வரும் கதையை நாவலில் இணைத்துப் பொன்னீலன் படைத்துள்ளார். இசக்கியம்மன் பற்றிய கதை ஒன்று நாவலில் இடம்பெற்றுள்ளது.

இசக்கியம்மன் ஆலமரத்தடியில் குடிகொண்டவள். அந்த வழியாக வரும் கிறித்துவப் பெண்கள் சிலர் ஏன் அம்மன் சும்மா நிற்கிறாள் இராட்டை நூல் நூற்கக் கூடாதா என கேலி பேசினர். அவர்கள் வீட்டுக்குச் சென்றபிறகு எனக்கு ராட்டும் கொட்டையும் தா என்று ஆவேசத்துடன் ஆட ஆரம்பித்தனர். அம்மனிடம் வந்து மன்னிப்புக் கேட்டு கருஞ்சேவல் பலிதந்த பிறகே அவர்கள் சுயவுணர்வு பெற்றனர். இக்கதை கிராம மக்களின் நம்பிக்கையின் எதிரொலியாகும். பேய்களைப் பற்றிய நம்பிக்கையும் சிறிய கதைக்கூறுகளுடன் நாவலில் இடம் பெற்றுள்ளது.

இவையே அல்லாமல் வழிபாட்டின்போது இசைக்கப்படும் இசைக்கருவிகள் பற்றிய வருணனைகள், கிராம மக்களுடைய பெயர்கள், அவர்களுக்குச் சூட்டப்பெறும் பட்டப்பெயர்கள் அவர்களுடைய பேச்சுமொழி ஆகியவற்றிலும் நாட்டுப்புறக் கூறுகள் வரவியுள்ளன.

நாட்டுப்புற நாவல்கள் என்ற வகை இல்லாவிடினும் வட்டார நாவலின் இயற்பண்புகளை உணர்த்த நாட்டுப்புறக் கூறுகளே துணை செய்கின்றன. வட்டாரத்து மக்களின் வாழ்க்கைச் சூழலை யதார்த்தமாக வெளிப்படுத்தும் நிலையில் இக்கூறுகள் பெரும்பங்காற்றுகின்றன.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: