14/03/2011

தமிழகத்தின் பொருளாதார வரலாறு - ஒரு வரைவியல் - ப.சு. சந்திரபாபு

எக்காலத்திற்கும் நாமே வாரிசுகள் இதுதான் வரலாறு. ''வரலாறு நமக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது. அதுதான் அதன் முக்கியமான பண்பு ஏனெனில் அது சாதாரணமான ஆண், பெண் மற்றும் அவர்களின் சுற்றுச்சூழல் பணி ஆகியவற்றை ஒட்டி அமைகிறது'' என்கிறார் அறிஞர் கோத்தே. கடலுக்கடியில் எண்ணிலடங்கா மெல்லிய படிவங்கள் கூடிச் சப்தமின்றிப் பவளப் பாறைகள் உருவாவது போல இது அமைகிறது எனலாம். எனவே வரலாற்றை மிகச்சரியான முறையில் அறிந்து கொள்வது அவசியம். வரலாற்றைத் தீர்மானிப்பது, பொருளாதார உற்பத்தி முறையாகும். மேலும் சமுதாயத்தின் ஸ்திரத்தன்மையை பொருளாதாரமே தீர்மானிக்கிறது. எனவே பொருளாதார பரிணாம வளர்ச்சியில் வரலாறு முக்கியமான இடம் வகிக்கின்றது. இடைக்காலத் தமிழ்நாட்டு வரலாறு என்பத்து ஏழு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான காலத்தையும் பெரிய நிலப்பரப்பையும் உள்ளடக்கியது ஆகும். எனவே தமிழக வரலாற்றை தீர்மானிக்கும் முகங்களில் ஒன்றான இக்கால பொருளாதார வரலாறு வெளிக்கொணரப்பட வேண்டும். இதைக் கொண்டுதான் இக்காலப் பிரச்சனைகளையும் கொள்கைகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழகம் மற்றும் தென்னிந்திய சமூக பொருளாதார வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிற முயற்சி, குறிப்பாக 1970-க்குப் பிறகு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் இக்கால கட்டத்தில் தான் கல்வெட்டு மற்றும் பிற முதன்மைச் சான்றுகள் கிடைக்கப் பெற ஆரம்பித்தன. இருந்தும் அதற்கு முன்னாலேயே ரா. கோபாலன் (1928) கே.எம். குப்தா (1933) கே.ஏ. நீலகண்டசாஸ்திரி (1934) மற்றும் ஏ. அப்பாத்துரை (1936) ஆகியோர் முன்னோடி புத்தகங்களின் பங்களிப்புகளை குறைந்த அளவே கிடைத்த சான்றுகளைக் கொண்டு இடைக்காலத் தமிழக சமூகத்தைப் பற்றிய தகவல்களை நடுநிலை நோக்கோடு திறனாய்வு செய்துள்ளனர். இவர்கள் தங்களின் எல்லைகளையும் போதாமைகளையும் ஒத்துக்கொண்டனர். ஒத்துக்கொண்ட இவற்றை அடித்தளமாகவும், தூண்டுகோலாகவும் கொண்டு வரலாற்று ஆய்வாளர்கள் பொருளாதார வரலாறு பற்றி ஆய்வு மேற்கொள்ள இந்த ஆய்வுகள் உதவுகின்றன.

திரு. அப்பாத்துரை அவர்களின் Economic condition in Southern India 1000 - 1500 AD (இரு தொகுப்புகளில்) என்ற நூலை 1936-ல் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இடைக்காலத் தமிழகப் பொருளாதார வரலாற்றில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். சோழர் காலம் முதல் கிருஷ்ணதேவராய விஜயநகர அரசு காலம் வரை அப்பாத்துரை அவர்கள் ஒரு பரந்த கால கட்டம் முழுவதையும் ஒன்று சேர்த்து 500 வருட தென்னிந்திய பொருளாதார நிலையை தொகுத்து வழங்கியுள்ளார் என்றும் இந்திய மற்றும் அயல்நாட்டுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை மிக அருமையாக, தெளிவாக நடுநிலைநோக்கோடு விளக்கியுள்ளார் என்றும் இவருடைய கடுமையான முயற்சியை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பாராட்டியிருக்கின்றார். கிராம மக்களின் பொருளாதார வாழ்வு, நகர மக்களின் வணிகம், தொழிற்சாலைகளின் பட்டியல், அயல்நாட்டு வணிகம், ஒரு மாநிலத்தின் எல்லைகள், கொடைகள், பஞ்சம் மற்றும் நிவாரணம், வாழ்க்கை நெறி ஆகியவற்றை உள்ளடக்கிய அத்தியாயங்களை மேற்கூறிய நூல் கொண்டுள்ளது. அதே போல் இது கல்வெட்டு மற்றும் பிற சான்றுகள் சரியாக கிடைக்காததால் மிக முக்கிய பிரச்சனைகளான பண்ணையார், பண்ணையடிமைகள், நிலவுடைமையாளர்கள், உழவர்கள் என்பவர்களுக்கிடையேயான உறவுகளும் மற்றும் வளர்ச்சிகளின் செயல்பாடுகளும் இவர்களின் ஆராய்ச்சியில் கவனம் பெறவில்லை. இவ்விடைக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி, இரு நிலைக் கொண்டது. ஒன்று பல்லவர் காலத்திலும் மற்றொன்று விஜயநகரப் பேரரசு காலத்திலும் ஏற்பட்டதாகும். பின்னால் ஏற்பட்ட அயல்நாட்டு வியாபாரிகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் செல்வாக்கு ஆகியவற்றையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சுப்பராயலு, நொபுறு, கரஷ’மா, கேத்தலின் காவ், ஆர். சம்பக லெட்சுமி, பா. சண்முகம், ஆர். திருமலை மற்றும் சஞ்சய் சுப்ரமணியம் ஆகியோரின் நூல்கள் 1980 மற்றும் 1990-களில் வெளியான பொழுது அவர்கள் அனைவரும் அப்பாத்துரை அவர்கள் விட்டுச் சென்ற அகண்ட இடைவெளியை நிரப்புவதற்குப் பல புதிய சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு தரமான புள்ளியியல் முறை மற்றும் திறனாய்வு முறையில் மதிப்புரை வழங்க முயன்றுள்ளனர். குறிப்பாக கரஷ’மாவை நினைவு கூரலாம்.

பல்லவர்களின் ஆட்சிக் காலம், வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தைக் குறைந்த அளவே ஈர்ந்துள்ளது. சோழர்களோடு ஒப்பிடும் போது பல்லவர் காலத்தின் மிகக் குறைவான ஆட்சிக் காலமும், குறைவான சான்றுகளும் இதற்குக் காரணமாகலாம். ஆனால் சோழர் காலத்தில் ஏற்பட்ட வேளாண், வணிக, தொழில் வளர்ச்சியாகட்டும், சமூக முறையாகட்டும், அவை பல்லவர் காலத்தின் தொடர்ச்சி அல்லது வளர்ச்சியே என்பதை மறுப்பதற்கில்லை. பல்லவர் காலம் பற்றிய ஆராய்ச்சிகளில் பொருளாதார நிலையை விட ஆட்சி முறையே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஆர். கோபாலனின் Pallavas of Kanchi (சென்னை 1928), சி. மீனாட்சியின் Administration and Social Life under Pallavas (சென்னை 1939) மற்றும் மா. ராஜமாணிக்கனாரின் பல்லவர் வரலாறு (சென்னை 1971) ஆகியவை பல்லவர்களின் ஆட்சி பற்றியும், போர்கள் பற்றியும், விஸ்தரிப்பு பற்றியும், நிர்வாக முறை பற்றியும், நிலமானிய முறை பற்றியும், சமய காலச்சாரம் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால் ஆட்சியாளர்களுக்கும், பிராமணர்களுக்கும் இருந்த கூட்டினால் ஏற்பட்ட வரிச்சுமையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பிற தொழில் செய்வோர் பற்றிய தகவல்கள் இந்நூல்களில் காணப்படுகின்றன. எனினும் தங்களால் இயன்ற அளவு, அக்காலத்தில் வளர்ந்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் பற்றியும் அதற்கு அரசு அளித்த உதவிகள் பற்றியும் இவர்கள் எடுத்துரைத்துள்ளனர். ஆர். சம்பகலெட்சுமியின் Trade, Ideology and urbanisation - south Inida B.C 300 to 1300 AD (Oxford University Press, New Delhi 1996) என்ற நூல் ஏறக்குறைய 1600 வருடங்களின் தமிழக பொருளாதார வரலாற்றை பழங்கால மற்றும் இடைக்கால தமிழகத்தை தொடர்புபடுத்தி ஆராய்கிறது. இது மிகவும் சுவாரசியமாக அமைந்ததற்குக் காரணம் அன்னாரின் தீவிர ஆராய்ச்சி மற்றும் திறனாய்வுத்திறன் என்பதுடன் இதுவரையாரும் எடுத்துக் கொள்ளாத ஒரு புதிய கருவைத் தலைப்பாகக் கொண்டதுதான். இதற்காக கிட்டதட்ட 40க்கும் மேற்பட்ட கிராம மற்றும் நகர்ப்புற மையங்களை தேர்ந்தெடுத்து அவை பல்லவ பாண்டிய காலங்களில் மட்டும் எப்படி இருந்தன என்பதை விளக்கியுள்ளார் ஆய்வாளர். கோவில் சார்ந்த அமைப்புகளை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. ஆயின் நகரம் என்ற அமைப்புகள் (காஞ்சி, மதுரை) வணிகங்கள், துறைமுகங்கள், பிரம்ம தேயங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியையும், அதற்கான காரணங்களையும் அதன் முக்கியத்துவத்தையும் இவர் விளக்கியுள்ளார். பிராமணர், கோவில், மடம் போன்றவற்றிற்கு அளிக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் புதிய தொழிற்கூடங்களும், வணிக மையங்களும் ஏற்பட்டன என்றும் இவை நகர வளர்ச்சிக்கு உதவின என்றும் விளக்கியுள்ளார். இதே பாணியில் கடந்த 400 ஆண்டுக் கால சோழ ஆட்சியில் பல மையங்கள் வளர்ந்ததற்கான காரணத்தையும் இவர் விளக்கியுள்ளார். இந்த ஆய்வின் முடிவில் இந்த மையங்களின் வளர்ச்சிதான் அக்காலத்திய செல்வ வளர்ச்சிக்கும் அரசகுடும்பங்களின் செல்வச் செழிப்பிற்கும் ஆதாரம் எனக் கூறுகிறார். ஆனால், இத்தகைய நிலைக்கு மாறாக அக்காலத்திலிருந்து அதிக வரிச்சுமை, விவசாய மக்கள் தம் சொந்த நிலத்தில் இருந்து வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து நிலங்களை விற்பனை செய்தது பற்றியும், அடிக்கடி ஏற்பட்ட, பஞ்சம் மற்றும் வறட்சி பற்றியும் மற்றும் இத்தகைய காரணங்கள் ஒரு அடிமைத்தனத்தை மற்றும் சமூக வேற்றுமையை இடைக்காலத்தில் ஏற்படுத்தின என்பது பற்றியுமான கருத்துக்கள் இவரால் வெளிக்கொணரப்படவில்லை. உண்மையில் சம்பிரதாயமான அரச குடும்பங்களால் சுரண்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, உழைப்பையும், வியர்வையும் சிந்திய ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே நகர வளர்ச்சிக்கும் அதன் செல்வத்திற்கும் காரணம் என்பது அவரால் அறியப்படவில்லை. இவ்வுண்மை நூலில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் நூல் இதிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அன்னாரின் The Cholas (University of Madras, Madras 1934) சோழர்களின் ஆட்சிக் காலத்தைப் பற்றி அதிகாரப் பூர்வமான தகவல்களைத் தருகிறது. இது வெளியிடப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகும், 1970ல் இருந்து ஆராய்ச்சியாளர் பலர் சோழர்களைப் பற்றி எழுதுவதிலும் பொதுக்கருத்துக்களை உருவாக்குவதிலும் பங்காற்றினாலும் ஒரு சில நூல்கள் மட்டுமே பிற்காலச் சோழர்களின் பொருளாதார வரலாறு பற்றிய வெற்றிடத்தை நிரப்புவதாக அமைந்துள்ளன. அத்தகைய நூல்களில் குறிப்பிடத்தக்கவை: டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பிற்கால சோழர் வரலாறு (மூன்று தொகுதிகள்) (அண்ணாமலை பல்கலைக்கழகம். 1974), கென்னத் ஆர் ஹால் Trade and State Craft in the age of the Cholas (Abinav publications, Delhi 1980) Burton Stelin''s Peasant State and Society in Medieval South Inidia (Oxford University Press, Delhi 1980) Kathleen Gouth's Modes of Production in Southern India'' (Article: EPW: Annial Number 1980) Noboru Karashima''s South Indian History and Society - Studies from inscriptions (A.D.850 -1800) (OUS, Delhi 1984) R. Thirumalai''is Land Grants and Agrarian Reactions in Chola and Pandya Times (University of Madras, 1987) P. Shanmugam''s The Revenu system of the Cholas (A.D. 850-1279) (New Era Publications Madras 1987) அடுத்து சோழர் கால உற்பத்தி முறை என்ற நூல், 1995-ல் திரு. வெ. கிருஷ்ணமூர்த்தி என்பவரின் சென்னை ஆராய்ச்சி மன்றத்தால் வெளியிடப்பட்டது. ஆர். சம்பகலெட்சுமி மற்றும் ஓய். சுப்பராயலுவின் நூல் சோழர்காலச் சமூகம் பற்றி அதிகளவில் கூறுகின்றன. 10,000த்திற்கும் மேற்பட்ட சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. கேத்தலின் காவ், பர்ட்டன்ஸ்டெயின் மற்றும் திருமலை ஆகியோரின் நூல்கள், சோழர் மட்டுமல்லாமல் பிற்காலப் பாண்டிய விஜயநகர மற்றும் மராத்திய அரசுகளின் நிலை பற்றியும் கூறுகின்றன. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ''சோழர்கள்'' என்று நூல் அரசியல், நிர்வாக, சமய, சமூக கலாச்சார நிலைகள் பற்றிய விரிவான தகவல்கள் தருகிறது. மேலும் சோழர் காலப் பொருளாதார நடவடிக்கைகளை ஒரு சில அத்தியாயங்களில் அது குறிப்பிட்டுள்ளது. வரி விதிப்பு, நிதி நிலை, மக்கள் தொகை, சமூக பிரிவுகள், வாழ்க்கைத்தரம், வேளாண்மை மற்றும் நில அளவை, தொழிற்சாலை, வணிகம், நாணயங்கள் மற்றும் மதிப்பீட்டு அளவைகள் ஆகியவை இதில் உள்ள அத்தியாயங்களில் சில. இவை கிட்டத்தட்ட 107 பக்கங்களை உள்ளடக்கியது. ஆனால், பிற்காலத்தில் பொருளாதாரப் பிரிவில் எழுதப்பட்டவற்றோடு இதனை ஒப்பிடும் பொழுது போதுமான அளவு சான்றுகளும் நுட்பமான விமர்சனங்களும் இதில் இல்லை. சோழர்கள் ஆட்சி முறையில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததால் அவர் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார்.

நீலகண்ட சாஸ்திரியின் அடிச்சுவடுகளையும் அனுகுமுறையையும் பின்பற்றி மேலும் இத்துறையில் 1970களில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு டி.வி சதாசிவபண்டாரத்தார் பிற்கால சோழர் வரலாறு என்ற நூலை வெளியிட்டார். இதில் ஏறத்தாழ 75 பக்கங்கள் சோழர்களின் பொருளாதார வரலாற்றை எடுத்துரைக்கின்றன. அதிலும் குறிப்பாகக் கடைசி நான்கு அத்தியாயங்கள் முழுவதும் சோழர் காலப் பொருளாதார வரலாற்றை எடுத்துரைக்கின்றன. அளவில் பெரிதாக இருந்தாலும் வாசிப்பவருக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை, இந்நூலின் சிறப்பாகும்.

கென்னத் ஆர் உறால் தன் நூலில் நாட்டின் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய வகையில் சோழ நாட்டின் வணிகமும் மற்றும் செல்வந்த வியாபாரிகளும் அவர்களுடைய விரிவான செல்வாக்கும் எப்படிப் பயன்பட்டன என்பதை விளக்கியுள்ளார். வணிகக் குழுக்கள் தன்னாட்சி முறையில் செயல்பட்டு வெளிநாட்டு வணிகத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வளமான வியாபாரிகளின் தலைமையில் இயங்கினாலும் அவை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக விளங்கியதை இந்நூல் விளக்குகிறது.

வேளாண் சமூகம் மற்றும் அதன் பிரிவுகள் சம்பந்தப்பட்ட பர்ட்டன் ஸ்டெயின் ஆராய்ச்சி தெளிந்த தென்னிந்திய வரலாற்றில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் ஆங்கிலேய வரலாற்றாளர்கள் பின்பற்றிய பழைய தடைக் கொள்கையை வலியுறுத்தினார். அவர்கள் கூற்றுப்படி அரசின் செல்வம் அனைத்தும் பெரிய அளவில் கொள்ளையடிக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டதாகும். அது வலுவானவர்களிடையே மீண்டும், பிரித்துக் கொள்ளப்பட்டதாகும். பர்ட்டன் ஸ்டெயினின் சோழர் காலப் பொருளாதாரம் பற்றிய கூற்று சம்பிரதாயமான அரசியல் எப்படி வேளாண்மையில் பங்காற்றியது என்பது பற்றிக் கூறுகிறது. ஆனால் இது தவறான அயல்நாட்டுக் கருதுகோள்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும்.

கேத்தலின் காவ் எழுதியுள்ள முக்கிய கட்டுரையான ''Modes of production in southern India'' பொருளாதார நிலை பற்றிய விமர்சனத்தைத் தருகிறது. சோழர் காலத்தில் பொருளாதாரக் காரணிகளின் நிலைப்பாடு, நிலத்தையும், வணிகத்தையும் மட்டும் பொறுத்து அமைந்தது என்பது பற்றிய ஒரு நுட்பமான விமர்சனத்தை அவர் தந்துள்ளார். சோழர்கால சமூகம் (850-1260) கார்ல் மார்க்ஸ் கூறும் ஆசிய உற்பத்தி முறையோடு ஒத்துள்ளதாகக் கூறியுள்ளார். சோழர் காலத்தில் எவருக்கும் தனிப்பட்ட முறையில் நிலமோ பிற சொத்துக்களோ இல்லாததோடு அவை ஆட்சியாளர்களை மகிழ்விக்க அவர்கள் அனுமதியோடு பெயரளவில் நிலச்சுவான்தாரர்களால் நிர்வகிக்கப்பட்டன. மேலும் அவை தனிச்சொத்துடைமையாக அல்லாமல் கோவில்கள், மடங்களின் உடமையாகவும் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமாகவும் அமைந்தன என்கிறார். மேலும் நிலஉடைமையாளர்களும் விவசாயிகளும் அதிகளவு வரிச்சுமையை அனுபவித்தனர். குறைந்த அளவு ஊதியமே பெற்றுக் கொண்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார். சமூகம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பலர் கீழ்மட்ட அடிமைகளாக ஆக்கப்பட்டனர். இவர்கள் பரம்பரையாக மிக மோசமான கீழ்த்தரமான வேலைகளைச் செய்யமட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சமூகக் கட்டுப்பாடுகளும் இவர்களுக்கு விதிக்கப்பட்டன. எனவே இவர்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமாகவே இருந்தது என்று குறிப்பிடுகிறார். அன்னாரின் ஆய்வு முடிவு தடைகளை உடைத்தெறியும் விதமாகவும் பொதுவான நியாயங்களைச் சொல்வதாகவும் முதுகுத்தண்டைச் சில்லிட வைப்பதாகவும் இருக்கிறது.

புதிய புள்ளிவிவர அணுகுமுறை, நொபுறு கரஷ’மா என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவருடைய ஆராய்ச்சி பெரும்பாலும் கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, சோழர்களின் அரசு, வருவாய், அளவீட்டு முறை ஆகியவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதில் இவர் கேத்தலின் காவ்-ன் முடிவை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் அதே சமயம் பர்ட்டன் ஸ்டெயினின் பிரிக்கப்பட்ட சமூகக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. சோழர் காலத்தில் தான் மைய அரசு முறை ஏற்பட்டது என்கிறார், இவர் கரஷ’மாவின் ஆராய்ச்சி நில உறவுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் மேற்கத்திய வியாபார கம்பெனிகளின் வருகை வரையிலான இடைக்காலத் தமிழக வரலாற்றிற்கு அதிக பங்காற்றியுள்ளது.

திருமலையின் Land Grants and Agrarian Reactions in Chola and Pandya Times என்ற நூல் பதினான்காம் நூற்றாண்டு வரையிலான சோழர் கால நில மதிப்பீட்டு முறைகளையும், அளவீட்டு முறைகளையும் மற்றும் அவை பாண்டிய அரசில் எவ்வாறு பின்பற்றப்பட்டன என்பதையும் தெளிவாக விளக்குகிறது. மேலும் சோழர்கள் மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கொடைகளாக வழங்கப்பட்ட நிலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. நிலவரி, செலுத்தாமை, கொடூர முறையில் வரி வசூலித்தல் அதனால் ஏற்பட்ட விவசாயிகளின் தீவிர எதிர்ப்பு ஆகியவை ஆங்காங்கே மட்டும் சுருக்கமாகக் குறிக்கப் பட்டிருக்கின்றன.

பா. சண்முகத்தின் ''The Revenue System of cholas'' (850-1279 A.D) என்ற நூல் திருத்தியமைக்கப்பட்ட முனைவர் பட்டத்திற்கான (1977, சென்னை) ஆராய்ச்சி நூலாகும். சோழ நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சோழர்களின் தனித்துவமான பங்கு பற்றிக் கல்வெட்டுக்களைச் சான்றாக கொண்டு இவர் ஆராய்ந்துள்ளார். சோழர் கால வருவாய்கள் மற்றும் நில அளவைமுறைகள் பற்றித் தெளிவாக இவர் கூறியுள்ளார். வருமானத் துறையில் கையாளப்பட்ட வெவ்வேறு வழிமுறைகளும் பணப்பட்டுவாடா முறைகளும் தொண்டை மண்டலம் மற்றும் சோழமண்டலத்தில் எவ்வாறு இருந்தன என்பது பற்றியும் தெளிவாக விளக்குகிறார். நூலின் அட்டவணை வருமானத்துறை அதிகாரிகளின் பெயர்களையும் மற்றும் வேலையின் தன்மைகளையும் விளக்குகிறது. நிலச்சுவான்தார்கள் வியாபாரத்தில ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது புதிய ஆய்வுக்கு வழிவகுக்கிறது என்றாலும் குறைந்த அளவே இதைப் பற்றித் தகவல் தர முடிந்துள்ளது. நேரடியாக நம்பத் தகுந்த வகையில் எந்த ஆதாரமும் அவருக்குக் கிடைக்கவில்லை. சோழர் காலத்தில் வேளாண்முறை மூலம் கிடைத்த அதிக லாபம், எப்படி வணிகத் துறைகளின் மூலதனமாக மாறியது என்பது பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டுவது அவசியமாகிறது.

ஆயின் கரஷ’மா போல் அல்லாமல இவர் தனக்குப் பேருதவியாக இருந்த கல்வெட்டுகளோடு பிற ஆதாரங்களையும் திரட்டியுள்ளார். இவை தேவையான பல நுட்பமான விசயங்களை இவருக்கு வழங்கியுள்ளன. இடைக்காலத் தமிழகத்தின் நிலம் சார்ந்த பொருளாதார வரலாற்றினை வழங்கியுள்ளதால் இதில் இவரின் பங்கு பாராட்டுதலுக்குரியது.

வெ. கிருஷ்ணமூர்த்தியின் சோழர் கால உற்பத்தி முறை என்ற நூல், பர்ட்டன்ஸ்டெயின், கரிஷ’மா ஆகியோரின் நூல்களை விமர்சனம் செய்வதோடு கேத்தலின் காவ்-ன் பொருளாதாரக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. இவருடைய கருத்தின்படி, பண்டைய மற்றும் இடைக்காலத் தமிழகத்தில் சோழர் காலத்தில் தான் முதன்முறையாக உற்பத்தி முறையில் அதிசயிக்கத்தக்க வளர்ச்சி முறை ஏற்பட்டது. மேல்வாரம் வறண்ட நிலத்திற்கு 20 சதமாகவும் ஈரநிலத்திற்கு 64 சதமாகவும் வசூலிக்கப்பட்டது. தேவதானத்திற்கு உட்பட்ட நிலங்களிலிருந்து ஒரு வேலிக்கு 15 கலம் நெல் வசூலிக்கப்பட்டது. மொத்த கொள்முதலில் 100 கலம் நெல் கோவிலுக்கு அளிக்கப்பட்டது. மீதி 50 கலம் கிராம சேவை செய்வோருக்கு அளிக்கப்பட்டது. இவை போக மிகக் குறைந்த அளவுள்ள நெல் வேளாண் மக்களுக்குப் பல மணி நேரம் வேலை செய்திருந்தாலும் கூலியாக 5 முதல் 10 கலம் வரை கொடுக்கப்பட்டது. இந்த முறையற்ற கூலிக்காக, மக்கள் பல மணி நேரம் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இதைப் பார்க்கும் போது உழவர்கள் மிகவும் பரிதாபமான முறையில் வாழ்ந்துள்ளார்கள் எனத் தெரியவருகிறது என்று அவர் கூறுகிறார். இந்த ஆராய்ச்சி, தகவல் செய்தித் தொகுப்பு போல் தோன்றினாலும் இது சோழர்களின் பொருளாதார வரலாற்றை அறிந்து கொள்ள பேருதவி புரிகிறது என்பதில் ஐயமில்லை.

ஓய். சுப்பராயலுவின் Studies in Cholas History என்பது பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளடங்கிய ஒரு வெளியீடு ஆகும். மேலும், ஏற்கனவே இவை ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பதிப்புகளில் வெளியிடப்பட்டவையே. இடைக்காலத் தமிழகத்தின் நில அளவை, சோழர்காலக் கல்வெட்டுகளில் காணப்படும் வியாபார செயல்கள், நில அளவுகள், நிலவரி, சோழவருவாயின் ஒரு பகுதியான குடிமை, சோழ அரசின் நிலவருவாய், நில அளவீட்டு முறை ஆகியவை இப்புத்தகத்தின் முக்கிய அத்தியாயங்களாகும்.

இவை அனைத்துமே சோழ ஆட்சியையும் அதன் முக்கியப் பகுதியாகிய பொருளாதாரத்தையுமே விடுத்து, கரஷ’மாவைப் போன்று கல்வெட்டு ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நில வருவாயை ஆராய்ந்துள்ளன. கிட்டத்தட்ட சோழர்களின் ஐந்து நூற்றாண்டுக் கால ஆட்சியில் 420 வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்று இத்தொகுப்பு நூல் அடையாளம் காட்டியுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக உள்ளது.

பிற்காலப் பாண்டியர்களின் சமூகம் பற்றி எழுதுவது ஆய்வாளர்களுக்குச் சற்று கடினமாகவே உள்ளது. ஏனெனில் சோழர்களைப் போல், பாண்டியர்கள், ஒரு பெரும் பேரரசையோ கல்வெட்டுக்களையோ, கொண்டிருக்கவில்லை என்றாலும் சங்க காலத்தில் இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை அவர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர்.

மிகவும் முற்பட்ட புத்தகமான நீலகண்ட சாஸ்திரியின் The Pandian Kingdom From the Earliest Times to the sixteenth Century (London:1929) என்ற அன்னாரின் சோழர்காலம் பற்றிய நூல் போன்றே அரசியல் மற்றும் நிர்வாக வரலாற்றைத் தெளிவாக விளக்குகிறது. ஆனால் மக்களின் பொருளாதார வாழ்க்கை பற்றிக் குறைந்த அளவே அது தகவல்களை தருகிறது. இந்நிலையில் கே.வி. ராமனின் பாண்டியர் வரலாறு (தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் 1977) என்ற நூல், வரைபட விளக்கமாக நிலவருவாய், நிர்வாகம், வணிகக்குழு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் ஆகியன பற்றித் தெளிவாகக் கூறுகிறது. எனினும் குறைந்த அளவே தகவல்கள் உள்ளன. இது பிற்காலப் பாண்டியர் காலத்தின் பொருளாதார வரலாறு பற்றி ஆராய்ச்சி செய்ய ஆய்வாளர்களைத் தூண்டுகிறது.

இடைக்காலத் தமிழகப் பொருளாதார வரலாற்றில் விஜயநகர மற்றும் மராத்தியர்கள் காலம் (கி.பி. 1350 - 1770) இரண்டு பிரிவுகளாக அமைந்து (தெலுங்கு மற்றும் மராத்திய மொழியினர்) நிலச்சுவான்தாரர்களுக்கு மேல் பிற தொழில் செய்வோரை உயர்ந்தநிலையில் வைத்துள்ளது. இது நிலமானிய முறை வளர வழிவகுத்தது. இது சோழ வரலாற்றுக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். ஏனெனில் சோழ அரசில் பிராமணர்கள் முக்கிய நிலையிலும் வேளாளர்கள் கீழ்நிலையிலும் இருந்துள்ளனர். விஜயநகர மற்றும் மராத்திய அரசுகள் பிராமணர் அல்லாதோரை உயர்நிலையில் அதாவது மாகாணங்களின் கவர்னர்களாக நியமித்தன. ஆனால், கேத்தலின் காவ் கூற்றுப்படி இக்கால கட்டத்தில் அரசியல் அமைப்பு விவசாயிகளை அடிமைகளாக மாற்றியது. 1750 இல் நிலப் பிரபுகளின் கீழ் இவர்கள் அடிமையாக்கப்பட்டனர். ஆனால் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், டேனியர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர் முதலியோரின் வணிக கம்பெனிகள் தமிழகத் துறைமுகங்களில் உருவாக ஆரம்பித்தன. முக்கியத் துறைமுகங்கள் இவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் சென்றன. பொருளாதாரச் செயல்பாடுகளின் இந்தக் கடுமையான சூழ்நிலையின் விளைவாக 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் ஸ்திரத்தன்மையையும் வளத்தையும் இழக்க ஆரம்பித்ததாக கேத்தலின் காவ் கூறுகிறார்.

கேத்தலின் காவ்-ன் திறனாய்வு ஏறக்குறைய டி.வி மகாலிங்கத்தின் Economic life in vijayanagar Empire (Madras:1941) கருத்துக்களை ஒத்துள்ளது. அவரின் ஆய்வு 1336 முதல் 1672 வரையிலான தென்னிந்தியாவின் பொருளாதார செயல்களைப் பற்றியது. ஒரு அத்தியாயத்தில் ''விஜயநகர பேரரசில் மக்களின் வாழ்க்கைத் தரம்'' பற்றி அவர் எழுதியுள்ளார். இதில் ஏழை மற்றும் பணக்காரருக்கிடையேயான மாபெரும் இடைவெளியையும் ஏழைகளின் நல்வாழ்விற்கு அரசு முயற்சி எதுவும் எடுக்காததையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக இவர் கூறியுள்ளது. இவருடைய முன்கூட்டி அநுமானிக்கப்பட்ட கருத்தாகும்.

டி. ராமசாமியின் Merchant Class: South India (1336 -1666 A.D) (Mathi Publications Madurai 1997) என்ற நூல் விஜயநகர பேரரசு முழுவதையும் பற்றி விளக்குகிறது. இது அன்னவரின் முனைவர் பட்ட ஆராய்ச்சியின் (1986, சென்னை) வெளியீடாகும். இதில் வணிக அமைப்புகளின் சமூக பொருளாதார மற்றும் சமய முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த 16 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை வணிகக் குழுக்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பது பற்றி விவரித்துள்ளார். வணிகக் குழுக்கள் வளர்ந்த விதம் பற்றியும் வணிக வளர்ச்சி பற்றியும் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு வாணிகம் எவ்வாறு அரசு வருவாயை உயர்த்தியது என்பது பற்றியும் உள் நாட்டு மற்றும் இடைக்கால பொருளாதார வரலாற்றில் இதன் பங்கு ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

சஞ்சய் சுப்ரமணியத்தின் The Political Economy of Commerce - Southern India (1500-1650) (Cambridge University Press 1990) என்ற நூல் தென்னிந்திய வரலாற்றில் இக்கால கட்டத்தில் பொருளாதார வரலாறு எப்படி மறைக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறுகிறது. இதன் இடைவெளியை S. Jeyaseela Stephen''s Portuguese in the Tamil Coast - Historical explorations in Commerce and Culture (1507 - 1749 A.D) (Navajothi, Pondicherry 1998) என்ற நூல் ஓரளவிற்கு நிரப்புகிறது. இரண்டுமே முந்தைய நூல்கள் போல் அல்லாமல் நகர அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இருவருமே அயல்நாட்டுச் சான்றுகளை, குறிப்பாக போர்ச்சுக்கீசிய மற்றும் டச்சுக்காரர்களின் சான்றுகளை உபயோகப்படுத்தியுள்ளனர். தவிர சஞ்சய் சுப்ரமணியம் 150 ஆண்டுகளை உள்ளடக்கிய காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய வரலாற்றினை கூறுகிறார். இக்கால கட்டத்தில் ஐரோப்பிய வணிகர்கள் இந்தியாவில் வணிகம் செய்ததையும் வணிக மையங்கள் ஏற்படுத்தியதையும் அதன் மூலம் பெரும் லாபம் ஈட்டியதையும் கூறுகிறார். விஜயநகர மற்றும் மராத்திய காலத்தில் அயல் நாட்டு வணிகம் ஏற்படுத்திய தாக்கத்தையும் விவரிக்கிறார். அக்காலங்களின் முக்கிய நிகழ்வுகளையும் வணிக மையங்களின் செயல்பாடுகளையும் அரசு உதவி மற்றும் அரசு உதவி அல்லா செயல்களையும் குறிப்பிட்டு அவை எவ்வாறு அயல்நாட்டுப் பொருட்களை சார்ந்திருந்தன என்பதையும் மேலும், வேறொரு கோணத்தில் அயல்நாட்டினர் எவ்வாறு இந்தியாவுடன் வணிகம் செய்தனர் என்பது பற்றியும் விளக்கியுள்ளர். சில குறிப்பிட்ட இந்தியப் பொருட்களுக்கு ஐரோப்பாவில் இருந்த தேவையையும் அதன் காரணமாக இருதரப்பினரும் பெற்ற செல்வம், வணிக லாபம் பற்றியும் குறிப்பிடுகிறார். ஆனால், இதற்கு அயல்நாட்டுச் சான்றுகளையே அடிப்படைகளாகக் கொண்டதால் தென்னிந்தியா பற்றிய முழுமையான குறிப்புகளை இவரால் தரமுடியவில்லை. அதே சமயம் தென்னிந்தியத் துறைமுகங்களையும் நகர மையங்களையும் குறிப்பிடுகிறார்.

ஜயசீலா ஸ்டீபன், 242 ஆண்டுக்கால வடக்குக் கடலோர பொருளாதார வரலாற்றைக் கூறுகிறார். பாலாறு, பெண்ணாறு, காவிரி மற்றும் அவற்றின் துணை ஆறுகளின் பகுதிகள் மிகவும் செழிப்பாகவும் நெல் வளர்வதற்கு ஏற்ற வகையிலும் அமைந்ததோடு நூல் நூற்பு ஆலைகளையும் கொண்டிருந்தன என்றும் குறிப்பிடுகின்ற அவர், முத்துக்குளித்தல் போர்ச்சுக்கீசியர்களை கவர்ந்திழுத்தது என்றும், ஏசு சபையினர் செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கர்களின் அரசவையில் மிக முக்கிய பங்கேற்றனர் என்றும் அதன் காரணமாகத் தமிழகத் கடற்கரையோரத்தில் கிறித்துவ ஆலயங்களை நிறுவவும் வணிக மையங்களைத் தோற்றுவிக்கவும் முடிந்தது என்றும் கூறுகிறார்.

போர்ச்சுகீசியர் கடற்கரையோரங்களில் நவீன வணிக மையங்களை நிறுவிக்கொண்டு உள்நாட்டு வணிகர்களின் பங்குதாரர்களாக ஆகிக் கொண்டனர். மேலும் இவர் கூற்றுப் படி, நாயக்க மன்னர்களால் துறைமுகங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்து வருவாய் வசூலிக்க போர்ச்சுகீசிய மாலுமிகள் அனுமதி பெற்றனர். இதனால் துறைமுகங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இவர்கள் ஆனார்கள். ஆனால் நீண்ட காலத்திற்கு அவர்களால் இப்படிச் செயல்படமுடியவில்லை. அப்பிரதேசங்களில் போட்டி போட ஆரம்பித்தனர். ஜெயசீலனின் இந்த நூலில் வணிக மையங்கள் பற்றிய ஒரு வரைபட விளக்கம் தரப்பட்டுள்ளது. இது போர்ச்சுகீசிய வணிகர்களின் ஆதிக்கத்தை அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்.

இந்த வரலாற்று வரைவியல் முடிவானதன்று. ஆனால் உரிய முழுக்கவனம் எடுத்து சிறந்த அனைத்து ஆராய்ச்சி நூல்களையும் இது உள்ளடக்கியுள்ளது. மேற்கூறப்பட்ட அனைத்து நூல்களும் இந்த துறையில் எப்படியும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதில் ஐயமில்லை வரலாற்றாசியர்களும் வரலாற்று மாணவர்களும், சமூக வரலாற்றில் ஆர்வமுடையோரும் இணைந்து வரலாற்றில் ஏற்படும் இடைவெளிகளை நிரப்ப முயற்சி செய்ய வேண்டும் வரலாற்றின் பின்ணனியில் எழும் பிரச்சனைகளைப் பொருளாதார வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நீக்க வேண்டும். அப்போதுதான் இடைக்காலத் தமிழகப் பொருளாதார வரலாற்றை வெளிக்கொணர முடியும். இதற்குத் தீவிரமான அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி மிக அவசியம்.

பொருளாதார உறவுகளும் நிலைப்பாடுகளும் இடைக்காலத் தமிழகத்தின் வரலாற்றினை ஆராய அடிப்படையாக உள்ளன என்பதால் அதற்கு உதவுகின்ற நூல்களையும் மூலங்களையும் அறிந்து கொள்வது, மேற்கொண்டு செய்யும் ஆராய்ச்சிக்கு மிகவும் அசியமாகிறது. அத்தகைய முன்னோடி நூல்களின் போக்குகளையும் எல்லைகளையும் விஸ்தீரணங்களையும் விமர்சன ரீதியாக கண்காணிப்பதின் மூலம் அவற்றின் பயன்பாடுகளையும் நாம் அறிகிறோம். மேலும், பெரும் பாலான நூல்கள் முடிந்தளவு உண்மையாக நடந்து கொள்கின்றன. சில, ஒன்றன் இடத்தை மற்றொன்று இங்கு நிரப்புவனவாக உள்ளன. எவ்வாராயினும், தமிழகத்தின் சமூக-பொருளாதார வரலாறு காரணகாரியங்களால் அறிவியல் பூர்வமாக ஆராயப்படவேண்டும். அதற்கு இடமும் தேவையும் நிறையவே இருக்கிறது. இதனையே நாம் இங்கு மேற்கொண்ட ''சர்வே'' நமக்குச் சொல்கிறது.

நன்றி: சமூக விஞ்ஞானம்

 

கருத்துகள் இல்லை: