13/03/2011

நிகண்டு - முனைவர். தொ.பரமசிவன்

''எதற்கெடுத்தாலும் தொல்காப்பியமா? என்று என்ன தான் ''நவீனர்கள்'' முகம் சுழித்தாலும் தொல்காப்பியத்திலிருந்து தான் தொடங்க வேண்டியிருக்கிறது. நிகண்டு என்ற சொல்லும் அதற்குரிய பொருளும் இன்றைய தமிழ் ஆய்வாளர்கள் பெரும்பாலோருக்குத் தெரியாது. தமிழர்களின் மரபுவழி அறிவுத்தொகுதி எங்கே கிடக்கிறது - என்கிற ஞானமும் கவலையும் இவர்களுக்குத் தேவையில்லை. ஆனால் சமூக அக்கறையுள்ள ஆய்வாளர்களுக்கு இது ஒரு அடிப்படைத் தேவையாகும்.

நிகண்டு என்ற சொல் தமிழ்ச்சொல்லாக தோன்றவில்லை. அது தமிழ்ச் சொல் தான் என்று நிறுவுவதற்கு சுந்தர சண்முகனார் போன்றோர் பெரு முயற்சி செய்துள்ளனர். நம்முடைய பார்வையில் அந்த முயற்சி தேவை இல்லாதது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ''உரியியல்'' என்ற ஒரு பகுதியுள்ளது. இந்த இயலில் 133 சொற்களுக்குத் தொல்காப்பியர் சுருக்கமாகப் பொருள் கூறுகிறார். இதுவே தமிழ் அகராதியின் மூலம் என்று அண்மையில் கிரகோரி ஜேம்ஸ் (Gregory James) என்ற அமெரிக்கர் ''தமிழ் அகராதிகளின் வரலாறு'' (History of Tamil Dictionaries) என்ற தம் நூலில் எழுதுகின்றார்.

உரிச்சொல் கிளவி அல்லது உரிச்சொல் பனுவல் என்பது பிங்கல, கயாதர நிகண்டுகளிலும் காணப்படும் பழைய பெயராகும். நன்னூல் உரையில் ''உரிச்சொல் பனுவல்'' என்ற தொடரே காணப்படுகிறது. ''காங்கேயன் உரிச்சொல்'' என்பதே 16 ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒரு நூலின் பெயராகும். எனவே இரண்டு நூல்களின் பழைய பெயர் உரிச்சொல் (அ) உரிச்சொல் பனுவல் என்று தெரிகிறது.

தொலைக்காட்சியிலே வியக்கத்தகுந்த காட்சி ஒன்றைப் பார்த்த குழந்தை, கண்களை அகல விரித்து ''ஐ'' என ஒலி எழுப்புகிறது. இந்த ஒலியின் பொருளை எழுத்திலக்கியங்களில் தேட முடியாது. ''ஐ... வியப்பு ஆகும்'' என்று தொல்காப்பியர்தான் இதன் பொருளைத் தனது உரியியலில் விளக்குகின்றனார். வெள்ளரிக்காயின் மிகச் சிறிய பிஞ்சினை ''தவப்பிஞ்சு'' என்று நம்வீட்டுப் பெண்கள் கூறுவார்கள். ''தவ'' என்பது உரிச்சொல் ஆகும். அண்மைக் காலமாக பேச்சுத் தமிழில் புழங்கி வரும். ''சூப்பர், தூள்'' என்ற பண்பு அடைச்சொற்கள் எல்லாம் மரபிலக்கணப்படி உரிச்சொற்களாகவே கருதப்பட வேண்டும். தமிழ் இலக்கணமரபு அந்த அளவு நெகிழ்வுடையது. இப்போது ஒன்று புரிகிறது அதாவது மக்கள் மொழியின் உயிர்ப்பினையும் ஆற்றலையும் அறிய விரும்புபவர்கள் எல்லாம் தமது தேடலைத் தொல்காப்பியத்தின் உரியியலிலிருந்து தான் தொடங்க வேண்டும் 70, 80 ஆண்டுகளுக்கு முன்னர் வித்துவான் படிப்பில் நிகண்டுகள் சேர்க்கப்பட்டிருந்தன. பின்னர், அது கைவிடப்பட்ட போது அகராதியியல் அறிவே தமிழர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று. பிற்காலத்தில் வையாபுரிப்பிள்ளை, மு. அருணாசலம், சுந்தர சண்முகனார், வ. ஜெயதேவன் ஆகியோர் நிகண்டுகளைப் பற்றி கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளனர். தமிழில் இதுவரை 35 நிகண்டு நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவற்றோடு 20 ஆம் நூற்றாண்டிலும் ''நவமணிக்காரிகை'' என்ற பெயரில் சோழவந்தானூர் அரசஞ்சண்முகனால் ஒரு நிகண்டு நூல் செய்துள்ளார் தமிழ் நிகண்டு நூல்கள் பொதுவாக 12 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 ஆவது தொகுதி தொகைப் பெயர்ப்பிரிவாகும். அதாவது தொகைச் சொற்களைப் பட்டியிலிடுகின்றது. எடுத்துக்காட்டாக காலம் மூன்று, பொறிகள் ஐந்து, அரசு உறுப்புகள் ஆறு, சிற்பத் தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருட்கள் பத்து, அலங்காரம் இருபத்தெட்டு என்ற வகையில் இது அமைகின்றது பதினொன்றாம் தொகுதி '' ஒரு சொல் பல் பொருள் பெயர் தொகுதியாகும். ஒரு சொல்லுக்குரிய எல்லாப் பொருளையும் கூறும் இதுவே அகராதிகளின் மூலவடிவமாகும். ஏனைய பதினோரு தொகுதி களம் கருத்துக்குச் சொல் தருவனவாகும். அதாவது ஆங்கிலத்தில் Thesaurus தெசாரஸ் எனப்படும் நூல் வகையைச் சேர்ந்தவை. இவை முறையே தெய்வப் பெயர் தொகுதி, மக்கள் பெயர்த் தொகுதி விலங்கினைப் பெயர்த் தொகுதி, பெயர்த் தொகுதி, பண்புப்பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி, ஒலி பற்றிய பெயர்த்தொகுதி என்றவாறு அமைகின்றன.

ஆங்கில மொழிகளில் Thesaurus என்னும் கருத்து விளக்கச் சொல் தொகுதி முதன் முதலாக 1852ல் Rogets என்பவரால் செய்யப்பட்டது. தமிழில் தொன்மையான நிகண்டு நூல்களான திவாகரமும் பிங்கல நிகண்டும் முறையே 9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில் செய்யப்பட்டன. எனவே கருத்துக்குச் சொல் தேடும் முயற்சி தமிழர்களின் பழைய வழக்கம் என்று தெரிகிறது.

அறியப்பட்ட எழுதிதிலக்கியங்களை விட நிகண்டு நூல்கள் காட்டும் தமிழ் அறிவுலகம் மிகமிகப் பெரியதாகும் 10 வகையான பெயர்த்தொகுதிகளில் அவை மேலோர் வாழ்நிலைகளை விட எளிய மக்களின் வாழ்க்கையிலிருந்து நிறையச் செய்திகளை எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் ஆய்வாளர்களுக்கு இன்றளவுமான பேச்சுத் தமிழ் மொழியினைப் புரிந்து கொள்ள அவை தவிர உதவி செய்யக்கூடிய இலக்கியக் கருவிகள் வேறு எவையுமில்லை. இந்நிகண்டு நூல்கள் சமய எல்லைகளைத் தாண்டியனவாகவும் அமைகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தொகுதிகளிலிருந்தும் சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம். நிகண்டுகளைப் பற்றிய புரிதலுக்கு இவை உதவும் இந்த எடுத்துக்காட்டுகள் திவாகரத்திலிருந்து மட்டும் இங்கே காட்டப்படுகின்றன.

தெய்வப் பெயர்களில் சிவன், திருமாலாகிய கடவுள்களோடு, சமண சமயம் சார்ந்து அருகனுக்கு நாற்பத்து மூன்று பெயர்களையும், அடித்தள மக்களின் வழிபடு தெய்வமான காடுகளுக்கு ஏழு பெயர்களையும், காளிக்குப் பதினான்கு பெயர்களையும், பகவதிக்கு இருபத்திரண்டு பெயர்களையும், திவாகரத்தில் காணலாம். நெருப்புக்கு 21 பெயர்கள்; இரண்டாவதான மக்கட்பெயர்த் தொகுதியில் துறவிகள், அறிஞர்கள், அரசர்கள், பரிவாரங்கள் ஆகிய பெயர்களோடு மருத்துவர், குயவர், உப்பு, விற்போர், சித்திரக்காரர் ஆகியோர் தம் பெயர்களையும் ஊன் விளைஞர், தோல் வினைஞர், கள் வினைஞர், பாணர், கழைத்கூத்தர், தமிழ்க்கூத்தர், வெறியாடுவோன், தேவராளன், கூத்தர் ஆகியோரின் பெயர்களையும் திவாகரம் பட்டியலிடுகின்றது. இதனால் நமது எழுத்திலக்கியங்களில் பெருமளவு விலக்கப்பட்டோர் நிகண்டு நூல்களால் முன்னிலைப் பெயர்களாகின்றன. இவற்றோடு உடலுறுப்புகளின் பெயர்களும் பேசப்படுகின்றன. விலங்கினப் பெயர்த்தொகுதியில் விலங்குகளின் வகைகளுள் அவற்றின் இளமைப் பெயர் களம் தரப்படுகின்றன. ஆட்டின் பொதும் பெயர்களையும் கூறிவிட்டு துருவாடு, வெள்ளாடு, வரையாடு, என வகைமைப் பெயர்களையும் அடுக்கிக் சொல்லும் நிகண்டு நூல்களில் அடுத்ததாக குட்டி வகைப் பெயர்களையும் காணுகின்றோம். பறவைகளின் வகைகளைப் பேசிய பிறகு மயிலின் பெயரோடு மயில் பீலியன் பெயர், மயில் இறகு முடியின் பெயர், மயில் சிகைகளின் பெயர்களைக் கூறி மிக நுணுக்கமாக, நத்தை, நண்டு, கரையான், புழு ஆகிய பெயர்களும் பட்டியலிடப்படுகின்றன. நாலாவது மரப்பெயர்த்தொகுதியில் 79 மரங்களில் பெயர்கள் பேசப்படுகின்றன. பூமாலையின் வகைகளாக மட்டும் 27 குறிக்கப்படுகின்றன. ஐந்தாவதான இடப்பெயர்த்தொகுதியில் ஊரைக் குறிக்க 27 பெயர்கள். அவற்றில் ஒரு நூற்பா, ''கல்வியூரி, கலிலூரியாகும், என்கிறது. ஆறாவதான பல்பொருள் பெயர்த்தொகுதியில் உலாகங்கள். மணிகள், அலங்காரப் பொருட்கள் பட்டியலிடப்படுகின்றன. சோறு என்பதை உணர்ந்த 24 சொற்களும், கள்ளுக்கு 48 சொற்களும் காட்டப்பட்டுள்ளன. தமிழர்கள் மதுவை ஒழுக்கப் கோட்பாடு சார்த்திக் காணவில்லை என்பதற்கு இது சான்றாகும்.. தமிழில் ''சிற்றுண்டி'' என்ற சொல் முதன்முதலாக இத்தொகுதியில்தான் காணப்படுகின்றது. பீரிகம் (பூரி) தோசை ஆகியவை அப்ப வகை உணவுகளாகும் எனத் திவாகரம் கூறுவதும் சமகால இலக்கியங்களில் இச்சொற்கள் காணப்படவில்லை என்பதும் சிந்திக்க தகுந்ததாகும்.

ஏழாவதான செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி ஆயுதங்களின் வடிவப்பெயர்களை முதலில் பேசுகின்றது. கழுமரத்தின் பெயரைக் ''கழுமுள்'' என்று சொல்வதிலிருந்து இப்பொழுது வழிபடு பொருள்களாகத் தமிழ்நாட்டில் காணப்படும் கழுமரங்களின் வடிவத்தினை அறிய முடிகிறது. பின்னர் பெண்களின் அணிகலன்கைளப் பேசி விட்டு இசைக் கருவிகளின் உறுப்புகளின் பெயர்களையும் நுட்பமாக அறியத் தருகின்றது. வீட்டில் பயன்படுத்தப் பெறும் பொருட்களான பாய், விளக்கு, நாழி, குடை, உரல் என்பவற்றோடு விளக்குமாறு, தலைச்சும்மாடு ஆகிய பெயர்களையும் இப்பகுதி பட்டியலிடுகின்றது. பண்பு பற்றிய பெயர்த்தொகுதி எட்டாவதாக கணிதவியல் அறிஞர்களும் அழகியல் குறித்துப்பேசுவோருக்கும் ஒரு அரிய கருவூலமாகும். ஐம்பொறிகளின் நுகர்வு பற்றிய கலைச்சொற்கள் இப்பகுதிகளில் நிறையவே இடம் பெற்றிருக்கின்றன. ஒன்பதாவதான செயல் பற்றிய பெயர்த்தொகுதி மனிதவுடலின் எல்லா அசைவுகளுக்குமான சொற்களைப் பட்டியலிடுகின்றனது.

பத்தாவது அமைவது ஒலி பற்றிய பெயர்த் தொகுதி. இதில் இசைத் துறைச் சார்ந்த கலைச் சொற்கள் நூற்றுக்கணக்கில் இடம் பெற்றுள்ளன. இத்தொகுதி எழுத்தில்லாத ஓசைப் பெயர்களையும் பட்டியலிட்டுக் காட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஒரு சொல் பல்பொருள் பெயர்த்தொகுதி என்பது பதினொன்றவாவது. இது தமிழ் மரபுக் கவிதையினைப் புரிந்து கொள்வதற்குத் துணை செய்வதாகும்.

இவ்வகையில் திவாகர நிகண்டு 9500 சொற்களைப் பதிவு செய்து வைத்துள்ளது. பிங்கல நிகண்டு 14700 சொற்களையும் சூடாமணி நிகண்டு 11,000 சொற்களையும் பதிவு செய்து வைத்துள்ளது. நிகண்டுகளின் பெருமையெல்லாம் அவை பெரும்பாலான தமிழ் எழுத்திலக்கியங்கள் போல மேலோர் மரபு மட்டும் சார்ந்தவையல்ல என்பதே, அவைதீக மரவுகளைத் தேடத் தொடங்கிய அயோத்திதாசர் பண்டிருக்கு நிகண்டு நூல்களின் அருமை புரிந்தது, அதனால் தான் அவர் தம் ஆய்வுநூல்களில் அடிக்கடி நிகண்டு நூல்களை மேற்கோள் காட்டுகிறார்.

 

கருத்துகள் இல்லை: