13/03/2011

நாட்டுப்புற நம்பிக்கைகளில் மழை - தே. அசோக்

நாட்டுப்புற மக்களின் முக்கியத் தொழிலாக விளங்குவது உழவுத்தொழிலாகும். உழவுத் தொழில் சிறப்பாக நடந்தால்தான் உலகின் இயக்கங்களான வாணிபம், அரசியல், பொருளாதாரம், கலை போன்றவை சிறப்பாக அமையும். உழவுத் தொழிலுக்கு அடிப்படைத்தேவையாக நீர்வளம் அமைகிறது. நீர்வளத்திற்கு ஆதாரமாய் மழைப் பொழிவு விளங்குகிறது. மேலும் மழைப் பொழிவு அனைத்து உயிர்களின் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாய் விளங்குகிறது. அத்தகைய மழைப் பொழிவு குறித்து நாட்டுப்புற மக்கள் பல்வேறு எண்ணங்களைக் கொண்டு செயல்படுகின்றனர். அவற்றில் மழை பொழிவதற்குரிய அறிகுறிகள், மழைக்காக மேற்கொள்ளப்படும் சடங்குகள், தேவைக்கு அதிகமான மழையை நிறுத்தும் சடங்குகள் போன்றவைகளை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.

மழைக்குரிய அறிகுறிகள்:-

ஒரு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பு அதனை அறிவிக்கும் பொருட்டு சில அறிகுறிகள் இயற்கையாகவே நிகழும் என நாட்டுப்புற மக்கள் நம்புகின்றனர். அந்த அடிப்படையில் பூமியில் பல்வேறு வளங்களை நல்கும் மழைப் பொழிவு நிகழ்வதற்கு முன் பூச்சிகள், விளங்குகள், பறவைகள், தட்பவெப்ப நிலைகள் போன்றவை மூலமாக சில அறிகுறிகளைக் காணலாம் என் மக்கள் நம்புகின்றனர். அவ்வகையில் மக்களிடையே காணப்படும் நம்பிக்கைகள் பின் வருமாறு:

1. பெருமாள் பூச்சி என்னும் ஒரு வகைப் பூச்சியினம் மழைபெய்யும் திசையை தன் கால் மூலம் காட்டும்.

2. கறையான் புற்று மேன்மேலும் உயர்ந்து கொண்டுசென்றால் மழைவரும்.

3. எறும்புகள் தங்கள் முட்டைகள், உணவுப் பொருட்களை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றால் மழைவரும்.

4. தவளைகள் தொடர்ந்து குரல் எழுப்பினால் மழைவரும்.

5. நண்டுகள் தங்களின் வளையை சேற்றால் அடைத்தால் மழைவரும்.

6. கன்னிமூலையில் (வடகிழக்குப் பகுதி) கருமேகங்கள் திரண்டிருந்தால் மழைவரும்.

7. செவ்வானம் தோன்றியிருந்தால் மழைவரும்.

8. மேற்கு காற்று அடித்தால் மழைவரும்.

9. மண்வாசம் வீசினால் மழைவரும்.

10. பகலில் சூரிய வெப்பம் அதிகமிருந்தால் அன்றிரவு மழைவரும்.

11. நல்லவர்கள் ஓரிடத்திற்கு வந்தாலும், இறந்து போனாலும் அன்று மழைவரும் என்பன மழை குறித்து மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளாகும்.

தெய்வத்திடம் முறையிடுதல்:-

வானம் மழைப் பெய்யத் தவறினால் பூமி வறண்டு, வளங்கள் குறைந்து, உலகப் உயிர்கள் பசித்துன்பத்திற்கு உட்படவேண்டிய நிலை உருவாகும். இக்கருத்தை வள்ளுவர்,

''வான் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள் நின்று உடற்றும்பசி'' (திருக்குறள் -13)

என்னும் குறளின் மூலமாக விளக்குகிறார். இந்நிலையில் மக்கள் தங்களின் துன்பங்களைப் போக்கிகொள்ள தெய்வத்திடம் வேண்டுதல் செய்கின்றனர். தெய்வத்திற்கு வழிபாடு செய்து, தெய்வத்தின் மனதைக் குளிர வைத்தால் தங்களின் தேவைகள் நிறைவேறும் என மக்கள் நம்புகின்றனர். சிலப்பதிகாரத்தில் இலங்கை வேந்தன் கயவாகு, பத்தினித் தெய்வத்தை வழிபட வானம் குறையாத மழையைத் தந்து வளங்களைப் பெருக்கின என்ற செய்தியைக் கீழ்வரும் பாடல் மூலம் அறியலாம்.

''.................. அரந்தை கெடுத்து

வரந்தரும் இவள் என ஆடித்திங்கள் அகவையின்

ஆங்கோர் பாடிவிழாக்கோள் பன் முறையெடுப்ப

மழை வீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா

விளையுள் நாடு ஆயிற்று''. (சிலப்பதிகாரம்)

அந்த அடிப்படையில் தற்போது நாட்டுப்புற மக்கள் மழைக்குரிய தெய்வமாக ''மாரியம்மனை'' வழிபடுகின்றனர். மாரியம்மனை வழிபட்டால் மழையைப் பெறலாம் என்பது மக்களின் உறுதியான நம்பிக்கையாக விளங்குகிறது. மாரியம்மனைத் தவிர ஐயனார் அங்காயி அம்மன் போன்ற தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வதன்மூலமும் மழையைப் பெறலாம் என மக்கள் நம்புகின்றனர். அங்காயி அம்மனுக்கு வேண்டுதல் புரிந்து ஆட்டுக்கிடாயைப் பலியிட்டால் அடுத்த சில தினங்களிலே மழைபெய்யும் என்பது மக்களின் நம்பிக்கையாக விளங்குகிறது.

மழைச் சோறு:-

தங்களின் துன்பங்களைச் சடங்குகள் மூலமாக வெளிப்படுத்தினால் இயற்கை அத்துன்பங்களை நீக்கும் என மக்கள் நம்புகின்றனர். மழை பொய்த்ததால் ஏற்பட்ட துன்பத்தைப் போக்க குழந்தைப் பேறுடைய பெண்கள், கன்னிப் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் ஆகியோர் ஊரில் ஒன்று கூடுகின்றனர். பிறகு அந்த சோற்றை உப்பில்லாமல் ஒன்றாகக் கலந்து அனைவரும் உண்கின்றனர். அதன்பிறகு மழை பொய்த்ததால் ஏற்பட்ட இன்னல்களை மாரடித்து கீழ்வரும் பாடலை ஒப்பாரியாகப் பாடி அழுது புலம்புகின்றனர்.

''குட்டியப்பன் கோனாரே

குண்டுமணி தாயரே

வடக்கே நெல்லுவாங்கி

வயலை தெளிச்சு வச்சோம்

வய பார்க்க போன தம்பி

வயித் தெரிஞ்சு வந்தாங்க

வானத்து இராசாவே

மேகத்து மந்திரியே

இறங்கும் போதே எழுந்திரிக்கும் சூரியனே

பொன்னு பயிரெடுத்து

புழுதியிலே தெளிச்சு வச்சோம்

பொன்னு மழை பெய்யலே

இந்த பூமி விளையலே

தங்க பயிரெடுத்து

தரையிலே தெளிச்சு வச்சோம்

தானியம் விளையலே

ஒரு மானம் இடிக்கலையே

ஒரு வய்ய மழை பெய்யலையே''

இறுதியாக இனி வாழ்வதற்கு வழியில்லை எனப் பெண்கள் கூறி ஊரை விட்டு நாடோடியாகச் செல்ல முற்படுகின்றனர். இவர்களை வயதான பெண்கள் சமாதானப் படுத்தி வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். இவ்வாறாக இச்சடங்கு நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்விற்கு அடுத்த சில தினங்களில் வானம் மழை பொழியும் என மக்கள் நம்புகின்றனர். ''மழைக்கஞ்சி'' என்ற சடங்கில் சோற்றை வாங்காமல் தானியங்களைப்பெற்று கஞ்சி தயாரித்து மழைச்சோறு சடங்கு போன்றே மழைக் கஞ்சி சடங்கையும் நிகழ்த்துகின்றனர். இதனை ''மழைக் கஞ்சி எடுத்தல்'' என்றழைக்கின்றனர்.

கடவுளருக்குத் தண்டனை:-

சாமம், பேதம், தானம், தண்டம் என்ற முறையில் மழை பொய்த்ததால் ஏற்பட்ட வறுமையைப் போக்க கடவுளிடத்தில் வேண்டுதல்களைத் தொடக்கத்தில் தாழ்மையாக வைக்கின்றனர். ஒரு கால நிலையில் கடவுளருக்குத் தண்டனை வழங்கியேனும் தங்களின் தேவையைப் பெறும் வகையில் செயல்படுகின்றனர்.

1. ஊரில் உள்ள பிள்ளையார் சிலையை திசை மாற்றியும் சாய்த்தும் தரையில் தள்ளியும் வைக்கின்றனர்.

2. பிள்ளையார் சிலையின் மீது சாணியைக் கரைத்து ஊற்றுகின்றனர். சில கிராமங்களில் மிளகாய் வற்றலை அரைத்துப் பிள்ளையார் சிலை முழுவதும் பூசி விடுகின்றனர்.

மேற்கண்ட நிலைகளுக்குக் கடவுட் சிலை உட்படுத்துவதன் வாயிலாகக் கடவுள், தான் அடைந்த அவலநிலையிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள மழையைப் பொழியச் செய்வார் என மக்கள் நம்புகின்றனர்.

மழையை நிறுத்தும் சடங்கு:-

''மழை பெய்தும் கெடுக்கும்

பெய்யாமலும் கெடுக்கும்''

என்ற பழமொழி தொடர்ந்து பெய்தாலும் அல்லது பொய்த்துப் போய்விட்டாலும் மக்களுக்குத் துன்பங்கள் நேரும் என்பதை உணர்த்துகின்றது. மழைப் பெய்யத்தவறிய காலங்களில் மழையைப் பெற கடவுளிடத்தில் வேண்டுதல்களைப் பல சடங்குகளின் வழியாக நிகழ்த்துகின்றனர். தேவைக்கு அதிகமாக மழைப் பொழியும் காலங்களில் மழையினால் ஏற்படும் இன்னல்களை எண்ணி மழையை நிறுத்துவதற்குரிய சடங்குகளில் ஈடுபடுகின்றனர்.

1. தொடர்ந்து மழைப்பொழிகின்ற காலங்களில் வானை நோக்கிப் பெண்கள் துடைப்பத்தை எடுத்துக் காட்டினால் வானம் அவமானம் தாங்காமல் மழையை நிறுத்திவிடும் என்று மக்கள் நம்புகின்றனர்.

2. இதே போன்று வானை நோக்கி எரிகின்ற கொள்ளிக் கட்டையைக் காட்டினால் வானம் தன்னை இவர்கள் சுட்டு விடுவார்களே என அஞ்சி மழையை நிறுத்தி விடும் என மக்கள் நம்புகின்றனர்.

3. தொடர்ந்து மழை பெய்ததால் அவதியுற்ற மக்கள் அனைவரும் ஒன்று கூடி கொட்டு மேளத்துடன் ஊரிலிருந்து புறப்பட்டு ஊர் எல்லை வரைசென்று மழையை வழியனுப்புதல் என்ற சடங்கினை நிகழ்த்துகின்றனர்.

1. மக்களின் செம்மையான வாழ்விற்கு மழை அடிப்படையாய் அமைகிறது.

2. மழைக்குரிய அறிகுறிகளைப் பூச்சிகள், விலங்குகள், பறவைகள், தட்ப வெப்ப நிலைகள் மூலமாக அறியலாம் என நம்புகின்றனர்.

3. தெய்வத்திடம் வேண்டினால் மழையைப் பெறலாம் என மக்கள் கருதுகின்றனர்.

4. உரிய சடங்குகளை மேற்கொள்வதன் மூலம் மழையைப் பெறவும், மழையை நிறுத்தவும் முடியும் என மக்கள் கருதுகின்றனர்.

மேற்கண்டவைகள் வாயிலாக மழைகுறித்து நாட்டுப்புற மக்கள் கொண்டுள்ள உளப்பாங்கை வெளிப்படுத்தும் விதத்தில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: