13/03/2011

சிறுகதைகளில் மனித நேயம் - ப. தமிழரசி எம்.ஏ., எம்ஃபில்

அளவில் சிறியதாக இருப்பது சிறுகதை. சிறுகதை என்பது வாழ்க்கையில் நிகழும் ஓர் கற்பனையின் அடிப்படை உணர்ச்சியைக் கருவாகக் கொண்டு பின்னப்படுவதாகும். ஒரு கதையைப் படித்து முடிக்கும்போது அதில் ஒரு முழுமையும், நிறைவும் இருத்தல் வேண்டும். ஏர்வாடி இராதாகிருஷ்ணன், சுஜாதா ஆகியோரின் சிறுகதைகளில் காணப்படும் மனித நேயம் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வறுமையின் சூழலில் அன்பு:-

சாவித்திரியின் குடும்பம் வறுமையில் வாடினாலும் குழந்தைச் செல்வத்திற்குப் பஞ்சமில்லை. அவர்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கே சிரமப்படும் வேளையில் அவளது ஒன்றுவிட்ட அக்கா ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளக் கேட்கிறாள். பணம் தருவதாகவும் கூறுகிறாள். அவளும் தன் கணவனிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்கிறாள். இரவு வீடு திரும்பும் கணவனிடம் சொல்ல நினைக்கிறாள். ஆனால் குழந்தைகள் தூக்கத்தில் சிணுங்குவதைக் கவனிக்காமல் அவர் மாறி, மாறி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கணவனைப் பார்த்ததும் எதுவுமே சொல்ல முடியவில்லை. வறுமை நிலையிலும் குழந்தைகள் மீது பாசம் வைத்திருக்கும் தந்தையின் மன உணர்வை சுஜாதாவின் இக்கதை உணர்த்துகிறது.

குடும்ப வறுமை காரணமாக அபூர்வமான ஆர்.எச். நெகடிவ் வகை இரத்தத்தை பணக்காரர் ஒருவரின் ஆபரேசனுக்காக தானம் செய்கிறாள். கோமதி, அவளே அடிபட்டு இரத்தம் இழந்து உயிருக்குப் போராடும் நிலையில் அவளுக்கு இரத்தம் தர யாரும் முன்வரவில்லை. இதனால் இறக்கிறாள். ஏனென்றால் அவள் ஏழை பணத்துக்காக மனிதனின் நேயம் விலை பேசப்படுவதை ஏர்வாடி அவர்களின் ''ரத்த தானம்'' கதை உணர்த்துகிறது.

இல்வாழ்க்கையின் இடர்பாடுகள்:-

கோவிலுக்குச் சென்ற இடத்தில் சோமசுந்தரம் - ஈஸ்வரி தம்பதிகள் ஒரு பிச்சைக்காரக் கிழவியை அவள் கூறிய சோகக் கதையைக் கேட்டு வீட்டு வேலைக்கு சென்னைக்கு கூட்டிவர நினைக்கிறார்கள். அப்போது சைக்கிளில் வந்த தாடிக்காரன் ஒருவன் அவர்கள் கூறியது பொய் என்றும், அந்தப் பெண் ஒரு ஏமாற்றுக்காரி என்றும் கூறுகின்றான். அது உண்மையா? பொய்யா? என்று புரியாத நிலையில் இந்த அம்மா வேலைக்கு வேண்டாம் என்று காரில் புறப்படுகிறார்கள். அந்த அம்மா கெஞ்சியபடியே பின் தொடர்ந்து வருகிறாள். கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு என்று கூறிக் கதையை முடிக்கிறார் சுஜாதா.

இந்தியா, ஏதோ ஓர் ஊர்... என்று கதை தொடங்குகிறது. கடை அடைப்பு என்ற பெயரில் ரவுடிகள் கூட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தும் அட்டகாசத்தை அப்பட்டமாகத் தோலுரிக்கிறது ''இளநீர்'' என்னும் சிறுகதை. புதுமணத் தம்பதிகள் தங்களது தேனிலவை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் ரவுடிக் கும்பலிடம் அகப்படுகிறார்கள். அவர்கள் அவனை எந்த மாநிலம்? என்று கேட்கிறார்கள் நான் இந்தியன்! என்று கூறுகிறான். அந்தக் கும்பல் அவர்களைத் துப்பாக்கியால் சுடுகிறது. எங்கே போயிற்று மனித நேயம்? என்று கேட்கத் தோன்றுகிறது. சுஜாதாவின் ''இளநீர்'' என்னும் சிறுகதை.

''நகரம்'' சிறுகதையில் வள்ளியம்மாள் தனது 12 வயது மகள் பாப்பாத்திக்கு வைத்தியம் பார்க்க மதுரை பெரியாஸ்பத்திரிக்கு வருகிறாள். மருத்துவமனையில் அவளை அலைக்கழிக்கும் நிலை பரிதாபமாக உள்ளது. இன்றைய அரசு மருத்துவமனைகளின் அவலநிலையைக் காட்டுகிறது. இறுதியில் மனம் நொந்து அவள் மனித சக்தியை வெறுத்து, தெய்வசக்தியை நினைத்து ஊருக்குத் திரும்புகிறாள். ''பாப்பாத்திக்குச் சரியாகிப் போனால் வைதீஸ்வரன் கோவிலுக்கு இரண்டு கை நிறையக் காசு காணிக்கையாக அளிக்கிறேன். என்று வேண்டிக் கொள்கிறாள் எனக் கதையை முடிக்கிறார் சுஜாதா.. மனித நேயம் அற்றுப்போனது. காசு கொடுத்துக் கடவுளிடம் மனித நேயம் விலை பேசுகிறது இக்கதை.

''பாவ புண்ணியம்'' சிறுகதையில் பதவியில் இருக்கும் போது ஒருவருக்கு ஏற்படும் மரியாதைகளையும், அவன் பதவி இழந்தபோது ஏற்படும் அவமரியாதைகளையும் சுட்டுகிறார். மனிதர்களின் மனங்களில் ஏற்படும் மாற்றத்தை அழகாக கூறியுள்ளார். ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள்.

''மேல்மட்டங்கள்'' என்னும் சிறுகதையில் வரும் கதிரேசன் காண்டீன் காண்டிராக்டர் ஆறுமுகம் பிள்ளை தன் ஊழலை மறைக்க லஞ்சம் கொடுக்க முன் வந்தும், அதனை மறுத்த சுந்தர் நியாயத்தை தொழிலாளர் பிரதிநிதிகளிடம் எடுத்துச் சொல்ல, அதனை மறுத்த அவர்கள் அவனையே சாடுகிறார்கள்.

''மேடையில் சில மங்கல நிகழ்ச்சிகள்'' கதையில் வரும் ஆறுமுகம் தனது மகளின் திருமணத்தை அமைச்சர் தலைமையில் நடத்தத் திட்டமிட்டு செலவு செய்கிறார். அமைச்சர் வரக் காலதாமதம் ஏற்படவே ஆறுமுகத்தின் அம்மா மாப்பிள்ளை, பெண்ணை அழைத்து கோவிலில் வைத்துத் திருமணத்தை நடத்துகிறார். தனது பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக அமைச்சரை அழைத்த ஆறுமுகம் இறுதியில் வருந்துகிறார். இல்வாழ்க்கையின் இடர்பாடுகளை எஸ். இராதாகிருஷ்ணன் இவ்வாறு விளக்குகிறார்.

''இனி அவர்கள் வரமாட்டார்கள்'' என்னும் கதையில் வரும் ராமநாதனும், அவரது இளைய மனைவி கல்யாணியும் வயது வித்தியாசம் அதிகமிருந்தாலும் மற்றவர்களின் கேலிகளுக்கு இடையே மனமொத்து வாழ்ந்த அவர்கள் புனிதப் பயணம் சென்ற இடத்தில் ராமநாதன் உயிர் நீங்க, கல்யாணியும் அவரது உடலை அணைத்துக்கொண்டே கோதாவரி ஆற்றில் உயிர் விட்டதன் மூலம் அவர்களிடையே இருந்த அன்பின் பூரணத்துவத்தை ஏர்வாடி அவர்கள் நிலைநாட்டுகிறார்.

மனித நேயத்தின் சிறப்பு:-

''நியாயங்கள்'' சிறுகதையில் வரும் இன்ஸ்பெக்டர் வீரபத்ரையா கைதிகளை அடிப்பதற்குக் கூறும் நியாயமான காரணங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. கதையின் நாயகனைப் போலப் பதில் சொல்ல முடியாமல் திணற வைக்கின்றன.

பஸ் நிலையம், இரயில் நிலையம் போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் திருடிவிட்டு அதுமட்டுமில்லாமல் சிறிதுகூட மனிதாபிமானமே இல்லாமல் அவர்களது கழுத்தை, காதை என நகைகளுக்காக அறுத்துவிட்டு ஓடிவிடும் திருடர்களுக்கு தண்டனை தேவை. அந்த வலியைத் திருட்டுக் கைதிகளும் உணரவேண்டும் என்ற கருத்தை இன்ஸ்பெக்டர் வீரபத்ரையா மூலம் உணர்த்துகிறார். நீதிபதி அளிக்கும் தண்டனை போதாது, சிறையில் அவனுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு, சோப்புக்கட்டி! இப்படி வசதியுடன் அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை பத்தாது. எனவே தான் இவனை அடித்து நொறுக்குகிறேன் என்று கைதிகளை அடிப்பதற்கு நியாயமான காரணத்தைக் கூறுகிறார். இங்கு இன்ஸ்பெக்டர் மனதில் உள்ள மனித நேயத்தை சுஜாதா உணர வைக்கிறார்.

''தீர்வு'' என்னும் சிறுகதையில் அதிக சப்தத்தை எழுப்பிக் கொண்டு பாடிக்கொண்டு இருக்கும் கல்யாண மண்டபத்தில் லவுட் ஸ்பீக்கர் அக்கம் பக்கத்தினருக்குத் தீராத தலைவலியாக இருந்ததோடு அல்லாமல் குழந்தைகளின் படிப்பையும் கெடுப்பதாக வேதாச்சலம் நினைக்கிறார். எங்கு புகார் கொடுத்தும் செல்லுபடி ஆகாத நிலையில் மண்டபத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து தீர்வு காண்கிறார். மற்றவர் நலனுக்காகத் தன் உயிரையே தந்து பாடம் புகட்டுகிறார், மனித நோயத்தின் சிறப்பை எஸ். இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விதவையும், ஊமையுமான அழகம்மாவை அந்த ஊர்ப் பெரியவர்களே விபச்சாரி ஆக்குகிறார்கள். அவளது பெண்ணால் தங்களது மகன்கள் கெட்டுவிடக் கூடும் என்று கருதி அவர்களை ஊரைவிட்டுத் தள்ளி வைக்கிறார்கள். அந்த ஊரிலே வெட்னரி டாக்டராக வேலை பார்க்கும் சுந்தர் அவளையே திருமணம் செய்து மீண்டும் ஊருக்கே திரும்பி வருகிறான். மனித நேயம் சிறிதுமின்றி ஊரை விட்டுத் தள்ளிவைக்கும் பெரிய மனிதர்களிடையே மனித நேயத்தில் உயர்ந்து நிற்கிறார் டாக்டர் சுந்தர். ''குற்றவாளிக்கே தீர்ப்பு வழங்குகிறார்கள்'' என்ற கதையில் ஏர்வாடி அவர்கள் இவ்வாறு மனித நேயத்தை உணர்த்துகிறார்.

''அவள் வித்தியாசமானவள்'' சிறுகதையில் வரும் கல்யாணி திருமணத்திற்கு முன்பே நிச்சயிக்கப்பட்ட ராசேந்திரன் இறந்ததை அறிந்து விதவைக் கோலம் பூணுவதைக் கண்டதும் அவள் தாய் மட்டுமல்ல, நாமும் அதிர்ச்சியடைகிறோம். அவள், அவன்மீது வைத்திருந்த காதலின் ஆழத்தையே நமக்கு எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் காட்டுகிறார்கள்... கல்யாணி இராணுவ விதவைகளின் நலவாழ்வுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்ததில் அவளது சமுதாய நேயம் புலனாகிறது.

தன் மனைவியின் ''கற்பைச் சூறையாட நினைத்த பண்ணையாரை வெட்டிச் சாய்த்துவிட்டு முதலிரவன்றே சிறைக்குச் செல்லும் ஆறுமுகம் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற கருத்துடன் திரும்பி வந்து பண்னணயார் மனைவியை கெடுக்க முயல, அங்கே வந்த ஆறுமுகத்தின் மனைவி, பண்ணையார் மனைவி தனக்கு துணையாக இருந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்கச் செய்கிறாள்.

தன் கணவனைக் கொன்றவனின் மனைவியையே பாதுகாத்த பண்ணையார் மன€வியின் மனிதநேய பெருந்தன்மையை ''ஆறுமுகத்தின் வேறுமுகம்'' கதை மூலம் ஏர்வாடி அவர்கள் உணர்த்துகிறார்.

ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய ''மனிதர்கள்'' என்னும் சிறுகதையில் வரும் நேசமணி என்னும் கொலைகாரன் தான் கொன்ற சுகுணாவின் காதலன்தான் தற்போது ஃபாதராக உள்ள மரியதாஸ் என்பதையும் அறியாமல் பாவமன்னிப்பு கேட்கிறான். இதனால் ஃபாதர் மரியதாஸ் கொலை செய்யும் நோக்கத்துடன் வருகிறார். வந்த ஃபாதரை பாவியாக்காமல் தானே தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி கொலைகாரனின் நேயத்தை உணர்த்துகிறார்.

வாழ்வியல் மேன்மை:-

சாந்திக்கு தான் வேலை செய்யும் வீட்டு முதலாளி ஐயாவும், அம்மாவும் தன்னிடம் காட்டும் அன்பைக் கண்டு பெருமைப்பட்டாள். சாந்தியின் கல்யாணத்திற்காக மாதம் இருபது ரூபாய் அவள் பெயரில் ரெக்கரிங் டெபாசிட் போட்டதைக் கூறியபோது நெகிழ்ந்த சாந்தி அது தன் மேல் வைத்த அன்பால் போடவில்லை. எங்கே சம்பளம் அதிகமாகக் கிடைத்தால் வேறுபக்கம் ஓடிவிடுவாளோ என்று பயந்து அவர்கள் டெபாசிட் செய்ததை தெரிந்து கொண்ட போது மனிதர்களுக்குள் இத்தனை ஈனத்தனமான எண்ணங்களா? என வருந்துகிற அவள் சூதுவாதில்லாமல் நல்ல இடத்திலே சம்பளம் குறைவாக இருந்தாலும் வேலை செய்வதாகக் கூறி தனது தன்மானத்தை நிலைநிறுத்துகிறாள். ''சாந்திக்குச் சம்மதமில்லை'' என்னும் சிறுகதையில் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள் வாழ்வியலின் மேன்மையை இவ்வாறு உணர்த்துகிறார்.

இறை உண்டியலில் விழும் பணம் வெடிகளுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும், செலவாகிறது. அதைவிட அப்பணத்தை ஏழை மாணவனின் படிப்பிற்குச் செலவிட்டோம் என்ற மனநிறைவோடு செல்லும் சம்பத் பற்றி ''செலவல்ல மூலதனம்'' கதையில் எஸ். இராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

சமூகப் பணி என்ற போர்வையில் தன் குடும்பத்தையும், குழந்தைகளையும் புறக்கணித்து விளம்பரத்துக்காக சேவை செய்வது போல் நடிக்கும் பெண்களையும், அதை தைரியமாகக் தட்டிக் கேட்கும் பெண்ணாக வரும் விஜியின் துணிவையும் ''சேவையா... தேவையா... '' என்ற கதையில் ஏர்வாடி அவர்கள் உணர்த்துகிறார்.

''இனிவரும் நாள்களில்..''. கதையில் கிராமமே தேர்தலை புறக்கணிக்க நினைக்க அதனை தமிழ்நேசன் என்னும் இளைஞன் தேர்தலைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்துவது ஆகும் என்று கூறி தேர்தலில் பங்குபெற வைக்கிறான். தமிழ்நேசன் போன்ற இளைஞர்களின் தேசப்பற்று மூலம் எஸ். இராதாகிருஷ்ணன் நம்மை வியக்க வைக்கிறார்.

எந்த வேலையும் கேவலமில்லை உழைப்பே உயர்ந்தது என்று உணர்ந்த இளைஞனின் கதையைச் சொல்கிறது. எஸ். இராதாகிருஷ்ணன் வேலை (ளை) வந்துவிட்டது சிறுகதை.

எல்லா மனிதர்களிடத்தும் மனித நேயம் என்பது மனதின் ஓர் ஓரத்தில் இருந்து கொண்டே தான் இருக்கும். அது வெளிப்படும் இடமும், வெளிப்படுத்தும் விதமும் வெவ்வேறாக இருக்கும் என்பதையும், மனித நேயம் என்பது நம் மனதில் இல்லாவிட்டால் ஏற்படும் அவல நிலையையும் சுஜாதா, ஏர்வாடி இராதாகிருஷ்ணன் இருவருமே தங்களது படைப்பின் மூலம் உணர்த்தியுள்ளனர்.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்.

 

கருத்துகள் இல்லை: