13/03/2011

தற்காலக் கவிதைகளில் நவீனத்துவக் கூறுகள் - சு. ஜெயசீலா

ஆரம்ப காலகட்டத்தில் இலக்கியங்கள் கவிதை நடையில் தான் தோன்றின. இவ்வகைக் கவிதைகள் உவமை, உருவகம், மோனை, எதுகை, இயைபு, அணி, பாவகை போன்றவற்றைப் பெற்று வந்தன. இம்முறையிலிருந்து இன்று மாறி மரபுக் கவிதைக்குரிய எதையும் பின்பற்றாமல் தற்கால கவிதைகள் வெளிவருகின்றன. வளர்ந்து வரும் இன்றைய கவிதைகள் நவீனத்துவத்தைப் பின்பற்றி வருகின்றன. ''நவீனத்துவம் என்பது அரசியல், தத்துவம், பொருளியல், அறிவியல், கலை இலக்கியம் எனச் சகல துறைகளையும் ஒரே சமயத்தில் பிரமிக்கத்தக்க விதத்தில் பாதித்த ஒன்று. நவீன அரசமைப்பு, சனநாயகம், தேசிய உருவாக்கம், நகரநிர்மாணம், மத்தியதரவர்க்க உருவாக்கம், நீதிவழக்குமுறை, கல்வி, மருத்துவம், குடும்ப அமைப்பு என நவீனத்துவம் பாதிக்காத துறைகளே இல்லை'' எனலாம்.

தற்காலக் கவிதைகள் பின்வரும் நவீனத்துவக் கூறுகளைப் பெற்று வருகின்றன:-

1. கவிதை மரபைப் புறக்கணித்தல்.

2. படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு.

3. வாசகனுக்கு சிந்திக்க இடம் அளித்தல்.

4. பூடகத்தன்மை.

கவிதை மரபைப் புறக்கணித்தல்:-

தற்காலக் கவிஞர்கள் தனக்கென்று விதிக்கப்பட்டிருந்த உவமை, உருவகம், அணி, பாவகை, எதுகை, மோனை இயைபு போன்ற மரபுகளை நீக்கி கவிதை இயற்றுகின்றனர். உரைநடையைச் சிதைத்துக் கவிதையாக எழுதுகின்றனர். நேரில் பேசுவது ஒரு நேர்முகத்தன்மையுடன் இருக்கிறது. இன்றைய நவீனக் கவிஞர்கள் பலரும் இம்முறையைப் பின்பற்றி எழுதுகின்றனர்.

''என் வீடு

ரொம்பச் சின்னது

யாராவது நண்பர்கள் வந்தால்

தங்க வைக்க முடியாது'' (விக்ரமாதித்தன் - உள் வாங்கும் உலகம்)

இக்கவிதை வரிகள் ஆசிரியர், வாசகர்களிடம் நேரிலே பேசுவது போன்று உள்ளன. இதில் கவிஞருக்குரிய மரபு இலக்கணங்கள் எதுவுமில்லை. வீடு மிகச் சிறியது. யாரு வந்தாலும் தங்குவதற்கு முடியாது என்பதை அப்படியே உரைநடையைப் பிரித்துக் கவிதையாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு:-

படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் மரபுக் கவிதைகளில் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். நவீனக்கவிதைகளில் இடைவெளிக் குறைகிறது. கவிஞன் தன் குடும்ப நிலையையும், தன்னையும், குடும்பத்திலுள்ளவர்களையும் கூறுவதன் மூலம் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இடைவெளி மிகவும் குறைந்து விடுகின்றது.

''அம்மா சொன்னாள்

ஐம்பது ரூபாய் ரேஷனுக்குப் புரட்ட முடியாத

நீயென்ன பிள்ளை?

வீட்டுக்காரி கேட்டாள்

எப்படி வாழப்போகிறீர்கள் (விக்கிரமாதித்தன் - உள் வாங்கும் உலகம்)

என்ற இக்கவிதை வரிகளில் கவிஞரின் வறுமை பற்றியும், வீட்டிலுள்ளோர் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு கவிஞன் தன் நண்பருடைய வீட்டினைப் பற்றி இவ்வாறு கூறினார்.

''கறுப்பேறிப் போன

உத்திரம்

வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு

கையெட்டும்

உயரத்தில்'' (கலாப்ரியா - உலகெங்கும் சூரியன்)

பொதுவான பிரச்சனையை விடத் தனிமனிதனது நிலையினைக் கூறுவதால் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் நெருக்கமாகிறது.

வாசகனுக்குச் சிந்திக்க இடமளித்தல்:-

படைப்பாளன் ஒரு மையத்தினை வைத்துக் கூறி வாசகன் அதை அப்படியே அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைமாறி படைப்பிலிருந்து எந்தவொரு கருத்தினைக் கொண்டும் வாசகன் மையத்தைச் சிந்திக்க முடியும். என்பதன் மூலம் வாசகனுக்கும் படைப்பில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

''வாடாமல்லிப்பூ மாலைக்கு

வசீகரமில்லை

தனிப் பூவுக்கோ

தாங்க முடியாத அழகு

மண் புழுக்களை நேசிக்கிற

மனம்

இன்றும் இருக்கிறது'' (கல்யாண்ஜி - முன் பின்னில்)

இவைகளிலிருந்து வாசகன் நேரடியான மையத்தினைப் பெற முடியும். அல்லது வாசகனின் மனநிலைக்கு ஏற்ப வேறொரு மையத்தைப் பெற இடமளிக்கிறது.

''அந்தி (போன்ற) நேரங்களில்

மிகச் சுறுக்காகவும்

கறுக்காகவும்

அடிக்கடி திருப்பிக் கொண்டும்

தினந்தோறும் - அது

பறக்கக் காண்கிறேன்'' (கலாப்ரியா - உலகமெலாம் சூரியன்)

இக்கவிதையில் படைப்பாளன் குருவியைப் பற்றிக் கூறினாலும் வாசகன் வேறு பலவற்றைச் சிந்திக்க முடியும்.

பூடகத் தன்மை:-

நேரடியாக மையத்தினைப் பெற முடியாமல் மறைமுகமாகப் பெறுவது, ஏதாவதொரு குறியீட்டின் மூலமாக உணர்த்துவது பூடகத்தன்மை எனலாம்.

''ரத்தம் சுண்டிய

கரப்பான்களும்

ஒட்டுப்பூச்சிகளும்

ஏலக்காய்ச் செடிகளைக்

கெட்டியாய்ப் பற்றிக் கொண்ட

வெளிரிப் போன பல்லிகளும்

இன்னும் சில

ஜ“வராசிகளும்

கூட்டணிகள் அமைத்துப்

போராடத் தயாராயின

ஓட்டுச் சீட்டைக்

கையில்

தயாராய் வைத்துக் கொண்டன (ஆத்மநாம் - ஆத்மநாம் கவிதைகள்)

''வகுப்புக்கு வரும் எறும்புக் கூடு'' என்னும் கவிதையில் வரும் மேல்கண்ட வரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் இதன் மையத்தைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உற்று நோக்கிப் பார்த்தால்தான் இதன் கருவைப் புரிந்து கொள்ள முடியும். இன்றைய சமூகத்திற்குச் சட்டத்தை மதித்து நடக்கும் மக்கள் தான் தேவை. அநியாயத்தை எதிர்த்துக் கேட்கும் எளியவர்கள் நசுக்கப்படுகின்றனர். எனும் கருத்தை மையமாகக் கொண்டு இக்கவிதை உள்ளது.

இவ்வாறு நவீனத்துவக் கவிதைகள் மரபுக்கவிதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. எந்தவொரு சிறு விசயத்தைப் பற்றி கூறுவதற்கும் இடமளிக்கின்றது. வாசகனும் ஒரு படைப்பாளன் நிலைக்குச் சிந்திக்க இடமளிப்பதால் தற்கால கவிதைகள் வரவேற்பைப் பெறுகின்றன.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்.

 

கருத்துகள் இல்லை: