14/03/2011

ஏற்றப்பாட்டு - முனைவர் அ. ஆறுமுகம்

நாட்டுப்புறப் பாடல்களின் பகுப்பில் தொழில்முறைப் பாடலாக இடம் பெறுவது ஏற்றப் பாட்டு, ஏற்றப்பாட்டுக்கு எதிர்பாட்டு இல்லை என்பது பழமொழி, கவியரசர் எனப்போற்றப்பெறும் கம்பரையே திகைக்க வைத்தது ஏற்றப்பாட்டு, இளங்கோவடிகள் நாடுகாண்காதையில் ஆம்பி, கிழார், ஏற்றம், பிழா ஆகிய இவற்றின் ஒலி கேட்காமல் காவிரிப்புதுநீர் மதகின்மீது மோதும் ஒலியே கேட்கும் எனக்குறிப்பிடுகிறார். எனவே அவர்காலத்தில் பிற இடங்களில் நீர்இறைக்க இக்கருவிகள் பயன்பட்டன என்பதும் ஏற்றப்பாட்டின் ஒலிகேட்கும் என்பதும் உய்த்துணரத்தக்கனவாம். ஏற்றமும் இறைகூடையும் சென்ற நூற்றாண்டில் கூடச் சிற்றூர்களில் நீர் இறைக்கப் பயன்பட்டவை. இவற்றுள் ஏற்றம் பற்றி மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

அமைப்பு:-

இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றத்தைப் பற்றி அறியும் வாய்ப்பு இல்லை. இயந்திர வளர்ச்சியில் ஏற்றங்கள் மறைந்துவிட்டன. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆற்றங்கரை ஊர்களில் நீர் இறைக்க மிகுதியாக பயன்பட்டது ஏற்றமே.

மரத்தாலான ஏற்றத்தின் அடிப்பகுதியில் படிகள் வெட்டப் பெற்றிருக்கும் நுனிப்பகுதியில் கோல்கட்டுவதற்கு வாய்ப்பாக மூன்று துளைகள் கொண்ட கட்டை அடிக்கப்பெற்றிருக்கும், கிணற்றில் அமைக்கப் பெற்ற காது கற்களின் குறுக்கே மரம் கட்டப் பெற்று நீர் இறைப்பவர் நிற்க வசதியாக இரண்டு மரத்துண்டுகள் இணைக்கப் பெற்றிருக்கும், ஏற்றத்தை மிதிக்க மூவரும், நீர் இறைக்க ஒருவருமாக நால்வர் பணியில் ஈடுபடுவர்.

ஏற்றத்தை மிதிக்கவுள்ள மூவரில் முதலால் ஏற்றக்கவைக் கல்லின் வலப்பக்கத்தில் நிற்பார், இடையாள் இடப்பக்கக் கவையில் நிற்பார், கடையாள் ஏற்றத்திலேயே இருப்பார், கோல் கிணற்றுக்குச் சென்றவுடன் கடையாள் கடைசிப் படி வரை மிதித்துச் செல்வார், இடையாள் அவரைத் தொடர்ந்து மிதித்து அவருக்கு முன்னாள் இருப்பார், முதலாள் மூன்று முதல் படிகளை மிதித்து சால்வேலே வந்தவுடன் கவைக்குச் சென்றுவிடுவார். அவரவர் இடத்துக்கு வந்தவுடன் மீண்டும் இப்பணி நிகழும், ஏற்றம் மிதித்தல், ஏற்றம் ஓடுதல் என்றே கூறப் பெறும். ஐநூறு சாலுக்கு ஒருமுறை தங்கள் பணியை மாற்றிக்கொள்வர் இப்பணி மாற்றலால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமுறை நீரிறைக்கவும். முதலாள், இடையாள், கடையாள் ஆக ஏற்றம் ஓடவும் சமவாய்ப்பு கிடைக்கும்.

பாடும்முறை:-

முதலில் ஒன்று முதல் நாற்பது வரை பாடி இறைப்பார் பின்னர் இறங்கு வரிசையில் இருபதுவரை வருவார், பின்னர் ஏறு வரிசையில் அறுபது வரை செல்வார், பின்னர் இறங்குவரிசையில் இருபது வரைவருவார், மீண்டும் ஏறு வரிசையில் எண்பதுவரை செல்வார். இறங்கு வரிசையில் இருபது வரை வருவார், பின்னர் இருபதிலிருந்து நூறு வரை சென்று இறங்குவரிசையில் நாற்பது வரை வந்து மீண்டும் ஏறு வரிசையில் நூறு வந்தவுடன் துலையை நிறுத்துவார். இதுதான் சாத்தநத்ததில் வழங்கிய கமாரர் கணக்காகும், பக்கத்தூர்க்காரர்களுக்கு இம்முறை புரிவதில்லை, சாத்தநத்துத்து ஆட்களை நீர் இறைக்க அழைத்து நீர் இறைக்கும் போது கற்களைப் போட்டுக் கணக்கிட்டுதலை நிறுத்தியவுடன் ஐநூறுகல் சரியாய் இருப்பதை எண்ணி வியப்படைந்துள்ளனர், நாட்டுப்புற மக்களின் உழைப்பின் உண்மையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி இதுவாகும்.

பாடுவார் இயல்பு:-

எதுகை, மோனை இலக்கணம் படிக்காமலேயே அவற்றிற்கு இலக்கியமாய் அமைந்தது அவர்கள் பாடல். உழைப்புக்கேற்ப அறுவடையின் பயன் வீட்டிற்கு வந்தால்தான் அவர்கட்கு மனநிறைவு, எனவே அவர்கள் பாடலில் கடவுளை வேண்டிப்பாடுவதும், கேலிசெய்து பாடுவதும் இயல்பாய் அமைந்துள்ளது. காதல் வெளிப்பாடும் பாடல்களில் இடம்பெறும் பாட்டில் தான் கடவுளை நம்பினார்களேயன்றி வளர்ச்சிக்கு உழைப்பையே நம்பியவர்கள். இவையெல்லாம் அவர்கள் பாடும் ஏற்றப்பாடலில் எதிரொலிக்கும்.

கூட்டுறவே குடும்ப உயர்வு என்பதைச் செயலளவில் பின்பற்றியவர் சிற்றூர் மக்கள் பக்கத்துப் பக்கத்தில் நிலமுள்ள நால்வர், சேர்ந்து தங்கள் நிலங்களில் ஒரே பயிரை இடுவார்கள், மழைக்காலத்தில் நெல், கோடைக்காலத்தில் கம்பு, கடலை, கேழ்வரகு போன்ற பயிர்களைச் சேர்ந்தே செய்வார்கள். துலையில் ஏற்படும் கூட்டு நட்பாக இறுகி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் உயரிய நிலையை உருவாக்கிய பெருமை ஏற்றப்பாட்டுக்கு உண்டு.

பாட்டு:-

உழைப்பின் விளைவால் உண்டான, வளர்ச்சியானாலும் எல்லாவற்றிற்கும் கடவுளே காரணம் என்று நம்பிக்கை மிகுந்தவர்கள், எனவே கடவுளை முன்னிறுத்தியே ஏற்றப் பாட்டையும் தொடங்குவார்கள், பிள்ளையாரை வணங்கியே துலை பிடிப்பர், ஐநூறு சால் தண்­ர் அளவை ஒரு கமார் என்று கொள்வர்.

பாடும் பாட்டின் நீளத்தைப் பொறுத்து நூறுசால் நீர் அதிகமாகவே இருக்கும். பாடல்கள் நான்கு சீர்கள் கொண்ட அளவடியாக இருக்கும். கருத்துத் தொடர்புக்கு இடையிடையே சொற்களைச் சேர்த்துக் கொள்ளலும் உண்டு. ஓசை நயத்துடன் அளவடியின் பின்னருசீரை மடக்கிப்பாடுதல் உண்டு.

பிள்ளையிரே வாரும் பிழை வாராமல் காரும்

குள்ளப்பெரு மாளே உன்னை மறவேனே

சிவனாரே வாரும் செல்வன் முகம் பாரும்

செல்வன்முகம் பாரும் சேதம் வந்தால் காரும்

சேதம்வந்தால் காரும் சேர்ந்துணை வாரும்

மயனேறியா ரெண்டு மயனேறியா மூன்று

மயனேறியா நான்கு மயனேறியா லைந்து

மயனேறியா லைந்து மயனேறியா லாறு

மயனேறியா லாறு மயனேறியா லேழு

மயனேறியா லேழு மயனேறியா லெட்டு

எட்டுக்குப்பின் ஒன்பது, பத்தை எண்ணிக்கையால் இல்லாமல் பாட்டாகப் பாடுவார்கள், நீரிறைக்கும் சால் உள்ளூர்க் கொல்லர் செய்து தந்ததாக இருந்தாலும் தெய்வத்தச்சன் மயனே செய்து தந்ததாகக் கொள்வர். எறி நீர் இறைக்கும் சாலைக்குறிக்கும், மயனேறியா லொன்று என்பது ஓசைக்காக நீட்டல் விகாரமாக மயனேறியா வொன்று எனப் பாடப்பெறும்.

மயனேறியா லெட்டு மாமுனி தவத்தால்

மாமுனி தவத்தால் மர்க்கண்டன் பிறந்தான்

என்றும்பதி னாறாய் இருக்கவரம் கேட்டார்

வயதுபதி னாறும் வரம்கொடுத்தார் சாமி

உன்னைமுதல் பாட ஒருவோதியா ரெண்டு

தொடர்ந்து ஒருவோதிய லெட்டு வரை பாடுவர், ஒருபத்து - ஒருபதி - ஒரு வோதி என மருவி வருவது

ஒரு வோதியா லெட்டு ஊரெங்கும் ஒருநாள்

ஊரெங்கும் ஒருநாள் சீரங்கம் திருநாள்

ஊரெங்கும் பயணம் உற்றதுணை இல்லை

நாடெங்கும் பயணம் நல்லதுணை இல்லை

அத்தைமகள் போறாள் உற்றதுணை ஆச்சு

இருமுருகக் தந்தா இருடியெற்ற பாலா

இருடிபெற்ற பாலா இருகையிலும் சூலா

இருகையில் சூலா இருபதியா ரெண்டு

(எட்டுவரை தொடர்ச்சி)

இருவோதியா லெட்டு இருட்டாதோ மானம்

இருட்டாதோ மானம் புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் பெய்யாதோ மாரி

பெய்யாதோ மாரி பெருகாதோ ஏரி

முத்துகுடி மாயா முருகந்பதம் பாட

முருகந்பதம் பாடா முப்போதியா ரெண்டு

(எட்டுவரை தொடரும்)

முப்போதியா லெட்டு முப்புற மெரித்த

முப்புர மெரித்த மூர்த்தியே சரணம்

திரிபுரம் எரித்த தேவனை சரணம்

காமனை எரித்த கடவுளே சரணம்

நாடி உன்னைப் பாட நாற்போதியா ரெண்டு

(எட்டுவரை தொடரும்)

நாற்போதியா லெட்டு நாடாளத் தூது

நாடாளத் தூது நடந்தாரே மாயன்

பாண்டவர்க்குத் தூது பாங்காய்நடந் தாரே

அன்னமுடி மாயன் உன்னைத்துதி செய்தேன்

உன்னைத்துதி செய்தேன் ஓடிவந்து காரும்

அவன் செயல்தான் ராமா அம்போதியா ரெண்டு

(எட்டுவரை தொடரும்)

அம்போதியா லெட்டு அண்ணா மலையார்

அண்ணா மலையார் அவர்போன மோசம்

அவர்போன மோசம் ஆரும் போன தில்லை

ஆறுமுக வேலா வாருமையா கூட

ஐங்கரனே தேவா அறுவோதியா ரெண்டு

(எட்டுவரை தொடரும்)

அறுவோதியா லெட்டு ஆரண்ட வனத்தே

ஆரண்ட வனத்தே அர்ச்சுனனும் போறார்,

அர்ச்சுனனும் போறார் அரன்தவசை நோக்கி

சேர்ந்திருப்போம் என்று தேர்விசயன் போனார்

எழுதும் பிர்ம தேவா இந்த ஏழைமுகம் பாரும்

ஏழைமுகம் பாரும் எழுவோதியா ரெண்டு

(எட்டுவரை தொடரும்)

எழுவோதியா லெட்டு எழுந்தமாயி வேலறி

எழுந்தமயி லேறி குழந்தைவடி வேலர்

குழந்தைவடி வேலர் கொஞ்சிவரு வாரே

சாவமயில் ஏறி சண்முகனார் வாரார்

சாமயில் - ஆண்மயில்

தண்ணிபரன் போட எண்ணினேனே ராமா

எண்ணினேனே ராமா எண்போதியா ரெண்டு

(எட்டுவரை தொடரும்)

எண்போதியா லெட்டு எங்களவர் வீடு

எங்களவர் வீடு வெங்கலக் கதவு

வெங்கலக் கதவு வெள்ளிஅருக் காலு

வெள்ளிஅருக் காலு வெங்கலத்தால் தாப்பா

தங்கத்திறக் கோலு சார்மேடையும் பொன்னு

துலைபிடித்த நேரம் தோத்தினேன் சிவனே

தோத்தினேன் சிவனே தொண்ணேறியா ரெண்டு

(எட்டுவரை தொடரும்)

தொண்ணேறியா லெட்டு தொண்டர்மடம் தேடி

தொண்டர்மடம் தேடி வந்தஅடி யார்க்கு

வந்த அடி யார்க்கு மாளாவிருந் திட்டார்

கர்த்தன்செய லாலே நித்தந்துதி செய்தேன்

நித்தந்துதி செய்தேன் நினைவுதவ றாமல்

மாரி இவன் பாதம் மறவேன் ஒரு நாளும்

மறவேண்ஒரு நாளும் மயனேறியா ரெண்டு

இவ்வகையில் கூட்டியும் குறைத்தும் பாடும் ஏற்றப்பாட்டு ஏட்டில் மட்டுமே இருக்கப்போவது, காற்றில் கரைந்த பாடல்கள் கணக்கற்றவை. சிற்றூரில் வழங்கிய நாட்டுப்புறக் கலைப்பாடல்களைத் தொகுத்து இக்கட்டுரை ஆசிரியர் ''ஆற்றங்கரைக்குயில்'' என்ற தலைப்பில் பதிப்பித்திருக்கிறார். இவருக்கு ஏற்றம் ஒடிய பட்டறிவும் உண்டு. சாத்தநந்தம் என்றும் சிற்றூரில் வழங்கிய பாடல்கள் மட்டுமே மேற்கூறிய நூலில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு தொகுக்கப் பெற்றால் எண்ணற்ற நட்டுப்புறக் கலைப்பாடல்களைப் பெறமுடியும். ஆர்வலர்கள் தொகுக்கும் பணியில் ஈடுபட வேண்டும். ஆய்வு நெறியாளர்கள் முறைப்படுத்த வேண்டும், மொழி வளர்ச்சியின் பதிவுக் கூறுகளுள் இதுவும் ஒன்று.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: