28/03/2011

நாட்டுப்புற இயலில் தத்துவம் - முனைவர் ஆர்.சுபாஷனி

நாட்டுப்புற மக்களின் வாழ்வியலில் பல இயல்கள் பேசப்படுகின்றன. அவ்வியல்களின் வளர்ச்சியினை அமைப்பியல் ஆய்வுக்கு முந்தைய நிலை, அமைப்பியல் ஆய்வுக்கு பின்னைய நிலை எனக்கொண்டு பார்க்கும்பொழுது, நாட்டுப்புற இயல் அவை தோன்றிய காலகட்டத்தோடு, அவை வழங்கப்பட்ட கால கட்டத்தையும், வழக்கப்படும் கால கட்டத்தையும், பிரதிபலிக்கும் தன்மையினை உடையது என்று கூறினால் மிகையாகாது. எனவே நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு வாழ்வாக அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையில் உள்ள நிகழ்வுகளில் பின்னிப் பிணைந்து உயிர்பெற்று உலாவரும் ஒரு வெளிப்பாடு என்றே கூறலாம். அவைகள் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கு புதுமையாயும் விளங்குகின்றன.

இவ்வாறாக ஆய்வுக்கு முந்தைய நிலையில் இறையியலைச் சமய, தத்துவ நோக்கில் பார்க்கின்ற பொழுது அதில் பல தத்துவ கருத்துகள் ஆழ்ந்து புதைந்து கிடப்பதைக் காணமுடிகின்றது. பல வகையாகப் பிரிக்கப்பட்ட நாட்டுப்புற பாடல்களின் மனிதன் இறையருள் வேண்டி இறைவனை வழிபடுவதன் மூலமும், பின்பு அது காலப் போக்கில் இறைவனுக்கு உருவம் கொடுத்து வழிப்படுவதின் மூலமும் தோற்றம் பெறலாயிற்று எனலாம். மனிதன் தன்னை சூழ்ந்துள்ள அளவிடமுடியாத இயற்கை சக்திகளில் இருந்து தனக்கு தீங்கு ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தன் மனதைத் திடமாகச் செய்யவும், தனக்குச் சாதகமாக நிகழ்வுகள் நிகழவும், தனக்கு புறம்பாக உள்ள சக்திகளைச் பற்றி நினைக்கவும், துதிக்கவும் ஆரம்பித்த நிலையில்தான் நாம் வாழிபாடு மற்றும் அதனை ஒட்டிய தத்துவக் கருத்துக்களின் தோற்றத்தினைக் காணமுடிகிறது.

உளவியல் பேரறிஞர் சிக்மண்ட் பிராய்டு அவர்கள் கூறுகையில் மனிதன் இயற்கையிடமும், மரணத்திடமும், மரணத்திற்கு பின்வரும் நிலையிடமும் கொண்ட அச்சமே வழிபாட்டிற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என்று குறிப்பிடுகின்றார். அக்கருத்தினையே தற்கால இந்திய தத்துவ ஞானியான ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மனிதன் தன் உறவுகளின் இடையே உள்ள தொடர்பும் அத் தொடர்பினால் ஏற்படும் எதிர்பார்ப்புகளும், அவ் எதிர்பார்ப்பினால் ஏற்படும் அச்சமும் மனிதனைத் தன்நிலை மாறி பிறர் ஆளுமைக்கு உட்பட்டு, நிலையாமை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு சுய அறிவினை இழக்கின்றான் என்று கூறுகின்றார். இவ்வாறாக அச்சமே வழிபாட்டிற்கு அடிப்படை காரணமாகி, அவை சிறு தெய்வங்களையும், பெருந் தெய்வங்களையும் வழிபடும் முறையாகவும், சாத்திரம், சம்பிரதாயம் எனப்படும் சடங்குகளுக்கு வழிகோலாகவும் அமையப்பட்டுள்ளது என்றே நாம் கூறலாம்.

இவ்விதம் நோக்குகையில் அமைப்பியல் ஆய்வுக்குப் பின்வந்துள்ள அதாவது Post Structurel Stage இல் நாம் பார்க்கின்ற வழிமுறை, தத்துவம் என்பதெல்லாமே அக்கால மக்களின் நாட்டுப்புற பாடல்களின் வழியே இயற்கையாகவும், இயல்பாகவும் எடுத்துக்கூறப்பட்டு, பிற்காலத்தில் நாம் குறிப்பிடும் மரணத்திற்குப்பின் என்ற அச்சநிலையை அறவே அகற்றி ஆத்மாத்த தத்துவத்தை அகத்தே புகட்டுவனவாக அமைந்திருக்கிறது என்பதை நாம் காணும்பொழுது, நாட்டுப்புற பாடல்கள் வாழ்வின் கற்பனையை மட்டுமின்றி, வாழ்க்கை தத்துவத்தையே தெளிவாக எடுத்துக் கூறுவதாகும் என்றே நாம் கூறவேண்டும்.

வாழ்வியல் தத்துவம்:-

மனிதனது வாழ்க்கையில் பல அர்த்தம் உள்ளதை, அறிந்துக் கொள்ளாமலும் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ளாமலும், பொருள் உணராமலும், கிடைத்த அரிய வாழ்வினை அரிதே நொறுக்கிவிடும் பாங்கினை,

''நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்

கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி''

என்ற சித்தர் பாடிய பாட்டினை நாட்டுப்புற மக்கள் தங்கள் பாட்டாகவே கருதி வாழ்ந்து வந்தமையை நாம் காணமுடிகிறது.

வாழ்க்கை நிலையற்றது என உணர்ந்து, வாழ்கின்ற நாட்களில் பயனுடையதாய் ஆக்காத, வாழ்வியல் தத்துவத்தை உணராத, மாந்தர்கள் இவ்வுடலை வீண் செய்து அழித்து விடுவதையே ''கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி'' என்ற வரி உணர்த்துகிறது.

நிலையாமை தத்துவம்:-

மனித வாழ்வியல், உடல், பொருள், இளமை அனைத்தும் நிலையற்றவை என்பதை,

''குச்சு வீடுங் கட்டலாம்

குறுங் கதவு சாத்தலாம்

வாழ வேண்டும் என்று சொன்னால்

வாய் மதங்கள் பேசலாம்

காலனுட ஓலை வந்தால்

கனத்தவீடும் தாங்குமோ

குச்சு வீடும் தாங்குமோ

குறுங்கதவும் தாங்குமோ''

என்ற பாடல் மூலம் அறியப்படும் தத்துவங்கள் பலப்பல. உடம்பு ஒரு குச்சு வீடு. அதில் ஆசைகள் கதவுகளாகும். எனவே வாழ நினைப்பவன் ஆசையை அடக்குதல் வேண்டும். ஆசையை அறவே ஒழி என்று பிற்காலத்தில் புத்தர் குறிப்பிடுகையில் அதனால் தோன்றும் வாத பிரிதிவாதங்களை ஆராய்ந்து அதனால் உண்டாகும் பல கிளைநிலைகளை நாம் கண்ணுறும்போது அக்கால மக்கள் அதனை இயற்கை வழியில் யதார்த்தமாக எடுத்துரைப்பது சிறப்பான ஒரு செய்தியாகும்.

உடம்பு ஒரு குச்சுவீடு, அக்குச்சு வீடு எவ்வளவு கனத்திருந்தாலும் அதாவது (புண்ணியம் செய்திருந்தாலும்) காலதேவன் வந்துவிட்டால் கணப் பொழுதும் நில்லாது மறைந்து விடும் என்ற நிலையாமைத் தத்துவத்தை இப்பாடல் நயம்பட கூறுகிறது.

வாழ்வே நிலையற்றது எனக் கூறுகையில் அதில் ஒருவன் ஓடித்தேடி சம்பாதிக்கும் செல்வமும் இறுதி காலத்தில் துணைவராது, சகடம் எனச் சென்று கொண்டே இருக்கும் தன்மையானது என்பதை,

''பஞ்சு பருத்தி எடுத்து - அதைப்

பேரான மணையிலே ஊட்டி அரைத்து

நெஞ்சக் கருத்தாலே நூத்து - அதை

நேரோடும் பாவில் ஓடி நெய்தாலும்

நாலு முழத்தில் ஒரு துண்டு - அதில்

நாலைந்து பக்கமும் பீத்தலும் உண்டு

பாதியைப் பறையன் கிழித்தான் - அதில்

பகுபாதி அம்பட்டான் கொண்டோடிப் போனான்

அக்கினி தேவுக்குப் பாதி - இந்த

அழகான கட்டைக்குப் போத்தப்பத்தாது''

என்ற பாடல் எடுத்துரைக்கின்றது. எனவே நிலையாமை என்பதை அவர்கள் இயல்பாக கூறுவதின் மூலம், ஓர் உண்மைக் கருத்தை நல்ல உவமையின் மூலம் எடுத்துரைப்பது அவர்களின் திறமைக்கு ஒரு சான்றாகும்.

அறத் தத்துவம்:-

மேலும் நம்மோடு வரும் நாலு முழத்துண்டுமே பாகம் பிரிக்கப்பட்டுவிடும். ஆனால் நாம் செய்கின்ற பாவ புண்ணியங்கள் தான் நம்மை தொடர்ந்து வரும் என்பதை, பாவத்தை கோரை புல்லிற்கு ஒப்பாக்கி, வரையறையற்ற கோரையின் வளர்ச்சியினை, வெட்டி வீசினாலும் வளர்தல் நிற்காது என்பதை பின்வரும் பாடலின் மூலம் தெளிவாக்கியுள்ளது. நம்மை சிந்திக்க வைக்கின்றது.

''மூலமாம் குளத்திலே

முளைத்து எழுந்த கோரையாம்

காலமே எழுந்திருந்தால்

நாலுகட்டு அறுக்கலாம்

நாலுகட்டு அறுக்கலாம் - அதை

ஐந்து கட்டாய்க் கட்டலாம்''

என்றும்,

செய்யும் தருமம் கூடவரும் ஆயன்பெருமாளே

செல்வம் எல்லாம் கூடவருமோ ஆயன் பெருமாளே''

என்று பாடுவதின் மூலம் தருமமே நம் நம்மோடு கொண்டு செல்லும் அழியாச் செல்வம் என்ற தத்துவத்தை எளிமையான முறையில் எடுத்துரைத்திருப்பது ஏற்றம் உடைய ஒன்றாகும்.

இறப்புத் தத்துவம்:-

உலகில் பிறந்த எல்லோரும் ஒரு நாள் சாகின்றவரே என்பதை உணர்ந்தவர்கட்கு இறப்பைப் பற்றியும், வாழ்வின் நிலையாமையைப் பற்றியும் நாட்டுப்புற மக்கள், நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு பின்வரும் பழமொழி மற்றுமொரு சான்றாகும்.

''ஆண்டாண்டு காலமாய் அழுது புரண்டாலும்

மாண்டார் மீள்வாரோ''

இதனை சிறுகுழந்தையை குறிப்பிட்டு பாடுகையில்,

''தத்தக்கா புத்தக்கா நாலே காலு

தானே நடக்கையிலே ரெண்டேகாலு

உச்சி வெளுக்கையிலே மூணே காலு

ஊருக்குப் போகையிலே எட்டே காலு''

என்ற கால்களில் எண்ணிக்கையை கூறுமுகமாகவும் நிலையாமையை ஆரம்பத்தில் இருந்தே நெஞ்சில் நிறுத்தி அதைப்பற்றியான அச்சத்தை விளக்கவே உணர்த்தப்பட்டுள்ளது. அவர்களின் சீரிய சிந்தனையாக குறிப்பிடலாம்.

மேலும் உயிர் உள்ளளவும் இவ்வுடம்பு உயர்திணை, உயிர் போய்விட்ட நிலையில் அது அஃறிணையாகி விடும் என்ற கருத்தினை விளக்கும் பின்வரும் பாடலானது நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் ஒன்றாகும்.

இதனை இன்னும் சுருங்கச் சொல்லும் வகையில், கல்யாணம் முதல் கைலாசம் போகும் வரை உள்ள தத்துவத்தை,

''கிச்சு தாம்பாளம் கிய்யாகிய்யா தாம்பாளம்

பச்சைமுத்தி தாம்பாளம் பல்லாக்கிலே தாம்பாளம்''

என்ற நான்கே வரிகளில் எழுதியுள்ள அற்புதமான விளையாட்டுக் கவிதையை நாம் காணுகையில் அவர்கள் வாழ்க்கைத் தத்துவத்தை எளிமையான முறையில் புரிந்துக் கொண்ட இயல்பினைக் காணமுடிகிறது.

மேலும் இதன் பொருளை விளக்க முற்படுகையில் வளர்ந்த நிலையில் உள்ளவர்கள் அறிந்துக் கொண்டு விவாதிக்கும் ஓர் உண்மையான உதாரணமாக William Wordsworth தன் கவிதையில் குறிப்பிடும் The child is the father of the man என்னும் தத்துவக் கருத்தினை சாதாரண பாமர மக்கள் எளிமையாக புரிந்துக்கொண்டு, இயல்பான வாழ்க்கை நடத்தி வந்திருப்பது சிறப்பினும் சிறப்பாக நாம் குறிப்பிடலாம்.

இறைத்தத்துவம்:-

இறுதியாக இறப்பு என்பதனுடன் நில்லாமல் இறப்பிற்கு பின்வாழும் நிலையான Eschatology என்பதனை அவர்கள் குறிப்பிடும்பொழுது இவ்வுலக வாழ்வு குச்சுவீடு, மறுவாழ்வு என்பது மச்சுவீடு (உயர்ந்த நிலை, பேரின்பநிலை) எனக் குறிப்பிடும் காவடிப் பாடல் ஆன,

''எட்டடிக் குச்சுக்குள்ளே - முருகா

எப்படி நான் இருப்பேன் ஒரு

மச்சுவீடு கட்டித்தாரும் - திருத்தணி

மலையின் வேலவனே''

என்னும் பாடல், பற்றினை அகற்றி பற்றற்ற நிலையான பேரின்ப பேற்றினை அடையும் தத்துவத்தையும் நாட்டுப்புற பாடல்கள் பாடாமல் விட்டுவைக்கவில்லை என்பதையும் நாம் அறிய முடிகின்றது.

இவ்வாறாக உலகம் முழுவதும் பலவகையான நாட்டுப்புற பாடல்களும், நாடோடிப் பாடல்களும் வழங்கப்பட்டு வந்திருப்பினும், அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப அவற்றில் பல தனித்தனி சிறப்பியல்புகளை நாம் காணமுடிகின்றது. பாமர மக்கள் எனினும் அவர்கள் இயற்கையோடு ஒட்டி வாழும் வாழ்வினை எடுத்தியம்பும் எழிலும், நிலையாமையை நிலை நிறுத்தி நேர் எதிர் கொள்ளும் திறனும், உண்மையை முன்னிருத்தி பேரின்பவாழ்க்கையை அடைய கூறும் வழியும், இறப்புத்தத்துவத்தை எடுத்துரைத்து மனிதன் தன் வாழ்நாளுக்குப் பின் எடுத்துச் செல்வது தர்மமே அன்றி செல்வம் இல்லை என்பதையும், வீடுபேறு என்கின்ற பேரின்ப நிலை அடையும் பாங்கினையும் அவர்கள் நாட்டுப்புற பாடல் வழியாக கூறுவது அவர்கள் வாழ்வியல் தத்துவத்தினை நன்கு உணர்ந்திருக்கின்றார்கள், என்பதை அறியமுடிகிறது. நாட்டுப்புற இயலில் தத்துவம் மேலும் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு மக்களைப் போய்ச் சேர்ந்தால் இன்றைய சூழலில் மனிதன் பேராசையினால் படும் துன்பங்கள் நீக்கப்படும் என்பது கருத்தாகும்.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை: