22/03/2011

சிரித்த முகக்காரன் - புதுமைப்பித்தன்

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லேபில் ஒட்டி வைத்த மாதிரியாகும்; 'ஐயோ பாவம்! என்ன துயரமான கதை, என்ன சோகப்பட்ட மனுஷன். லோகத்திலே நம் கண்ணில் படாமல் எவ்வளவு தீரர்கள் இருக்கிறார்கள்!' என்று எல்லாம் சொல்லச் சொல்லும்படி ஒன்றுமில்லை. அவன் ரொம்ப சாதாரண மனுஷன்; அவனைப் போன்றவர்களை எங்கும் பார்க்கலாம். அவனுடைய நிலைமையும் சாதாரணம்; ரொம்ப சர்வசாதாரணம். அதனால்தான் அவன் உலகத்தின் கண்ணில் விழாமல், மறைந்து உலகம் இழந்த ஒருவனாக இருக்கிறான்.

அவன் ஜப்பானியன். ஹாரிஸன் ஏழாந்தெரு பார்க், பெஞ்சில் உட்கார்ந்து, போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருக்கும் ஜனங்களை நிர்விசாரமாகப் பார்த்துக் கவனித்துப் பொழுதைப் போக்குகிறான். இன்று ஞாயிற்றுக்கிழமையானதினால் தன் நேரத்தைச் (உலகத்தின் நேரத்தைச்) செலவு செய்து கொண்டிருக்கிறான்; இந்த மகாலோகத்துடன் மறுபடியும் உறவு கொண்டு விடுவதற்காக, "நாம் என் கஷ்டப்படுகிறோம்" என்பதைக் கண்டுபிடிப்பதற்குச் சோகமாக, தனியாக உட்கார்ந்து பொழுதைக் கழிக்கிறான். அவன் ரொம்ப நேரம் யோசிக்கவில்லை; பெரிய சித்தாந்திகள் மாதிரி ஆற அமர உட்கார்ந்து மனசைத் துருவவில்லை. அதற்குப் பதிலாகச் சும்மா உட்கார்ந்து இருந்தான். அப்புறம் வெகு சீக்கிரத்தில் சோகத்தின் தனிமையிலிருந்து வெளி வந்தது சிரிப்பு; மகிழ்ச்சியால் அல்ல; சோகத்தாலும் அல்ல. அப்போதுதான் நான் முகத்தைப் பார்த்தேன். அழகானதொன்றல்ல; சர்வ சாதாரணமானது தான்; எங்கேயும் பார்க்கக் கூடியதுதான்.

அவன் பெயர் என்னவானால் என்ன? அதனால் பிரமாதமாக வித்தியாசம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை; இருந்தாலும் அவன் பெயர் த்ஸுமுரா. ஹாரிஸன் ஏழாந்தெரு பார்க் பெஞ்சில் அவன் உட்கார்ந்திருக்கும்பொழுது அவனைக் கண்டேன். நான் ஒரு மரத்தடியிலிருந்து ஒரு புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் ஏறிட்டுப் பார்த்தபொழுது அவனைக் கண்டேன். அன்னியன் ஒருவன் யார் என்பதை நிர்ணயிக்க மனசு செய்யும் முயற்சியே ஒரு ரசமான யாத்திரை. நான் புஸ்தகத்தை வாசிப்பது போன்ற பாவனையில் அவனைக் கவனித்தேன்; ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கு பெஞ்சில் உட்காரும் நபர்களைப் போலத்தான் அவனும் இருந்தான். யார் என்ற யோசனை ஆரம்பிக்கையில் அவன் என் மனசில் விசுவரூபம் எடுத்து விட்டான். என் அண்டையில் வாழுகிறவன், எனக்குத் தெரிந்தவன், பேசினவன் மாதிரி எல்லாம் ஆகிவிட்டான். அப்பொழுது திடீரென்று எதிர்பாராத சமயத்தில் அவன் சிரித்தான். பித்துக்குளிச் சிரிப்பு அல்ல. ஆனால் யாரையும் கவனிக்க வைக்காத சிரிப்பு. யாரும் கவனித்தாலும் பார்க்கிலோ, தெருவிலோ எதையோ வேடிக்கையாகப் பார்த்திருக்க வேண்டும் எனக் கருதி அத்துடன் விட்டு விடுவார்கள். ஆனால் அது மாத்திரமல்ல. அவனுடைய பார்வையில் விசித்திரமில்லை. எல்லோரையும் போலத்தான் இருந்தான். இருந்தும் அவனிடம் அலாதியாக ஏதோ விசேஷம் இருந்தது.

அவன் யார், எங்கு வேலை செய்கிறான் என்று யோசிக்க ஆரம்பித்தேன். உள் மனத்தின் சர்க்கஸ் விந்தைகளில் நடக்கும் ரசமான வேடிக்கைகளுக்கு வரம்பே கிடையாது. என்னத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்? அதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன்; அவன் யார், ஜீவனோபாயத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்... நான் பல முறை யோசித்தேன்.

'எழுத்தாளனோ? சித்திரக்காரனோ! சாஹித்ய கர்த்தனோ? அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடும். அவனுடைய சோக முகத்திற்கும் சிரிப்புக்கும் சம்பந்தமில்லை. ஆனால் எப்பொழுது பார்த்தாலும் சிரித்துக் கொண்டிருந்தான்; உலகமே தன்னில் ஓர் அம்சம் மாதிரி. சிரிப்பதற்கு விஷயமோ அர்த்தமோ இல்லாதபோது பித்துக்குளி மாதிரி சிரித்துக் கொண்டிருந்தான். அவன் பித்துக் குளியாக இருக்க முடியாது - காரண காரியமற்ற வாழ்வை அவனது உடை காட்டவில்லை. பாதிரியோ? பலருக்குத் தலைமை வகித்து முன்னே வழி காட்ட வந்தவனோ? - தன் 'தலைமை' வேஷத்தைக் களைந்து அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத வகையில் ஜனங்களுடன் அளவளாவிப் பழக வந்தவனோ? ஆனால் ஞாயிற்றுக்கிழமையாச்சே. ஞாயிற்றுக்கிழமைதான் பாதிரியாருக்குப் பழி வேலை இருக்கும் தினம். இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பார்க்குக்கு வருவதென்றால் யாருக்கும் இயலும். ஒரு சமயம் அவனை மளிகைக் கடைக்காரனோ பூக்கடைக்காரனோ என்றெல்லாம் நினைத்தேன். இப்படியாக நினைத்துக் கொண்டு போனேன்; நினைப்புகளுக்கு முடிவில்லை.

திங்கட்கிழமை அதிகாலையில் அவன் பார்க்கில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். முந்தின நாளில் போல, மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் போல, பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். ஜனங்கள், யந்திரங்கள் இவற்றின் ஓட்ட சாட்டம், உலகத்திலே பொழுது கழிவது எல்லாவற்றையும் சோம்பேறித்தனமான, சிரமமெடுத்துக் கொள்ள விரும்பாத, அதே "ஞாயிற்றுக் கிழமைக் கண்" கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். அவசரப்படாமல், துடிப்பில்லாமல் (அவன் உயிருடன் இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை) பார்த்துக் கொண்டிருந்தான். வேலையும், வேகமும், வேர்வையும் உழைப்பும், கஷ்டமும் மிகுந்த வார நாட்களில் போலவே அமர்ந்து இடையிடையேயறியாமலே சிரித்துக்கொண்டு, தன்னை மனுஷக் காதுகளும் மனுஷக் கண்களும் கேட்டு, பார்த்துத் துருவித் துருவி ஆராய்கின்றன என்பதே தெரியாமல் இருந்தான். கௌரவத்தின் முகச்சுளிப்பு இல்லாமலும், சோகமே இல்லாமலும் உட்கார்ந்து வெளியில் சாய்ந்துகொண்டு இருந்தான். ஆனந்தக் கண்ணீர் வரும்படி எழுதவில்லை. நாடக அரங்கத்தில் பாடவில்லை. தன் திறமையை உபயோகிக்கவில்லை. திறமையுடன் விளையாடவில்லை. தன் திறமை கொண்டு திரமாக வாழவில்லை. ஒரு வார்த்தையில் சொல்லப் போனால் சும்மா உட்கார்ந்து, உயிரோடு உட்கார்ந்து 'ஜீவகளை அமைந்த நிழலில்' சிறிது இருந்து 'எதிரொலியற்று மறையும் வாழ்வு', என்ற தோற்றத்தில் அமிழ்ந்திருந்தான்.

பிறகு செவ்வாய்க்கிழமையும் அவனைப் பார்த்தேன். அப்புறம் புதன், வியாழன், வெள்ளி எனத் தினசரி அங்கு வந்தான். சுகவாசியோ; வேலையிழந்தவனோ! அல்லது உபகாரச் சம்பளம் பெறுபவன் ஒருவனைப் பின்பற்றிக் கவனிப்பதாகவும் நம்ப ஆரம்பித்தேன். எந்த நினைப்பும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. அதற்கப்புறம் ஒருவாரம் அவன் வரவில்லை. நான் மட்டும் தனியாக மரத்தடியில் உட்கார்ந்து அவன் இனிமேல் வரவே மாட்டானோ என எண்ணியிருந்தேன். இங்கு உட்கார்ந்து, அவன் இனிமேல் வரப்போவதில்லை; நிச்சயமாகப் போயே போய்விட்டான் என நினைக்கையில் அந்த நபர் என் மனசில் பூதாகரமாக வடிவெடுத்து அந்தத் தெரு, பார்க் எல்லாவற்றையும் அவனைப் பற்றிய நினைப்பு என்ற வடிவம் எடுத்துக் கவித்து விட்டான்; நான் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். அவனை யாரென்று அடையாளம் கண்டு பிடிக்காமல், பேச்சுக்கொடுத்து, நடை, நொடி, வார்த்தை பாவனைகளால் அனுமானித்து, அவன் யாரென்பதைக் கண்டுபிடிக்காமல் விட்டு விட்டேனே என்பதில் வருத்தம்.

ஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த ஜப்பானியன் திரும்பவும் பார்க் பெஞ்சுக்கு வந்து உட்கார்ந்தான். சிரிப்பைக் கொஞ்சங்கூட இழக்காமல் சோகம் முகத்தில் கோடு போட, முந்திப் பார்த்தமாதிரியிலேயே பார்த்தும், இடையிடையே தன்னையறியாமல் சிரித்தும், பார்க் பெஞ்சில் ஆயிரம் ஞாயிற்று முகங்களில் ஒன்றாகத் தன்னையிழந்து உட்கார்ந்திருந்தான்.

இந்தச் சமயம் அவனிடம் போய்ப் பேச்சுக் கொடுக்கத் தயங்கவில்லை. 'ஹலோ' என்றேன். அவன் என்னைப் பார்த்து அதிசயப்படாமல் சிரித்தான். "நான் எப்போதும் அந்த மரத்தடியில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன். உன்னை எப்பொழுதும் பார்க்கிறது வழக்கம். ஒரு வாரமாகக் காணவில்லை. என்னவோ ஏதோ?" என்று சொன்னேன்.

"உட்காரேன்" என்றான்.

பெஞ்சியில் நகர்ந்து எனக்கு இடம் கொடுத்தான். "என் பெயர் த்ஸுமுரா, ஜப்பானில் ஷின்னோ ஜில்லாவிலிருந்து வந்திருக்கிறேன்" என்றான். தன் பெற்றோர்கள் ஹிரோஷிமாவில் இருப்பதாகச் சொன்னான். ஹிரோஷிமாவில் பலரைத் தனக்குத் தெரியும் என்று அவன் எனக்குச் சொன்னான்.

"இனிமேல் நீர் வரமாட்டீர். அதனால் மறுபடியும் பார்க்க முடியாது என்று நினைத்தேன்" என்றேன்.

அவன் சிரித்தான். "அப்படி ஒன்றும் பயப்பட வேண்டாம். நான் எப்பவும் இங்கேதான் இருப்பேன். உல்லாச யாத்திரை போக என்னிடம் பணம் கிடையாது" என்றான்.

"இங்கே என்ன செய்கிறீர்?" என்று கேட்டேன்.

"ஹினோதே சலவைக் கம்பெனியில் வேலை. அங்கே நான் லாரி டிரைவர்; ஈஸ்ட்பேயில் உள்ள வீடுகள், ஆபீஸ்களுக்கு வண்டியை ஓட்டிக் கொண்டு போய்ச் சாமான் கொடுத்து எடுத்து வருவது உத்தியோகம். பதினான்கு வருஷமாக அங்கேதான் வேலை. சில சமயம் அரைநேர வேலை. அதனால் தான் வாரநாட்களில் இங்கு வந்து உட்கார்ந்திருப்பேன்" என்றான்.

ஒரு நிமிஷம் கழித்து நான் போக வேண்டும் எனப் புறப்பட்டான். "சலவைக் கம்பெனியில் இராத்திரிச் சாப்பாடு ஆறுமணி; இப்போது புறப்பட்டால்தான் நேரத்திற்குப் போய்ச் சேரலாம்" என்றான்.

மறுபடியும் சந்திப்பதாகப் பரஸ்பரம் சொல்லிக் கொண்டு பிரிந்தோம். முகத்தில் காணும் சோகத்தைப் பற்றியோ, அல்லது வாழ்வின் வருத்தத்தைப் பற்றியோ அவன் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லலை. ஏன் சோர்ந்தாற் போலிருக்கிறான். எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருக்கிறான் என்பதுபற்றி நானும் கேட்கவில்லை. நாங்கள் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. உலகத்துக்கே பொதுவான ஒரு கேள்வியைக் கேட்டு அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. அந்தக் கேள்வியைக் கேட்க நாம் யார்? ஒவ்வொரு சிறு பேச்சும், ஒவ்வொரு சிறு வம்பும், சிரிப்பைத் தூண்டும் விஷயமும் உலகத்தின் சோகத்திலேதான் பிறக்கிறது; அதுதான் உண்மை. மனிதர்கள் பரஸ்பரம் சந்தித்துக் கொள்வது, குதூகலமோ துக்கமோ எதுவானாலும் உலகத்தின் சோகத்திலும் சத்தியத்திலும் பிறக்கிறது.

அவன் சலவைக் கம்பெனி லாரி டிரைவர். வண்டியை ஓட்டிக்கொண்டு போகும்போது அவன் முகத்தில் அறையும் காற்றைவிட எந்த விதத்திலும் சற்றும் வித்தியாசமில்லாத இந்த பார்க் காற்று வாங்க வருவது ஏன்? அவன் வெறும் சலவைக் கம்பெனி டிரைவர்தான்; நகரத்தில்தான் வசிக்கிறான். ஓய்வுக்காக பார்க்குக்கு வருகிறான். பெரிய நினைப்புக்காக அல்ல; வாழ்விலிருந்து தப்பி வந்த அதை மறக்க அல்ல; கசப்பில்லாமல், 'பம்மாத்து' இல்லாமல், கனவை விரும்பாமல் கூரையைக் கிழித்துக் கொண்டு விழும் அற்புதங்களை எதிர்பார்க்காமல், அடுத்த மணியில், அடுத்த வினாடியில் என்ன ஏற்பட்டாலும் என்ன என்று நிர்விசாரமாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருக்க வருகிறான்... என்பன போன்றவையே அவனைப்பற்றிய விஷயங்கள்.

இதுதான் தினசரி நிகழும் மகா விஷயம். ஆகையால்தான் சோகம், துயரம் உலக வருத்தம் இவைகளின் காரணம் சிரிப்பிலும், மூங்கையான மகாகால மௌனத்திலும் அரை குறையாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: