14/03/2011

நாட்டுப்புறப்பாடல்களில் நம்பிக்கைகள் - தா.க. அனுராதா

நாட்டுப்புறப்பாடல்கள் ஜ“வநதி போன்றவை; அடித்தளத்தில் ஓடிக்கொண்டிருப்பவை. கங்கை நதிக்கும் உயிர் கொடுக்கும் ஆகாச கங்கை போன்றவை. நாட்டுப்புறப்பாடல்களே எழுத்திலக்கியத்தின் தாய் என்று கூறலாம். நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்றவை நாட்டுப்புறப்பாடல்களின் அடிப்படைப் பொதுக்கூறுகளாக அமையும். நம்பிக்கை வாழ்வின் அடிப்படை உயிரினம் சிறப்பாக - மக்களினம் நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்கின்றது. ஒருவரையொருவர் நம்புவதாலேயே உலக வாழ்வு - நாட்டுவாழ்வும் சிறக்கின்றன.

இறைநம்பிக்கை:-

கடவுள் நம்பிக்கை மிக்கது நம்நாடு. பழந்தமிழ் மக்கள் தெய்வத்திடம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தனர். கடவுள் அருள் இருந்தால் உலகில் பெறக்கூடாதது எதுவும் இல்லை என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கையினால் என்றும் எதை வேண்டினும் அவர்கள் கடவுளிடமே முறையிட்டுக் கொண்டார்கள். வாழ்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும் அவர்கள் தாம் வழிபடுகின்ற தெய்வத்திடம் முழுநம்பிக்கை வைத்தே வாழ்ந்து வந்தனர்.

''கடவுளை நோக்கித் தவமிருப்பின் பிள்ளைப்பேறு கிட்டும்'' என்று,

''பத்தெட்டு காலம் பகவானைச் சேவித்தோம்

ஈரேழு காலம் ஈஸ்வரனைத் தியானித்தோம்

போனபோன கோவிலெல்லாம் புத்திரனே வேண்டுமென்று

போகாத கோவிலுக்குப் பொன்முடிஞ்சு போகவிட்டோம்'' (நாட்டுபுறப்பாடல்கள் சமூக ஒப்பாய்வு. ப.153-154)

எல்லாக் கோயில்களுக்கும் சென்று வணங்கிக் குழந்தைச் செல்வம் கிட்டியது எனச் சொல்லும் செய்தியில் கோயில்களுக்குச் செல்லுதல், இறைவனைத் தியானித்தல், தாம் விரும்பிய பொருளை வேண்டி நிற்றல், போக முடியாத கோயில்களுக்குப் பணத்தை அனுப்பிவிடுதல் போன்ற பழக்கங்களை - நம்பிக்கைகளைக் காண்கிறோம்.

மேலும் ''அரசமரத்தைச் சுற்றிவந்து அடிவயிற்றைப் பார்த்தாளாம்'' என்ற பழமொழியிலிருந்து அரசமர வழிபாடு மலட்டுத் தன்மையைப் போக்கவல்லது என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்துள்ளது என்று அறிய முடிகிறது.

புண்ணிய நீராடல்:-

புண்ணிய நீர்நிலைகளில் குறிப்பிட்ட நாட்களில் நீராடுதல் பிள்ளைப் பேற்றுப் பயனை அளிக்கும் என்ற நம்பிக்கை,

''தை அம்மா வாசையன்று தனுஷ்கோடி நீராடி'' (மேலது ப.158) என்று கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட நாட்களில் புண்ணிய நீராடலைப் போன்று சில குறிப்பிட்ட நாட்களில் அன்னதானம் செய்தால் மக்கட்பேறடையலாம் என்ற நம்பிக்கையும் இருந்துள்ளது. மற்றவர்களின் பசியைப் போக்கினால் அவர்களின் வாழ்த்தில் தங்களுடைய குறைதீரும் என்று நம்புகிறார்கள். ''ஆடி அம்மாவாசையிலே ஆயிரம் பேர்க்கு அன்னமிட்டு''க் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது.

கண்ணேறுபடுதல்:-

பிறர் கண்டால் கண்ணேறு படும் என்ற நம்பிக்கையும் அதற்குத் திருஷ்டி கழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் அந்தக் கால மக்களிடம் இருந்தன. பிட்டுச் சுற்றல், தலையில் சோறு கொட்டுதல், கொழுக்கட்டை முதலியவற்றால் ஆலத்தி எடுத்தல் போன்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த செயல்கள் இன்னும் நாட்டுப்புறங்களில் உள்ளன.

''துணரால் ஆலத்தி தோழியா எடுப்பினமே

திருஷ்டி கழிப்பினமே தேவேந்திர அன்றார்க்கு'' (நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள். ப.16)

என்று திருஷ்டி கழிக்கும் நம்பிக்கையை நம்மால் உணரமுடிகிறது.

காது குத்தல்:-

குழந்தை அழகாக இருந்து விட்டால் எமன் ஆசைப்பட்டு விடுவானாம். உடம்பில் ஏதேனும் காயம் ஏற்படுத்தி விட்டால் எமன் அருகில் வரமாட்டான் என்ற நம்பிக்கையால் காது குத்தல் பழக்கம் மக்களிடையே வேரூன்றி விட்டது என்பதை,

''மாம்பிஞ்சு கொண்டு மதுரைச் சிமிக்கி கொண்டு

காதுகுத்த வாராக கனகமுடி உங்களம் மான்'' (நாட்டுப்புறவியல், ப.202)

என்ற அடிகளால் அறியலாம்.

குரு தட்சணை:-

ஓதுவித்த நல்லாசிரியருக்குச் சம்பளத்தைத் தராவிட்டால் தனக்குப் படிப்பே வராது என்று நம்பினர். ''வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்'' என்ற பழமொழியும் நாட்டில் உண்டு. அவ்வாறு ஆசிரியருக்கு உரிய ''சம்பளத்தை'' மாணவர் தராவிட்டால், அவர்கள் எவ்வளவு படித்தாலும் படிப்பே வராது என்பது அவர்கள் நம்பிக்கை.

''ஓதுவித்த கூலி ஒருகாசு நின்றாலும்

பாதி வித்தை தானும் பலியாது மாதாவே'' (நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள். ப.15)

என்றபடி, நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் வாழ்ந்தனர் என்பதை அறியலாம்.

சகுனம்:-

காகம், பல்லி முதலியவற்றின் ஒலிகளிலே நம்பிக்கை வைத்துச் சகுனம் பார்க்கும் முறை இன்றைக்கும் மக்களினத்தில் உண்டு. ''பல்லி சொல்லுக்குப் பலன் பார்க்கும்'' சீர்திருத்தவாதிகள் நம் நாட்டில் ஏராளம்.

''பனையேறும் பல்லிக்கோ - நான் பகடிக்கு ஆளானேன்

சில்லேரும் பல்லிக்கோ - நான் சிரிப்புக்கு ஆளானேன்'' (மேலது. ப.20)

என்ற பல்லியின் துர்ச்சகுனத்தால் கணவனை இழந்து கதறும் பெண்ணின் வாக்கும்

''காகம் இருந்து - கால் கடுக்க ஏனழுதாய்

மன்னன் வசனத்தை - மனங்குளிரச் சொல்லாமல்.'' (மேலது. ப.20)

என்ற பெண்ணின் அவல ஒலியும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன.

நாளும் கிழமையும்:-

நாளும் கிழமையும் அவர்தம் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அமைந்தன. சில நாட்களில் செயல் செய்தால் சிறக்கும் என நம்பினர். அப்படிச் சில நாட்கள் இறைவனுக்கு உகந்தன எனவும், அந்நாட்களில் வீட்டையும் மனத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் நம்பினர். மேலும் சில மாதங்களில் குடிபோகவோ, வீடுகட்டவோ கூடாது எனவும் ஆடியில் அடிவைக்கக் கூடாதெனவும் நம்பினர்.

''ஆடிமாதம் அடிவைக்கக் கூடாதுன்னு

அப்பத்தான் கண்டேனடி'' (மேலது. ப.19)

என்று அடிவைத்த அல்லலுற்ற ஒரு பெண்ணின் உள்ளம் அலறுகிறது.

கனவு:-

கனவுகளைப் பற்றிப் பல நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் நம் மக்கள். உப்பைக் கனவில் கண்டால் செல்வம் சேருமாம். சந்திரனைக் கனவு கண்டால் காதலில் வெற்றி ஏற்படுமாம். தேர்வு எழுதுவதாகக் கனவு கண்டால் பதவி உயர்வு ஏற்படுமாம். கனவுகள் வாழ்வின் பின்னால் நிகழப்போவதை முன்னரே உணர்த்துகின்றன என்ற நம்பிக்கையும் உள்ளது.

தலையெழுத்து:-

விதியின் மீது உள்ள நம்பிக்கை உலகத்தில் உள்ள பன்னாட்டு மக்களுக்கும் உண்டு. நல்லது, கெட்டது, எது நடந்தாலும் விதி வசத்தால் நடக்கிறது என நம்பினர். விதியைத் தலையெழுத்து என்றும் குறித்தனர்.

பெருந்துயர் வரும் பொழுது அதைத் தாங்கிக் கொண்டு, வேறெவரையும் பழிக்காமல் ''தன் தலையெழுத்தே காரணம்'' என்று தன்னையே காரணமாக்கிக் கொண்டு பொறுத்துக் கொள்ளும் பொறுமையின் அடியாகப் பிறந்ததே இந்நம்பிக்கை.

கணவன் இறப்புக்குத் தன் தவக்குறைவே காரணம் என்று ஒரு பெண் புலம்புவதை,

''தாலியும் செஞ்ச தட்டான்மேல் குத்தமில்லே

தாலிகட்ட வந்த தருமருமேல் குத்தமில்லே

தாலிகட்டிக் கொண்டேனே - நான்

தங்காளும் செஞ்ச தவம்.'' (நா.பா.ச ஒப்பாய்வு ப.172)

இந்த ஒப்பாரி வரிகளின் மூலம் அறியலாம்.

அபிஷேகம்:-

தெய்வத்திடம் மாறாத நம்பிக்கை கொண்ட நம் மக்கள் மேற்கொள்ளும் பல்வகை வழிபாட்டு முறைகளில் ''அபிஷேகம்'' என்பது மிக முக்கியமான ஒன்று. தன் வாழ்வில் துன்பம் நேரும்பொழுது இறைவனிடம் முறையிட்டுக் கொண்டு பால், தேன் போன்ற பொருட்களைக் கொண்டு இறைவனின் படிமத்துக்கு அபிஷேகம் செய்தால், தன் துன்பம் தீரும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பலருக்கு நம்பிக்கை. பழனி முருகன் கோயிலில் பால், தேன் முதலியவற்றுக்குப் பிறகு பஞ்சாமிருதம் கொண்டு அபிஷேகம் செய்கின்றனர். அதையுண்டால் பெரிய நோய்களும் தீரும் என்பது முருகபக்தர்களின் நம்பிக்கை.

அற நம்பிக்கை:-

''வளையல், மலர் போன்ற மங்கலப் பொருட்களை வாங்கும்பொழுது மிகவும் பேரம் பேசுதல் கூடாதாம். அப்படிப் பேசி, வணிகன் மனம் நொந்து விற்றால், அந்த மங்கலப் பொருட்கள் எதிர்காலத்தில் பேரம் பேசிய பெண்ணுக்குக் கிட்டாமலே போய்விடும்'' (விதவையாகிவிடுவாள்) என்பது நம்பிக்கை.

''காசுக்கொரு வளையலுன்னு கடைப்போட்டு வித்தாலும்

கடினவிலை கூறினவ - நான்

கர்ணனைத் தின்னவ''. (மேலது, ப.177)

என்ற பாடல் ''மிக மலிவாக வளையல் விற்றபோதும் அதைவிட நான் குறைத்துக் கொடுக்கும்படி கேட்டதனால் என் கர்ணனை (கணவனை) இழந்தேன் எனப் பொருள்படுகிறது.

தெய்வ அருள்:-

நாட்டில் மழை பெய்து நல்ல விளைச்சல் பெருகத் தெய்வ அருள், சிறப்பாக மாரியின் அருள் வேண்டுமென நம்பினர் பாமர மக்கள். மாரியை வேண்டி வரங்கிடந்தமையினால்தான் அவள் மாரி எனப்பட்டாளோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. மாரிக்குச் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாவிட்டால் அவர்கள் பிழைக்க முடியாது என்று நம்பினர் என்பதை.

''ஆருகடன் நின்றாலும் மாரிகடன் ஆகாது

மாரிகடன் தீர்த்தவர்க்கு மனக்கவலை தீருமம்மா'' (நா.இ.பார்வைகள். ப.22)

என்ற அடிகள் காட்டுகின்றன.

பில்லிசூனியம்:-

அறியாதவரிடமிருந்து ''திருநீறு'', ''குங்குமம்'' போன்ற பொருட்களைப் பெற்றுக் கொள்ளக்கூடாது. அவர்கள் மந்திரித்து வைத்திருக்கக்கூடும். அப்பொருட்களைப் பெற்றுக் கொள்வோர் மந்திரத்தின் காரணமாகத் தீய பலனடைவர் அல்லது குடும்பத்திற்கே கேடு விளையலாம் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இதனை,

''ஆண்டியும் வந்தானே அரகரா இண்டானே

ஆண்டிகைத் திண்­றை அறியாம வாங்கினேனே

அறியாம வாங்கி அநேகசனம் சேதமில்லே

சித்தரும் வந்தானே சிவசிவா இண்டானே

சித்தர்கைத் திண்­றைத் தெரியாம வாங்கினேனே

தெரியாம வாங்கியில்லே - என்னோட

சேனைதலம் சேதமில்லை'' (நா.பா.ச. ஒப்பாய்வு. ப-184)

இப்பாடலின் மூலம் அறியமுடிகிறது.

தோஷம்:-

தோஷம் உள்ளவர்கள் திருமணம் செய்து கொண்டால் மக்கட்பேறு கிட்டாது என்ற நம்பிக்கை,

அள்ளிப் பணங்குடுத்து அருச்சுனர்க்கு மாலையிட்டு

அருச்சுனர்க்குங் கூட அரசமுதல் இல்லையிண்டு

அடியா புலம்பறதும் அரமனையே வாடுறதும்

அருச்சனர்மே தோசமுண்டு அடியாளோட குத்தமுண்டு

அருகே இருந்தார் சொல்லலையே.'' (நா.பா.ச. ஒப்பாய்வு, ப.183)

இப்பாடல் மூலம் தெளிவாகச் சொல்லப்படுகின்றது.

சடங்குகள்:-

காசியாத்திரை சென்று கங்கையில் நீராட முடியாதவர்கள் இறந்தபின் காசித் தீர்த்தத்தால் நீராட்டப் பெறின் அப்பலனைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையைக் கீழ்க்கண்ட அடிகளால் அறிய முடிகின்றது.

''காசியிலே தீர்த்தம் - ஆச்சிக்குக் கதிர்காமம் மாமாங்கம்

சேதுவிலே தீர்த்தம் - ஆச்சிக்குச் சிதம்பரத்தில் மாமாங்கம்'' (நா.இ. பார்வைகள். ப.18)

இறந்த பிறகு திங்கள்தோறும், ஆண்டுதோறும், திவசங்கள் செய்தால், இறந்த நல்லுயிர் மேலுலகடையும் என்ற நம்பிக்கையும் பாமர மக்களிடம் உண்டு.

வினைகள்:-

செய்யும் நல்வினை, தீவினை இரண்டுமே தலைமுறையையும் தாண்டி வரும் என்னும் நம்பிக்கை இப்பாடலில்,

''தாமரை ஊரணியும் - என்னைப்பெத்த ஆத்தா

தனிச்ச கெடித்தலமும் - நீங்க

தருமங்க செய்திருந்தா - நான் பெத்த மகனுக்கு ஒரு

தத்து வந்து நீங்கலியே.'' (நா.ப.ச. ஒப்பாய்வு. ப-16)

காணப்படுகிறது. இங்குப் பாட்டி செய்த நல்வினை பேரன் உயிரைக் காக்கக்கூடும் என்ற நம்பிக்கையைக் காண்கிறோம். எனவே நல்வினை செய்தால் தனக்கு மட்டுமன்றித் தன் பரம்பரையினர்க்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை நம்நாட்டு மக்களின் குடும்ப அமைப்பையும் குடிப்பற்றையும் காட்டுகிறது.

நம்பிக்கைகள் பொதுவாக எல்லாரிடமும் உள்ளன. சமூகத்தின் எல்லாச்சாதியிலும், எல்லா இடங்களிலும், எல்லா வாழ்க்கை நிலைகளிலும் இருக்கின்றன. ஆங்கிலக் கல்வி, நாகரிக வளர்ச்சி, இயந்திரமயமாக்கல் ஆகியவற்றால் நம்பிக்கைகள் பெருகினவே ஒழிய குறையவேயில்லை இந்த நம்பிக்கைகள் நம் பண்பாட்டையும் மனப்பாங்கினையும் தெளிவாகக் காட்டுகின்றன.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: