28/03/2011

இலாவணிக் கலை - சி.க.சிவக்குமார்

தமிழகம் கலைவளர் சிறப்பும் பெருமையும் மிக்கது. நாட்டுப்புறக் கலைகள் பல. திருவிழாக்களும் பல. மக்களின் ஒருமைப்பாட்டுணர்வை உணர்த்தும் திருவிழாக்களுள் "காம தகனப் பண்டிகை" என்பதும் ஒன்று. இப்பண்டிகையை ஒட்டி நடைபெறும் கலை இலாவணிக்கலை. இலாவணிக்கலையை ''இலாவணிக்கச்சேரி'' என்றும் அழைப்பார். இக்கலை நிகழத்துவோர் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளார். இக்கலை குறித்து ஒரு சில செய்திகளைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இலாவணிக் கலை:-

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய கலை என்பர். தஞ்சை மண்ணில் பிறந்த இந்தக் கலை நாடெங்கும் பரவியது. இலவாணிக்கலை என்பது "புராண நிகழ்ச்சிகளையும், புராணக் கதைகளையும் மையமாக வைத்து நல்ல தமிழ்ச் சுவையுடன் கூடிய பல்வகைச் சந்தங்களுடனும், எதுகை மோனை நயங்களும் கொண்ட செய்யுள்களாகப் பாடப்படுவதாகும்". இலாவணி பாடும்போது இராவணா என்ற பறையைக் கொண்டு இசையோடு பாடுவர். இருவர் அல்லது நால்வர் பாடுவர்.

காம தகனப் பண்டிகை:-

ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இந்த காம தகனப் பண்டிகையைக் கொண்டாடுவர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசை நாள் கழித்து மூன்றாம் நாள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலக உற்பத்தியைக் காட்டுவதாக இதனை மக்கள் நம்புகிறார்கள். தொடர்ந்து 15 நாட்கள் இப்பண்டிகை நடைபெறும்.

பண்டிகை நிகழ்ச்சிகள்:-

முதல்நாள் நிகழ்ச்சி மன்மதனை உருவாக்கலும் வழிபாடு நடத்துதலும் ஆகும்.

செம்கரும்பு, கொட்டக்கலி, வைக்கோல்பிரி, வண்ணி இலை, காதோலைக் கரகமணி, ராட்டி, அனைத்தையும் ஒருங்கே கட்டி முடிப்பர். இதை ஊருக்கு அருகே உள்ள ஆற்றுப்பகுதிக்குக் கொண்டு செல்வர். திருமணம் ஆகாத ஓர் இளைஞனை எண்ணெய் தேய்த்துக் குளித்து வரச் செய்வர். அங்கே கூடிய மக்களுக்கு அன்னதானம் செய்வர். பின்பு அந்த இளைஞனையே கம்பைத் தூக்கி வரச்செய்வர். வீதியில் ஏதேனும் ஒரு முச்சந்திக்கு (மூன்று வீதிகள் சந்திக்கும் இடம்) அருகில் இந்தக் கம்பத்தை ஊன்றிடச் செய்வர். சிவலிங்கத்தையும் அங்கே வைத்து வழிபாட்டை நடத்துவர். இக்கம்பமே ''மன்மதன்'' ஆவா.

இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என்று பதினான்கு நாட்களுக்கு ஒவ்வொரு இல்லத்தின் சார்பில் வழிபாடுகள் நடக்கும். அந்தந்த நாட்களுக்கு உரிய வழிபாட்டுச் செலவு அதற்குப் பொறுப்பேற்றுள்ளவரைச் சாரும்.

ரதி மன்மதன் திருமணமும், மன்மதன் எரிப்பும்:-

பதினைந்தாவது நாள் இப்பண்டிகையின் குறிப்பிடத்தக்க நாளாகும். இந்நாளில் 11 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் இருவரை அழைப்பார். ஒருவனுக்கு ஆண் வேடம் இட்டு, நெற்றியில் நாமம் சாத்துவர். இது திருமால் உருவாக்கிய மன்மதன் என்பதற்கான அடையாளம். மற்றொரு சிறுவனுக்கு பெண் வேடம் இட்டு திருநீற்றுப்பட்டை இடுவர். இது சிவபெருமான் உருவாக்கிய ரதி என்பதற்கான அடையாளம். இவ்விருவர்களுக்கும் திருமணம் நடைபெறும். வழக்கமாக நடைபெறும் திருமணம் போன்றே மஞ்சள் கயிற்றில் சிறு மஞ்சள் கிழங்கைக் கட்டி முறைப்படித் திருமணம் நடந்தேறும்.

பின்பு மணக் கோலத்தோடே வீதி ஊர்வலம் வருவர். இதற்கு ரதி மன்மத ஊர்வலம் என்று அழைப்பர். வீதிவலம் வரும் நேரத்தில் மன்மதக் கம்பம் அருகே ஒரு பெரியவருக்குச் சிவவேடமிட்டு அமரச் செய்வர். தியானத்தில் இருப்பது போன்று இருக்கச் செய்வர்.

ரதிமன்மதன் ஊர்வலம் முடித்துத் திரும்புவர். சிவபெருமானின் வேடமிட்ட பெரியவரின் பின்புறம் நின்றுகொண்டு மன்மதன் தன் காமபாணங்களை எய்வார். இதை உணர்ந்த பெரியவர் கையில் கற்பூரத்தை ஏந்தி மன்மதனை (மன்மதக் கம்பை) எரிப்பார். முதல் நாள் நிறுத்தி வைத்த கம்பம் (மன்மதன்) எரிந்து சாம்பலாகும். மன்மத வேடமிட்ட சிறுவன் இறந்தவன் போல் கிடப்பான்.

பின்பு, ரதி ஒப்பாரி பாடிப் புலம்புவாள். மறுநாள் காலை வரை அழுது புலம்புவாள். பின்பு கம்பம் (மன்மதன்) எரிந்ததால் கிடைத்த சாம்பலை அள்ளிக் கொண்டு கங்கையில் (ஊரில் உள்ள ஆற்றில்) கரைப்பாள்.

மன்மதன் உயிர்த்தெழல்:-

மூன்றாம் நாள், அதாவது பண்டிகையின் பதினெட்டாம் நாளன்று ரதி தன் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு சிவபெருமானிடத்தில் வரம் கேட்டு அழுவாள்.

ரதி வரம் கேட்டல்:-

அக்கினி கண்ணாலே அங்குகனை எரித்திடவே

அரணாரே என்தகப்பா அழுத்தமுள்ள நெஞ்சாச்சே

அனிஎன்ன செய்வேன் ஏதுசெய்வேன் தாயாரே

என்கணவரை மீட்டுஎனக்கு வரமளிக்கும் தாயாரே (நடைபாட்டு-செவிவழி)

உடன் மனம் இரங்கி கையில் உள்ள கமண்டல் (செம்பு) நீரைக் கொண்டு மன்மதனைச் சிவபெருமாள் எழுப்புவார். இறை அருள் பெற்ற மன்மதனும் ரதியும் மீண்டும் தம் பணியைத் தொடங்குவர். மக்கள் வளமோடு வாழ அருள் செய்வர். உயிர் பெற்ற மன்மதன் அருவ உருவிலும் ரதியின் கண்களுக்கு மட்டும் உருவமாகவும் தெரிவார்.

மக்கள் நம்பிக்கை:-

காம தகனப் பண்டிகை நடக்கும் ஊரில் நல்ல மழை பொழியும். விவசாயம் செழிக்கும். உலகம் வளம்பெறும். கேட்டவரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தையில்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

இலாவணிக்கலை நிகழ்ச்சி:-

இத்திருவிழாவின் இறுதி நாளன்று இரவு தொடங்கி மறுநாள் காலைவரை இலாவணிக்கலை நிகழ்ச்சி நடத்துவர். மன்மதன் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று பிரித்துப் பல்வேறு புராணங்களை எடுத்துச் சொல்லி நிகழ்ச்சியை நடத்துவர். இராவணா என்ற பறை கொண்டு கைகளால் இசை அமைத்துப் பாடுவர்.

இருவகைக் கட்சிகள்:-

மன்மதன் எரிந்துவிட்டான் என்று ஒருவர் அல்லது இருவர் பாடி வாதிடுவர். மன்மதன் எரியவில்லை என்றும், ஆசை இதுவரை யாருக்கும் அழிந்தது இல்லை என்றும் கூறி ஒருவரோ அல்லது இருவரோ பாடி மறுப்பர். அவ்வாறு பாடும்போது தன்னை மறந்த நிலையில் உற்சாகத்தோடு புராணங்களையும், இதிகாசங்களையும் 96 வகையான தத்துவங்களையும், வேதங்களையும் சான்றுகளாக எடுத்துக் கூறியும், பாடல்களாகப் பாடியும் நிறுவுவர். விறுவிறுப்பான விவாதங்கள் மேடையில் அரங்கேறும்.

பல்வேறு பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடக்கும்போது, எந்தக் கட்சியின் சார்பாக வாதிடுகிறார்களோ அதே கட்சியில்தான் வாதிடுவர். மிக அரிதானவர்களே இரு கட்சியிலும் வாதிடும் திறன் பெற்றவர்களாக இருப்பர்.

வாதம் செய்யும் முறை:-

முதலில் விநாயகர் வணக்கம், குருவணக்கம், சபை வணக்கம் சொல்லும் செய்யுள்களைப் பாடித் தொடங்குவர். பின்பு, தன் கட்சிசார்ந்த கருத்துக்களைக் கூறுவர். இறுதியாக முத்திரை அடியாக ஒரு செய்யுளைக் கூறி முடிப்பர். இதே போன்று முறையாக எதிரே உள்ள கட்சியினரும் பின்பற்றிப் பாடுவர்.

ஈசுவரன் தன்னுடைய நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தார் என்பதற்கான சான்றாதாரங்களைக் கொண்டு எரிந்தக் கட்சி நிறுவும்.

எரிந்த கட்சி - இலாவணி விருத்தம்:-

வில்லுடைய மன்மதவேள் எரிந்த கதை

புலவருளம் பூத்தி மிகவும்

புளகமுற - இனியதமிழ்க்

கவி மழையை முகிலெனவே

பொழிந்திடுவேன் களிகூர் மாதோ (புதிய நவீன நவரத்தின ஒப்பாரி ப.53)

இலாவணிப் பாட்டு:-

மங்கையொரு பங்குடைய சங்கரன் நுதல் விழியால்

மன்மதன் எரிந்த கதை பொய்யா - மெய்யா (புதிய நவீன நவரத்தின ஒப்பாரி ப.54)

ஆசை என்றைக்கும் அழியாது. நெற்றிக்கண் அக்னி எது? எப்படி வந்தது? எப்படித் திறந்தார்? உலகை உற்பத்தி செய்யும்போதுதான் திறந்தார் என்றெல்லாம் சான்றாதாரங்களோடு எரியாத கட்சி நிறுவும்.

எரியாத கட்சி - இலாவணிப் பாட்டு:-

அறுசீர் விருத்தம்

"வருடத்துக்கோர் தடவை மாரவேள்

சிவன் விழியால் மடிந்தானென்று

புருடனை முன் பறிகொடுத்த பூவையார்போல

மாரடித்து புலம்பாதே காண்

கருடனை யெதிர்த்து புன் மசகம்

பிறப்பதென்ன கவியை பாடி

உருட்டியெனை மிரட்டாதீர்

மதனெரிந்தால் உலகமுண்டோ ஒதுவீரே"

இவ்வாறான விவாதம் தொடர்ந்து நடைபெறும். இலாவணிக் கலைஞர்கள் இதற்குத் தீர்வு என்பதே கிடையாது என்கிறார்கள்.

எரிந்த கட்சிக்கு வாதிடுபவராக இருந்தால், எப்போது எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், எரிந்த கட்சியிலிருந்துதான் வாதிடுவார். அதே போன்றுதான் எரியாத கட்சியில் இருப்பவர்களும் மேடையில் நேரெதிரான மோதல், வாக்கு விவாதங்களில் இருந்தாலும் சாதாரண வாழ்க்கை நிலையில் நண்பர்களாகவே இருப்பர்.

பதினெட்டு புராணங்கள்:-

விவாதங்களில் பயன்படும் புராணங்கள் பதினெட்டு வருமாறு

1. மச்ச புராணம், 2. கூர்ம புராணம், 3. வராக புராணம், 4. வாமன புராணம், 5. மார்க்கண்டேய புராணம், 6. காருட புராணம், 7. வாயவிய புராணம், 8. வைணவ புராணம், 9. சைவ புராணம், 10. லிங்க புராணம், 11. பிர்ம புராணம், 12. பதும புராணம், 13. ஸகாந்த புராணம் 14. பாகவத புராணம், 15. ஆக்கினேய புராணம், 16. நாரதீய புராணம் 17. பிர்மனகவர்த்த புராணம், 18. பொடீக புராணம்

ஆறு உப புராணங்கள்:-

1. திருவிளையாடற் புராணம்

2. ஆரூர் புராணம்

3. அருணாசல புராணம்

4. கந்தப் புராணம்

5. காஞ்சி புராணம்

6. கொற்கைத் தல புராணம்

இரு இதிகாசங்கள்:-

இராமாயணம், பாரதம்

ஐந்து வேதங்கள்:-

ரிக், யசூர், சாமம், அதர்வணம், பிரணவம் (மௌனமாக இருத்தல்) பிரணவ வேதம் - விவாதம் செய்யும் போது பதில் கூற முடியாத சூழலில் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் மௌனத்தைக் கடைப்பிடிப்பர். இது பிரணவ வேதம் ஆகும். இலாவணிக் கலை நடத்துவோர் கூறும் வேதம்.

இலாவணிக் கலையின் நோக்கங்கள்:-

''நாட்டு வளம் பெருக இறையருளை வேண்டுதல்.

தானதர்மம் தொடர்ந்து நடைபெற வேண்டுதல்.

எந்தக் குறையும் இல்லாமல் மக்கள் நலமுடன் வாழ வேண்டுதல்.

பதினெட்டு சித்தர்களும் கூறிய 18 விதமான உலக உற்பத்தியை நினைவு கூறுவதன் வாயிலாக, இறைவனின் பெருமைகளைக் கூறுதல்.

புராணக் கதைகளைக் கூறி இறையருளைப் பெறுதல்.''

இலாவணிக் கலைஞர்களின் பணி போற்றுதற்குரியது. மக்களின் நம்பிக்கை அடிப்படையில் நடைபெற்றாலும், இத்திருவிழாவிலும் இக்கலையிலும் மக்களிடையே ஒற்றுமையே நிலவுகிறது. எல்லா மதத்தவரும் இந்நிகழ்வில் ஒத்துழைக்கின்றனர். சைவம் வைணவம் என்ற வேறுபாடின்றியும் மற்ற மதங்கள் என்ற வேறுபாடுகள் இன்றியும் நடத்தப்பெறுவது இக்கலையின் சிறப்பு. திருச்சி மாவட்டத்தில் 12 கலைஞர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களது முன்னோர்கள் எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களாக இருந்த போதிலும், தங்கள் கேள்வி ஞானத்தால் அரிதான இக்கலையைச் சிறந்த முறையில் செய்து வந்தனர். தற்காலத்தில் பட்டதாரிகளும், எழுதப் படிக்கத் தெரிந்தவரும் தம் மூதாதையர் கலையைக் காக்க வேண்டும் என்று ஒரு சிலர் ஈடுபட்டு உள்ளனர். அரிதான இக்கலையைக் கற்று வாழ்விப்பது நம் கடமை.

நன்றி: வேர்களைத் தேடி

 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நீங்கள் சொல்வது அனைத்தும் நிதர்சனம் தான். நானும் என்னால் இயன்றவரை இக்கலை அழியாமல் காக்க காமன் பாடல்களை கற்றும் பாடியும் வருகிறேன் நன்றி ...
தொடர்புக்கு : meinigarulagam@gmail.com

Avinash சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.