13/03/2011

தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள் - ச. சாமிநாதன்

புறநானூற்றுப் பாடல் ஒன்று. காலையில் பாலில் அரிசிப் பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் ''கார்ன் ப்ளேக்ஸ்'' (மக்காச் சோளம்), ''ரைஸ் கிரிஸ்பிஸ்'' (அரிசிப் பொறி) ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டு பிடித்த காலைத் தானிய உணவு (breakfast cereal) உலகெங்கிலும் பரவியதெப்படி? இதுவும் ஆராய்ச்சிக்குரிய பொருள்!

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த மரம் வாடி விடும் என்று கூறுகிறார். தற்காலத்தில் அமெரிக்காவில் பொய் கண்டு பிடிக்கும் கருவியைப் (Lie detector) பயன்படுத்துகின்றனர். பொய் சொல்பவனின் நாடி, இருதயம், மூளை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு அவன் பொய்யன் என்பதைக் கண்டு பிடிக்கின்றனர். ஆனால் தமிழனோ இதற்கு ஒரு படி மேலாகச் சென்று ஒரு தாவரம் கூடப் பொய்யைக் கண்டு பிடிக்க உதவும் என்கிறான். ஆனால் அத்தகைய மரம் எது என்று தெரியவில்லை. வள்ளுவர் கூட ''மோப்பக் குழையும் அனிச்சம் என்று அனிச்சம் பூ பற்றிக் கூறுகிறார். அதாவது முகர்ந்து பார்த்தாலேயே வாடி விடுமாம் அனிச்சம். தாவரங்களுக்கும் உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்பதை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடித்தவன் தமிழன், இன்னொரு சங்கப் பாடலில் ஒரு செடியை நெய்யும் பாலும் ஊற்றி, பெற்ற மகளைப் போல அன்பாக வளர்த்த ஒரு பெண் பற்றி ஒரு கவிஞன் பாடுகிறான்.

விண் வெளியில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியைப் போலக் காற்று மண்டலம் இருந்தால் தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக்கு மேலே - விண் வெளியில் - வளி (காற்று) மண்டலம் இல்லை. இதைப் பழந் தமிழர் அறிந்திருந்தனர் போலும்! வெள்ளக்குடி நாகனார் என்ற புறநானூற்றுப் புலவர் (புறம் 35) ''வளியிட வழங்கா வானம்'' என்று குறிப்பிடுகிறார். குறுங்கோழியூர்க் கிழார் (புறம் 20) ''வறி நிலை இல் காயம்'' என்றும் புலவர் மார்க்கண்டேயனார் (புறம் 365) ''வளியிட வழங்கா வழக்கு அரு நீத்தம்'' என்றும் வள்ளுவன் (குறள் 245) ''வளி வழங்கு பூமி'' என்றும் இதையே குறிப்பிடுகின்றனர்.

ஒலியும் ஒளியும் (Sound and light) மின் காந்தப் பட்டையின் (Electro Magnetic spectrum) ஒரே அங்கம் என்று தற்கால அறிவியல் கூறுகிறது. இதை அறிந்து தானோ என்னவோ தமிழ் மொழியில் மட்டும் ஒலி - ஒளி என்று ஏறத்தாழ ஒரே சப்தமுள்ள இரண்டு சொற்கள் இதைக் குறிக்கப் பயன் படுத்தப் படுகின்றன. சமஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளிலும் இதற்கு வெவ்வேறு சப்தமுள்ள சொற்கள் உள்ளன.

தற்காலப் பறவையியல் அறிஞர்கள் பறவைகள் குடியேற்றம் (Bird migration) பற்றி விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். சில வகை பறவைகள் 12,000 மைல் பறந்து வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை சென்று திரும்புகின்றன. இதைக் கண்டு பிடிக்க நவீன உத்திகளைக் (Electronic Tagging or Ringing) கையாளுகின்றனர். பறவைகளின் காலில் தேதியும், ஊர்ப் பெயரும் பொறித்த ஒரு அலுமினிய வளையத்தையோ, மின்னணுக் கருவியையோ மாட்டி விடுவார்கள். வேறொரு நாட்டில் இத்தகைய பறவைகளைக் கண்டால் அந்த வளையத்திலுள்ள செய்திகளையும், அதைத் தாங்கள் பார்த்த தேதி, இடத்தின் பெயரையும் அந்த நாட்டுப் பறவையியல் அறிஞர்கள் உலக முழுவதுமுள்ள பறவையியல் ஆய்வுக் கூடங்களுக்கு அறிவிப்பார்கள். ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே தென் குமரியிலிருந்து வட இமயத்திற்கு அன்னப் பறவைகள் பறந்து செல்வதையும் இமய மலையிலிருந்து அவை தமிழ் நாட்டுக்கு வருவதையும் தமிழன் அறிந்து வந்துள்ளான். காலில் வளையம் மாட்டாமலும், மின்னணுக் கருவியைப் பயன் படுத்தாமலும் அன்னப் பறவையின் 3,000 மைல் பயணத்தை அறிந்து பாடியுள்ளான் தமிழன்.

(புறம் 67 - பிசிராந்தையார் நற்றிணை - 70 வெள்ளி வீதியார், நற்றிணை 356 - பாணர், அகம் 120 - நக்கீரனார், அகம் 273 - ஒளவையார் ஆகிய பாடல்களைக் காண்க).

பிராணிகளுக்கு அறிவு உண்டு என்றும் மனிதர்களைப் போலவே அவைகளுக்கு உணர்வுகள் உண்டு என்றும் தற்காலத்தில் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகி வருகின்றன. குரங்குகள் மனிதர்களைப் போலவே கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்று பிரபல வார இதழான ''நியூஸ் வீக்''கில் அண்மைக் காலத்தில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டான் தமிழன். குரங்குகள் முரசு அடிப்பதை முட மோசியார் (புறம் 128) என்பவரும், குரங்குகள் குச்சிகளைப் பயன்படுத்துவதைக் கபிலர் என்பவரும் குறிப்பிடுகின்றனர். ஆடுகளைக் கொட்டகையில் அடைப்பதற்கு ஆட்டிடையர்கள் நாய்களைப் பயன் படுத்தும் காட்சியை பிபிசி டெலிவிஷனில் பலரும் பார்த்திருப்பீர்கள். தொலைவில் நின்றவாறே வாயின் மூலம் விசில் அடித்து ஆடுகளை அழைக்கும் காட்சியைக் கபிலர் (அகம் 318) பாடுகிறார். பாரியின் பறம்பு மலையை மூவேந்தரும் முற்றுகையிட்ட காலத்தில் கிளிகளின் மூலம் நெல் முதலிய தானியங்களைக் கொணர்ந்து பல மாதங்கள் உயிர் வாழ்ந்தனர் என்று (Survival techniques using animals at war times) ஒளவையாரும் (அகம் 303) நக்கீரரும் (அகம் 78) குறிப்பிடுகின்றனர். கிளிகளை இவ்வாறு பயன் படுத்தியவர் கபிலர் என்றும் கூறுகின்றனர்.

பருவக் காற்றின் பயனை ஹ’ப்பாலஸ் என்ற கிரேக்கர் தான் முதல் முதலில் கண்டு பிடித்தார் என்றும் இது கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் கரிகால் பெரு வளத்தானைப் பாடிய வெண்ணிக் குயத்தியார் (புறம் 66) கரிகால் வளவனின் முன்னோர்கள் காற்றின் பயனை அறிந்து நாவாய் (கப்பல்) ஓட்டியதைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

நறி இரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளி தொழில் ஆண்ட உருவோன் மருக!

களி இயல் யானைக் கரிகால் வளவ. (புறம் 66)

மாங்குடி மருதனும் (புறம் 26), மருதன் இளநகனும் (கலி 82), வளி வழங்கு கலம் (பாய் மரக் கப்பல்), பருவக் காற்று ஆகியன பற்றிப் பாடுகின்றனர்.

சிலப்பதிகாரத்தில் வரிப்பாடல்கள்

முனைவர் து. அசோகன் - 20 July, 2005

குடிமக்கள் காப்பியமாகவும் விளங்கும் சிலப்பதிகாரம், தமிழர்களுக்கெல்லாம் உயரிய சிறப்புமிக்க இலக்கியமாய் வாய்த்துள்ளது. சங்க காலத்தை அடுத்து வாழ்ந்த தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதனைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அந்நிலையோடு அமையாது, எதிர்காலத் தமிழர்கள் எவ்வாறு வாழ்தல் வேண்டும் என்பதற்கான குறிப்பீடுகளையும், தூரிகையோவியம் போன்று காட்டிச் செல்கிறார். இளங்கோவடிகள், முக்காலத்தையும் தன்னுள் அகப்படுத்தி நின்றொளிரும் மாமணியாய், நந்தா விளக்காய், நடுநாயகமாகப் பொலிவது நம் சிலப்பதிகாரம். இக்காப்பியத்தில் பல்வேறுப் பட்ட செய்திகள் காணக்கிடக்கின்றன. இவற்றில் சிலம்பு உணர்த்தும் வரிப்பாடல்களை இக்கட்டுரையின் வாயிலாக காணலாம்.

எழுவகைப் பாடல்கள்:-

நாடோடிப் பாடல்களில் பலவகைகள் உண்டு. ஏற்றம்இறைத்தல், மீன் பிடித்தல், சுண்ணம்பு குத்துதல் முதலிய தொழில்களைச் செய்பவர்கள் அத்தொழிலால் உண்டாகும் அலுப்பைப் போக்க அவர்கள் பாடிக்கொண்டே அவற்றைச் செய்வார்கள். நெடுநேரம் தொழில் செய்வதனால் அவர்கள் பாடும் பாடல்கள் நீண்டவையாக இருக்கும். அவை,

வண்டிக்காரன், இடையன், வீட்டில் இருக்கும் மகளிர் முதலியோர் பாடும் பாடல்கள் இன்பமாகப் பொழுது போக்குவதற்கு உதவுவன. அவை ஒரு வகை.

திருமணத்தில் பாடும் பாடல், யாராவது ஒருவர் இறந்தால் பாடும் ஒப்பாரி, தெய்வத்தை வழிபடும்போது பாடுபவை முதலியன உணர்ச்சி மிக்கனவாக உள்ளவை. இவை ஒருவகை.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் போது தாய்மார் முதலியோர் பாடுபவை ஒரு வகை.

குழந்தைகளும் மகளிரும் விளையாடும் போது தாமே பாடும் அம்மானை, பலிஞ்சடுகுடு, கண்ணாமூச்சி முதலிய விளையாட்டுப் பாடல்கள் ஒரு வகை.

அரிய கருத்துக்களை உடைய பாமரர்களல்லாதவர்களிடத்தில் வாய்மொழியாகவே வழங்கும் பாடல்கள் பல உண்டு. இவற்றில் சிறந்த தத்துவக் கருத்துக்கள் இருக்கும் இது ஒரு வகை. கதை பொதிந்த பாடல்கள் ஒரு வகை.

மேற்குறிப்பிட்டுள்ளவற்றை, 1. தொழில் செய்வோர் பாடல், 2. இன்பப் பாடல், 3. உணர்ச்சிப் பாடல், 4. குழந்தைப் பாடல், 5. விளையாட்டுப் பாடல், 6. கருத்துப் பாடல், 7. கதைப்பாடல் என் ஏழுவகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

வரிப்பாடல்கள்:-

சிலப்பதிகாரத்தில் வரிப்பாடல்கள் என்று சில பாடல்கள் வருகின்றன. அவை இளங்கோவால் இயல்பாக இந்நாட்டில் வழங்கிய பல வரிப்பாடல்களை அடியொற்றி அவர் அமைத்துக்கொண்டவை என்றே கூற வேண்டும்.

கானல்வரி, ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில்வரி, வேட்டுவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர் சூழ்வரி, குன்றக்குரவை, அம்மானை வரி, கந்துவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு என்ற பாடல்கள் வருகின்றன. இவற்றில் சில பாடல்களை சான்றுகளுடன் உணரலாம்.

அம்மானை வரி:-

இது இளங்கோவடிகளால் பாடி அமைத்தது. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் திருஅம்மானை என்றே ஒரு பகுதி இருக்கிறது. மூவர் அம்மானை என்று ஒரு தனி நூல் உண்டு. ''கலம்பகலம்'' என்ற பிரபந்தத்தில் ''அம்மானை'' என்பது ஓர் உறுப்பு. இவை யாவும் பலர் பாடியவை ஆயினும் மகளிர் பாடுவனவாக அமைந்தவை.

தமிழக பெண்கள் அம்மானை வைத்துக் கொண்டு ஆடும் போது பலப்பாடல்களைப் பாடுவார்கள். அந்தப் பாடல்களைப் கேட்டு அந்த மெட்டில் அமைந்தவை இப்பாடல்கள்.

நாடோடிப் பாடல்களின் உருவத்தை இலக்கியம் படைத்த புலவர்களும் எடுத்தாண்டார்கள் என்பதற்கு இப்போது கிடைப்பவற்றுள் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாடியுள்ள வரிப்பாடல்களே சிறந்தச் சான்றாகும்.

வரிப்பாட்டின் இலக்கணம்:-

வரி என்பது ஒருவகைக் கூத்துக்கும், ஒருவகைப் பாடலுக்கும் பொதுவாக வழங்கும் பெயர். இரண்டிடத்தும் பாடல்கள் உண்டு. வரிப்பாடலின் இயல்பை, வரிப்பாடலாவது பண்ணும் ஆறன் இயல்பும் முடமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்ந்தும் பெற்றும் பெறாதும் வரும். இதனை,

''அதுதான் தெய்வஞ் சுட்டியும் மக்களைப் பழிச்சியும் வரும்''

என்று சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் விளக்குவார். ஆற்றுவரிக்கு உரை எழுவதற்குமுன் சிலப்பதிகாரத்தில், இதனை,

''ஆரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்''

''ஆடலும் வரியும் பாணியும் தூக்கும்''

''நேரத் தோன்றும் வரியும் குரவையும்''

''வரியும் குரவையும் சேதமும்''

என்னும் இடங்களில் வரும் வரி என்னும் சொல் வரிப் பாடல்களையே குறித்து நிற்கின்றது எனலாம்.

வரிக்கூத்து:-

வரிக்கூத்து என்பது ஒரு வகை அது வரிப்பாட்டோடு ஆடுவதால் அப்பெயர் பெற்றது என்று இதன் இலக்கணத்தை

''வரியெனப்படுவது வகுக்குங் காலைப்

பிறந்த நிலனும் சிறந்த தொழிலும்

அறியக் கூறி ஆற்றுழி வழங்கல்''

என்ற நூற்பாவின் மூலம் அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டியிருக்கிறார். பிறிதோரிடத்தில் இதனை,

''வரியாவது அவரவர் பிறந்த நிலத் தன்மையும்

பிறப்பிற்கேற்ற தொழில் தன்மையும் தோன்ற நடித்தல்''

என்று உரைநடையில் இவ்விலக்கணத்தை அமைக்கின்றார். மேலும், நூற்பாவில், ''அறியக்கூறி'' என்றமையினால் பிறந்த நிலத்தின் தன்மையும், தொழில் தன்மையும் புனைந்த கோலத்தில் மட்டுமன்றிப் பாடும் பாட்டிலும் தோன்ற வேண்டும் என்பது பெறப்படும். குறிசொல்லும் குறத்திமகள் மலைவளத்தயும், குறிக்கூறும் தன் தொழிலையும் பயன்படுத்திப் பாடுகிறாள். ஏற்றம் இறைப்பவன் தன் வயலின் இயல்பையும், ஏற்றப்பாட்டில் பாடுகின்றான். ஆதலின் அவை வரிப்பாட்டுகளாக அமைகின்றன. இவ்வரிகூத்தில் ''விநோதக்கூத்து'' என்றக் கூத்தும் உண்டு. மேற்கொள் காட்டிய நூற்பா விநோதக் கூத்தையே குறிப்பதாக உள்ளது. இதனை அடியார்க்கு நல்லார், ''இவ்வரி என்பதனை நிலனும் தொழிலும் தோன்ற நடிக்கும் ''விநோதக் கூத்து'' என்று எழுதுவதிலிருந்து இது புலனாகிறது.

பல்வரிக்கூத்து:-

இவ்வரி யென்பதனைப் ''பல்வரிக் கூத்தென்பாரும்உளர்'' என்று கூறி ஒரு பழம்பாடலை இங்கு மேற்கோளாகக் காட்டுகிறார். அப்பாடல் வருமாறு.

''சிந்துப் பிழுக்கை யுடன்சந்தி யோர்முலை

கொந்தி கவுசி குடப்பிழுக்கை... கந்தன் பாட் ......

...... துஞ்சாத கம்மைப்பூச் சோனக - மஞ்சரி

ஏற்ற வுழைமை பறமைமுதல் என்றெண்ணிக்

கோத்தவரிக் கூத்தின் குலம்''

என, இந்தப் பாடலில் பலவகையான விளையாட்டுகள் கூறப்பெறுகின்றன. அவையாவும் பாட்டுப்பாடி ஆடுபவை. இப்பாட்டில் உள்ளவற்றில் சில இப்போது இலக்கியத்திலும் வழக்கிலும் வழங்குகின்றன.

கொந்தி (காய் கொத்தும் விளையாட்டு), ஆண்டி (ஆண்டிப்பாட்டு), பாண்டி (பாம்பாட்டி), குரவை, கட்கனி, கிள்ளுப் பிராண்டி (கில்லாப்பாண்டி), அம்மானை, பந்து, கழங்கு, வண்டு, பல்லாங்குழி, தோள்வீச்சு, சாழல், அவலிடி, படுபள்ளி என்பவற்றை இன்றும் நினைவில்கொள்ள இலக்கியமும் வழக்கும் உதவுகின்றன. திருவாசகம், திவ்யப் பிரபந்தம், தத்துவராயர் பாடுதுறை முதலியவற்றில் நாட்டில் வழங்கிய வாய்மொழிப் பாடல்களை அடியொற்றிப் பெரியோர்கள் இயற்றிய பல வகைப் பாடல்கள் காணப்படுகின்றன.

தமிழ் மொழியின் இலக்கிய வரலாற்றில் சிலப்பதிகாரத்தின் தோற்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புடையதாகும். சங்க இலக்கியங்களில் நாம் காண்பன எல்லாம் தனித்தனி நிகழ்ச்சியினை உதிரியாகப் பாடி வைத்துள்ள தனிப்பாடலாகும். அவற்றுள் பலவற்றை ஆய்வுத்திறத்தோடு நோக்கினால், ஒரு சில வரலாறுகள் தென்படும். அதுபோல தனிப்பாடல்களாகப் பாடி போற்றிவந்த வரிப்பாடல்கள் இளங்கோவடிகளின் அரிய திறத்தால் வாய்க்கப்பெற்றதாகும். நாடோடிப் பாடல்களின் உருவத்தை இலக்கியம் படைத்த புலவர்களும் எடுத்தாண்டார்கள் என்பதற்கு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாடியுள்ள வரிப்பாடல்களே சிறந்த சான்றெனக் கொள்ளலாம்.

நன்றி: வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: