14/03/2011

நாட்டுப்புறவியல் காட்டும் வாழ்வியல் நெறிகள் - முனைவர் ம.ஏ. கிருஷ்ணகுமார்

இலக்கியம் காலத்தை எதிரொலிக்கும் கண்ணாடியாகத் திகழ்வதனால் ஒவ்வொரு நாட்டின் சிறப்பினையும் அக்கால இலக்கியங்களைக் கொண்டே அறிய முடிகிறது. தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தெள்ளிதின் அறிதல் நாட்டுப்புற இலக்கியங்களால் மட்டுமே இயலும் என்பதனை இவ்விலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகளின் வழி உணர முடிகிறது.

ஒரு நாட்டின் பெருமைக்குரிய துறைகள் பலவாக அமையினும் பண்பாடே முதன்மையானதாக அமைவதைப் போலவே இலக்கியத்தின் உறுப்புகளாக காப்பியம், புதினம், சிறுகதை, கவிதை எனப் பல அமையினும் நாட்டுப்புறவியலே இதயமாகத் திகழ்வதனைக் கற்றுணர்ந்தோர் எளிதில் அறிவர். ஏட்டில் எழுதப்பெற்ற இலக்கியங்கள் நடைமுறையிலிருந்த கைம்பெண் மறுமணம், குழந்தைத் திருமணம் போன்ற கொடுமைகளை எதிர்க்கத் துணிந்த காலத்தே சிறிதும் ஐயம்பாடின்றி சமூகக் கொடுமைகளை எதிர்த்து நல்வாழ்விற்கு நெறியாக அமைந்த பெருமை நாட்டுப்புறப் பாடல்களுக்கு உண்டு. சமயக் கொடுமைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் எதிர்த்ததோடு அறக்கருத்துக்களைச் சுவையாகக் கூறியுள்ளதன் வழி இது மக்களின் பொதுமறையாகத் திகழ்வதற்குரிய பெருமையுடையதாகிறது. "நாட்டுப் பாடல்களைப் படைக்கும் அல்லது படைத்த கவிஞர் யார் என்று சொல்ல முடியாது. அவைகளைக் காலத்திற்கு ஏற்றவாறு எந்தக் கவிஞனும் மாற்றுவதும் இல்லை. பொதுமக்கள் தாம் பெரும்பாலும் உழைக்கும் மக்கள் தாம் நாட்டுப் பாடல்களைப் பாடும் - பாடிய கவிஞர்கள் ஆவார்கள்; திருத்தும் கவிஞர்களும் ஆவார்கள். ஆகவே நாட்டுப்பாடல்களை பொது ஜன இலக்கியம் என்று கூறுவது பொருந்தும் பொது ஜனக் கவிதை என்று கூறினாலும் பொருந்தும்" என்ற சாமி சிதம்பரனாரின் கூற்று நாட்டுப்புறப் பாடலின் பெருமைக்கு உரம் சேர்க்கிறது. இலக்கியத்தின் பெருமைக்கு மட்டுமல்லாது மக்களுடைய வளர்ச்சிக்கும் வடிகாலாய் விளங்கியது நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். ''பழங்கால இலக்கியத்திற்கு அக்கால நாட்டுப்பாடல்களே தாயாக அமைந்து தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தன எனலாம். இன்றும் இயற்கையோடு ஒட்டி வாழும் கிராமத்து மக்களின் இயல்பான உணர்ச்சிகளில் உள்ள புதுமைகளை நாட்டுப்பாடல்களில் காணலாம்'' என்று மு. வரதராசனாரின் கூற்று பழமைக்கு பழமையாகவும் புதுமைக்கு புதுமையாகவும் காலத்திற்கேற்ப உணர்ந்து கொள்ளும் பெருமையுடையது இது என்பதனை உணர முடிகின்றது.

ஆணுக்கும் பெண்ணுக்கும்:-

ஆடவர்க்கு உயிராக அமைவது கடமையுணர்வு

''ஆசைக்கு மயிர் வளர்த்து - மாமா

அழகுக்கொரு கொண்டை போட்டுச்

சோம்பேறிப் பயலுக்கு நான் - மாமா

சோறாக்க ஆளானேனே''

என்ற பாடல் தகுதியில்லாத ஆணுக்கும் தகுதியில்லாத பெண்ணாக வாழ வேண்டிய அவல நிலையினைச் சுட்டுகிறது.

ஆடவர்க்கு உயிரான கடமையுணர்வினைப் போற்றாது வாழ்பவனுடன் குடும்பம் நடத்துதல் வீணான வாழ்க்கையாகவே அமையும். பெண் என்பவள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக ஆணுக்குத் துணையாக நின்று வழிகாட்ட வேண்டும். பதுமை போல் வாழாது புதுமையாக வாழ்தலே சிறப்பு.

விருந்தோம்பல்:-

விருந்தினைப் பாதுகாத்தல் என்பதற்குச் சான்றாகவே அக்காலத்தில் இல்லத்தின் முன்புறம் திண்ணையினைக் கட்டினார்கள். ஆனால் இக்காலத்தில் நாயைக் கட்டி வைப்பது வழக்காயிற்று விருந்தோம்பல் விருந்துக்கு கூட இல்லாமல் போய்விட்ட அவலநிலையினைச் சாடும் வகையில் அக்கால வாழ்வு சிறப்புடன் அமைந்திருந்தது.

''நாலு பானை பொங்கலு

நாங்களே வைக்கின்றோம்

எல்லோரும் தின்பதற்கே

ஓடோடி வாருங்களே - கிருஷ்ணன் .ப

என்ற பாடல் எடுத்துக்காட்டி வழிகாட்டுகிறது.

கூடித் தொழில் செய்தல்:-

இயற்கையாகவே மனிதன் கூடிவாழும் இயல்புடையவன். செயற்கையாகப் பிரிந்து தனிமைப்படுத்திக் கொண்டு வருந்துகிறான். பாமரர்கள், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதனை உணர்ந்து கூடித் தொழில் செய்த மக்களாவர். ஏர் உழும் போதும் நடவு நடும்போதும், அறுவடை செய்யும் போதும், மாடு மேய்க்கும் போதும், ஏற்றம் இறைக்கும் போதும், சாலை போடும் போதும், கப்பலில் செல்லும் போதும் பல பாடல்கள் பாடி மகிழ்ந்ததை அறிய முடிகிறது.

''காடு வெட்டி ஏலேலோ

முள் பொறுக்கு ஐலசா

முள் பொறுக்கி ஐலசா

கம்பு சோளம் ஏலேலோ

தினை விரிச்சேன் ஐலசா

தினை விரிச்சேன் ஐலசா''

என்ற அறுவடைப் பாடல் களைப்புத் தெரியாவண்ணம் கூடித் தொழில் செய்யும் ஆர்வத்தினை ஊட்டுவதாக அமைகிறது. வாழ்க்கையினைப் போராட்டமாகக் கொண்டு வாழ்ந்த போதும் மகிழ்ச்சியாகவே கூடி செயல்பட்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதன் வழி அனைவருடைய வாழ்விலும் பின்னிப் பிணைந்து உயிருடன் கலந்து நிற்கும் பெருமை உண்டென்பதனை அறியலாம்.

"குழந்தை கருவறையில் இருக்கும் காலத்தில் இருந்து நாட்டுப்புறப்பாடல்களைப் பாடத் தொடங்குகின்றனர். அது வளர்ந்து ஆளாகி முதுமையடைந்து மாண்டு போன பின்னும் பாடல்களைப் பாடுகின்றனர்".

நாட்டுப்பற்று:-

அவசியத்திற்காக வெளியூர் செல்பவர்களை விட ஆடம்பரத்திற்காகச் செல்லும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உறவுகளின் அன்பு நிலையை இழக்க வேண்டியதுடன் பண்பாட்டுச் சீர்கேடும் நிகழ்கிறது. பல இளைஞர்கள் வாழ நினைத்தால் தாயகத்திலேயே தரணி புகழும் அளவுக்கு வாழ முடியும் என்பதனை அறியாது வருந்துகின்றனர். அக்காலத்தில் ரங்கூனுக்கு செல்லும் மோகத்தினைக் கண்டு,

வண்டியிருக்கு மாடிருக்கு - தங்க ரத்தினமே

வயற்காடு உழுதிருக்கு - பொன்னுரத்தினமே

எருமைத் தயிருருக்கு - தங்கரத்தினமே

என்று பாடப்பட்ட கதம்பப் பாடல் தாய்நாட்டில் வாழ வழிகாட்டுகிறது.

உழைப்பின் பெருமை:-

உழைப்பவர்க்கே உலகம் உரிமையுடையதாகிறது. இன்பம் விழையாது தன் கடமையைச் செய்து உழைத்து வாழ்பவனே பெருமையுடையவனாகிறான். சோம்பலாய் இருப்பவனிடமே சோம்பல் பற்றிக் கொள்கிறது. அவன் உலகோர்க்கு மட்டுமின்றித் தனக்கே பாரமாகித் துன்பப்படுவான். இவ்விரண்டு நிலையினையும்

''மழை வருது! மழை வருது நெல்லு வாருங்கோ!

அரப்படி அரிசியெடுத்து முறுக்கு சுடுங்கோ!

ஏர் ஓட்ன மாமனுக்கு எண்ணிக் கொடுங்கே!

சும்மா இருக்கிற கிழவனுக்கு கைய காட்டுங்கோ!''

என்ற பாடல் உழைப்பின் பெருமையினை எடுத்துக்காட்டுகிறது. உழைப்பின் பலனை அறிய இப்பாடல் நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

வழிபாடு:-

இறைவனைப் பல வகையான கற்பனை உருவங்களை அமைத்து வழிபடுதலை விடுத்து, பெற விழையும் அறிவை ஊட்டும் குருவே இறைவன் என்பதனை உணர்தல் வேண்டும். இறைவன் நேர்முகமாக உதவுதலின்றி உயிர்கள் வடிவில் தோன்றி குருவாக வந்து நன்மை செய்கிறான் என்பது புராணங்கள் வழி நின்றும், சித்தர் வழி நின்றும் அறியமுடியும். தெய்வம் ஒன்றாக இருப்பதனை உணர்வுடையோர் மட்டுமே உணர முடியும் என்பதனை,

''சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்

சகலவுயிர் சீவனுக்கும் அதுதா னாச்சு

புத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள்

பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு''

என்ற அகத்தியர் ஞானப் பாடல் எடுத்துக் காட்டுகிறது. அதனால் குருவை அறிதல் என்பது கடினமானதாய் இருப்பினும் தங்களுக்கு நல்லறிவையும், தங்கள் மீது அன்பு கொண்டோரையும் குருவாக எண்ணுதலும் தெய்வமென்று துதித்தலும் உண்டென்பதனை

''கும்பிடுறோம் கும்பிடுறோம்

குருவென்று வந்தவரைக் கும்பிடுறோம்

அன்பு படைத்தவரைக் கும்பிடுறோம்

ஆண்டவரை மீண்டவரைக் கும்பிடுறோம்''

என்ற கழலடிப் பாட்டின் முதல் பாடல் வழி அறிய முடிகிறது.

சடங்குகள்:-

இறந்தவரைத் தெய்வமாக வழிபடல் நடுகல் காலந்தொட்டு இன்று வரை நடந்து வருகிறது. அவரைத் தெய்வமென்று கூறி வழிபடினும் இறந்தவர் மீண்டும் வரக்கூடாதென்பதற்காக பலவகையான சடங்குகள் செய்கின்றனர். மனதை அமைதிப்படுத்தவே இச்சடங்குகளைக் காலம் காலமாகச் செய்து வருவதை,

''குளிப்பாட்டி கோடிகட்டிக்

கொண்டு வந்தார் குறிச்சியிலே

...................................................

அடிபடுதே மேள வகை

ஆசார வாசலிலே

.................................................

மூத்த மகள் முடியிறக்க

மோட்சகதி பெத்தியளோ

..............................................

அரையளவு கங்கையிலே

அள்ளி வந்தார் நீர் மாலை

பொன்னரிசி கையிலெடுத்துப்

போட்டார்கள் வாய்க்கரிசி'' என்ற பாடல்

எடுத்துக்காட்டுகிறது. மகாகவியும் இந்நிலையை,

''ஈமக்கனல் மூட்டி - உடல்

எரிபட்டுச் சாம்பருறச் சுட்டதனை பின்னர்

தாமும் தமர்களுமாய் - நீர்

தனில்முழுக் கிட்டுமதி நைத்தழுகின்றீர்

நாமிதை வஞ்சமென்பமோ? - அன்றி

நல்லதோர் சதுரென்று நகைப்போமோ?''

என்ற பாடலில் சுட்டிக்காட்டி அறிவுறுத்த விழைந்துள்ளதனை அறிய முடிகிறது.

அடக்கம்:-

கற்று உணர்ந்து அடங்கி நடத்தலே மானிடர்க்குப் பெருமை என்பதனை பதினோரு அறநூல்களும் எடுத்துக் காட்டுகின்றன. பாடம் கேட்டுப் பயன் கொள்வோரான் பாமரர் தங்கள் அறிவினைப் பகிர்ந்து கொள்கையில் ஆணவமின்றி இருந்தனர். இதனை,

"பாட்டறியேன் படிப்பறியேன் நான்

பாட்டின் வகை தொகையறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் நான்

ஏட்டின் வகை தொகையறியேன்''

என்ற கட்டபொம்மன் கதைப்பாடல் தன்னடக்கத்துடன் அவையேறும் பாங்கினை எடுத்துரைக்கிறது.

இவ்வாறு பன்முக நோக்கில் நெறிகாட்டும் நாட்டுப்புறவியல் பற்றிய இவ்வாய்வு கடலின் கண் அமைந்த கடற்கரை மணலின் ஒரு துகளின் நுனைப் பகுதியினைக் கூட ஆராய முடியாதது போலவே நிறைவு பெறுகிறது. எனினும் இம்முயற்சியின் விளைவாக எழுந்த மகிழ்ச்சியினை இக்கட்டுரையின் வழி பகிர்ந்து கொள்கிறேன்.

நிறைவாக:-

தமிழன்னையின் தோட்ட மலராகத் திகழ்ந்த, எழுதிப்பெற்ற இலக்கியங்களைத் தொகுத்து, தமிழன்னைக்குக் கண்ணியாகவும், மாலையாகவும், மேகலையாகவும், சிலம்பாகவும் அணிவித்து சான்றோர் பலர், அவர்களிலிருந்து வேறுபட்டு தமிழன்னையின் காட்டுமலராகத் திகழ்ந்தவற்றை தொகுத்து மாலையிட்ட சான்றோரான நா. வானமாமலை, கி. வா. ஜகந்நாதன் அவர்களுக்கும் என்றும் தமிழினம் கடமைப்பட்டுள்ளது. ஆறு. அழகப்பன், ச,வே. சுப்பிரமணியன், சு. சண்முகசுந்தரம், சா. வளவன், மா. கோதண்டராமன், ஆறு. இராமநாதன், சு. சத்திவேல், கோ. கேசவன், கோ. பெரியண்ணன், அன்னகாமு, சரஸ்வதி வேணுகோபால் மற்றும் அவ்வரிசையில், நாட்டுப்புற விடியலுக்கான கருத்தரங்கினை நடத்த முனைந்து அதில தம் முத்திரையைப் பதித்த அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியப் பெருமக்களுக்கும் இப்பெருமை என்றும் உரித்தாகிறது.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: