13/03/2011

பழந்தமிழ் இலக்கியங்களில் பூதமும் பூதவாதமும் - முனைவர் பெ. மாதையன்

முன்னுரை:-

பூதம் எனும் சொல் இக்காலப் பொதுவழக்கில் தீமையும் நன்மையும் செய்யும் ஆற்றல் வாய்ந்த மிகப்பெரிய வடிவுடைய உருவம் என நம்பப்பெறும் தொன்மம் சார்ந்த சொல்லாகக் கையாளப்பட்டு வருகின்றது. ஆனால் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற பொழுது இந்தச் சொல்லின் பின்னணியில் ஒரு தத்துவார்த்த மரபு, சமுதாயச்சிந்தனை மரபு அடங்கிக் கிடப்பதை அறியமுடிகின்றது. இந்தச் சொல்லின் சமுதாயப் பின்புலத்தை வரலாற்றுப் பின்னணியில் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கம்.

பூதம் - சொல்லும் பொருளும்:-

பூதம் எனும் சொல்லுக்குக் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ''(புராணத்தில்) பெரிய உடலும் பெருத்த வயிறும் குட்டையான கால்களும் உடைய மந்திரசக்திபடைத்த உருவம்'' எனப் பொருள் தரப்பட்டுள்ளது. அபிதானசிந்தாமணியில் பூதகணம் என்றதற்கு ''இவை மந்திர ஸாஸ்திரத்தில் கூறியபடி (கஅ) வகைப்படும். அவையாவன தேவ, அசுர, கந்தருவ, யக்ஷ, சர்ப்ப, ராக்ஷஸ, கூஷ்மாண்ட, காம, கிரகண, வேதான, பிரமராக்ஷஸ, காம, யதாகாரி, அர்த்தப்பிதர, பைசாச, குரு, விருத்த, சித்த முனி முதலியன. இவற்றிக்குப் பரிவாரங்கள் உண்டு. பூதப்பிரவேச பூர்வ: இது பிடிக்குங்காலத்தில் புத்தி கெடல், மிகு சையோக விருப்பம், லோபம், மேகம் முதலிய குணம் உண்டாம்'' என்றவாறு விளக்கம் தரப்பட்டுள்ளது. எல்லாவகைப் பூதங்களும் தீய ஆற்றல் வாய்ந்தனவாகவே காட்டப்பட்டுள்ளன. இத்துடன் பூதம் என்ற பதிவில் 1. ஒரு தேவசாதி, 2. (5) நிலம், நீர், காற்று, ஆகாயம் 3. தனக்கு உதவி புரிந்த சுசுகுந்தனைக் காக்க இந்திரனால் அனுப்பப்பட்டுக் காவிரிப்பூம்பட்டினத்துக் கோயில் கொண்ட தெய்வம் (சிலப்பதிகாரம்), 4. பூதம் (5) வேதாளம், பிரம்மராக்ஷஸ், இருளன், மாடன், கறுப்பன், 5. அங்காடிப்பூதமெனவும் சதுக்கப்பூதமெனவும் இரண்டுள்ளன (மணிமேகலை) என ஐந்து பொருட்கள் தரப்பட்டுள்ளன. இந்தப் பதிவில் இயற்கையும் நன்மைசெய்யும் பூதங்களும் காட்டப்பட்டுள்ளன. சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் 1. பஞ்சபூதம் 2. பஞ்சபூதங்களின் அதிதேவதைகள், 3. உடம்பு, 4. இறந்தவரின் பேயுருவம், 5. பூதகணம், 6. பரணி, 7. பருத்தது, 8. உயிர்வர்க்கம், 9. பூத வேள்வி, 10. பக்தன், 11. இருப்பு, 12. இறந்தகாலம், 13. உள்ளான்புள், 14. சடாமாஞ்சி, 15. கழுகு, 16. கூந்தற்பனை எனத் தொன்ம உலகம் சார்ந்த பொருட்களும் இந்நிலவுலகு சார்ந்த பொருட்களும் தரப்பெற்றுள்ளன. இந்தப் பொருள்களுடைய பூதம் என்பதன் அடியாகப் பிறந்த பல கூட்டுச் சொற்களும் இந்த அகராதியில் பதிவுகளாகத் தரப்பெற்றுள்ளன. பின்வருவன இதற்குச் சான்றுகள்.

பூதகிருதாயி - இந்திராணி

பூதகிருது - இந்தரன்

பூதசஞ்சாரம் - உலகவாழ்வு

பூதசஞ்சாலி - உலகவாழ்வை விடாதவள்

பூதசாரஉடம்பு - சுவர்க்கவின்பத்தை அனுபவிக்க ஆன்மா எடுக்கும் தெய்விகவுடல்

பூததாத்திரி - (பிராணிகளின் வளர்ப்புத்தாய்) பூமி

பூததாரன் - சிவபிரான்

பூதநாதன் - (பூதங்களுக்குத் தலைவன்) பூதநாதன்

பூதநாயகி - பார்வதி

பூதன் என்பதற்கான இருவகை உலகம் சார்ந்த பொருட்களில் இந்நிலவுலகம் சார்ந்த பொருட்களாகிய நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதம் சார்ந்த பொருட்களே அடிப்படையானவை, முதன்மையானவை, இந்த அடிப்படையில் வந்த சொற்களுள் முக்கியமானவை பூதமுத்தன் - உலோகாய தன் (நாமதீப.126), பூதவாதம் - பூதங்களின் விகாரப் புணர்ப்பினாற் பிரபஞ்சோற்பத்தி கூறும் வாதம், (மணி.27:262), பூதவாதி - பூதவாத மதத்தவன் (மணி.27:263, உரை) என்பன போன்ற இயற்கைவாதம் சார்ந்த சொற்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவாக உள்ளன. இந்த வரலாற்றை வெளிப்படுத்தும் சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

இலக்கியங்களில் பூதம்:-

சங்க இலக்கியங்களில் முன்பழந்தமிழ், பின்பழந்தமிழ் எனும் இருவகை இலக்கியங்களிலும் பூதம் எனும் சொல் வழக்குப் பெற்றுள்ளது. ''பூதங்காக்கும் புகலருங் கடிநகர்'' (பட்.57) ''பூதங்காப்பப் பொலி களந்தழீஇ'' (புறம்.369:17) எனும் இடங்களில் காவல்பூதம் என்ற பொருளிலும் கொல்லிக் குடவரைப், பூதம் புணர்த்த புதிதியல் பாவை (நற்.192:8,9) எனத் தெய்வம் எனும் பொருளிலும் ஆளப் பட்டுள்ளது. இவற்றுடன் சதுக்கப்பூதம் பற்றிய குறிப்பு ''அருந்திறன் மரபின் பெருஞ்சதுக் கமர்ந்த வெந்திறற் பூதம்'' (9:13,14) எனப் பதிற்றுப்பத்தின் திரட்டுப் பாடலில் சதுக்கப்பூதம் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. பூதம் எனும் சொல் ஐம்பெரும் பூதங்களைக் குறிக்கவும் ''ஐம்பெரும் பூதத்து இயற்கை போல'' (புறம்.2:6), ''பூதத்து முதல் நீ'' (பரி.3:66) என ஆளப்பட்டுள்ளது. முன்பழந்தமிழ் சார்ந்த புறநானூற்றில் வருவது இயற்கையின் இயல்பைக் காட்டும் பொருள் முதல்வாதச் சிந்தனையாக இருக்க, பரிபாடலில் வரும் ஐம்பூதம் திருமாலால் படைக்கப்பட்டதாகக் கருத்து முதல்வாதம் சார்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக உள்ளது. இந்த இடங்களில் எல்லாம் பூதம் நன்மை தருவதாகவே காட்டப்பட்டுள்ளது. தொன்மம் சார்ந்த சிந்தனை மரபைக் காட்டிலும் இயற்கை சார்ந்த சிந்தனை மரபே மிகுதியாக இடம் பெற்றுள்ளது. இதை வலியுறுத்தும் வகையில் பூதங்கண்ணனார் ( நற்.140), பூதத் தேவனார் (குறு.285), பூதன் தேவனார் (நற்.80), பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு (புறம்.246), பூதம் புல்லர் (குறு.190), ஈழத்துப் புதன்தேவனார் (குறு.343), மதுரை ஈழத்துப் பூதன்தேவனார் (குறு.189,360, நற்.366, அக.3,88,307) எனப் பூதம், பூதன் எனும் சொற்களை அடையாகப் பெற்ற பல புலவர் பெயர்கள் அமைந்துள்ளன.

சதுக்கப்பூதம்:-

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காட்டப்பட்டுள்ள பூதம் காவற்பூதங்களாக உள்ளன. இவை சதுக்கப்பூதம் எனப்பட்டுள்ளன. காவற்பூதம் (சிலப்.5:67), ''வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்'' (6:11) என இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பூதம் உள்ள இடம் பூதசதுக்கம் (சிலப்.5:134, மணி.20:29, 22:50,55) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சதுக்கப்பூதம் தான் பதிற்றுப்பத்திலும் (தி.9:13,14) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூதம் தேவருலகினின்றும் கொணரப்பட்டதை பதிற்றுப்பத்து குறிப்பிட்டுள்ளது. இந்தச் செய்திதான் பின்னாளில் சிலப்பதிகாரத்திலும்

சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து

மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும் (28:147,148)

எனப்பாடப்பட்டுள்ளது. இதற்கு உரையெழுதிய பொ. வே. சோமசுந்தரனார் ''இந்திரனுடைய அமராபதியினின்றும் சதுக்கப்பூதங்களைத் தனது வஞ்சி நகரத்திற்குக் கொணர்ந்து மதுவருந்துவதற்குக் காரணமான வேள்வியைச் செய்தவன்'' (1982:139) எனக் குறிப்பிட்டுள்ளார். இப்பூதங்கள் எவை எனும் குறிப்பு இவ்வுரையில் தரப்படவில்லை. சென்னைப் பல்கலைக் கழக அகராதியில் சதுக்கப்பூதம் என்பதற்கு ''நாற்சந்தியில் குடி கொண்டுள்ள பூதம்'' எனப் பொருள் தரப்பெற்றள்ளது. அபிதானசிந்தாமணியில் சதுக்கப்பூதம் என்பதற்கு, ''பாவிகளைப் புடைத்துண்ணும் பூதம். இது சந்திகளிலிருப்பது'' என விளக்கம் தரப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வரும்

தேவர் கோமா னேவலிற் போந்த

காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை (5:66,67)

எனும் வரிகளுக்கு ''எத்தன்மையதாகிய பூதமெனின் வெற்றி பொருந்திய வேலையுடைய முசுகுந்தனெனும் மன்னனுக்கு வரும் இடையூற்றை ஒழிப்பானெனத் தேவர்கோன் ஏவுதலானே அத்தேவருலகினின்றும் போந்து அந் நாண் முதலாகப் பலிகொண்டுபோதும் பூதமென்க'' (1985:158)என உரை எழுதப்பட்டுள்ளது. இந்தப் பூதங்கள் தவறு செய்பவரைத் தண்டிக்கும் அவரைப் புடைத்து உண்ணும் என்பதைச் சிலப்பதிகாரமும் (5:128-134,15:75-85) மணிமேகலையும் (1:23,24) காட்டுகின்றன. நல்லவர்க்குத் தீங்கு நேர்ந்தால் அவர்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருந்ததை முசுகுந்தன் பற்றிய செய்தி (சிலப்.5:66,67, 6:10-14,மணி. 1:19,20) வெளிப்படுத்துகின்றது.

வருணப்பூதம்:-

வருணப்பூதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் சிலப்பதிகார அழற்படுகாதையில் பாடப்பட்டுள்ளன. ஆதிப்பூதம், அரசபூதம், வணிகப்பூதம், வேளாண்பூதம் எனும் நால்வகைப் பூதங்களின் இயல்பு விரிவாகப் பாடப்பட்டுள்ளது. இந்த நான்கு தெய்வங்களும் செங்கோண்மையில் தவறிய நெடுஞ்செழியப் பாண்டியனின் மதுரை நகரைவிட்டு வெளியேறுவதாக

யாமுறை போவ தியல்பன் றோவெனக்

கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன்

நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயர (106-108)

எனப் பாடியுள்ளார் இளங்கோவடிகள். இந்தப் பூதங்கள் ''நால்வகை வருணப்பூதங்கள், வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசுவரன்'' (1985:115) என்பதை அரங்கேற்று காதையின் உரைக்குறிப்பு காட்டுகின்றது. பூதம் எனப்பட்ட நால்வகை வருணப்பூதங்களின் உருவை எழுதி அதை வணங்குவதற்கு உரியதாக வைத்திருந்ததை ''பூதரை யெழுதி மேனிலை வைத்து'' (3:107) எனும் பாடலடி வெளிப்படுத்துகின்றது. இதே செய்தி சீவகசிந்தாமணியின் 672 - ஆம் பாடல் உரையிலும் ''பார்ப்பனப் பூத முதலிய நால்வகைப் பூதங்களையும் ஒழிந்தவற்றையுமியற்றி'' (பக்330,331) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடக அரங்கினுள் இப்பூத உருவங்கள் எழுதப்பட்டிருப்பது கலையோடு இவற்றுக்குள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றது. கதை தழுவிவரும் கூத்தாகிய நாடகத்திற்கும் இந்த வருணப் பூதங்களுக்கும் இடைப்பட்ட தொடர்பு தனியே விரிவாக ஆராய்வதற்குரியது. இந்த வருணப்பூதங்களுக்கும் இசையோடு தொடர்பு இருந்ததைச் சிலப்பதிகாரம் ''வருணப்பூதர் நால்வகைப் பாணியும்'' (6:35,36) எனக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு ''வருணப் பூதர் நால்வரையும் பரவும் நால்வகைத் தேவபாணியும்'' (1985:189) என உரை கூறப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் தரும் அடியார்க்குநல்லார்.

''அவை வருமாறு: அந்தணர் வேள்வியோ டருமறை முற்றுக, வேந்தன் வேள்வியோ டியாண்டுபல வாழ்க, வாணிக, ரிருநெறி நீணிதி தழைக்க, பதினெண் கூலமு முழவர்க்கு மிகுக, அரங்கியற் கூத்து நிரம்பி வினைமுடிக, வாழ்க நெடுமுடி கூர்கவென் வாய்ச்சொலென், இப்படிப் பலிகொடுத் திறைவனிற்றொக்குச் செப்பட வமைத்துச் செழும்புகை காட்டிச், சேவடி தேவரை யேத்திப் பூதரை, மூவடி முக்கால் வெண்பா மொழிந்து, செவியிழுக் குறாமை வேந்தன் யேத்திக் கவியொழுக் கத்து நின்றுழி வேந்தன், கொடுப்பன கொடுப்ப வடுக்கு மென்ப என்றார் மதிவாணரென்க'' என எழுதியுள்ளார். இவரின் இந்த உரை மதிவாணன் நாடகத் தமிழ்நூலில் இடம்பெற்ற இந்த மரபைக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆக, பூதம் என்பது உயர்பொருளில் உலகியல் சார்ந்த நிலையில் தொன்மச் சார்புடன் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லாக இருந்ததைச் சங்கம் மருவியகாலம் வரையிலான இலக்கியங்கள் காட்டுகின்றன.

பூதவாதம் - பொருள்முதல் வாதம்

''பொருள்முதல் தத்துவம்னா? (கடவுள் அல்ல). புற உலகமே முதல்காரணம் பொருளே - சடமே - உடம்பே முதல் என்னும் தத்துவம். பொது மக்கள் மொழியில் / பேச்சு வழக்கில் இதை நாத்திகம் என்பார்கள். (தத்துவம்னா? உலகத்தை / வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை, கோணம் எனலாம்)'' (1999 : 5) எனச் சிங்கராயர் குறிப்பிடும் பொருள் முதல்வாதம் சார்ந்ததே பூதவாதம். இதை உலகாயதம் எனவும் குறிப்பிடுவர். ''உலகாயதத்தின் அடிப்படை தேகவாதம் ஆகும். உடலில்லாமல் ஆன்மா இல்லை என்பதே தேகவாதம். தாந்திரிகமும் (தந்திரம்) தேகவாதம்தான். உலகாயதமும் பழங்கால தந்திரமும் ஒன்றே. உலகாயதம் சில தனிமனிதர்களின் நாத்திகவாதம் அல்ல. பொதுமக்களின் வாழ்வில் நன்கு ஊறிய நம்பிக்கை, சடங்குகள் ஆகியவையே அது. உலகாயதம் வேதபிரமாணத்தை மறத்தது பிராமணியத்துக்கு எதிரானது'' (மேலது, 42) எனத் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா குறிப்பிடும் உலகாயதச் சிந்தனை மரபு தமிழ் இலக்கியங்களிலும் இலைமறைகாயாக ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது. இந்தப் பொருள்முதல்வாதச் சிந்தனை மரபை நா. வானமாமாலை ''பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல் வாதக் கருத்துக்கள்'' (1973:190-229) என்ற கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். சங்கப் புலவர்கள் இம்மை வாழ்வையே ஆதாரமாகக் கொண்டு அதில் இன்பம் தேட முனைந்தவர்களாக இருந்துள்ளமை, ஐம்பெரும் பூதங்களும் இயற்கையானவை. உண்டி முதற்றே உணவின் பிண்டம் எனும் சிந்தனை போன்றவற்றை எடுத்துக் காட்டிப் பழந்தமிழரின் பொருள்முதல்வாதச் சிந்தனையை நிறுவிக்காட்டியுள்ளார். ''உண்மையாக, உலகாயதக் கண்ணோட்டத்தின் ஆரம்பம் பஞ்சபூதக் கொள்கை என்னும் சிந்தனை ஓர் இனத்தாரிடம் தோன்றிய காலத்தில்தான் என்று கூறலாம்'' (1973:207) எனக் கூறி இனக்குழு வாழ்வின் சிதைவுகள் நிலவுடைமைத் தோற்றுவாய்க்குக் காரணமானதையும் விளக்கியுள்ளார்.

''இனக்குழு சமுதாயத்தில் சமுதாயத்திற்காக எல்லோரும் உழைக்க வேண்டும். கூட்டு உழைப்பு என்னும் அடிப்படை மீது சமுதாய வாழ்க்கை ஆதாரப்பட்டிருந்தது. எனவே வாழ்க்கையிலும் உழைப்பு, உழைப்பால் பொருளைமாற்ற முடியும், பொருள் மாற்றங்களின் இயல்புகள் பற்றிய அறிவு, ''நம்மால் முடியும்'' என்ற நம்பிக்கை, மனித சக்தியில் நம்பிக்கை முதலிய கருத்துக்கள் இச்சமுதாயத்தின் உலகக் கண்ணோட்டமாயிருந்தன. இதை உலகாயதக் கருத்துக்கள், உலக மெங்கிலும் இனக்குழு மக்களின் உலகக் கண்ணோட்டத்தை ஆராய்ந்த அறிஞர்கள் இனக்குழு மக்களின் கருத்துலகின் சிந்தனைகளுக்கு அடிப்படை உலகாயதம் அல்லது முன்னிலை உலகாயதம் என்ற முடிவுக்கே வந்துள்ளனர் எனத் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா கூறும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு புறநானூறு காட்டும் உலகாயதத்தை ஆராய்ந்துள்ளார் நா.வானாமாலை.

சங்க இலக்கியங்கள் ஒருபுறம் இனக்குழு வாழ்வைக் காட்டினாலும் மறுபுறம் பேரளவில் நிலவுடைமை வாழ்வையே காட்டுவனவாக உள்ளன. இனக்குழுவினரின் புராதனமான நடுகல் வழிபாட்டையும் நாம் இம்மை வாழ்வின் மீது அக்குழுவினர் கொண்டிருந்த நம்பிக்கையின் எச்சமாகக் கருதலாம். ''கல்லே பரவின் அல்லது, நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே'' (புறம்.335:11,12) எனும் குரல் தம் மூதாதையர், இறப்புக்குப் பின்னர் தாம் நிறுவும் கல்லில் வாழ்வதாகக் கருதிய எண்ணத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. இந்த இம்மை வாழ்வின் பற்றுடன் மறுமை வாழ்வு மறுக்கப்பட்டதையும் சங்கப் பாடல்கள் வழி அறியலாம்.

மறுமை நோக்கின்றோ வன்றே பிறர்

வறுமை நோக்கின் றவன் கைவண்மையே ( புறம்.141:14,15)

இம்மை செய்தது மறுமைக்கா மெனும்

அறவிலை வணிக னாஅ யல்லன் (புறம்.134:1,2)

எனும் கூற்றுகள் மறுமை கருதாத இம்மை வாழ்வின் பற்றைக் காட்டுகின்றன. மறுமையில் நம்பிக்கை கொள்ளாத கொண்டிருந்த இருவகை வாழ்வையும் இந்தப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. மறுமை உலகை அடையும் வழிமுறைகளும் சங்கப் பாடல்களில் பாடப்பட்டுள்ளன (அகம்.66:1-4, 14:14-15, கலி.103:63,64). பின் பழந்தமிழ் இலக்கியமான பரிபாடலில் வரும்

மறுபிறப் பில்லெனும் மடவோருஞ் சேரார் நின்னிழல் (5:76,77)

எனும் தொடர் மறுபிறப்பு இல்லை எனும் சிந்தனை. அதை மறுக்கும் சிந்தனை சங்ககாலத்தே நிலவியதை வெளிப்படுத்துகின்றது. இது உலகாயதச் சிந்தனை சங்ககாலத்தே நிலவியிருந்தது என்பதை வெளிப்படையாகக் காட்டும் சான்றாக உள்ளது. சங்க இனக்குழு வாழ்வின் அழிவில் எழுந்த தனியுடைமையின் தோற்றுவாய்க்கான நிலவுடைமை பொருள்முதல்வாதத்திலிருந்து கருத்துமுதல் வாதத்திற்கு சங்ககாலம் மாறியதன் சான்றாகவும் உள்ளது. இனக்குழு வாழ்வில் நிலவிய இம்மை வாழ்வுச் சிந்தனை நிலவுடைமையில் மறுமைவாழ்வுச் சிந்தனையாக மாறிப்போய்விட்டத்தையும் இந்தப் பாடல்கள் காட்டுகின்றன. ஐம்பெரும் பூதங்களும் இயற்கையானவை எனும் சிந்தனை இருந்ததைக் காட்டும் ''ஐம்பெரும் பூதத்து இயற்கை போல'' (2:1-6) எனும் புறநானூற்றுப் பாடல் ''பூதவாதம் அதாவது மண், நீர், தீ, காற்று என்ற நான்கு பூதங்களும் நிஜமானவை என்ற கொள்கை இக்கொள்கையை லோகாயதவாதிகள் குறிப்பாகப் பின்பற்றுவர்'' (தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, ஆ.இ.64) எனும் கருத்தை அடித்தளமாகக் கொண்ட பூதவாதம் சங்ககாலத்தே நிலவியதை வெளிப்படுத்துகின்றது.

''தென்னாட்டில் வழங்கி வந்த தத்துவங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது உலகாயதம் என்று தென்னாட்டுத் தத்துவங்களை ஆராய்ந்த தட்சிண நாராயண சாஸ்திரி கூறுகிறார். சக்ரவர்த்தி நயினாரும் அவ்வாறே கூறுகிறார்.'' (1973:194) என நா. வானமாமாலை குறிப்பிடும் நிலையை மேற்காட்டிய சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்தப் பூதவாதச் சிந்தனை சங்க இலங்கியங்களில் வெளிப்படையாக எங்கும் பேசப்படவில்லை. இருந்த போதிலும் கிடைத்திருக்கும் சான்றுகளில் சங்கம்மருவியகால இலக்கியமான ''மணிமேகலையில்தான் முதன் முதலாகப் பூதவாத கருத்துக்கள் முழுமையான வடிவத்தில் தொகுத்து கூறப்பட்டு உள்ளன'' (நா. வானாமாமலை, 1973:197) எனக் குறிப்பிடப்படும் நிலையில் பூதவாதத்தை முதன் முதலாகப் பதிவு செய்துள்ள இலக்கியமாக மணிமேகலை திகழ்கின்றது.

உயிரொடுங் கூட்டிய வுணர்வுடைப் பூதமும்

உயிரில் லாத வுணர்வில் பூதமும்

அவ்வப் பூத வழியவை பிறக்கும்

மெய்வகை யிதுவே வேறுரை விகற்பமும்

உண்மைப் பொருளுமுலோ காயத ணுணர்வே

கண்கூ டல்லது கருத்தள வழியும்

இம்மையு மிம்மைப் பயனுமிப் பிறப்பே

பொய்ம்மை மறுமையுண் டாய்வினை துய்த்தல் (மணி.27:269-276)

எனும் இந்தப் பகுதியில் ஐம்பூதங்களின் சேர்க்கைக்கு ஏற்பப் பல்வேறு உயிர்கள் பிறத்தல், உயிரற்ற பூதவழியில் உயிரற்ற பூதங்கள் தோன்றுதல் என்பன உண்மையானவை, இவை உண்மைப் பொருள் என்பதே உலகாயதன் (பூதவாதி) உணர்ந்தவை, கண்கூடான காட்சிப்பிரமாணம் (பிரத்தியச்சகப் பிரமாணம்) அறிவு தரும், அநுமானப் பிரமாணமாகிய கருத்தளவைப் பிரமாணம் உண்மையானது அன்று, இப்பிறப்பும் இப்பிறப்புப் பயனும் இந்தப் பிறவியிலேயே உள்ளவை. மறுமை உலகம் உண்டென்பது பொய் எனும் கருத்துகளை முன்வைப்பதாக உள்ளது. மறுமையை மறுக்கும் இந்தப் பூதவாதச் சிந்தனைப் போக்கைத்தான் ''மறுபிறப்பில்லெனும் மடவோர்'' எனும் பரிபாடல் (5:76,77) உணர்த்தியுள்ளது.

பூதம் - இழிபொருட்பேறு

நீலகேசியில் பூதவாதச் சருக்கத்தில் பூதவாதம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ''பிணிகொள் மூஞ்சிப் பிசாசகன் சொல்லுவான்'' (856:1) எனும் பாடலடியில் பூதவாதி பிசாசகன் எனச் சுட்டப்பட்டுள்ளன. இந்தப் பூதவாதி பேய், பிறப்பு போன்றவை இல்லை என வாதிட்டதைக் கண்ட நீலகேசி மந்திரத்தால் தான் பேயை வரவழைத்துக் காட்டினால் பூதகன் எனப்படும் பூதவாதி அவள் மதக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஒரு திசையைக் காட்டிப் பேயைப் பார் என்கிறாள். அந்தப் பேயைக் கண்டு நிலத்தில் வீழ்ந்த பூதவாதியைத் தேற்றிப் பேய் உன்னோடு நட்பு பூண்டது என்கின்றாள் நீலகேசி.

பெற்ற பேரும் பிசாசிக னென்பதே

யற்ற மின்றி யவட்கு மகனை நீ (892:1,2)

எனப் பூதவாதியைப் பிசாசகன் எனும் பெயர் பெற்றிருப்பதனால் பேயோடு உறவு படுத்திக் காட்டுகின்றாள். நீலகேசி. உன் பெயர் பிசாசகன் என்பதால் பேயோடு தொடர்புடைய நீ அவளுக்கு மகன் இழிநிலைக்கு உரியவனாகப் பூதவாதி காட்டப்பட்டுள்ளான். மேலும் நீலகேசி

கள்ளப்பூதமுங் காமிக்கும் பூதமும்

வள்ளற் பூதமும் மல்லவு மல்லவா (869:1,2)

என ஐம்பூதக் கூட்டுறவால் வரும் உயிர்களில் ஒருவன் கள்வனாகவும் மற்றொருவன் காமுகனாகவும் பிறிதொருவன் வள்ளலாகவும் மாறுவதற்கான காரணம் ஐம்பூதக் குணங்கள் அல்ல என் வினவுவதன் வழியும் பூதம் இழிவுபடுத்தப்பட்டுள்ளது.

முடிவுரை:-

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெ னப்படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரியோ ரீண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே (18:20-23)

எனும் புறப்பாடல் சுட்டுகின்ற இம்மையுலகச் சிந்தனை/உலகாயதச் சிந்தனை மரபு நிலவிய சங்ககாலத்தே இயற்கையின் கூறுகளாகக் குறிப்பிடப் பட்ட பூதம் எனும் சொல் தொடர்ந்து வரும் கால கட்டங்களிலும் இவ்வாறே கையாளப்பட்டு வந்தாலும் இதன் பொருட்பரிமாணத்தில் காலந்தோறுமான சமுதாய மாறுதல்களுக்கு ஏற்ப மாற்றங்கள் நேர்ந்துள்ளன. சங்க இலக்கியத்திலேயே காக்கும் தெய்வமாகவும் கருதப்பட்டுள்ள பூதம் தொடர்ந்து வந்த சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காவல் பூதமாகக் கருதப்பட்டுள்ளது. பொதுநிலையியல் இந்த உலகைக் காக்கும் தெய்வமாகவும் கருதப்பட்ட பூதம் தேவர் உலகு பற்றிய கருத்துமுதல்வாதச் சிந்தனைச் சூழலில் தேவர் உலகுடன், இந்திரனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திரனின் அமராபாதியிலிருந்து அழைத்து வரப்பட்டனவாகச் சதுக்கப்பூதங்கள் காட்டப்பட்டுள்ளன. இந்தச் சதுக்கப்பூதங்கள் அல்லன கடிவனவாகவும் அல்லன செய்பவரைத் தண்டிப்பனவாகவும் நல்லது செய்பவர்க்கு நன்மை செய்வனவாகவும் கருதப்பட்டுள்ளது.

''நான்கு பூதங்கள் என்பது இயற்கையைப் பற்றிய மிகப் பழைய தத்துவம். எனவே சிறு குறிப்பாக முந்தைய கருத்துமுதல்வாதிகளால் மறுதலிக்க முயற்சிக்கப்பட்டது'' (அ.இ.64) எனத் தேவிபிரசாத் சட்டோ பாத்தியாயா குறிப்பிடும் நிலையில் பூதவாத, உலகாயதச் சிந்தனை மறுதலிக்கப்படுவதை மணிமேகலையில் காணமுடிகின்றது, இயற்கையைப் பொதுநிலையிலான ஆதாரமாகக் கொண்டு உழைப்பின் அடிப்படையில் கூடி வாழ்ந்த கூட்டுச் சமுதாயத்தில் உழைப்பும் உழைப்பின் பயனும் பொதுவாக இருந்தன. பொதுவாக இருந்த உடைமை தனியுடைமையாக மாறி உழைப்பு பின்னுக்குத் தள்ளப்பட்ட சமுதாயத்தில், உழைப்பு குறிப்பிட்டவருக்கான கடமையாக மாற்றப்பட்ட சமுதாயத்தில் உழைப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு, மூளையும் உழைப்புக்கு வழிகாட்டும் அறிவும் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் கருத்துமுதல் வாதம் மேலோங்கியது. அந்தக் கருத்துமுதல்வாதம் பொருள் முதல்வாத அடிப்படையைத் தகர்த்து அதை மறுதலிக்கச் செய்யும் சூழல்கள் மாறிய நிலையில் வைதீகம், சமணம், பௌத்தம் என்பன மேலோங்கிய நிலையில் உலகாயதச் சிந்தனை மரபுகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டன என்பதைத்தான் மேற்காட்டிய சான்றுகள் தெளிவு படுத்துகின்றன.

இவ்வாறு உலகாயதம் மறுதலிக்கப்பட்ட அதே சூழலில் அதைக் கொச்சைப்படுத்தப்பட வேண்டியதும் கருத்துமுதல்வாதத்தின் அவசியமானது. ''அசுரர், தைத்தியர், தனவாஸ், நாகர் எனும் நான்கு குடிகளும் திருந்தாத, தொன்மையான பண்பாடற்ற இனக்குழு முதல் அரைப் பண்பாடுடைய இனக்குழு வரையிலான பண்பாட்டின் பல்வேறு காலகட்டங்களிலும் இருந்தவை. இந்தக் குடிகள் ஆரியப் பண்பாட்டிற்கு அதன் பரவலுக்கான அழுத்தமான தடைகளாக இருந்துள்ளன. ஆரிய எதிர்ப்பாளர்களாக இருந்த, மனித இனம் சார்ந்த இவர்களின் இந்தப் பெயர்கள் அயலவர், வெறுக்கத் தக்கவர், எதிர்ப்புணர்வாளர், காட்டுமிராண்டி எனும் பொருள்களை உணர்த்த முற்பட்டன. பின்னாளில் இந்தப் பெயர்கள் தவறான வசவுச் சொற்களாக அந்த மக்களின் இழிகுணங்களை உணர்த்துவனவாக மாற்றப்பட்டு விட்டன. இறுதியாக இவை பூதகணங்களுடன் இணைத்துப் பேசப்படும் சொற்களாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன'' (Debiprasad Chattopadhyaya, 1992:56) என மசும்தார் குறிப்பிட்டுள்ளதைப் போன்று பூதம் எனும் சொல்லும் இழிபொருள் சொல்லாக மாற்றப்பட்டுள்ளது. ஒன்றை மறுதலிக்கும் செயற்பாட்டின் கூறாகக் கொச்சைப் படுத்தலும் கருத்துமுதல் வாதத்தின் பொதுச் செயற்பாடாக உள்ளதைத்தான் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற பூதம் பற்றிய பதிவுகளும் வெளிப்படுத்துகின்றன.

நன்றி: தமிழர் கண்ணோட்டம் (பொங்கல் சிறப்பிதழ்)

 

கருத்துகள் இல்லை: