14/02/2011

ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் - நேர்காணல்

ஏர்வாடியார் என இலக்கிய அன்பர்களால் அன்புடன் அழைக் கப்படும் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் திரு நெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கண்ணதாசனால் அறிமுகப் படுத்தப்பட்டு, ஒரு கவிஞராக தமிழ்க் கவிதையுலகில் பிரபலமான இவர், கவிதைக்கென்றே தொடங்கிய "கவிதை உறவு' இலக்கிய மாத இதழ் முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பிரபலப்படுத்திய "கலை இரவு' நிகழ்ச்சிக்கு முன்பாகவே "கவிதை இரவு' நிகழ்ச்சியைத் தொடங்கி தொடர்ந்து நடத்திவரும் இவர் வானொலி, நாடகத் துறையில் சுமார் ஐந்நூறுக்கும் அதிகமான நாடகங்களை எழுதி சாதனை படைத்திருப்பவர்.

கவிதை, நாடகம் நீங்கலாக, சிறுகதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளிலும் முத்திரை பதித்திருக்கும் இவர், பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தராகப் பணியைத் தொடங்கி, அதிகாரியாக உயர்ந்ததோடு, வங்கி நடைமுறையில் இருந்த கலைச்சொற்களைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்ட வர்.

இதுவரை எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக் கும் ஏர்வாடியார், தற்போது வாழ்வியல் கட்டுரைகள் எழுதுவதில் அதிக நாட்டம் காட்டி வருகிறார். தமது நூல்களுக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இவரது நாடகங்கள், சிறுகதைகள் போன்றவை பல் வேறு பல்கலைக் கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மணிவிழா கண்ட ஏர்வாடியார் "இனிய உதயம்' இதழுக்காகப் பேசியதிலிருந்து....

இலக்கியத்தின்பால் உங்களுக்கு ஈடுபாடு வந்தது எப்படி? உங்கள் பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உங்கள் சொந்த ஊருக்கு இதில் பங்கு உண்டா?

""நாம் எங்கே கிளைத்துப் பெருகி நின்றாலும், நிழல் கொடுத்தாலும் நமது வேர்கள் என்பது பிறந்து வளர்ந்த ஊரில் ஈரம் காய்ந்து விடாமல் இறுதிவரை அப்படியே இருக்கும். ஏர்வாடியில் கழிந்த எனது பால்ய நாட்களை நான் இப்போது நினைத்தாலும் விலாப்புறத்தில் சிறகுகள் முளைக்கும். எங்கள் ஊர் எப்போதுமே இலக்கிய, அரசியல் ஜாம்பவான்கள் விரும்பி வருகை தருகிற ஒரு ஊராக இருந்தது. மிக முக்கியமாக தி.மு.க.வின் முக்கியத் தூண்களாக இருந்த பலரும் அங்கே வருகை தந்து முழங்குவார்கள்.

கலைஞர் மு.கருணாநிதி வருகிறார் என்றால் எனக்கு ஏக கொண்டாட்டமாகிவிடும். சங்க இலக்கியக் காட்சிகளைத் தமது பேச்சில் கலைஞர் சித்தரிக்கும் பாங்கு, கேட்கிற யாரையும் அந்த காலகட்டத்துக்கே கூட்டிப் போய்விடும். அதுமட்டுமின்றி, அவர் மேற்கோள் காட்டிப் பேசுவதில் மகுடிபோல் பலரும் மயங்கிக் கிடப்போம். ஏர்வாடியில் தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினராக இருந்த அலிஷேக் மன்சூர் அவர்கள் கலைஞரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அருகில் இருக் கும் ஊர்களுக்குக் கூட்டிக் கொண்டு போய் பேச வைப்பார். ஏர்வாடியின் அற்புதமான மனிதர் கள் பலரில் ஒருவராக இருந்த அப்துல்காதர், மேடைத் தமிழ் பற்றி எங்களுக்கு நுணுக்கமாகச் சொல்லித் தருவார். இதனால் பள்ளியில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வ தோடு பரிசுகளையும் அள்ளி வருவேன்.

பள்ளிப் படிப்பு முடித்து, பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே நான் பயின்றது தமிழ் அல்ல; தாவரவியல். அறிவியல் மாணவனாக நான் இருந்தாலும், தமிழ் இலக்கியத்தின்பால் இருந்த ஈடுபாடு காரணமாக கல்லூரி நூலகத்துக்கு வரும் சிற்றிதழ் களின்மீது அதிக ஆர்வம் கொண் டேன். கவிதைகளையும் கட்டுரை களையும் விரும்பி வாசிக்கத் தொடங்கினேன். "கல்லூரி ஆண்டு மலருக்கு கவிதை கொடு' என்று பேராசிரியர் கேட்க, எனது முதல் கவிதையை எழுதினேன். அது ஓர் இரங்கற்பா.

லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் திடீரென்று மறைந்து விட, "என்று இனி காண்போம்' என்ற தலைப்பில் நான் எழுதிய இரங்கற்பாவுக்கு சக மாணவர்கள், பேராசிரியர் கள் இடையே பாராட்டுகள் கிடைக்க, தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். "கோமகள்', "தமிழ்நாடு' போன்ற இதழ்களில் எழுத ஆரம்பித்து, மெல்ல மெல்ல கட்டுரைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டினேன். எனது பெயரோடு ஏர்வாடி என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.''

கல்லூரிப் படிப்பு முடிந்து, சென்னை வந்து வங்கிப் பணியில் சேர்ந்த பிறகே இன்னும் தீவிர மாக இலக்கியப்பணி ஆற்றி இருக்கிறீர்கள். சிற்றிதழ் தொடங்கி நடத்தவும், இலக்கியப் பணியாற் றவும் வங்கி அனுமதித்ததா?

""இல்லை. முதலில் அடியோடு மறுத்தார்கள். அப்போதெல்லாம் படித்து முடித்ததுமே வேலை கிடைத்துவிடும். நான் படித்து முடித்துவிட்டு, சென்னை வந்த துமே பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பணி கிடைத்தது. கவிதை யில் தீவிரமும் தாகமும் கொண்ட புதியவர்களுக்கு வாய்ப்பு தருவதையே குறிக்கோளாகக் கொண்டு பல பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றில் மிக முக்கியமான பத்திரிகைகள், "தமிழ்ப்பணி', "கண்ணதாசன்', "முல்லைச்சரம்' போன்றவை. இவற்றில் கவியரசர் தமது பெயரிலேயே நடத்தி வந்த "கண்ணதாசன்' இதழில் பேராதரவு கிடைத்தது. கண்ணதாசனை அறியாத பலர், அவர் புதியவர்களை ஆதரிக்க மாட்டார் என்று சொல்வதுண்டு. அவர் ஒரு பெரிய ஆலமரம். ஆலமரத் துக்குக் கீழே புல், பூண்டு முளைக்காது என்பார்கள். உண்மையில் கண்ணதாசன் இப்படிச் சொல்பவர்களுக்கு எதிரான இனிய குணம் கொண்டவர்.

எனது முதல் கவிதை நூலை வெளியிட்டு சிறப்பு செய்தவர் கண்ணதாசன். அது மட்டுமல்லாது, தமது இதழில் எனது கவிதைகளுக்குத் தொடர்ந்து இடமளித்தவர். இன்று கண்ணதா சனை போன்றவர்கள் அரிதாகவே தென்படுகிறார்கள். இன்று என் னைச் சந்திக்க வரும் புதியவர் களுக்கு நான் தரும் அறிவுரை ஒன்றுண்டு. "வளர்ந்தவர்களிடம் வரம் வேண்டி நிற்காதீர்கள். காரணம் உங்கள் முனையை முறித்துவிட முயற்சிப்பார்கள். எனவே வளர்ந்த பிறகு செல்லுங் கள்' என்பேன். நான் வங்கிப் பணியில் சேர்ந்த பிறகு எனது அலுவலகப் பணிகள் பாதிக்காத படி இலக்கியப் பணியிலும் வேகம் காட்டினேன்.

ஒரு பக்கம் கவிதை, வானொலிக் கவியரங்கம், பிறகு வானொலி நாடகம் என எனது எழுத்துப் பரப்பு விரிந்தபோது, எனக்கு அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து சன்மானக் காசோலைகள் ஒவ்வொரு மாதமும் ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வரும். இது எனது ஊதியத்தைவிட சற்று அதிகமான தொகை. உடனே அதிகாரிகள் கூப்பிட்டு எச்சரித்தார்கள். எழுதுவதற்கு அனுமதி இல்லை என்றார்கள். ஆனால் நான் சோர்ந்து விடவில்லை. எனது எழுத் துப்பணியால், எந்த வகையிலும் வங்கிப் பணி பாதிப்பதில்லை என்பதை எடுத்துச் சொல்லி, எழுத்துப் பூர்வமாக அனுமதி பெற்றேன். பிறகு 1972-ல் "கவிதை உறவு' இதழை தனிச்சுற்றிதழாகத் தொடங்கி நடத்தியபோதும், முறைப்படி யான அனுமதியுடன் ஆரம்பித் தேன்.

"கவிதை உறவு' வழியாகத் தொடர்ந்த இலக்கியப்பணி, கவியரங்கப் பங்கேற்புகள், வானொலி நாடகம் எழுதுவதில் இடையறாத இயக்கம் என்று எனது இலக்கிய முயற்சிகளைக் கண்ட வங்கி, எனது பொன் விழாவின்போது எனது பெயரி லேயே ஒரு இலக்கியப் பரிசு நிறுவி, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுப்பது என்று முடிவெடுத்தார்கள். எளிமையாக இருப்பதையே வாழ்க்கையாக அமைத்துக் கொண்ட நான், "எனது பெயரில் இலக்கியப் பரிசு வேண்டாம்; அதை ஒரு இலக்கிய விருதாக அறிவியுங்கள்' என்று கேட்டுக் கொண்டேன். அதுதான் இன்று இலக்கிய உலகின் மரியா தைக்குரிய விருதுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிற "பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது'. இப்படி நான் எழுதுவதற்கு அனுமதி மறுத்த எனது வங்கியே என் பெயரில் விருது அறிவிக்கும் படியாக நிலை மாறியதற்கு, என் இலக்கியப் பணி காரணமாக அமைந்துவிட்டதில் எனக்கு நிறைவு உண்டு.''

மற்றொரு ஆச்சரியமான நிகழ்வு பற்றியும் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அது, 1982- ஆம் ஆண்டு சான்பிரான் சிஸ்கோ நகரில் நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டுக்கு நீங்கள் அழைக்கப்பட்டபோது, விதிமுறைகளைத் தளர்த்திக் கொண்டு, உங்கள் வங்கியே உங்களுக்கான ஸ்பான்ஸர் ஷிப்பை வழங்கியதாம். அது உண்மைதானா?

""ஆமாம்! கண்ணதாசன், பெருங்கவிக்கோ உட்பட தமிழ்க்கவிதை உலகின் தலை சிறந்த கவிஞர்கள் அழைக்கப் பட்டிருந்தார்கள். நானும் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். ஆனால் சான்பிரான்சிஸ்கோ சென்று திரும்ப தேவையான நிதிக்கு எங்கே செல்வது என்று குழம்பிக் கொண்டிருந்தேன். நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. மாநாட் டுக்குக் கிளம்ப வேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பாக அந்த அதிசயம் நடந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் சங்க இலக்கிய அணி, எனக்குக் கிடைத்த வாய்ப்பு மிகவும் அரிய ஒன்று என்பதைப் புரிந்து கொண்டு, எனக்காக அதிக ஈடுபாடு காட்டினார்கள்.

அன்று தலைமைப் பொதுமேலாளராக இருந்த கே.எஸ்.டி. பாணி அவர் கள், வங்கியின் நடைமுறையில் இதுபோன்ற முன்னுதாரணங்கள் இல்லாத நிலையில், எனது இலக்கியப் பயணத்துக்கான முழு ஸ்பான்ஸர்ஷிப்பையும் வழங்கி னார். மேலும் எதிர்காலத்தில் இதை முன்னுதாரணமாகக் கொள் ளக்கூடாது என்றும் அங்கீகாரக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். காரணம், ஸ்டேட் வங்கியின் வரலாற்றில் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே அதுவரை ஸ்பான்ஸர்ஷிப் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. எனது வங்கியின் தொழிற்சங்கத் தலைவராக இருந்த சி.எல். ராஜரத்தினம் அவர்களுக் கும் இதில் முக்கிய பங்குண்டு. வங்கியின் மூத்த அதிகாரிகளிடம் இதுபற்றி எடுத்துக் கூறினார். மற்றொரு ஆச்சரியம், வங்கி கடைசி நிமிடத்தில் வழங்கிய ஸ்பான்ஸர்ஷிப்பில் நான் அதிரடி யாகப் போய் வந்ததுதான். காரணம், விசாவுக்கு விண்ணப்பித்தால் அன்று ஒருவார காலம் பிடிக்கும். எனக்கோ எவ்வித சிபாரிசுகளும் இன்றி இரண்டு நாட்களில் விசா கொடுத்தார்கள்.''

"கவிதை உறவு' இதழ் தமிழ்க்கவிதை வளர்க்கும் அதே நேரம், கவிதை உறவை ஒரு மாநிலம் தழுவிய சமூக அமைப்பா கவும் நடத்தி வருகிறீர்கள். இதன்மூலம் மனிதநேயம் வளர்க்கும் அனுபவம் பற்றிப் பகிர்ந்து கொள் ளுங்களேன்?

""பேட்டியின் தொடக்கத் திலேயே இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு இன்ப அதிர்ச்சிதான். மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். காரணம் மகாகவி பாரதியார் கவிதை வரிகளில், "வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ் வதற்கே' எனும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். நாம் பெறுகிற வல்லமை பதவியாக இருந்தாலும் சரி; புகழாக இருந் தாலும் சரி- பிறருக்குப் பயன் படுமேயானால் அதுதான் அதனைப் பெற்றதன் பலன்.

ஏறத்தாழ 39 ஆண்டுகள், பாரத ஸ்டேட் வங்கியில், பல்வேறு பதவி களில் - பொறுப்புகளில் பணி புரிந்து பணி நிறைவு பெற்றேன். ஓய்வு என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை. இந்த காலகட்டத்தில் பின்னோக்கிப் பார்க்கும்போது, எண்ணற்ற அனுபவங்கள் மனதை நிறைக் கின்றன. 1976-ஆம் ஆண்டுவாக் கில், கவிதைத் துறையிலும் நாடகத் துறையிலும் வளர்த்துக் கொண்ட திறனால் கொஞ்சம் வாய்ப்புகளும் புகழும் கிடைத்தது. வானொலியால் உயர்கிற நேரம் ஞானபாரதி வலம்புரிஜானின் அறிமுகம் கிடைத்தது. தெரிந்தோ தெரியாமலோ அவர் வாழ்ந்த ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்த மணி என்ற உடல் ஊனமுற்ற இளைஞர் ஒருவர், அச்சு எந்திரம் வாங்க எங்கள் வங்கியில் கடன் பெற்றிருக்கிறார்.

அதற்கு கடன் காப்புறுதி ஏற்று, ஜாமீன் கையெழுத்து போட்டிருக்கிறார் வலம்புரிஜான். ஆனால் கடனுக் கான முதல் தவணையைக்கூட திரும்பச் செலுத்த முடியாத சூழ்நிலையில், அந்த இளைஞருக் கும் ஜாமீன் போட்டவருக்கும் வங்கி நோட்டீஸ் அனுப்பி விட்டது. உடனே என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வலம்புரிஜான், "என்னை யும் மணியையும் கொஞ்சம் மீட்டு உதவி செய்யுங்கள்' என்றார். நான் மணியைச் சந்தித்து விவரம் கேட்டேன். "அச்சு எந்திரம் வாங்க கடன் கொடுத்தது வங்கி. ஆனால் அச்செழுத்துகள் வாங்கப் பணமில்லை. வேலை நடந்தால் தானே பிழைக்க முடியும் - கடனைத் திரும்பச் செலுத்த முடியும்' என்றார். அவரது தரப் பில் நியாயம் இருந்தது. அச்செழுத்துகள் வாங்க மீண்டும் கடன் தரும் எண்ணம், சம்பந்தப் பட்ட அதிகாரிக்கு இல்லை. உடனே யோசித்தேன். "கவிதை உறவு' அமைப்பைச் சேர்ந்த மதி வண்ணன், வேதம், பகத்சிங், வண்ணமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, மீ.விஸ்வநாதன், நான் உள்ளிட்ட பன்னிரண்டு கவிஞர்கள் சேர்ந்து ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் வீதம் போட்டு ஆறாயிரம் ரூபாய் கொடுத்து உதவினோம்.

அன்று ஐந்நூறு ரூபாய் என்பது எங்களின் அரைமாதச் சம்பளம். எழுத்துகள் வந்ததும் எழுந்து கொண்டார் மணி. கடனை கடகடவென்று அடைக்கத் தொடங்கினார். நன்றிக்கடனாக எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதிய மணி, எங்கள் கவிதைகள் அடங்கிய "வண்ணங்கள்' என்ற தொகுதியை அச்சிட்டுக் கொடுத் தார். அந்நூலை வெளியிட வந்திருந்த அந்நாள் அமைச்சர் ஆர்.எம்.வீ. அவர்கள், நாங்கள் செய்த உதவியைப் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார். நூலை அச்சிட்டுத் தந்த மணி அதற்குரிய பணத்தை எங்களிடமிருந்து வாங்க மறுத்து விட்டார். "அடப் பாவி! கணக்கை முடிக்கப் பார்க்கி றியே' என்று நான் அவரைச் செல்லமாகக் கடிந்து கொண்ட போது, "நன்றிக்கடனை என்னால் அடைக்க முடியாது சார்' என்று கண்கள் குளமாக என் கைகளைப் பற்றிக் கொண்டபோது நானும் கரைந்து போனேன். இப்படிப் பலநூறு அனு பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப்பணி "கவிதை உறவு' வழியே இன்றும் தொடர்வ தில், கவிதையைப்போல வாழ்வும் இனிக்கிறது.''

முழுக்க முழுக்க கவிதைகளுக் காகவே ஒரு இதழைத் தொடங்கி, முப்பத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருதல் என்பது தமிழ்ச் சூழலில் சாத்தியமில்லாத ஒன்று. உங்களுக்கு மட்டும் இது எப்ப டிச் சாத்தியமாயிற்று? உங்கள் குடும்பத்தில் சலசலப்பு ஏதுமில் லையா?

""இந்த விஷயத்தில் கவியரசு கண்ணதாசனே எனது முன்னோடி. இலக்கிய உணர்வும் மனித நேயமும் சமூக பிரக்ஞையும் கொண்ட கவிஞர்கள் சிலரோடு, 1972-ல் தொடங்கிய இதழ் இன்று இயக்கமாகவும் வளர்ந்து நிற்கிறது. "கவிதை உற'வின் தலையாய குறிக்கோள் என்பது, இளைய தலைமுறையினரிடம் காணப்படும் அரிய படைப்பாற்றலை வெளிக் கொண்டு வந்து தொடர்ந்து வளர்ப்பது, ஊக்குவிப்பதுதான். மேலும் மூத்த இலக்கியத் தலை முறையும் இளைய இலக்கியத் தலைமுறையும் இணைந்து எண்ணற்ற இலக்கிய, சமூக, மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். "கவிதை உறவு' சிறந்த கவிதைகளை மர பென்றும் புதுக்கவிதை யென்றும் பிரித்துப் பார்க் காமல் வெளியிடுவதைச் சொல்ல வேண்டும்.

மேலும் "கவிதை உற'வில் வெளியான கவிதைகளில் மாதந்தோறும் சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெ டுத்து அறிவிப்பதோடு, அதிலிருந்து ஆண்டின் மிகச்சிறந்த கவிதை ஒன்றைத் தேர்ந்து, அந்தக் கவிதையை எழுதிய கவிஞரை சிறந்த கவிஞராக அறிவித்து, கலைமாமணி விக்ர மன் விருது வழங்கிச் சிறப்பிக்கி றோம். இது தவிர்த்து ஆண்டு தோறும் தமிழில் வெளியாகும் சிறந்த கவிதை நூல்களுக்கான "துரைசாமி நாடார் - ராஜம்மாள்' இலக்கியப் பரிசுகளை மூன்று கவிஞர்களுக்கு வழங்கி வருகி றோம். அதேபோல் சிறந்த வாழ்வியல் நூல்களுக்கான "சுப்பையா - தங்கம்மாள் இலக்கிய பரிசை, மனித நேயமும், சமூகப் பிரக்ஞையும் கொண்ட பெருமக் கள் இருவரைத் தேர்ந்து, ஆண்டு தோறும் "மனித நேயச் செல்வர்' விருது வழங்கி கௌரவித்து வருகி றோம். மிக முக்கியமாக சிறந்த கவிதைகளை வரவேற்று, அவற் றைத் தொகுதியாகவும் வெளியிட்டு வருகிறது "கவிதை உறவு'. இன்று "கவிதை உறவு' ஒரு மாபெரும் இயக்கமாக விரிந்திருக்கிறது. ஒரு இதழ்கூட விடுபட்டுவிடாமல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

வலம்புரியார் விளையாட்டாகச் சொல்லுவார்: "உனக்கு எதிரி இருந்தால் அவனை ஒரு பத்திரிகை தொடங்கச் சொல்; அவன் தானாகவே அழிந்து போவான்' என்று. ஆனால் தாய்த்தமிழ்க் கவிதையை வளர்க்கும் பணியை முன்னெடுத்துச் செல்லும் "கவிதை உறவு'க்குத் தொடர்ந்து கைகொடுத்து வரும் கொடையுள்ளங்கள் ஆணிவேராக இருந்து வருகிறார் கள். அவர்களில் நல்லி குப்புசாமி, ஊர்வசி நிறுவன அதிபர் செல்வ ராஜ், ரெனால்ட்ஸ் அதிபர் மீரான் போன்றவர்களைக் குறிப்பிட வேண்டும். இவர்களோடு தமிழக அரசு இடையறாது நூலகங்களில் "கவிதை உற'வைப் பெற்றுக் கொள்கிறது!

"கவிதை உறவு' இதழ் தொடங்கியபோது அப்பா கவலைப் பட்டார். அலுவலகப் பணிக்கு ஆபத்து வந்து சேரும் என்று பயந்தார். அவருக்காகவே அலு வலகப் பணிகளில் தொய்வின்றி இயங்கினேன். முறையான பதவி உயர்வுகளை வங்கியும் வழங்கியது. அப்பா பின்னாளில் என்னை அங்கீகரித்தார்.''

கவிதைதான் உங்களை மக்களி டம் கொண்டு சென்றிருக்கிறது. அத்தகைய கவிதையைக் கொண்டு, தமிழர்களாகிய நாம் சாதித்தது என்ன?

""என்னிடமிருந்து ஒரு விரி வான - அர்த்த புஷ்டியான ஒரு பதிலை எதிர்பார்த்தே நீங்கள் இப்படியொரு கேள்வியைக் கேட் கிறீர்கள் என்று நினைக்கிறேன். "கவிதை இல்லையேல் காற்றுக்கும் வியர்க்கும்' என்று ஒரு புதுக் கவிதை உண்டு. கவிதை தமிழர் களாகிய நமக்குப் பொழுது போக்கு அல்ல; வாழ்க்கை! வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் சுவையையும் அளிப்பது கவிதை. கவிதை எழுதுகிற தன்மையும், அதை ரசிக்கிற தன்மையும்தான் மனிதர்களை மனிதர்களாக - அவர்களை மனிதநேயம் மிக்கவர் களாக வைத்திருக்க உதவுகிறது. மற்ற கலை, இலக்கிய வடிவங் களைப்போல் அல்லாது கவிதை ஒன்றுதான் உணர்த்துகிறது. உணர்வுகளைக் கிளர்த்துகிறது. ஊனை உருக்குவது கவிதை. கவிதையைத் தொலைத்துவிடுகிற ஒரு சமூகத்தில் அமைதியும் தொலைந்து போய்விடும்.

நமது இரண்டாயிரமாண்டு சமூக வரலாற்றைப் புரட்டினால், நமது முன்னோர் வாழ்ந்த வாழ்க்கைப் பதிவை, நமக்குப் பாடமாகத் தருவது கவிதைகள் தான். ஆக, கவிதை ஓர் ஒப்பற்ற வரலாற்று ஆவணமாக இருக்கி றது. "கவிதை என் கைவாள்' என்றார் கே.சி.எஸ். அருணாசலம். ஆக, கவிதை சமூகப் புரட்சியில், சமூக மாற்றத்துக்கான ஆயுதமாக, அரசியலாகச் செயலாற்றுகிறது. அது மட்டுமல்ல; சமூகப்புரட்சி ஏற்பட்ட ஒரு சமூகத்திற்கு அமைதியும் தேவைப்படு கிறது. அந்த அமைதியைத் தனது கவித்துவத்தால் தந்து சமூகத்தின் பாதுகாப்பு அரணாக இருப்பது கவிதைதான். அதனால் தான் பாரதி,

"பாட்டுத்திறத்தாலே வையத்தினை
பாலித்திடல் வேண்டும்'
என்று பாடினான். பாலித் திடல் என்றால் பேணிக்காப்பது என்று பொருள்.''


கவிஞன் என்பவன் யார்? எது கவிதை?

""கவிஞன் என்பவன் சமூக மருத்துவன். பல நேரங்களில் யதார்த்தம் அறியாத கற்பனை உலகிலேயே வாழும் நோயாளி யாகவும் வாழ்ந்து மறைந்து போகி றான். பார்த்ததைப் புதிதாய்ப் பார்ப்பவன் பாவலன். பார்த்ததை மீண்டும் பார்ப்பவன் பாமரன். கவிஞன் என்பவன் தலைசிறந்த ரசிகனாகவும் இருக்கிறான். அதேபோல் கவிதையில் புதுக் கவிதை, மரபுக்கவிதை என்ற பேதமில்லை. கவிதைகளுக்கு வார்த்தைகளே தேவையில்லை. வாசிக்கும் முன்பே புரிந்துவிடக் கூடியதுதான் கவிதை. எளிமை தான் அதன் ஆகச்சிறந்த இயல்பு.

இந்த இடத்தில் எனது கவிதை ஒன்றினைப் பகிர ஆசைப்படுகிறேன்.

மொழியின் முன் மண்டியிட்டு
வார்த்தை வரம் கேட்டேன்
அரசியல்வாதிகள் வந்து
அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்
கட்டுரையாளர்கள் சிலர்
கேட்டு வாங்கிப் போனார்கள்
மீதமிருந்ததை பேசவும் ஏசவும்
மனைவியர் வாங்கிப் போனார்கள்
தாமதமாக வந்து நிற்கிறாயே
தமிழ்க் கவிஞனே என்று
மொழி மிகவும் வருந்தியது
வேறு வழியின்றி வெற்றுக் காகிதத்தை மடித்து
வழியில் என் காதலியிடம் தந்தேன்
வாங்க மறுத்த அவள்
நீ என்ன எழுதியிருப்பாயென
எனக்குத் தெரியுமென்றாள்
வார்த்தைகளே இல்லாத
கவிதையை
வாசிக்காமலேயே அவள்
புரிந்து கொண்ட பிறகுதான் தெரிந்தது
கவிதைக்கு வார்த்தைகள்
அவசியமில்லையென்று.''

வானொலி நாடகத்தில் மிகப் பெரிய சாதனையை எட்டியவர் நீங்கள். கவிதைக்கு அப்பால் வானொலி நாடகத்தில் ஈடுபாடு வந்தது எப்படி?

""வாய்ப்புக்கள்தான் காரணம். அகில இந்திய வானொலியில் இளையபாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் செல்லும் போதும், வானொலிக் கவிரயங் கங்களில் பங்கேற்றபோதும் சுகி. சிவத்தின் தந்தையார் சுகி.சுப்ர மணியம் அவர்கள், "நீங்கள் ஏன் வானொலி நாடகம் எழுதக் கூடாது' என்று உற்சாகம் தந்தார். முதலில் "இடை வேளை இடைவெளி அல்ல' என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதினேன். முதல் நாடகமே வெற்றி கரமாக அமைந்தது. அன்று வானொலி நாடகத்தில் ஜாம்ப வான்களாக விளங்கிய சுகி.சுப்ர மணியம், டி.வி.ஆர். சாரி, பட்டுக் கோட்டை குமரவேல் போன்றோர் அந்தக் கலையை எனக்கு ஆர்வ மாய் சொல்லிக் கொடுத்தார்கள்.

பின்னர் ஒரு கட்டத்தில் வலம்புரி ஜான் அவர்கள், "வானொலி ஏர்வாடியாருக்கு வசப்பட்டது போல யாருக்கும் வசப்படவில்லை' என்று குறிப்பிட்டார். அந்த அளவுக்கு வானொலி நாடகம் எழுதுவதில் என்னை நான் மடைமாற்றிக் கொண்டாலும், கவிதைதான் அன்று முதல் இன்று வரை என் ஆர்வமாக என்னை இயக்கி வருகிறது.''

ஒரு வெற்றிகரமான நாடக வடிவம் என்பது எப்படிப்பட்ட அம்சங்களோடு இருக்கும்? வானொலி நாடகத்தில் உங்களது பிரத்யேக முயற்சி என்று எதைச் சொல்லலாம்?

""ஒரு வெற்றிகரமான வானொலி நாடகம் என்பது நிகழ்ச்சியைப் பார்ப்பது போன்று கேட்க வைப்பது. "ஒற்ள் ஹ ல்ஹண்ய்ற்ண்ய்ஞ் ர்ய் ஹண்ழ்' என்று சொல்வதுண்டு. அதாவது வானொலி நாடகத்தில் சம்பவங் களை நகர்த்துகிறபோது, பாத்திரங்கள் மனக்கண்ணில் விரிய வேண்டும். மெல்ல மெல்ல சம்பவங்களையும், அந்த சம்பவங் கள் நிகழ்கிற கதைக்களத்துக்குள் நாம் பிரவேசிப்பது போலவும் உணர வைக்க வேண்டும். இதற்கு பாத்திரத் தேர்வும், குரல் தேர்வும் மிக முக்கியமானதாகும். ஒரு முரட்டுக்குரல் கொண்ட பாத்திர மும் ஒரு மென்மையான குரல் கொண்ட பாத்திரமும் கட்டாயம் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளும்போதுதான், பாத்திரங் களை வேறுபடுத்திக் காட்ட முடியும். இது ஒலி ஊடகம் என்பதை மனதில் கொண்டு எழுதவேண்டும்.

நான் தொடக்கத்தில் நகைச் சுவை நாடகங்கள்தான் எழுதிக் கொண்டிருந்தேன். அகில இந்திய வானொலியின் இயக்குனராக இருந்த விஜய திருவேங்கடம் அவர்கள், "நேயர்களை அழ வைப்பது போல் உங்களால் நாடகம் எழுத முடியாதா?' என்று கேட்க, அதையே சவாலாக எடுத்துக்கொண்டு "நிழல் தேடும் நெஞ்சங்கள்' என்ற நாடகத்தை எழுதினேன். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதே நாடகம், எனது அனுமதி இன்றியே தெலுங்கில் பட மாக எடுக்கப்பட்டு மிகப் பெரிய வெற்றி பெற்றது.

தமிழ்த் திரையுலகிலும் எனது பல நாடகங்களின் கருவும் கருத்தாக்கமும் திருடப்பட்டது. அப்படித் திருடப் பட்டதில் "இன்னும் ஒரு மீரா' என்ற நாடகம் நேயர்களிடம் மிக முக்கியமான கவனத்தைப் பெற்றது. சம்பந்தப்பட்ட நாடகத் தின் கதை திருடப்பட்டு, திரைப் படமாகி வெற்றிகரமாக ஓடிய போது, நாடகத்தை மறக்க முடியாத பல நேயர்கள் எனக்குத் தொலைபேசியில் அழைத்துக் குறிப்பிட்டதில் சந்தோஷப்பட்ட தோடு சரி... குழாயடிச் சண்டை யில் ஏனோ எப்போதும் இறங்கி யதில்லை. எனது மாறுபட்ட நாடக முயற்சிகள் பலவுண்டு. ஒரு மணிநேர நாடகமொன்றில், ஒரு பிரதான பாத்திரத்தை நாடகம் முழுவதுமே பேசாமல் மௌன விரதம் இருப்பதுபோல படைத்தி ருந்தேன். அதற்கும் மிகச்சிறந்த வரவேற்பு இருந்தது.''

இன்றைய தொலைக்காட்சி யுகத்துக்கு மத்தியில் பிரபலமாகி இருக்கும் தனியார் பண்பலை வானொலிகள் குறித்து உங்கள் கருத்தென்ன?

""உடலுக்குத் துரித உணவு எப்படித் தீங்கிழைக்கக்கூடியதோ, அதே போன்று மனித மனங்களுக் குத் தீங்கிழைக்கக்கூடிய செவிவழி துரித உணவு இது. பண்பாட்டுச் சீரழிவு களில் ஒன்றாகவே இதைக் கருதவேண்டி இருக்கிறது. வானொலியின் சாத்தியக் கூறுகள் புதையல்போல் கொட்டிக் கிடக்கும்போது, வெறும் சினிமா நிகழ்ச்சி களாகவும் சினிமா பாடல் களாகவும் நேயர்களுடன் வெட்டி அரட்டை அடிப் பதுவுமாக முடிந்து போய் விடுகிறது. இன்னும் ஒருபடி அதிகம் போய், காதலர் களின் அரட்டையை ஒலிபரப்பும் வானொலிகளைக் காதுகொடுத் துக் கேட்க முடியவில்லை. இத்தனை சீரழிவுக்கு மத்தியில், அண்ணா பல்கலைகழகத்தின் கல்வி ஆய்வு ஊடகப்பிரிவு சார்பில் (ஊக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய் ம்ன்ப்ற்ண்ம்ங்க்ண்ஹ ழ்ங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஸ்ரீங்ய்ற்ங்ழ்) தொடங்கப்பட்டிருக்கும் "அண்ணா பண்பலை வானொலி' சமூக வானொலியின் புதிய பரிமாணத்தைத் தொட்டு நிற்கிறது. இதன் ஒலிபரப்பு எல்லை தற்போது சென்னை முழுவதற்கும் நீட்டிக்கப்பட்டி ருக்கிறது.

சென்னை வானொலியில் இன்றும் இலக்கிய நிகழ்ச்சிகளுக் கென்று ஒரு தனியிடம் இருக்கி றது. அதற்குத் தேர்ந்த - விரிவான நேயர் வட்டமும் இருக்கிறது. தனியார் பண்பலைகள், காதலைக் கடலைப் போடுவதை விடுத்து வெளியே வரவேண்டும். சினிமா வைக் கட்டிக்கொண்டு அழுவதை நிறுத்த வேண்டும்.''

வங்கியியல் நடைமுறையில் இருந்த சொற்களைத் தொகுத்து வெளியிட்டது பற்றிச் சொல்லுங் கள்?

""மக்களுடைய மொழி யிலேயே, வங்கி நடையில் பல்லாயிரம் சொற்கள் பயன்பாட்டில் இருப்ப தைக் கண்டு, அவற்றைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்று விரும்பி னேன். இதற்கு நான் பாரத ஸ்டேட் வங்கியின் ஆட்சி மொழித்துறை அதிகாரியாக பணியாற்றிய காலம் பெரிதும் உதவியது. சுமார் பதினைந்தாயிரம் சொற்களைத் தொகுத்து கலைச் சொல் அகராதியைத் தயாரித்த தும், அதனை வெளியிட்டவர் அன்றைய முதல்வராயிருந்த டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள். புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியபோது, "மிக நிறைவான இப்பணியால் தமிழுக்கு லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி' என்று பாராட்டி னார். அது உண்மையில் பெரும் பேறு என்று கருதுகிறேன்.''

பட்டிமன்றத்தின் வெற்றி, கவியரங்கத்தைத் துடைத் தெறிந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

""நிச்சயமாக! பட்டிமன்றத்தின் வெற்றி, கவியரங்கத்தை காவு வாங்கியதோடு நின்றுவிடவில்லை. சாலமன் பாப்பையா போன்ற பெரிய தமிழறிஞர்களைக்கூட காமெடியன்கள் ஆக்கிவிட்டது. முன்பெல்லாம் கல்லூரி விழாக் களுக்கு மாணவர்கள் ஏற்பாடு செய்வது இலக்கிய கூட்ட மாகவோ அல்லது கவியரங்க மாகவோ இருக்கும். இப்போது அவர்களும் தமிழறிஞர்கள் கோணங்கிகளாக அர்த்தமற்ற நகைச்சுவை அரட்டை அடிக்கிற பட்டிமன்றங்களை ஏற்பாடு செய்வது துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலை யில் கவியரங்கத்தைப் புத்துயிர் செய்து மீட்டெடுக்க வேண்டுமா னால், கவியரங்கக் கவிதையில் நகைச்சுவையை முன்னிலைப் படுத்த வேண்டும். அரசியல் அங்கதமும் சமூகப் பகடியும் அவசியம். கவியரங்கப் பங்கேற்பு என்பது நுட்பம் வாய்ந்தது. ஏதோ கையில் கொண்டு வந்த கவிதையை கடமைக்கு வாசித்துவிட்டுப் போவோம் என்ற கடமை உணர்ச்சி இங்கே கவைக்கு உதவாது.

ஒருமுறை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் கவியரங்கில் பங்கேற்றேன். எனது முறை வந்தபோது அப்துல் ரகுமான் அழைத்தார். எப்படி அழைத்தா ரென்றால், "ராதாகிருஷ்ணன் வருகிறார் ஏர்வாடியிலிருந்து.... யாரும் பயப்பட வேண்டாம்' என்றார். பார்வையாளர்கள் தரப்பிலிருந்து ஒரே நகைப் பொலி. கலகலப்பு அடங் கவே பல நிமிடங்கள் பிடித் தது. காரணம், ஏர்வாடி தர்க் காவுக்கு மனநோயாளிகள் சிகிச்சைக்காக கூட்டி வரப்படுவது காலங்காலமாய் நடக்கும் ஒன்று. பார்வையாளர் கள் மத்தியில் ஏற்பட்ட கல கலப்பை இரட்டிப்பாக்க அவர் கூறியதையே பிடித்துக் கொண்ட நான் இப்படித் தொடங்கினேன்.

"ஏர்வாடியிலிருந்து வருகிறவர் களைப் பார்த்து பயப்பட வேண் டாம். ஏர்வாடிக்குப் போகிறவர் களைப் பார்த்துதான் பயப்பட வேண்டும். என்னைக் கேட்டால் நாம் எல்லாருமே ஏர்வாடிகள் தான். சமூகத்தின் மனநிலையில் ஏற்படும் முரண்களை, காயங்களை குணப்படுத்தக் கூடியவர்கள்' என்றதும்... கைத்தட்டல் காதைப் பிளந்தது. இந்த சமயோசித கவிதை நுட்பம்தான் கவியரங்கத் துக்குத் தேவை.'

உங்களது இலக்கிய வாழ்வில் மிகவும் நெருடலாக நீங்கள் உணர்ந்தது?

""ஒரு பிரபலமான வெகுஜனப் பத்திரிகைக்கு எனது சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தேன். "திரு மணங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல' என்ற அந்தக் கதை, "பிரசுரத் துக்கு ஏற்றதல்ல' என்று குறிப் பிட்டு உடனடியாக எனக்கே திரும்ப வந்தது. எனக்கோ அதிர்ச்சி யாக இருந்தது. இத்தனை சிறப்பாக, ஒரு முத்திரைக் கதையை அனுப்பி வைத் தால், இவர்கள் இப்படித் திருப்பி அனுப்பிவிட்டார் களே என்று எண்ணி னேன். பின்னர் அதே கதை சிவசங்கரியும் பாலகுமாரனும் நடுவர்களாக இருந்த "அமுதசுரபி' சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுக்குரிய கதையாகத் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. அதற்குப் பின்னர் அரசின் ஃபிலிம் டிவிஷன் அதே கதையைக் குறும்படமாகத் தயாரித்தது. மொத்தத்தில் பிரபலமான வெகு ஜனப் பத்திரிகைகள், கதை எப்படி இருக்கிறது என்பதை விடுத்து, கதை யாரிடமிருந்து வருகிறது என்பதில் கவனம் செலுத்துவ தையே இந்த நெருடலான சம்பவம் எனக்கு உணர்த்தியது.''

விளம்பரம் விரும்பாதவராக வும் எளிய மனிதராகவும் இருப் பதில் உங்களுக்கு அப்படி என்ன அலாதி விருப்பம்?

""1996 -ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது இந்தக் கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி யாக அமைந்துவிடும் என்று நினைக் கிறேன். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கலைஞருக்குப் பாராட்டு விழா நடத்தினோம். அது 1996 -ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கலைஞரை வரவேற்பதற்காக அரங்கின் வாயிலில், சங்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் நின்றிருந்தோம். கலைஞர் தமது அமைச்சரவை சகாக்கள் சில ரோடு வந்து இறங்கினார். அவரை அனைவரும் வரவேற்றபோது, அவரது சகாக்களில் ஒருவர், "யாரைய்யா நீ.... எட்டப் போ' என்று என்னைப் பிடித்துத் தள்ளி னார். நான் கீழே விழுந்தேன். கலைஞர் மிகவும் நல்லவர். அவருக்கு இது தெரியாது. இதை நான் பெரிதுபடுத்தாமல் மேடைக் குச் செல்ல முயற்சித்தேன். ஏனெ னில் நான்தான் வரவேற்புரை நிகழ்த்தியாக வேண்டும். சங்கத் தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனக்கு ஒதுக்கப்பட்ட முக்கியமான பணி அது. ஆனால் காவல் துறை அன்பர்கள் என்னை மேடைக்குச் செல்ல அனுமதிக்க வில்லை. என் பரிதாபகரமான நிலையைக் கண்ட சங்கத்தின் தலைவர், காவலர்களிடம் கையைக் காட்டி, "அவர்தானய்யா பொதுச் செயலாளர்' என்ற பின்பே விட்டார் கள். என்னை நானே பிரபலப் படுத்திக் கொள்ளாத - விளம்பரப் படுத்திக் கொள்ளாத நிலையில் எனக்கு நேர்ந்தது இது. என்னைத் தள்ளிய அமைச்சர் பெருமானும் தடுத்த காவலர்களும் இதில் குற்றமற்றவர்கள்.

பொதுவாக விளம்பரம் என்பது அதிக செலவு பிடிக்கக் கூடியது. அந்தப் பணத்தில் மனித நேயத்து டன் பல பணிகளைச் செய்ய முடி யும் என்பது என் அனுபவம். மிக முக்கியமாக, கவிஞன் அல்லது ஒரு படைப்பாளி அறியப்படும் முன்னரே அவனது படைப்பு அறியப்பட வேண்டும். என் கவிதை களைத் தெரிந்தால் போதும்; என்னைத் தெரிய வேண்டாம்.''


நேர்காணல்: ஆர்.சி. ஜெயந்தன்.

கருத்துகள் இல்லை: