முதல் காப்பியம்:-
இன்றுள்ள காப்பிய நூல்களுள் காலத்தால் முற்பட்டது சிலப்பதிகாரம் என்னும் காப்பியமேயாகும். சிலம்புக் காப்பியம் செந்தமிழ் நாட்டு மூவேந்தர்களாகிய சேரர், சோழர், பாண்டியர் என்பார் மூவர்க்கும் உரியதாகும். காப்பியத் தலைவியாகிய கண்ணகி சோழநாட்டில் பிறந்தாள். பாண்டிய நாட்டில் தன் கற்பின் பெருமையை நிறுவினாள். சேரநாடு சென்று வானகம் அடைந்தாள். எனவேதான் காப்பிய ஆசிரியர் சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு வந்த மூன்று நாடுகளின் பெருமையையும் முறையாக எடுத்துரைக்கின்றார்.
''முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக''
என்று சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகளை நோக்கிக் கூறுவதன் வாயிலாக இனிது உணரலாகும். இங்ஙனம் முந்நாட்டின் பெருமையையும் எழுதப் போந்த இளங்கோவடிகளார். அந்நாடுகளின் அரசியல் முறைகளையும், சமய நெறிகளையும் இன்னோரன்ன பிறவற்றையும் குறிப்பாகக் கூறுவாராயினார். எனவே தமிழக மூவேந்தர் நாடுகளின் நிலைகளின் நிலைகளையும் ஒருங்கே எடுத்துரைக்கும் முதல் நூலாகவும், முதல் தமிழக் காப்பியமாகவும் சிலப்பதிகாரம் அமைந்து விளங்குவது புலனாகும்.
காலம்:-
இந்நூலின் காலத்தைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு. இது சங்க கலத்து நூலே என்று கூறுவோர் சிலர். தேவார காலத்திற்கும் பிந்தியது என்போர் ஒரு சிலர். சங்க காலத்தை அடுத்த திருவள்ளுவருக்குச் சிறிது பிந்தித் தோன்றியது என்று அறிஞர் பெரும்பாலோனார் கொள்கின்றனர். இந்நூல் தமிழகத்தின் மூன்று பகுதிகளாகிய சோழ, பாண்டிய, சேர நாடுகளைப் பற்றியும், அவற்றின் தலைநகரங்களைப் பற்றியும், அவற்றை ஆண்ட மூவேந்தர்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கின்றது. ஆயினும் பல்லவரின் ஆட்சி பற்றி ஒரு குறிப்பும் இல்லை. காஞ்சி நகரம், தேவார திவ்வியப்பிரபந்தக் காலத்தில் பல்லவரின் செல்வாக்குப் பெற்ற நகரமாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது போன்ற குறிப்பு ஒன்றும் சிலப்பதிகாரத்தில் இல்லை. ஆதலின் இந்நூல் பல்லவர் எழுச்சிக்கு முந்தியது எனலாம்.
பல்லவர்களைப் பற்றிய பழைய சாசனங்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று கொள்ளப்படுவதால் இந்நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டினது எனலாம். இந்நூல் குறிக்கப்படும் இலங்கை மன்னன் கயவாகு இவனே எனக் கொள்ளல் மேற்கூரிய கருத்திற்கு அரண் செய்கிறது.
கதை:-
கீரிப் பிள்ளையைக் கொன்ற மறையோன் மனைவியின் கதை, வன்னிமரமும் மடைப்பள்ளியும் சான்று காட்டிய கதை (வஞ்சினமாலை) முதலிய சில கதைகள், பிற்காலத்துப் புராணங்களிலும் காணப்படுகின்றன. அக்கதைகள் பழங்காலத்திலேயே தமிழ்நாட்டில் கர்ண பரம்பரையாக மக்களிடையே வழங்கி வந்தன என்றும் அறியலாம்.
செங்குட்டுவன் காலத்தில் கண்ணகிக்குக் கோயில் அமைக்கப்பெற்றதும், இலங்கை முதலிய நாடுகளிலும் கண்ணகி வழிபாடு பரவி, இன்று வரையிலும் இருந்து வருதலும், தமிழ்நாட்டிலும் மற்ற நாடுகளிலும் பிற்காலத்தில் பத்தினி வழிபாடு ஒரு சமயமாக வளர்ந்ததையும், பழைய வஞ்சிமாநகரமாகிய இன்றைய கொடுங்கோளூரில் உள்ள கோயிலின் தெய்வமாகிய பகவதிக்கு ஒற்றை முலைச்சி என்ற பெயர் இன்றும் வழங்குதலும் கண்ணகி மந்து என்ற பெயருள்ள ஊர் நீலகிரி மலையில் இருத்தலும், தமிழ்நாட்டுப் பெண்களிடையே நீராடல், தலைமயிர் விரித்தல் முதலியன பற்றிக் காணப்படும் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் கண்ணகியின் கதை தமிழ்நாட்டில் நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த கற்பனையே என்பதையும் தெளிவாக்குகின்றன.
சிறப்பியல்புகள்:-
சிலப்பதிகாரத்தின் சிறப்பியல்புகள் பல. இது தமிழ்நாட்டின் முப்பகுதிகளைப் பற்றியும், மூவேந்தர்களைப் பற்றியும், மூன்று தலைநகரங்களைப் பற்றியும், விரிவாகக் கூறும் நாட்டுக் காவியம் ஆகும். அரச மரபுகள் பற்றிய நூல்போல் தோன்றினாலும் காவியத்தின் தலைவன் தலைவியாக உள்ளவர் சோழநாட்டு வாணிகக் குடும்பத்து மக்களே ஆதலின், இது குடிமக்கள் காப்பியம் ஆகும். அவ்விருவருள்ளும் கண்ணகியாகிய தலைவியே சிறந்து விளங்குவதால், பெண்ணினத்திற்குப் பெருமை தரும் காவியமாக இது அமைந்துள்ளது. அக்காலத்தில் விளங்கிய சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய ஒன்றையும் பழிக்காமல் பொதுமை போற்றுதல் இதன் சிறப்பாகும். காவியத்தின் இன்னொரு சிறப்பு நாடாளும் வேந்தனை எதிர்த்துப் பெண் ஒருத்தி நீதியை எடுத்துரைத்துப் புரட்சி செய்த பெருமையாகும். தன் ஆணைக்குக் குறுக்கே வாய்திறப்போர் இல்லாத வகையில் நாட்டிற்குத் தலைமை தாங்கிப் பெரும்படை உடையவனாய் அரசு நடத்திய வேந்தன், நங்கை ஒருத்தியின் துயரக் கண்ரால் கலங்கிச் சோர்ந்து மடிந்த காட்சி, துன்புறுவோரின் சி?று கண்ர்த் துளிகளால் துன்புறுத்துவோரின் இணையிலா ஆற்றலும் தேய்ந்து மாய்வதைக் காட்டுகிறது. ஆயினும் அந்த வேந்தனின் பெருமை உயர்கிறது.
பத்தினி வழிபாடு:-
''உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்'' என்பது காப்பியக் கொள்கைகளில் ஒன்று, சாதாரணக் குடிமகனாகிய கண்ணகி தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டுச் சேரன் செங்குட்டுவனால் உலக வழிபாட்டிற்குரிய வளாகிறாள். வீரரைச் சிறப்புச் செய்யும் மரபினதாகிய நடுகல் விழா இளங்கோவடிகள் காலத்தில் பெண்மையைச் சிறப்புச் செய்யும் விழாவாக அமைந்தமை நோக்கற்குரியது. இமயக்கல் கங்கையில் நீராடி கண்ணகித் திருவுருவாய் வஞ்சிமாநகர்ப் பத்தினிக் கோட்டத்தில் பொலிவுறுகிறது.
புகார் நகரில் மாநாய்கன் குலக்கொடியாய் ஈராறு ஆண்டு அகவையளாய் வாழ்ந்த குலமகள் கண்ணகி பிற்காலத்தில் கொங்கச் செல்வியாய், குடமலையாட்டியாய், தென் தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்தாய், ஒரு மாமணியாய், உலகுக்கு ஓங்கிய திருமாமணியாய் விளங்கப் போகும் பெருநிலையைக் காப்பியக் கதையின் பிற்கூறை முன்னரே உணர்த்துமூ களமாகவும் இக்காதையை இளங்கோ அடிகள் யாத்துள்ளார். முழுங்குவாய்ச் சாலினி கண்ணகியைப் பற்றிக் கூறும்,
''இவளோ கொங்கைச் செல்வி குடமலையாட்டி, தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒரு மாமணியாய் உலகிற் கோங்கிய திருமாமணி'' என்னும் கூற்றுப் பததினிப் பெண்டிரை உயர்ந்தோர் ஏத்தும் பான்மைத்தாம். கண்ணகியைத் தெய்வ நிலைக்கு ஏற்றிக் கூறும் முதற் கூட்டம் இதுவேயாகும். கண்ணகியைக் கொற்றவை நிலைக்கு ஏற்றிப் போற்றுவதைக் காணலாம். ஈண்டு சாலினி கண்ணகியைத் தெய்வமாகக் கூறுவதால், ''இவள் துர்க்கையாகவே பிறந்தாள்'' எனற் அரும்பதவுரை யாசிரியார் கூறுகின்றார். கொற்றவைக்கு எயினர் குருதிப்பலி கொடுப்பது போலவே, கொற்றவையின் கூறாகக் கருதப்பட்ட கண்ணகிக்கும் ஆயிரவரைப் பலிகொடுக்கின்றான் வெற்றி வேற்செழியன்.
இளங்கோவடிகள் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக பத்தினிக் கடவுள் வழிபாட்டினைச் சிறப்புச் செய்யும் தன்மை அவர்தம் புரட்சிக் கொள்கையைக் காட்டும். சமணத்தவரான கவுந்தியடிகள் வாயிலாக,
''கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம்''
என்று கண்ணகித் தெய்வத்தை முன்னரே பாராட்டும்படிச் செய்துள்ளார்.
பொருவறு பத்தினி:-
''பொற்கோட் டிமயத்துப் பொறுவறு பத்தின் கற்கால
கொண்டனன் காவல் னாங்கென்''
என்று கண்ணகியைப் பத்தினியாக மட்டுமன்று ''பொருவறு பத்தினி'' யாகக் காண்கிறார் இளங்கோ.
''பொருவறு பத்தினி'' எனக் கூறக் காரணம் என்ன? இதற்கு விடையாக அ. சிதம்பரநாதச் செட்டியார் கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது.
''பெண்டிரிற் சிலர் கணவன் சொல்லிய சொல்லுக்கு எதிர்மறுத்துப் பேசாமல் இருந்தமையினாலே பத்தினியர எனப் பேசப்படுவதும் உண்டு. கற்பினைச் சோதிக்க மனித வடிவத்திற் கடவுளே, மனிதரோ வந்து சோதித்து அழிவுறாமையால் சிறந்தவர்கள் மதக்கப்பட்ட நங்கையர் சிலர் பத்தினியரெனப் பேசப் படுவதுண்டு. கணவன் இறந்தவுடனே அலறிப் புடைத்து விழுந்து உயிர் விட்டமையினாலே பத்தினியர் எனப் பெருமை பாராட்டப்படுவர் சிலர் உண்டு. அவர்களின் வேறாகிக் கண்ணகியை இளங்கோவடிகள் கண்டதனால் கண்ணகியாரைப் பொருவறு பத்தினியார் என்று அவர் கூறியுள்ளார் என்று தெரிய வருகிறது.
தவறிழைத்த பாண்டிய அரசன் முன்னிலையில் நேரே சென்று தன்னுடைய சிலம்பில் மாணிக்கப் பரல் உண்டென்று அடித்துக் காட்டிக் கணவன் குற்றமில்லாதவன் என்பதை நிறுவித் தவிறிழைத்த பாண்டியன் வாயிலிருந்தே கோவலன் குற்றமில்லாதவன். நானே கள்வன் என்ற சொற்களை வருவித்து உண்மையை உலகறியவைத்த உத்தமியானாற் கண்ணகி பொருவறு பத்தினி எனப் பேசப்பட்டாள்.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டிய செய்தி:-
மூன்றாவது காண்டமாகிய வஞ்சிக் காண்டம் தான் தெய்வ அருள் பெற்ற காண்டமாகும். மனித குலப் பெண்ணாகப் பிறந்த கண்ணகி தெய்வ குலத்தைச் சார்ந்தவள் ஆகிறாள். கற்புடைத் தெய்வமாக விளங்குகிறாள். புகாரில் பிறந்து வளர்ந்து, மதுரையில் வாழ்ந்து வஞ்சியில் தெய்வமாகிறாள். இதுவே இக்காண்டத்தின் தனிச் சிறப்பாகும். இக்காண்டத்தில் சேரன் செங்குட்டுவனின் வீரம் வடநாட்வர்களையும் சிறைப்படுத்துகிறது.
கனக விசயர்களின் செருக்கை அடக்கித் தமிழர்களுக்கு அடி பணியுமாறு தன் வீரத்தை காட்டுகிறான் செங்குட்டுவன்.
இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் புனித நீராட்டிக் கனகவிசயர் தலைமீது ஏற்றி வந்து சேர நாட்டில் கண்ணகிக்குக் கோயில் கட்டுகிறான். வஞ்சி நாட்டை நோக்கிப் புறப்பட்ட கண்ணகி திருச்செங்குன்றம் என்ற வேங்கை மரத்தின் அடியில் நின்றாள். அங்கிருந்த குன்றக் குடியினர் மலைவளம் காணவந்த செங்குட்டுவனிடம் நடந்ததைப் பற்றிக் கூறினார். அங்கே இருந்த சாத்தனாரும் அதுபற்றி விரித்துக் கூறினார். கண்ணகிக்குக் கோயில் கட்ட எண்ணினான் செங்குட்டுவன்.
தெய்வமாதல்:-
செய்ய வேண்டிய முறைப்படி வேள்விக்கு ஏற்பாடு செய்தான். ஆன்றோர், வேந்தர், அயலார் அனைவரையும் வரச்செய்து குறிப்பிட்ட நாளில் கண்ணகிக் கோயிலுக்குக் குடமுழுக்கச் செய்தான். அவ்விழாவிற்குக் கண்ணகியின் தோழியான தேவந்தி காவற்பெண்டுகளும், அடைக்கலம் பெற்ற மாதரியும் வந்திருந்தனர். அவர்கள் செங்குட்டுவனிடம் சென்று கண்ணகிக்கும் அவர்களுக்குமுள்ள உறவைக் கூறி அழுது புலம்பினர்.
அப்போது வானத்திலிருந்து ஒரு தெய்வப் பெண் தோன்றினாள். எல்லோரும் வியப்புடன் அவளையே நோக்கினர். பெரியோர்களே பாண்டிய மன்னன் தீமை ஏதும் செய்யவில்லை. தற்போது தேவர்களின் சபையில் விருந்னினகா உள்ளான். நான் வன் மகள், நீங்களும், நலம் பெற்று என்னுடன் வாருங்கள்.... என்று கூறிய தெய்வப் பெண் மறைந்துவிட்டாள். எல்லோரும் கண்ணகி தெய்வநிலை பெற்று விட்டாள் என்று போற்றினர்.
இன்றைய நாவல்களில்:-
நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு, அகிலனின் எங்கே போகிறோம். மு.வ.வின் அகல்விளக்கு இன்னும் சில நாவல்களில் முக்கோணக் காதல் அமைந்துள்ளது.
திரைப்படங்களில்:-
கண்ணகி, பூம்புகாரி, இருகோடுகள், முதல் மரியாதை சிந்து பைரவி, கிழக்கு வாசல், போன்ற திரைப்படங்களிலும் சிலப்பதிகாரச் சாயல் அமைந்து முக்கோணக் காதல் கதையாக அமைகிறது. இன்னும் சில திரைப்படங்களில் இதன் தாக்கம் அமைந்துள்ளது.
நன்றி: ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக