புதுக்கவிதை வானில் இன்னொரு நட்சத்திரமாய் ஒளிர்வதற்கு ''அழைத்த இதழ்கள்'' மூலம் அறிமுகமாகி இருக்கிறார் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் செல்வி ம. இராதா அவர்கள். புதுக்கவிதையுகம் என்று சொல்லுமளவுக்குப் புதிய கவிஞர்கள் பலர் நாள்தோறும் தோன்றிக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்களை எல்லாம் இருகரம் நீட்டி அன்போடு அரவணைத்துக் கொள்கிறது புதுக்கவிதை உலகம். செல்வி ம. இராதாவின் கவிதைகள் எதார்த்தத்தின் வார்ப்புகளாய் உருவெடுத்திருக்கின்றன. அவை குடத்திலிட்ட விளக்காகக் கூடாது குன்றிலிட்ட விளக்காகத் திகழ வேண்டும் என்ற நோக்கில் அவரது கவிதைகள் இங்கு ஆராயப்படுகின்றன.
நம்பிக்கை:-
நம்பிக்கை இல்லா மனிதன் தும்பிக்கை இல்லா யானைக்கு ஒப்பாவான். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் வேண்டும். அதற்கு அடிப்படையாய் அமைவது நம்பிக்கை. எனவேதான் கவிஞர் ம. இராதா அவர்களும் ''நம்பிக்கை''யோடு தம் கவிதையைத் தொடங்கியுள்ளார்.
''அதோ அந்த
ஏழைச் சிறுவன்
தன் கிழிந்த
கோணிப்பையில்
பிதுங்கி வழியும்
கனவுகளோடும்
வற்றிய கண்களில்
வருங்காலத்தையும்
சுமப்பதில் - என்
இருண்ட காலத்தில்
எங்கோ ஓர் ஒளிக்கீற்று''
என்று தம் முதல் கவிதையைத் தொடங்கி உள்ளார்.
சகுனம்:-
அறிவியல் வளர்ச்சியடைந்துள்ள இந்த நூற்றாண்டிலும் சிலர் அறியாமையால் சொல்லிக் கொள்ளும் வார்த்தை ''சகுனம்'' என்பது. தன் மீது நம்பிக்கை இல்லாமல் பூனை, பல்லி, காகம், கழுதை, என்று அஃறிணை உயிர்களின் செயல்பாடுகளை வைத்து மனிதன் தன் வெற்றியை நம்புகின்றான். இதற்கு இரண்டே வரிகளில் தீர்வு சொல்லுகிறார்.
''பார்க்கப்படுபவை
சரியாகத்தான் இருக்கின்றன
பார்ப்பவர்கள்தான்
சரியில்லை''
என்று கூறுவது அஃறிணை உயிர்கள் அதனதன் வேலைகளைச் செவ்வனே செய்கின்றன. ஆனால் மனிதர்கள்தான் தன்னைத் திருத்திக் கொள்ளாமல் அவைகளைப் பழி சொல்கிறான் என்கிறார்.
திருமணம்:-
திருமணம் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாக அமைகிறது. பால்ய விவாகம் தடை செய்யப்பட்டது அக்காலத்தில். இன்று பருவம் வந்தும் பணம் இல்லா காரணத்தால் கலைந்த கனவுகளுடனும், நரைத்த நினைவுகளுடனும் துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளோடு மட்டுமே உறவாடிக் கிடக்கின்ற முதிர் கன்னிகளின் அவலநிலையைச் ''சுயம்வரம்'' என்ற தலைப்பில்
''யமஹா இளவரசன் வேண்டாம்
பிருதிவிராஜனே நீயேனும்.....
உன் நொடித்துப் போன
குதிரையிலேனும்....?
என்று ஏக்கத்தோடு அவர்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
கடனை வாங்கி, அதிக பணம் செலவழித்துத் திருமணம் செய்து கொடுத்தாலும் எல்லோருக்கும் ஏற்ற இல்லறம் வாய்ப்பதில்லை. இதில் உறவு முறையில் மணமுடித்தவர்களும் விதிவிலக்கல்ல என்பதை ''எச்சம்'' என்ற தலைப்பில் விளக்கியுள்ளார்.
சாண் பிள்ளையானாலும்:-
சாண் பிள்ளையானாலும் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள இக்கவிதை இளைஞர் உலகத்திற்கு இவர் கொடுக்கும் சவுக்கடி. எதிர்கால இந்தியாவைத் தாங்கும் தூண்களாக இருக்கவேண்டிய இளைஞர்கள் முதுகெலும்பில்லாத சோம்பேறிகளாகப் பேருந்தில் அதுவும் ''அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்கே, இடம் பிடிக்கும் அவல நிலையைச் சுட்டிக்காட்டி, நீ எந்த வகையில் வலிமையானவன்'' என்று வினா தொடுக்கிறார். இதில் அவரது அனுபவ உண்மையும், அவர் உள்ளத்தில் எழுந்த ஆதங்கத்தையும், ஒருங்கே உணர முடிகின்றது. இளைஞர்கள் துடிப்போடும், பொறுப்போடும் செயல்பட வேண்டும் என்ற அவரது அவாவினையும் முடிகிறது.
''அடுத்த
நிறுத்தத்தில்
இறங்குவதற்கே
ஜன்னல்வழி
பேருந்தில் இடம்பிடிக்கும்
நீ
எந்த வகையில்
பெண்ணைவிட வலிமையானவன்?''
என்ற இக்கவிதை வரிகள், வாசிக்கும் ஒவ்வொரு இளைஞரின் இதயத்தையும் ஒரு நிமிடம் சிந்திக்கச் செய்யும் என்பது உறுதி.
அக்கினிக் குஞ்சு:-
இத்தலைப்பு பார்வையால் ஏற்பட்ட பாதிப்பின் பிரதிபலிப்பு. நோக்கத்தின் தாக்கம் கவிதையாயிற்று.
''குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?'' (705)
குறித்ததைக் காணவல்ல கண்களால் பிறர் குறிப்பை அறிய இயலாவிட்டால் உறுப்பினுள் சிறந்த அக்கண்களால் என்ன பயன்? என்ற வள்ளுவர் கருத்தை அடியொற்றி,
''உனக்கென்ன
நோகாமல்
நோக்கிவிட்டாய்
இங்கே
வெந்து(ம்)தணியாதது
என்
மனக்காடாயிற்றே?''
என்ற வரிகளில் நோக்கத்தின் காரணம் தெரியாமல் மனம் வெந்தும், வேகாமலும் தவிக்கும் மனநிலையை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் ''காதல் கலவரம்'' என்ற தலைப்பில்
''ஏற்கனவே
நடுக்கம் கண்ட
நிலமாய்
என் இதயம்!
நீ ஏனடி
உன் பார்வை
வன்முறையால்
அதனைக்
கலவர பூமியாக்குகிறாய்!''
என்ற கவிதையிலும் பார்வையின் வலிமை பூகம்பத்தின் வலிமையைவிட கொடுமையானது என்கிறார்.
நேசத்தின் விலை:-
தேசத்திற்காகத் தன்னுயிர் ஈந்த ஒரு ராணுவ வீரனின் வீரமரணம் ஒருத்தியை விவாகம் இல்லாமலேயே விதவை ஆக்கிய கொடுமை நிலையைச் சித்தரிக்கின்றது. இந்த நேசத்தின் விலை, கவிதையைப் படித்து முடித்தபின்பு மனதில் ஏதோ சுமை ஏறிய உணர்வு. தன் காதலிக்காகத் தேசம் காக்கச் சென்று, காதலியைக் காவாது காலனிடம் சென்றுசேந்த சோகம் சொல்கிறது இக்கவிதை
''மரியாதையோடு
மண்ணை முத்தமிட்ட
சடலம் மீது
அழுது புரண்டு.....
விவாகம் இல்லாமலேயே
விதவை ஆனாயே....
அப்போது தானடி
உண்மையாகவே இறந்தேன்!''
என்று தலைவனின் கூற்றாக வரும் இக்கவிதை தேசப்பற்றையும், காதலின் உயர்வையும் ஒருங்கே விளக்குவதாக உள்ளது.
மரபு மீறல்:-
இக்கவிதை அகப்பொருள் இலக்கணத்தில் சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் என்பது தொல்காப்பிய சூத்திரம். ஆனால் இங்கு தலைவியின் பெயரே கவிதையாய் இருப்பதால் தலைவன் மரபை மீறுவதாகக் கூறுகிறார்.
''அகக்கவிதைகளில்
சுட்டி ஒருவர்
பெயர் கொளப்
பெறார் என்பது
இலக்கண மரபு
என்ன செய்வது?
மரபு மீறலாய்
உன் பெயரே கவிதையாய்''
பாலை மனம்:-
எவ்வித பசுமையும் இல்லாமல் மணலும் மணல் சார்ந்த பகுதியுமாகக் காணப்படுவது பாலை. அதுபோல் எந்தவித உணர்ச்சிக்கும் இடம் தராமல் இருக்கும் உள்ளத்தைப் பாலை மனத்தோடு ஒப்பிடுகிறார்.
''ரசனையற்ற
என்னுள் - நீ
ரசாயன மாற்றம்
நிகழ்த்துகிறாய்!
பாலைவனத்தில்
பருவ மாற்றங்களைக்
கொணர முயல்கிறாய்!
....
விட்டுவிடு
என்னை
வீழ்ந்து விட்டுப்போகிறேன்
உன்னைப்
புரியாமலேயே''
என்ற கவிதை விரக்தியடைந்த ஒருவரின் உள்ளம் எப்படி அசைவற்ற நீர்நிலை போன்று காணப்படுமோ அதுபோன்று எத்தகைய உணர்ச்சிக்கும் ஆட்படாத உள்ளத்தை விவரிப்பதாக உள்ளது.
அழைத்த இதழ்கள்:-
இக்கவிதையின் வாயிலாக அறிமுகமாகும் ம. இராதா அவர்கள் ஒரு யதார்த்தவாதி என்பதற்கு இக்கவிதையே சான்று பகர்கிறது. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கிடையே அவர் கவிதைக்கான வியூகம் தேடியிருக்கிறார். அவரைக் கவிதை எழுத அழைத்ததுவோ அவ்வழைப்பிதழ்கள்? அவர் அழைப்பிதழை அலங்கரித்திருக்கும் விதம் நம்மை ''இத்தனை வேலைகளுக்குமா?'' என்று வியக்க வைக்கிறது.
கல்விப் பணியாற்றிக்கொண்டே கவிதைப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள செல்வி ம. இராதா அவர்கள் எழுதியுள்ள இம்முதல் கவிதைத் தொகுப்பு நூல், அவரின் கவிதை வீட்டிற்கு நல்ல அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறது. அவரின் கவிதை நடை மிகவும் எளியதாக எல்லோரும் உணரும் வகையில் அமைந்துள்ளது.
நன்றி: ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக