12/02/2011

நேர்காணல் : பேராசிரியர் தொ. பரமசிவன்

"ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்"

தமிழகப் பண்பாட்டுச் சூழல், நாட்டுப்புறத் தெய்வங்கள், பெருந்தெய்வங்களின் சமூக மரபுகள் என்று நாம் பார்க்கத் தவறிய பல விஷயங்களைப் பற்றிய இவரது ஆய்வுகள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. டாக்டர் பட்டத்திற்காக ஆராய்ந்திருக்கிற அழகர்கோவில் நூல் பல்கலைக் கழக வட்டாரங்களில் ஒருவித அதிர்வை ஏற்படுத்தியது.

தெய்வங்களும், சமூக மரபுகளும், அறியப்படாத தமிழகம் ஆகிய நூல்களைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான பண்பாட்டு அசைவுகள் நூல் விசேஷக் கவனம் பெற்றது.

தொ. பரமசிவத்திடமிருந்து தெறிக்கும் கருத்துகளும், சான்று மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும், மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை என்கிறார் ஆய்வாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி.

மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர் தற்போது நெல்லையிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவர். இலக்கியம், சமயம், கோவில், மரபு, பண்பாடு என்று எந்த விஷயத்தைத் தொட்டாலும் அற்புதமாக விவாதித்துக் கொண்டே போகும் இவரது விமர்சனங்கள் சிறு பத்திரிகை வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டிருக்கின்றன. இழந்து கொண்டிருக்கிற பல தொன்மையான மரபுகளைப் பற்றிய தன்னுணர்வை உருவாக்குகின்றன இவரது எழுத்தும், பேச்சும்.

மதுரையில் தங்கும் விடுதியொன்றின் மேல்தளம், அங்கு சந்தித்துப் பேசியபோது பேச்சில் தன் அகங்காரமில்லை; தன்னுடைய கருத்து மட்டுமே சரி என்கிற பிடிவாதங்களில்லை. ஆனால் பேச்சினூடாக பிஞ்சுத் தீயாகப் பரவியிருக்கிறது கோபம், திராவிட இயக்கங்களின் மீது பரிவும், அவற்றின் தற்போதைய சரிவு குறித்த வருத்தமும் இழையோடப் பேசுகிறார். உரையாடலின் போது இறுக்கமில்லாமல் சரளமாக வரும் நெல்லைக்கே உரித்தான வட்டாரப் பேச்சு, அதில் வெளிப்படும் வாஞ்சை - எல்லாமே பேச்சின் பொழுதை முக்கியமாக்கி விடுகின்றன.

"உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்" வழக்கமானபடி உரையாடலைத் துவங்குகிற போது உதட்டுச் சிரிப்புக்கிடையே கூச்சப்படுகிறார்.

"என்னுடைய சொந்த ஊர் பாளையங்கோட்டை. அப்பா, அம்மா இருவருக்குமே இதே ஊர்தான். பெரும்பாலும் கிறிஸ்தவ நகரம் என்று அறியப்பட்டிருந்தது பாளையங்கோட்டை. உண்மையில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வைஷ்ணவக் கோயிலெல்லாம் இங்குண்டு. இதன் பழைய பெயர் ஸ்ரீவல்லப மங்கலம். மதுரைக்குத் தெற்கே பெரிய கோட்டையுள்ள நகரம் இது. பின்னாளில் தென்னிந்தியத் திருச்சபை இங்கிருந்ததால் இது கிறிஸ்தவ நகரமாகவும் வளர்ச்சி பெற்றது.

கல்வித்தரமுடைய நகரம் இது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கண் தெரியாதார் பள்ளி இங்கிருக்கிறது. காது கேளாதோருக்காக பள்ளியும் இருக்கிறது. அவர்களாலும் படிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டிய நகரம் இது. கைதிகளும் இங்கு படிக்க முடிந்தது. நிறைய நூலகங்கள் இருந்ததால் வாசிப்புப் பழக்கமும் அதிகம்.

என்னைப் போன்று முதல் தலைமுறையாகப் படிக்கிற குடும்பங்களிலிருந்து வருகிறவர்கள் தன்னுணர்வோடு சிந்திக்கிற போது பெரியார், திமுக என்றுதான் இருக்க முடியும். அப்படித் தான் எங்களில் பெரும்பாலானவர்கள் இருந்தோம். கல்விச்சூழல், இயக்கச் சூழல் இரண்டுமிருந்தது. அப்போது எல்லா மாணவர்களும் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் ஏதேனும் ஒரு புத்தகத்தையோ, இதழையோ கையில் வைத்திருப்பார்கள். அது தரமான இதழாக இருக்கும். அந்த வாசிப்புப் பழக்கம் நாற்பதாண்டுகளில் கணிசமாகக் குறைந்து விட்டது. தொலைக் காட்சிப் பாதிப்பு வந்த பிறகு இன்னும் குறைந்து விட்டது தொடர்ந்து வாசிப்பு இருந்தால் தானே சிந்தனை இருக்கும்".

"அந்தச் சமயத்தில் தனித் தமிழ் வாதத்தை முன்வைத்த மறைமலையடிகள் போன்றவர்களை நீங்கள் ஆதரிக்க வில்லையா?"

"மறைமலையடிகளைப் பொறுத்த வரை அவருக்கு வேறொரு நோக்கமும் இருந்தது. சைவம் சார்ந்த தமிழியக்கத்தை அவர் முன்வைத்தார். ஆனால் திராவிட இயக்கங்களின் மொழி எதுகை மோனையுடன் ஒலிநயத்தை உள்வாங்கிக் கொண்டதாக இருந்தது. எதைச் சொன்னாலும் ஒலிநயத்துடன் சொன்னார்கள். எழுதினார்கள். அதனால் மக்களுக்கு அந்த மொழிநடை பிடித்துப்போனது. பழமொழிகளை, விடுகதைகளை, சொல்லடைகளை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

காங்கிரஸ’ல் முக்கியமான தலைவர்களாக திரு.வி.க., டி.எஸ். சொக்கலிங்கம் போன்றவர்கள் இருந்தாலும் அவர்கள் சமூகத்தின் மேல் அடுக்கிலிருந்து வந்தவர்கள். எளிய மக்களிடையே புழங்கிய பழமொழி, ஒலிநயம், விடுகதை, பேச்சுமொழியுடன் தொடர்புடைய மொழி அவர்களுக்குக் கைவரவில்லை. திராவிட இயக்கத்துக்காரர்களுக்கு அது கைவந்தது."

"உங்களுடைய டாக்டர் பட்டத்துக்கான ஆய்வை எங்கே பண்ணினீர்கள்? அப்போதிருந்த சூழல் உகந்ததாக இருந்ததா?"

"ஆறு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக வேலை பார்த்த பிறகு - 1976ல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காகப் போய்ச் சேர்ந்தேன். கள ஆய்வு என்பதன் பெருமை அப்போதுதான் புலப்பட்டது. புத்தகங்களுக்குள்ளேயே, நூலகங்களுக்குள்ளேயே ஆராய்ச்சி என்ற நிலை மாறி, தெருவையும், ஆய்வையும் இணைக்கிற 'கள ஆய்வு' அப்போது செல்வாக்குப் பெற ஆரம்பித்திருந்தது. மு. ராகவைய்யங்கார், மயிலை சீனி. வேங்கடசாமி, ராசமாணிக்கனார் போன்ற சிலர் செய்திருந்தாலும் அது பரவலாக இல்லை 70 களுக்குப் பிறகே கள ஆய்வுகள் நிறைய நடந்தன. என்னுடைய ஆய்வும் கள ஆய்வு சார்ந்ததே."

"கள ஆய்வை எந்த அளவுக்கு மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு போக முடிந்தது".

"அறிவு என்பதும், ஆராய்ச்சி என்பதும் புத்தகங்களுக்குள்ளாகவும், நூலகங்களுக்குள்ளாகவும் மட்டுமே இருக்க முடியாது. தெருக்களுக்குப் போய் மக்களைச் சந்தித்து மக்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்கிற தன்னுணர்ச்சி வந்த பிறகே புதுப் புது ஆய்வுகள் பிறந்தன. எளிய மக்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன! அவர்களுக்கு எழுத்து தெரியாவிட்டாலும், அறிஞர்கள் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. மக்களிடமிருந்து கற்பது, கற்றுக் கொடுப்பது என்கிற இரு முனைப் போக்குடையதாக பிறகு மாறின ஆய்வுகள்.

அழகர்கோவிலைப் பற்றி நான், கள ஆய்வு செய்தேன். அதைச் சமூகவியல் பார்வையுடன் செய்தேன். அதற்கு முன்பு கோவில் ஆய்வுகள் என்றால் கட்டிட ஆய்வுகள், கலை ஆய்வுகளாகவே இருந்தன. அதை விட்டுக் கோவிலுக்கும் மக்களுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்லப்படவில்லை. என்னுடைய ஆய்வு முழுக்க முழுக்க அதிலேயே மையம் கொண்டது.

வங்காளத்தைச் சேர்ந்த பி.கே.சர்க்கார் என்பவரின் புத்தகம் எனக்கு உந்துதலாக இருந்தது. மக்களுக்கும் சமூக நிறுவனங்களுக்குமான உறவை ஆராய்கிறது அந்தப் புத்தகம். நம் நாட்டில் மிகப் பெரிய சமூக நிறுவனம் என்பது கோயில் தான். மற்ற சமூக நிறுவனங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன. காலனி ஆட்சியில் அழிந்தது போக, மிஞ்சியது கோயிலும், சாதியும் தான். இந்த இரண்டு சமூக நிறுவனங்களுக்கிடையே உள்ள தொடர்பைப் பற்றியதுதான் என்னுடைய ஆய்வு, குறிப்பிட்ட நான்கு சாதிகளுக்கும் அழகர் கோவிலுக்கும் உள்ள உறவையே அந்த ஆய்வில் விவரித்திருக்கிறேன்."

"சாதிகளுக்கு கோவிலுடன் அந்த அளவுக்கு நெருக்கம் இருந்ததாக உணர்ந்தீர்களா?"

"சாதி என்பது குரூரமான யதார்த்தம். சமூகம் என்பதே இங்கு சாதிகளின் அடுக்குகளாகத்தானிருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்பது வேறு விஷயம். ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. இங்கே தனிநபர்கள் என்று யாருமில்லை. எல்லோர் மீதும் விரும்பியோ, விரும்பாமலோ சாதி போர்த்தப்பட்டிருக்கிறது. சிலருக்குப் பச்சை குத்தியது போல, தோலோடு சேர்த்துக் குத்தப்பட்டிருக்கிறது- சாதியை சமூகத்தின் முக்கியமான அலகாக எடுத்துக்கொண்டே எல்லா ஆய்வுகளையும் பண்ணுகிறோம். அது அல்லாத ஆய்வுகள் அனைத்தும் முழுமையில்லாத ஆய்வுகள் என்று நினைக்கிறேன்."

"அழகர்கோயிலைப் பற்றிய உங்களுடைய ஆய்வோடு வந்தபோது அது கவனிப்புக்கு உள்ளானதா?"

"ஆய்வேட்டைப் பரிசீலித்த மூன்று தேர்வாளர்களுமே அதை மிகச் சிறந்தது என்று சொன்னதால் மதுரைப் பல்கலைக்கழகமே அதை நூலாக வெளியிட்டது. ஆனால் வெளியிடப் பத்தாண்டுகளாகிவிட்டன. மிக அண்மைக் காலமாகத்தான் அந்த ஆய்வேடு பலரால் கவனிக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் தல புராணத்திற்குப் பின் உள்ளூர்க் கைங்கர்யம் நிறைய இருக்கும். இன்னொருபுறம் அந்தக் கோயிலைப் பற்றிய வாய்மொழிக் கதைமரபு இருக்கும். அழகர் கள்ளழகராக ஏன் வேஷம் போடுகிறார் என்பதற்குக் கள ஆய்வின் போது நிறையத் தகவல்களைச் சேகரித்தேன். மக்கள் ஒரு கட்டத்தில் தங்களது கலாச்சாரத்தின் பிரதிநிதியாகக் கடவுளை ஆக்குவார்கள். அப்படி ஆக்கப்பட்ட கடவுள்களும், கோயில்கள் மட்டுமே உயிர் வாழும், மற்றவை எல்லாம் பாழடைந்து போய்விடும்."

"மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் குறிப்பிட்ட சமூகத்தினர் அனுமதிக்க மறுக்கப்பட்ட மாதிரியான நிலைமை அழகர் கோயிலிலும் இருந்ததா?"

"இருந்தது, ஆனால் ராமானுஜர் 12-ஆம் நூற்றாண்டில் வந்த போது ... நிறையக் கோயில்கள் அதன் பழைய ஆச்சாரங்களிலிருந்து நெகிழ்ந்து கொடுத்தன. அவர்தான் மைசூருக்கு அருகிலுள்ள மேலக் கோட்டையில் அரிஜன ஆலயப் பிரவேசத்தைச் செய்து காட்டியவர். சாதி வேற்றுமைகள், பாராட்டுவதில் வைணவம் நெகிழ்ந்து கொடுத்த போது, சைவம் இறுக்கமாக இருந்தது. இதை உணர முடிகிறது."

"அப்படி இறுக்கமாக இருந்த போதும் பெருந்தெய்வங்களுடன் மக்களை நெருக்கமாக்குகிற கதைமரபு, சொல்லாடல், எல்லாம் எப்படி உருவானது.?"

"பெருந்தெய்வக் கோயில்களின் மீது மக்களின் கற்பித முறைகள் எல்லாமே ஆகம விதிகளுக்கு எதிரானவை. ஆகமங்கள் ஒரு போதும் மக்களின் கற்பித உறவுகளை ஏற்பதில்லை. அழகர் கள்ளழகராக வேடம் போடுவதை எந்த ஆகம விதி ஏற்கும்? காரமடை ரெங்கநாதர் கோயிலுக்குள் இருளர்கள் தண்­ர்ப்பையுடன் வந்து சுத்தம் செய்கிறார்கள். இதை ஆகமம் ஏற்குமா? ஆனால் அன்றைக்கிருந்த அரசும் அதிகாரிகளும், கோயில் நிர்வாகமும் மக்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால் இவற்றை ஏற்றுக் கொண்டன."

"சிறு தெய்வம், பெருந்தெய்வம் என்பதெல்லாம் நாம் சௌகர்யத்திற்காகப் பயன்படுத்துகிற சொற்கள். பெருந்தெய்வங்கள் ஒரு கடவுள் என்கிற கோட்பாட்டை உருவாக்கும். மக்களுடைய தெய்வங்கள் அப்படியல்ல. சிறு தெய்வ வழிபாட்டு முறையைப் பலமாக உள்ளிழுத்துக் கொண்டே பெருந்தெய்வங்கள் இங்கு நிற்கமுடிகிறது. மீனாட்சியை சிவனின் மனைவி சக்தியாகப் பெருவாரியான மக்கள் பார்க்கவில்லை. அவர்கள் தாயாகத்தான் பார்க்கிறார்கள். சிறு தெய்வங்கள் என்று நீங்கள் குறிப்பிடுகிற கோயில்கள் சொத்துடைமை நிறுவனங்களாக மாறுவதில்லை. ஆனால், அரசின் ஆதரவு பெற்ற எல்லாக் கோயில்களும் சொத்துடமை நிறுவனங்களாக மாறி விடுகின்றன. சிறு தெய்வங்கள் என்கிற கிராமப்புறத் தெய்வங்கள் எல்லாமே கைகளில் ஆயுதங்களை ஏந்தியிருக்கும். மக்களோடு மக்களாக சில இடங்களில் கூரை இல்லாதபடி நின்று, அவர்களுடைய உணவை உண்டு, உடுத்துபவற்றை உடுத்தி எளிய மக்களின் வாழ்விலும், கனவிலும் கலந்துவிட்டவை அந்தத் தெய்வங்கள்."

"எவ்வளவு தூரம் மக்கள் ஒரு கோயிலுக்கு வந்து குவிகிறார்களோ அந்த அளவுக்கு அங்கே அதிகார மையம் உருவாக்கப்படுகிறதா? உதாரணத்திற்கு பழனி கோயிலில் வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகே பூஜை செய்யும் உரிமை பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து பறிபோனதாகச் சொல்லப்படுவது உண்மைதானா?"

"மிகப்பெரிய ஆன்மிக மையமாக விளங்குகிற கோயிலை அரசு அதிகாரம் தனக்கென எடுத்துக் கொள்கிறது. பழனி கோயிலில் முன்பு பூஜை செய்தது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். ஆனால், திருமலை நாயக்கர் காலத்தில் தளவாயாக இருந்த இராமப்பையன் இன்னொரு சமூகத்தினர் கையிலிருந்து திருநீறு வாங்குவதை விரும்பவில்லை. இதையடுத்தே அங்கு பூஜை செய்யும் உரிமை பிராமணர்களுக்கு மாறுகிறது. இதே மாதிரி கதைப் பாடல்களின்படி பார்த்தால் ராமேஸ்வரம் கோயிலிலும் பூஜை செய்திருப்பது பிற்படுத்தப்பட்ட சமூகம்தான். பிறகு அங்கும் மாற்றப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரம் உள்ளே நுழைய நுழைய எளிய மக்கள், உணர்வு ரீதியாக அந்தக் கோயிலிருந்து விலகி விடுகிறார்கள். அதிகாரம் குறுக்கே பாய்ந்தால் மக்கள் விலகி விடுவது காலங்காலமாக நடக்கும் பழக்கம். மக்கள் எங்கே பெருந்திரளாகக் கூடுகிறார்களோ அந்த ஆன்மிக மையங்களைத் தனதாக்கிக் கொள்ள எந்த அரசும் முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்கும். பாண்டிய அரசோ, சோழ அரசோ அல்லது இன்றைக்கிருக்கிற அரசுகளோ உடனடியாக அக்கோயில்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகிறதே!"

"கிராமப்புறங்களில் இருக்கிற நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்துடன் தானே பின்னிப் பிணைந்திருக்கின்றன?"

"இன்றைக்கும் சில குடும்பங்களுக்கான தெய்வங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட சாதியினருக்கான தெய்வங்கள் இருக்கின்றன. சமூகத்தின் மேலடுக்குகளில் உள்ள சாதியினர் பெரும்பாலும் இந்தக் கோயில்களுக்கு வருவதில்லை. மூன்று, நான்கு பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குச் சேர்ந்து சில குல தெய்வங்கள் இருக்கின்றன, நெல்லை மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோயில்களில் பெரும்பாலானவை மூன்று அல்லது நான்கு சாதிகளுக்குப் பொதுவானவையாகவே இருக்கும். திருவிழா அன்று மட்டும் எல்லோரும் கூடுவார்கள். ஓராண்டுகாலமாக அவர்கள் அந்தத் தெய்வத்தை நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவனுக்கு ஒரு சிக்கல் வருகிற போது கோயில் இருக்கும் திசையை நோக்கிக் கும்பிடுகிறான். நேர்ந்து கொள்கிறான். அவனுடைய கடந்தகால நினைவுகளோடும், மூதாதையர்களின் நினைவுகளோடும் கலந்து பிசையப்பட்ட உணர்வுடன் இருக்கிறது அவனது நாட்டார் தெய்வம்."

"இப்படிப் பிணைந்திருக்கிற உறவுகளை வலுவிழக்கச் செய்யும் விதத்தில் சபரிமலை, திருப்பதி, மேல்மருவத்தூர் என்று பொதுவான தெய்வங்களை நோக்கி நகர்த்தும் முயற்சியும் வெவ்வேறு விதத்தில் நடக்கிறதே. இதைத் திசைதிருப்பும் காரியமாக நினைக்கிறீர்களா?"

"சபரிமலையாகட்டும், மேல்மருவத்தூராகட்டும், அவையெல்லாம் மத்தியதர வர்க்கத்து ஆன்மிகம். அடித்தள, எளிய மக்களின் ஆன்மிகம் அல்ல. எளிய மக்களின் கனவில் ஒருபோதும் சிவபெருமான் வரமாட்டார். அவர்களுடைய குலதெய்வம்தான் வரும். அதனால் மூதாதையர்களின் நினைவுகளுடன் பிணைந்திருக்கிற இந்த வழிபாட்டு உறவை அவ்வளவு சுலபமாக அகற்றி விட முடியாது".

"கிராமப்புறத் தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் என்று தூக்கிப்பிடிப்பதன் மூலம் பழைய நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தையும் மதிப்பீடுகளையும் தூக்கிப் பிடித்து, அதை நியாயப்படுத்துகிற மாதிரி தோன்றாதா?"

"பிரபுத்துவம் என்கிற சொல்லே நாட்டார் தெய்வங்களுடன் சேர்க்க முடியாத சொல்தான். இந்தத் தெய்வங்களை வழிபடுகிறவர்கள் யாரும் நிலப்பிரபுக்கள் அல்ல. நிலமானிய முறை உற்பத்தி செய்த சில மதிப்பீடுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டார் தெய்வங்கள் நேரடியாக உற்பத்தித் தளத்துடன் தொடர்புடையவை. மாரியம்மன் மழையோடும், அடுத்தப் பருவப்பயிருடனும் தொடர்புடைய தெய்வம். இதேமாதிரி கிராமத் தெய்வங்கள் இன்பத்தை மட்டுமே கொடுக்கக் கூடிய தெய்வங்கள் அல்ல. இன்பத்திலும், துன்பத்திலும் பங்கெடுக்கிற தெய்வங்கள். நிலமானிய மதிப்பீடுகள் நில உடைமையாளர்களுக்குச் சாதகமாக இருந்ததே தவிர, அதை எல்லோரும் சேர்ந்துதான் உருவாக்கினார்கள். ஆகவே, நிலப்பிரபுத்துவ ஆன்மிகம் வேறு, இந்த எளிய மக்களின் ஆன்மிகம் வேறு."

"இருந்தாலும் இன்றைக்கு நாட்டார் தெய்வங்களுக்கான மரபு, அதற்கான முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறதே? அதற்கான தேவை இப்போதிருக்கிறதா?"

"இருக்கிறது. ஒரே தெய்வக் கோட்பாடு என்பது அரசு உருவாக்கத்திற்குத் தேவையானது. ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பதெல்லாம் மக்கள் விரோதச் சித்தாந்தம் என்றே நான் கருதுகிறேன். இந்துத்துவவாதிகளைக் கேட்டால் 'ஒன்றே குலம்; எல்லோரும் இந்தியர்' என்கிறார்கள். ஆனால், பன்முகத் தன்மையுள்ள கலாச்சாரத்தைப் பேணிக் காப்பவை. இந்த நாட்டார் தெய்வங்கள், இந்தப் பன்முகத் தன்மையை எதிரொலிக்கிற வரையே சமூகம் ஜனநாயத் தன்மையுடன் இயங்கும், ஒரே கடவுளை எப்போது கொண்டு வந்து நிறுத்துகிறீர்களோ, அப்போது பலதரப்பட்ட, தெய்வங்களை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். இன்றைய தேவை எல்லோரும் நூறுநூறு தெய்வங்களைக் கும்பிடுங்கள் என்பதுதான். ஏனென்றால் நூறுவகைப் பட்ட மனிதர்களை, நூறு வகைப்பட்ட நம்பிக்கைகளை, நூறுவகைப்பட்ட வழிபாட்டு முறைகளை நாம் அங்கீகாரம் செய்தாக வேண்டும். அப்படியிருந்தால் தான் நாம் சனநாயக ரீதியாக இயங்குகிறோம் என்று பொருள்.

மறுபுறம் இன்றைக்கு ஆன்மிகத்திலும், அரசியலிலும் மையப்படுத்துகிற வேலை நடக்கிறது. அப்படி நடக்கும் போது பல விஷயங்கள் அடிபடுகின்றன. இப்படி அடிப்பட்டு ஒற்றைக் கலாச்சாரம் ஒன்று உருவாவதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. சுதந்திரப் போராட்டத்தின் இடைப் பகுதியில் ஒற்றைத் தெய்வமாக விநாயகரைக் கொண்டு வந்தபோது அது இந்தியத் தேசியத்திற்கு உதவும் என்று நினைத்தார் திலகர். இன்றைக்கு ராமர் தேவை என்று இன்னும் சிலர் நினைக்கிறார்கள். இந்த இரண்டையும் நாம் ஏற்க முடியாது."

"இந்தத் திணிப்புக்குப் பின்னால் வலுவானபடி அரசியல் இருக்கிறதா?"

"அது வெளிப்படையாகவே தெரிகிறதே. அதிகாரத்தைக் குவித்து வைக்கும் நோக்கிலேயே இதெல்லாம் நடக்கின்றன. குவிக்கப்பட்ட அதிகாரங்கள் எப்போதும் பெருவாரியான மக்களுக்கு எதிராகவே இருக்கும். சமூக விடுதலை, அரசியல் விடுதலை, என்று நாம் சொல்கிற எல்லா விஷயங்களுக்கும் எதிரான போக்கு இது."

"இன்னொருபுறத்தில் கோயிலில் நுழைய அனுமதி இல்லாமல், வழிபாட்டு உரிமை இல்லாமல், சமூகத்தின் பலதளங்களில் ஒதுக்கப்பட்டதால் தானே, ஒருவன் அந்த மதத்தை விட்டே மாறிப்போகும் சூழ்நிலை உருவானது?"

"மதமாற்றத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பிற மதங்களினால் ஈர்க்கப்பட்டு அவர்கள் சென்றார்கள் என்பதை விட, எந்த இடத்தில் இருந்தார்களோ, அந்த இடத்தில் அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டார்கள் என்பது தானே உண்மை. குறிப்பிட்ட கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று அவர்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள். எந்தக் கோயிலுக்குள் போக முடியுமோ அந்தக் கோயிலுக்குள் அவர்கள் போய்விட்டார்கள். அவர்கள் போனார்கள் என்று சொல்வதைவிட, விரட்டப்பட்டார்கள் என்று சொல்வது தானே சரியாக இருக்கும். கிறிஸ்தவம் இங்குள்ள சாதிமுறையை அப்படியே பேணிக் கொண்டது. இஸ்லாம் சாதி முறையை ஒதுக்கியது. இதன் மூலம் சாதியில் மேல், கீழ் என்கிற அழுத்தமான பாகுபாடு சற்று விலகிவிட்டதில்லையா?"

"இந்தச் சூழ்நிலைகளை திராவிட இயக்கங்கள் சரிவர உணர்ந்து செயல்பட்டனவா?"

"இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கங்கள் வந்த பிறகு மேல்சாதியாக்கம் என்பது என்பது தோற்றுப் போய்விட்டது. மதத்தின் தத்துவச் சண்டைகளைத் தனது வருகையின் மூலம் நிறுத்தி வைத்தன இந்த இயக்கங்கள். ஆனால், பெரியார் மற்ற மதத்திற்குள்ளும் சாதி வேறுபாடுகள் பாராட்டுவதைக் கண்டித்தார். குடியரசு இதழில் எழுதினார். இடதுசாரி ஆராய்ச்சியாளர்கள் மிது எனக்குக் கடுமையான கோபமுண்டு. அவர்கள் திராவிட இயக்க எழுத்தை விமர்சித்தார்கள். ஆனால், அதை முழுமையாகப் படிக்கவில்லை. பெரியாரின் எழுத்துக்களைப் படிக்காமலேயே அவரை நிராகரித்தார்கள். இது பெரிய தவறு.

வர்க்கத்துக்கும் சாதிக்குமான உறவை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர் பெரியார். வர்க்கத்தின் மூலவடிவமாகத்தான் சாதியைப் பார்த்து, சாதி ஒழிப்பில் கவனம் செலுத்தினார். இடதுசாரிகள் அப்படிச் செய்தார்களா? கீழ் வெண்மணியில் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டபோது, நிலக் கூலிகள் தொழிலாளர்கள் என்பதால் மட்டும் கொளுத்தப் படவில்லை. சாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலும் கொளுத்தப்பட்டார்கள். பொதுவுடைமை எழுத்துக்களில் இது பதிவாகவில்லை. அவர்கள் வர்க்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்ட அளவுக்குச் சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தத் தவறை இப்பொழுது உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

"இப்படி நீங்கள் சொன்னாலும் இங்கு சாதியக் குரல்கள் தானே வலுவாகக் கேட்கின்றன?

இதுவரைக்கும் குருடர்களும், செவிடர்களுமாக யார் அடக்கி வைக்கப்பட்டிருந்தார்களோ அவர்களுக்கு இப்போது பார்வை கிடைத்திருக்கிறது; காது கேட்கிறது; இதுவரைக்கும் இங்கே அமைதி நிலவுவதாகச் சொல்லப்பட்டதெல்லாம் மயான அமைதி. இதிலிருந்து வெடித்துக் கிளம்பும் குரல்கள் கலகக் குரல்களாகத் தானிருக்கும். ஒடுக்குமுறைக் குள்ளானதை எப்போது உணர்கிறானோ, அப்போது ஒருவன் பெருமூச்சு விடுகிறான்; முணுமுணுக்கிறான்; அதற்கடுத்துக் கலகக் குரல் எழுப்புகிறான்; இப்போது எழுந்திருக்கிற கலகக் குரல்கள் நிரந்தர அமைதியை நோக்கிச் செல்லக்கூடியவை. நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

இன்றைக்கு மறுவாசிப்பு, மறுபார்வை, மீள் சிந்தனை என்கிற சொற்றொடர்களையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கலாம். இது வரைக்கும் எது வரலாறு என்று சொல்லப்பட்டதோ, அதுவல்ல வரலாறு. எது ஆன்மிகம் என்று சொல்லப்பட்டதோ, அதுவல்ல ஆன்மிகம். ஒரு மாற்றுக் கலாச்சாரம், ஒரு மாற்று வரலாறு பதிவு செய்ய இன்றைக்கு எழுத்துலகம் முன் வருகிறது. யாருடைய குரல்கள் பதிவு செய்யாமல் விடப்பட்டதோ, அந்தக் குரல்களைப் பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்கிறது;

"எழுதப்பட்ட வரலாறையெல்லாம் திருத்தி எழுதுவதுதான் நமக்கு முன்னுள்ள முக்கியமான வேலை" என்றார் வரலாற்றாசிரியரான டி.டி. கோஸாம்பி. இதுவரை எழுதப்பட்டதெல்லாம் அரசர்களின் வரலாறு; மேல் சாதியினரின் வரலாறு. இதுவரை பேசப்பட்டதெல்லாம் மேல் சாதியினரின் இலக்கியம்; மேல் சாதியினருக்கான கலைகள்; பெருவாரியான மக்கள் திரளின் வரலாறு, இலக்கியம், கலைகள் எல்லாம் எங்கே போயின? இதைச் சொல்வதுதான் மாற்றுக் கலாச்சாரம். இதைக்கூட ஒரு வசதிக்காக மாற்றுக் கலாச்சாரம் என்று சொல்கிறோமே தவிர இதுதான் உண்மையான கலாச்சாரம் உண்மையான வரலாறு"

"பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அடித்தளத்தில் பொருளாதாரத்தில் ஒரே மாதிரியான நிலை இருந்தாலும், வழிபடுவதில் ஒத்த கருத்து இல்லையே? சண்டை, சச்சரவுகள் அதிலிருந்து தானே கிளம்புகின்றன?

"தெய்வங்கள் பொதுவாகவே இருந்திருக்கின்றன. நாட்டார் தெய்வங்களில் வேறுபாடில்லை. தெய்வ வழிபாட்டில், அதற்கான சமூக உறவுகளில் மட்டுமே சிக்கல்.

ஒன்று செய்தால் போதும், இந்தியாவில் பல பிரசினைகள் தீர்ந்துவிடும். மதம் மாற அனுமதித்த மாதிரி, சாதி மாற ஏன் இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை? சாதி காரணமான மேல், கீழ் என்கிற அடுக்கு முறையை ஏன் அது பேணிப் பாதுகாக்கிறது? இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வரலாம். ஆனால் பெருந் தெய்வக் கோயிலுக்குள் இருக்கிற கருவறைக்குள் இருக்கிற பத்தடி வெளிக்குள் மட்டும் அவருக்கு அனுமதி கிடையாது. ஏன் அந்த உரிமையை ஒரு குறிப்பிட்ட சாதிக்கானதாக வைத்திருக்கிறது அரசியல் சட்டம்? இதை எடுப்பதில் என்ன சிரமம்? என்னதான் வேதம் படித்தாலும், பிறப்பு காரணமாக அந்த வெளி மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது." முதலில் சாதிய மறுப்பைக் கோயில் கருவறைகளிலிருந்து துவங்குங்கள். பிறப்பு வழிப்பட்ட மேலாண்மையை கோயில்களின் மூலமாகத் தக்க வைத்துக் கொள்கிற வரைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும், அதன்மூலம் அரசியல் அதிகாரத்தையும் உயர்சாதி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. எனவே அதற்குக் கவலையில்லை.

நாம் என்ன சொல்ல வருகிறோம் என்றால், மேல், கீழ் என்கிற அடுக்குமுறையை நியாயப்படுத்துகிற எல்லாமே பிராமணியம் தான். அது ஒரு ஒடுக்குமுறைக் கருத்தியல் அது பிராமணர்கள் இல்லாத இடத்திலும் இருக்கிறது. எப்போது பிற்படுத்தப்பட்ட ஒருவர், தாழ்த்தப்பட்டவரைச் சாதியின் பெயரால் ஒடுக்குகிறாரோ, அந்த ஒடுக்குமுறை உறவுக்குப் பெயர் பிராமணியம் என்று நாம் சொல்கிறோம். ஏனென்றால் இதைக் கற்றுக் கொடுத்தது அவர்கள்தான். முதலாளித்துவம் என்று இதையே மார்க்சிஸ்ட்கள் சொன்னார்கள். இதை பிராமணியம் என்று சொன்னார் பெரியார். அது தான் வித்தியாசம்.

சாதிமுறையை அரசியல் சட்டம் பேணுகிறது என்று பெரியார் சொன்னதில் என்ன தவறு? பிறப்பு வழிப்பட்ட சாதிக் கொடுமைகளை அரசியல் சட்டம் நன்றாக உணர்ந்திருக்கிறது. அதே சமயம் கோவில் கருவறை என்று வருகிற போது அதை சாதிய அடுக்கை அது பாதுகாக்கிறது. 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்று சொன்னால் அதைக் கவனமாக நிராகரிக்கிறது. இதைச் சொன்னால் நம்மில் பலருக்குச் உறுத்தலாகத் தெரியலாம். ஆனால் இதுவே நடைமுறை உண்மை."

"இந்த உணர்வைப் பெருவாரியான மக்களிடம் எடுத்துக் கொண்டு போவதற்கான அமைப்புகள் இன்றைக்கிருக்கிறதா?"

"சில அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் பெரியார் பெயரைச் சொல்கிறவர்களிடம் அந்த அமைப்புகள் நிச்சயமாக இல்லை. அம்மாதரி சிந்தனையும், செயல்பாடும் இருக்கவே செய்கின்றன. திராவிட இயக்கங்கள் நீர்த்துப் போய்விட்டன. இதற்குக் காரணம் வாக்குவங்கி அரசியல், இருந்தாலும் அவர்களது செயல்பாட்டையும், தேவையையும் நிராகரித்துவிட முடியாது."

"பண்பாட்டுச் சிதைவுகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறீர்கள். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்கிற உரத்த கோஷங்களின் பின்னணியில் நிறைய மாற்றங்கள் இப்போது நடக்கும்போது எதைத் தமிழ்ப்பாண்பாடு என்று சொல்ல முடியும்.

"பெருவாரியான மக்கள் இன்னும் பண்பாட்டுடனே வாழ்கிறார்கள். மூச்சுவிடுகிறோம் என்கிற தன்னுணர்ச்சியுடன் நாம் மூச்சு விடுவதில்லை. அது மாதிரி இயல்பாகவே ஒரு பண்பாட்டுப் பின்னணியுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. பண்பாடு என்பது மூளையில் உறை நிலையில் இருக்கிறது. சில நேரங்களில் அது நிலத்தடி. நீர் போல இருக்கிறது சமூகம், பண்பாட்டை, ஒரு தேவையை நீங்கள் உணரும் போதே, உணர முடியும். பண்பாடு மீறப்படும் போது அதை உங்களால் உணர முடியும். பண்பாட்டைப் புரிந்து கொள்வது ஆராய்ச்சியாளர்களின் வேலை. ஆனால் மக்கள் அதனுடனேயே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பண்பாடு என்பது பொருள் உற்பத்தியுடன் தொடர்புடையது. அந்தப் பொருள் என்பது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்றைக்கு பன்னாட்டு மூலதனம் என்கிற பெயரில் நம் பண்பாட்டின் நுட்பமான வேர்கள் அழிக்கப் படுகின்றன. நுகர்வுக் கலாச்சாரம் மூலம். அது பொருள் ஆக்கத்திற்கு எதிரான கலாச்சாரம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக் குழந்தைகள் பனை ஓலைகளில் காற்றாடி செய்வார்கள். பூவரச இலையை வைத்து ஊதல் செய்வார்கள். சிறு பொருளையேனும் தானே ஆக்கிக் கொள்கிற அந்தக் கலாச்சாரம் இப்போது அடிபட்டுப் போய் விட்டது. இப்போது எந்தக் குழந்தையும் தானே ஆக்கிக் கொள்வதில்லை. எல்லாம் கடைகளில் வாங்கிக் கொள்வதில்லை. எல்லாம் கடைகளில் வாங்கிக் கொடுக்கப்பட்டு, ஆக்கம் என்கிற சுயமான உற்பத்தி உணர்வு அடிபட்டுப் போய் விடுகிறது. இதைத்தான் அறுந்து போன நுட்பமான வேர் என்று சொன்னேன். இப்படி நுகர்வுக் கலாச்சாரத்தின் பின்னணியில் நாம் இழந்தவை பல.

மண்பானை செய்பவனுக்குப் படிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தரமான மண்பானையை வடிவமைக்கத் தெரியும். தொழில் நுட்பம் தெரியும். நுர்வுக் கலாசாரம் வந்து இன்றைக்கு ஒரே சீரான பிளாஸ்டிக் குடங்கள். மண்பானைத் தொழில் நுட்பம் பின்னுக்குப் போய்விட்டது. உலகமயமாக்கல் என்பதற்குப் பின்னால் நமது பண்பாடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தஞ்சை, மதுரை, நெல்லையில் முன்பு விதவிதமான பித்தளை பாத்திரங்கள் இருக்கும். இப்போது அந்தப் பன்முகத் தன்மை அழிந்து போய்விட்டது. இதற்கு முக்கியக் காரணம் பன்னாட்டு மூலதனமும், அதற்கு எடுபிடிகளாக இருக்கக் கூடிய நம்முடைய தகவல் தொடர்பு ஊடகங்களும், இவை கொடூரமான வன்முறையை நமது பண்பாட்டின் மீது நிகழ்த்துகின்றன. அரசியல் ஒடுக்கு முறையிலிருந்து கூட விடுபட்டு விடலாம். இந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவது கஷ்டம்".

"இயந்திரகதியிலான நுகர்வுக்கலாச்சார வேகத்திற்கிடையில் நமது தனித்த பண்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வது சாத்தியம் தானா?

"நாம் இன்னும் அந்த அளவுக்குப் பண்பாடு அற்றவர்களாக மாறிப் போய்விடவில்லை. இன்னும் பேருந்தில் கர்ப்பிணிப் பெண் வந்தால் எழுந்து இடம் கொடுக்கிறார்கள். இன்னும் நாம் விலக்கப்பட்ட உறவுமுறையில் திருமணம் செய்யப் போகவில்லை. குழந்தைகளின் மீதான வன்முறையை நாம் இன்னும் நியாயப்படுத்தவில்லை. இன்னும் இறந்து போன மனித உடலுக்குச் செய்கிற மரியாதை போன்ற பழக்கங்கள் தொடர்கின்றன. பண்பாட்டின் நுட்பமான வேர்கள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், முழுக்க அறுபட்டுப் போய் விடவில்லை."

"பண்பாட்டுச் சிதைவுக்கு எதிரான குரல் இன்றைக்குள்ள சூழ்நிலையில் எந்த அளவுக்கு எடுபடும்?

"படித்து உணர்ந்தவர்கள் தான் இதை மக்களிடம் கொண்டு போக வேண்டும். இந்நிலையில் வலுவான கருவிகளான ஊடகங்கள் எல்லாம் மக்களுக்கு விரோதமாக இருக்கின்றன. இதில் வெற்றி பெறுகிறோமா, தோல்வி பெறுகிறோமா என்பதல்ல விஷயம். இதையும் மீறி நாம் தொடர்ந்து இயங்க வேண்டும். ஒரு கட்டத்தில் வணிக நலன்களுக்கு எதிராக மக்கள் வருவார்கள். பிலிப்பைன்ஸ’ல், அர்ஜென்டைனாவில் கிளர்ந்தெழுந்ததைப் போல இங்கும் வருவார்கள். நான்காண்டுகளோ, பத்தாண்டுகளோ கட்டாயம் இப்படியொரு குரல் எழும்பும். எல்லாவற்றையுமே இழக்க யார் சம்மதிப்பார்கள்.?"

"இருந்தும், நுகர்வுக் கலாச்சாரமும் பண்பாட்டுச் சிதைவும் ஒழுங்கமைக்கப்பட்ட அளவுக்கு, அதற்கான எதிர்ப்பு ஒழுங்கமைக்கப் படவில்லையே?"

"ஒழுங்கமைவு என்பதே அதிகாரக் கட்டமைப்பு சார்ந்த சொல். மக்கள் சம்பந்தப்பட்ட எதுவும் தோராயமாக இருக்கலாம். ஆனால் துல்லியமாக இருக்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் அதனதன் தன்மைக்கேற்பவே எதிர்ப்புக் குரல் வெளிப்படும். இயற்கை வளங்கள் சார்ந்த குரல் இப்போது இங்கு கேட்கிறது. பாலித்தீன் பைகளை, பிளாஸ்டிக் குவளைகளை எதிர்த்து அரசே பேச வேண்டிய தேவையிருக்கிறது. இயற்கைச் சாயத்திற்கான ஆதரவு இருக்கிறது. இப்போது அறிமுகப்படுத்தப்படுகிற எதுவும் நிரந்தரமானதில்லை என்பதையே இது வலியுறுத்துகிறது. பண்பாடு என்பது கற்றுக்கொண்டிருக்கிற போதே, அடுத்த தலைமுறைக்குக் கை மாற்றுகிற விஷயம். அப்பாவிடமிருந்து பிள்ளைக்கு வருவது மட்டுமில்லாமல், தாத்தாவிடமிருந்தும் பேரன், பேத்திக்கு வருவதுதான் பண்பாடு. அப்படிக் கை மாற்றுக் கொடுக்கிற போது நீண்டகால பயனுடையதாக இருக்க வேண்டும் என்கிற உணர்வும் மெதுவாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஓர் ஆண்டுக் காலம் மட்டும் உயிரோடு இருக்கிற முருங்கை மரத்தை அருப்புக்கோட்டை பகுதிகளில் அறிமுகப்படுத்திப் பார்த்தார்கள். மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கூடுதலான விளைச்சலை எதிர்பார்த்து விவசாய நிலத்தைக் கெடுத்துவிட்டோம் என்கிற குற்ற உணர்வு விவசாயிகளிடம் இருப்பதும் பலமான அம்சம். படித்தவர்கள், குறிப்பாக தன்னுடைய பலனைப் பேணுவதில் மட்டுமே அக்கறை காட்டக்கூடிய மாதச்சம்பளக் காரர்கள் மீதும், அதிகாரிகள், மீதும் அவர்கள் நம்பிக்கையிழக்க ஆரம்பித்து விட்டார்கள். இது எங்கே போய் முடியும்?"

"இந்தக் கருத்துக்கள் மக்களிடம் எந்தவிதமான சலனத்தை ஏற்படுத்த முடியும்?"

"இப்போதுதான் சலனங்கள் துவங்கியிருக்கின்றன. இது காலப்போக்கில் பெருகும். குறையாது. மரபுவழிப்பட்ட எல்லா நிறுவனங்கள் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்து கொண்டிருக்கிறார்கள். எந்த அரசியல்வாதியையும் நம்பத் தயாராக இல்லை. எனவே பிரச்சினைகள் கடுமையாகி அவர்களது கழுத்தை நெருக்குகிற நிலை உருவாக்குகிறபோது மக்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்று சொல்ல முடியாது. பன்னாட்டு நிறுவனங்கள் எந்த அளவுக்கு நெருக்கடி கொடுக்கின்றனவோ அந்த அளவுக்கு எதிர்வினையும் இருக்கும்.

"எதிலுமே நம்பிக்கையிழக்கிற மனநிலைக்கு மக்களைத் தள்ளுவது இன்னொரு அபாயத்தை விளைவித்து விடுமில்லையா?"

"நம்பிக்கையின்மையின் காரணமாக சில விதங்களில் சமூக மாற்றங்கள் நிகழும். முதலாவது வன்முறைகள், அதிலும் வக்கிரமான வன்முறைகள், இரண்டாவது குடும்ப அமைப்புகளில் அதிர்வுகள் இருந்தாலும் சாதி அமைப்பு சிதையவில்லை. ஏனென்றால் இன்னமும் அரசாங்கமும், காவல் துறையும் தராத பாதுகாப்பை கிராமப்புறத்திலிருப்பவர்களுக்குத் தருகிறது சாதி. பொருளாதாரப் பாதுகாப்பைத் தராவிட்டாலும், உணர்வுரீதியான பாதுகாப்பை அது தருகிறது. இன்னும் கூடுதல் பாதுகாப்பை அது தருகிறது. இன்னும் கூடுதல் பாதுகாப்பைப் பெற அரசியல் அதிகாரத்தைத் தேடுகிறது. எல்லாவற்றிற்கும் காரணம் பாதுகாப்புணர்வு, நகர்ப்புறங்களில் இந்தப் பாதுகாப்பு உணர்வைத் தொழிற்சங்கம் கொடுக்கிறது. சாதி ஒழிப்பு என்பது சாத்தியமில்லை. சாதிக்கரைப்பு தான் சாத்தியம். கலப்பு மணம் இதற்குத் தீர்வு என்றும் நான் நம்பவில்லை.

ஹோலிப் பண்டிகைகளுக்கு இன்றைக்கு இங்கும் வரவேற்பிருக்கிறது. தேசியம் பரவலாகி வருவதன் அடையாளமாக இதைச் சொல்கிறார்கள். கூடவே காதலர் தினம், அன்னையர் தினம் கொண்டாடுவதெல்லாம் எதனுடைய அடையாளம்?"

"பல்வேறு பகுதிகளின் மொத்தக் கலாச்சாரத்தையே நாம் இந்தியக் கலாச்சாரம் என்று சொல்கிறோம். திருவிழா என்பது ஒரு சமூகம் இளைப்பாறிக் கொள்கிற நிகழ்ச்சி. அதன்மூலம் அது புத்துயிர் பெறும். வெயிலில் நடப்பவன் நிழலில் ஓய்வெடுக்கிற மாதிரி, ஆனால் இளைப்பாறுவதையே முழு நேரத் தொழிலாக நமது ஊடகங்கள் ஆக்கிவிட்டன. ஒவ்வொரு திருவிழாவும் அந்த மக்களின் உற்பத்தி சார்ந்த வெளிப்பாடு. அறுவடை முடிந்து கோடை காலத்தில் நமது திருவிழாக்கள் வரும். இப்போது நுகர்வுக் கலாச்சாரத்திற்குத் தீனி போடக்கூடிய விஷயமாகி விட்டன புதுப்புதுத்திருவிழாக்கள். சுயமான அறிவு உற்பத்தியும், சுயமான பொருள் உற்பத்தியும் இருக்கிற இடத்தில்தான் அதற்கென்று தனிக் கலாச்சாரமும் இருக்கும். அதை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். திராவிட இயக்கங்கள் எழுச்சி பெறுகிற காலத்தில் பொங்கலைத் தமிழர்களின் திருநாளாக அடையாளங் காட்டினார்கள். இன்றைக்கு ஹோலிப் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதே இயக்கத் தலைவர்கள்.

பொது நலம் பேசுகிறவர்கள் தன்னுடைய கோப உணர்ச்சியைக் கைவிட்டுவிடக் கூடாது. அதுபோல மான, அவமானம் பார்க்கக் கூடாது. அப்படி எந்த எதிர்ப்பையும் மீறிச் செயல்பட்டவர் பெரியார். அவரிடம் இருந்த பொதுநலம் சார்ந்த கோபம்தான் இன்றையத் தேவை.

நன்றி  கூடல் - 13 August, 2004

கருத்துகள் இல்லை: