12/02/2011

தொல்காப்பியர் காலப் போர்முறையும் நிகழ்காலப் போர்முறையும் - கா. கேசவன்

தொல்காப்பியர் கூறப்பட்ட போர்முறைகளையும், போர்க்காரணம், வெற்றி என்று தொல்காப்பியர் கூறியவற்றை இக்காலப்போர் முறைகளோடு ஒப்பிட்டுக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புறத்திணை

தொல்காப்பியரின் புறத்திணையானது முழுக்க, முழுக்க போர், போர்க்காரணம், போர்முறை, அரசரைப் போற்றுதல், போர்வெற்றி எனப்போர் சார்ந்தே அமைகிறது எனலாம். இறுதியில் மட்டுமே நிலையாமைக் கருத்தை உணர்த்தும் காஞ்சி திணையையும், ஆண்மகன் வீரம் உணர்த்தும் பாடாண் திணையையும் உள்ளடக்கியது எனலாம்.

புறத்திணையானது வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என்று திணைப்பிரிவுகள் ஏழாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இவற்றில் கூறப்பட்டிருக்கும் கருத்து என்பது போர்சார்ந்து, போரைப் பற்றியனவாகவே அமைந்திருக்கும் எனலாம்.

போர்

போர் என்பது உலக உயிரினங்களின் வாழ்க்கையில் அங்கமாகிவிட்ட ஒன்றாகும். உயிரினங்களிடையே இடையீடின்றி இருந்து வரும் இல்வாழ்க்கைப் போராட்டமே போருக்கான அடிப்படை காரணமாகும். போர்க்குணம் என்பது மக்களின் மனத்தில் இயல்பாகிவிட்ட ஒன்றாகும். வலிமைக்கேற்பவும், இடத்திற்கேற்பவும், காணப்படும் ஓயாத போராட்ட நிலையே போர் எனலாம். மனித வாழ்க்கையில் நடைபெறும் இப்போரின் நோக்கமே தன்னையும், தன்னைச் சார்ந்தவரையும் காத்தலாகும்.

போரினால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும்போது அன்பும், அமைதியும், அரணும், ஆக்கமும், உயிரும், உடைமையும், இருதரப்பிலும் அழிவதைக் காணலாம். இதனை அழிவு என்பதுபோய் நிகழ்காலத்தில் பேரழிவாக அமைகின்றது. பண்டைக்காலம் முதல் இன்றுவரை மனித இனத்தின் முக்கிய பிரச்சனையாக அமைவதைக் காணலாம்.

போர்க்காரணம்

தொல்காப்பியர் காலத்தில் நடைபெற்ற போரானது பகை நாட்டவர் ஊரின் எல்லையிலுள்ள பசுக்கூட்டத்தைக் கவர்தலும் அதனை மீட்க போராடுதலும் பின் அதுவே போராக மாறுதல் ஆயிற்று எனலாம். இப்பசுக்கூட்டத்தைக் கவர்தலை தொல்காப்பியர்,

''வேந்துவிடுமுனைஞர் வேற்றுப்புலக்களவின்

ஆதந்து ஓம்பல் மேவற்றாகும்'' (1003)

என்று சுட்டுகிறார்.

தமிழறிஞர் ஞா. தேவநேயன் போர்களானவை ஆசை, பாதுகாப்பு, பகை, தண்டனை, மறம், அருள் என்ற ஆறுவகை காரணங்களால் பிறக்கும் என்கிறார்.

சமீபத்திய அமெரிக்கா, ஈராக் போர்கூட அணு ஆயுதம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பாதுகாப்பு காரணத்துக்காக, தோன்றி எண்ணெய் வளம் கைப்பற்றப்பட வேண்டும் என்ற மறைமுக ஆசை சுட்டிக்காட்டபட்டு இறுதியில் சதாம் உசேன் என்ற தனிமனிதனுக்குத் தண்டனை தரப்படவேண்டும் என்று முடிவு காணப்படாமல் இருப்பதைக் காணலாம்.

மறைமுகக் காரணம்

தன்னை ஏற்காதவரை வெற்றி பெறவேண்டும், நினைத்ததை முடிக்கும் அரசன் சிறப்பு, பழைமை கோட்டையைக் கவரும் விருப்பம், படைப்பெருக்கம், அரணுள் இருக்கும் செல்வம் என்பதுள்ளிட்ட பல்வேறு காரணங்கள் எண்ணங்கள் அரசனுக்குத் தோன்றும் போது அங்கு போர் ஏற்படலாம் என்பதனைத் தொல்காப்பியர்,

கொள்ளால் தேஎம் குறித்த கொற்றமும்

உள்ளியத முடிக்கும் வேந்தனது சிறப்பும்

தொல் எயிற்று இவரீதலும், தோலது பெருக்கமும்,

அகத்தோன் செல்வமும் (10140)

என்ற உழிஞை அடிகளால் சுட்டுகிறார். மண்ணாசையும், நாட்டுக்காப்பு பற்றிய எண்ணமும், படையெடுப்பு உள்ளிட்ட எல்லைத்தகராறும், ஆட்சி பரப்பு பற்றிய கருத்து வேறுபாடும், ஆட்சி உரிமை, அரசியல் ஆதிக்கம் போன்ற மறைமுகக் காரணங்களால் நிகழ்காலத்து போர் தோன்றுகிறது என்று கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தோன்றிய போரையும், வியட்நாமில் அரசியல் ஆதிக்கம் பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் நடைபெற்ற அமெரிக்காவில் நடத்தப்பட்ட போரையும் சுட்டிக்காட்டலாம்.

ஒற்று (அ) உளவு

படையெடுத்து செல்லலிலும் முன் அப்படையெடுப்பு எப்படி நடத்தப்பட்டால் வெற்றி பெறமுடியும், எதிரியின் பலம் என்ன பலவீனம் என்ன என்பது குறித்து நடத்தப்படுவதே ஒற்று என்று சுட்டப்படுகிறது இது

.........பாகீகத்து விரிச்சி

புடைகெடப் போகிய செலவே, புடைகெட

ஒற்றின் ஆகியவையே, வேய்ப்புளும்

முற்றின் ஆகிய புறத்திரை (1004-3)

என்ற வெட்சித்திணை நூற்பாவில் சுட்டிக்காட்டுகிறார். அமெரிக்காவின் சிஐஏ என்ற உளவுப்படையும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இந்தியாவின் ரா உளவுப்படை அமைப்பு என்பவை வெளியுலகத்திற்கு அடிக்கடி தெரிந்திருப்பது போலவே ஒவ்வொரு நாடும் தனக்கென ஓர் உளவுப்படை அமைப்பைக் கொண்டு போர் புரிதலைச் செய்வதைக் காணலாம்.

படைவகை

தொல்காப்பியர் காலப் போர்களின் போது பகைவருடன் போரிடும் போதும், அவர்களை அஞ்சச் செய்யவும் காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை என்று மூவகைப்படை கொண்டு வீரன் தலைமையிலோ, அரசன் தலைமையிலோ போரிட்டு வெற்றி பெற்றனர் என்பது தும்பத்திணையின்

தானை, யானை, குதிரை, என்ற

நோனார் உட்கும் மூவகை நிலையும் (1018-17)

என்ற நூற்பாவில் சுட்டுகிறார்.

அறிவியல் வளர்ச்சியாலும், விஞ்ஞான வளர்ச்சியாலும் தற்காலத்தில் தரைப்படை, கப்பற்படை, (காலாட்படை, பீரங்கிப்படை உள்ளடக்கம்) விமானப்படை என்று மூவகையாக படைகள் பிரிக்கப்பட்டுப் போர் நடத்தப்படுகிறது.

எதிர்காலத்தில் வான்வெளியில் மட்டுமே ஏவுகணை, செயற்கைக்கோள் மூலம் போர் நடைபெற்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

போர்செயல்

போரில் ஈடுபடும் வீரமறவர்கள் எக்காரணம் கொண்டும் புறமுதுகிட்டு ஓடாத தன்மை கொண்டவர்கள் என்பது ''உளப்பட ஓடா உடல்வேந்தடுக்கிய உன்னநிலையும்'' என்ற நூற்பா அடிகளால் சுட்டுகிறார். போருக்குச் செல்லுகின்ற படை எழுப்புகின்ற பேரொலி மிகுந்த ஒலியாக எழுப்பப்படும் என்பதை இயங்குபடை அரவம் என்று சுட்டப்படுவதையும் பகைவரோடு போர்புரியும் போது போரில் வெற்றி பெறுவதோடு இறுதியில் அந்நாட்டிற்குப் பேரழிவினைத் தோற்றுவிப்பதையும் தொல்காப்பியர் எரிபரந்தெடுத்தல் என்று வார்த்தையால் சுட்டுவது அக்காலத்திற்கு மட்டுமல்லாது இக்காலத்திற்கும் பொருந்துவதைக் காணலாம். இதற்கு முந்தைய (1991) அமெரிக்க ஈராக் போரில் காணலாம்.

போர் வெற்றி

போரில் பகைவரை வென்றதைத் தொல்காப்பியரானவர், தனது வெட்சித்திணையிலும் (மகிழ்ச்சியில் உண்டுகளித்தல், தானமாகக் கொடுத்தல்) பகைவரின் மதிலைக் கைப்பற்றிக் கொண்டாடும் விழாவும், வாளினை நீராடும் விழாவினை உழிஞைத் திணையிலும் இகன்மதில் (குடுமி கொண்ட மண்ணு மங்கலமும், வென்றவாளின்) வாகைத்திணை முழுக்க முழுக்கப் போர் வெற்றியை பற்றியே கூறுவதையும் அதனைக் கொண்டாடும் விதமாக வெற்றிக்களிப்பில் ஆடிப்பாடி மகிழ்தலும் பற்றி கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

இப்போது போர் வெற்றியானது படைவீரர்களால் மட்டுமல்லாமல் நாட்டுமக்களாலும் கொண்டாடப்படுகிறது (கார்கில் வெற்றி) அது அரசியல் மாற்றத்தையும் உண்டாக்குகிறது (மத்திய அரசு வெற்றி) போர் வெற்றி இனிப்பு வழங்கியும், சலுகைகள் வழங்கியும் கொண்டாடப்படுவதைக் காணலாம்.

தொகுப்புரை

தொல்காப்பியரால் சுட்டிக்காட்டப்பட்டப் போருக்கான இலக்கணங்கள், வரைமுறைகள், செயல்கள், வெற்றிகள் என்ற பல செயல்கள் அறிவியல், விஞ்ஞானம் மற்றும் நாகரிகம் போன்றவற்றின் வளர்ச்சியாலும், மாற்றத்தாலும் அப்போர் முறைகள் மாற்றங்கள் சிலவற்றைப் பெற்று இன்றும் நடைமுறையில் இருப்பதை இக்கட்டுரை உணர்த்துகின்றது.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

 

கருத்துகள் இல்லை: