12/02/2011

தொல்காப்பியப் புறத்திணையியலும் தொல்சமூகமும் - இரா.முருகன்

நிரைகவர்தல்

குழுவாகக் கூடி வாழ்ந்த ஆதிமனிதனுக்கு வேட்டையே முதன்மையான தொழிலாக விளங்கியது. வேட்டையின் மூலம் பெறப்பட்ட ஒருசில விலங்குகளைப் பழக்கி வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டான். வேலையோடு அதிக பலனையும் தரக்கூடிய விலங்குகளில் பசுவே முதன்மை வகித்தது. இதனால் தொல் சமூக மக்கள் பசுக்கூட்டங்களைச் செல்வமாகக் கருதினர். இனக்குழுக்களுக்கு இடையேயான போரில் செல்வமாகக் கருதப்பட்ட பசுக்கூட்டங்கள் கவர்ந்து வரப்பட்டன. தொதவர், கோத்தர்களின் செல்வம் இவர்களுக்கு உடமையான எருமை மந்தைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. (பிலோ இருதயநாத், கொங்குமலை வாசிகள் -ப.65) என்னும் கூற்று ஆநிரையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்கிறது. ஆதிகால மக்களைப் போலவே நாகரிகமடைந்த மக்களும் பசுக்களைச் செல்வமாக நினைத்தனர். இதன் விளைவாகவே போரின்போது நாட்டை விட்டு விலக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் வரிசையிலும் பசுக்கூட்டமே முதலிடம் வகிக்கிறது.

இதனை, "ஆவு மானியற் பார்ப்பன மக்களும்" எனும் புறநானூற்று அடி புலப்படுத்துகிறது. பெருஞ்செல்வமாகிய பசுக்களைக்கவர்ந்து செல்வதற்குப்பயந்தே இம்முன்னேற்பாடுகள் நிகழ்ந்திருக்க வேண்டும்.

நிரைகவர்ந்து வருதலை

ஊர்கொலை, ஆடுகோள், பூசல் மாற்றே

நோயின்று உய்த்தல், நுவலுவழித் தோற்றம் (1004)

எனும் தொல்காப்பிய அடிகள் உறுதிப்படுத்துகின்றன. தொல் சமூகத்தில் நிலவிய நிரை கவர்தலின் எச்சமாகவே இதனைக் கருதலாம். ஆதி பொதுவுடைமைச் சமூக அமைப்பில் கவர்ந்து வரப்பட்ட பசுக்கள் வெற்றி பெற்ற குழுவுக்குச் சொந்தமாயின. புலத்திலிருந்து வந்த பொருட்களை (ஆநிரை உட்பட)இனக்குழுத் தலைவனே மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பான். இதனை மானிடவியலார் மறுபங்கீடு என்னும் சொல்லால் குறிப்பர். இனக்குழுச் சமூகத்தில் நிலவிய மறுபங்கீடு செய்தலின் எச்சத்தைத் தொல்காப்பியர் பாதீடு எனும் சொல்லால் குறிக்கிறார். இதனை தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடைஎன எனும் தொல்காப்பிய நூற்பாவழி வெளிப்படுத்தி நிற்கிறது. தொதவர் போட்டிய இருளர் போன்ற பழங்குடிகள் காலத்தடைகளை முக்கிய செல்வமாகக் கருதி மதிக்கின்றனர்.

தொல் சமூக மக்கள் வேட்டையின் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், விலங்குகளை இலாவகமாக வேட்டையாடவும் வேட்டைக்கான ஒத்திகை நிகழ்வை மேற்கொண்டனர். இந்நிகழ்வு பிற்காலக்கலை இலக்கியங்களுக்கு அடிப்படையாய் அமைந்தது எனலாம். போரின் போதும், போருக்குப் பின்னரும் ஆரவார ஒலி எழுப்புவது இனக்குழுச் சமூகத்தின் எச்சநிலையே காட்டுகிறது. வெட்சித்திணையின் படை இயங்கு அரவம். வஞ்சித்திணை பேசும் இயங்கு படை அரவம் போன்ற தொல்காப்பியச் சொல்லாடல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன.

மந்திரச் சடங்குகள்

இயற்கை சக்தி ஆதிமனிதனுக்குப் பயத்தை உண்டுபண்ணியதும் கால வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றத்தினால் தொல் சமூக மக்கள் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினர். இதன் விளைவாகத் தோற்றம் பெற்றதே மந்திரச் சடங்குகள் மானிடவியலாரின் நோக்கின்படி இயற்கையின் இயக்க விதிகளைப் புரிந்து கொள்ள இயலாத ஆதி மனிதன். இயற்கையைக் கட்டுப்படுத்தவும் அதனிடமிருந்து சில பயன்களைப் பெற்றுக் கொள்ளவும் உருவாக்கிய ஒன்றே மந்திரம் ஆகும். (ஆ.சி.வ.சுப்பிரமணியன், நாட்டார் வழக்காற்றியல், தொகுதி-1, ப.1) என்று மந்திரச் சடங்குகளின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுகிறார். இயற்கை அச்சம், கனவு, ஆவி வழிபாடு போன்றவற்றின் காரணமாகவே மந்திரச் சடங்குகள் உருவாக்கப்பெற்றிருக்க வேண்டும். இந்த மந்திரங்களை,

1.ஒத்த மந்திரம்

2.தொத்து மந்திரம்

எனப் பிரேசர் இரண்டாகப் பகுத்ததை (பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், ப.539) குறிக்கிறார்.

ஆதி சமூக அமைப்பில் நிலவிய மந்திரச் சடங்கின் எச்சமாகவே தொல்காப்பியர் சுட்டும் மண்ணும்மங்கலம் எனும் துறையைக் குறிக்கும். வெற்றிபெற்ற வாளை நீராட்டுதலை இந்நீர் விழாவின் நோக்கமாகும். நீர் என்பது வளமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. போரில் பயன்படுத்திய வாளை நீராட்டுவதால் நீரின் வளமைத்தன்மை வாளுக்கும் உரியதாகிய அதன் காரணமாகப் பல்வேறு வெற்றிகளைப் பெறமுடியும் என நம்பினர். இதனை ஒத்த மந்திரச்சடங்கில் அடக்கலாம். போரின்போது அடிகொட்டுதல், முரசறைதல் போன்றவற்றைத் தொத்துமந்திரச் சடங்காகக் கருதலாம். ஈன்ற பசுவின் பாலைக் குளம், கிணறு போன்ற நீர் நிலைகளில் ஊற்றுவதால் நீரைப் போலவே பாலும் அதிக அளவில் சுரக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையேயாகும். இனக்குழுச் சமூகத்தில நிலவிய மந்திரச்சடங்கில் தான் இன்றைய மக்களின் வாழ்வியலும் இடம்பெற்றிருப்பதை இதன் வழி அறிய முடிகிறது.

தரநிலைச் சமூக அமைப்பு

ஆதி சமூக அமைப்பில் இனக்குழுத் தலைவன் மக்களொடு மக்களாகவே ஒன்றி வாழ்ந்தான். இனக்குழுச் சமூகத்தை அடுத்துத் தோற்றம் பெற்ற தரநிலைச் சமூக அமைப்பில் மக்களுக்காக மன்னன் எனும் நிலை மாறி மன்னனுக்காக மக்கள் என்ற நிலை உருப்பெற்றது. இதன் காரணமாக மன்னனுக்கும் மக்களுக்கும் இடையே நீண்ட இடைவெளி உருவானது. இச்சமூக அமைப்பில் மக்களைவிட மன்னன் உயர்வாகக் கருதப்பட்டன. மன்னனுக்கெனத் தனித்த சில தகுதிகள் வகுக்கப்பட்டன. மக்களைக் விடுத்துத் தனியான அரண்மனை, பாதுகாவலர், ஏவலாளர்கள் போன்ற வசதிகளைச் செய்து கொண்டனர். இதோடு மட்டுமல்லாமல் வெண்கொற்றக்குடைவாள், தேர், அரசுக்கட்டில் போன்றவை தனித்த சமூகத் தகுதிகள் மக்களைச் சமூக அமைப்பில் உயர் நிலைக்கு கொண்டு செலுத்தின.

"குடையும் வாளும் நாள்கோள் மற்றும் கட்டில் நீத்த பாலினானும்" போன்ற நூற்பா வரிகள் ஆதி சமூகத்தில் நிலவிய தரநிலைச் சமூக அமைப்பின் எச்சத்தைப் புலப்படுத்துகின்றன.

முடிவுரை

மேற்கண்டவற்றிலிருந்து பின்வரும் முடிவுகளைப் பெறமுடிகிறது. 1. மறுபங்கீடு செய்தல் போன்ற நிகழ்வுகள் ஆதிசமூக இனக்குழுக்காலச் செயல்பாட்டின் எச்சமாக விளங்குகின்றன. 2. இனக்குழுச் சமூக அமைப்பும் அதனை அடுத்துத் தோற்றம் பெற்ற தரநிலைச் சமூக அமைப்பின் எச்சமும் தொல்காப்பியத்தில் பதிவு செய்யப்பெற்றுள்ளமையை அறிய முடிகிறது.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

 

கருத்துகள் இல்லை: