03/02/2011

பெய்யெனப் பெய்யும் மழையில் பெண் - சாந்தி பாஸ்கரன்

பெண்மை:-

''பெண்மை'' என்ற சொல்லுக்கு அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம், அழகு, ஒப்புரவு, தொண்டு எனப் பல பொருள் கூறுகிறார் திரு.வி.க. அவர்கள்.

பெண்மை என்றால் கட்புலனாயதோர் அமைதித் தன்மை என்பர் பண்டை உரையாசிரியர்.

''பெண்ணிற் பெருந்தக்க யாவுள'' என்று பெண்மைக்குச் சிறப்பும் பெருமையும் தந்தார் வள்ளுவர்.

''பெண்மை வாழ்கவென்று கூத்திடு வோமடா

பெண்மை வெல்கவென்று கூத்திடு வோமடா''

என்று பெண்மையைப் போற்றினார் பாரதி.

''அன்னை தயை உடையார் - பணிவினில்

அடியவர் போன்றார் - மலர்ப்

பொன்னின் அழகுடையார் பொறுமையில்

பூமிக் கிணை ஆவார்''

என்று பெண்மையின் இலக்கணத்தை இயம்பினார் பாரதிதாசன்.

இத்தகைய சிறப்புடைய பெண்மை, கவிப்பேரரசு வைரமுத்துவின் ''பெய்யெனப் பெய்யும் மழை''யில் எங்ஙனம் அமைந்திருக்கிறது என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை.

அடிமை நிலை:-

''ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவில் ஓங்கி இவ்வையந் தழைக்கும்''

என்பது பாரதியின் கொள்கை. ஆனால், ஆணும், பெண்ணும் சமம் என்பது பேசவும், எழுதவும் மட்டுமே விரும்பப்படுகிறது. நடைமுறை வாழ்வில் அவளுக்குரிய உயர்வும், உரிமையும் அளிக்கப்படாமல் இருப்பதே நிதர்சனமான உண்மை. அவள் ஆணுக்குச் சமமாக மதிக்கப்படாமல் அடிமையாக மதிக்கப்படுவதே சமூக நடைமுறையாக உள்ளது. இதையே கவிஞர் வைரமுத்து,

''ஊரெல்லாம் தேடி

ஏர்மாடு இல்லாட்டி

இருக்கவே இருக்கா

இடுப்பொடிஞ்ச பெண்டாட்டி''

என்னும் அடிகளின் வழிக் கண்முன் காட்டுகிறார். பெண்ணானவள் மாடாகத் தேய்ந்து குடும்பத்திற்காகப் பாடுபட்டாலும், அவள் ஒரு மாட்டிற்குச் சமமாகவே கருதப்படும் அவல நிலையை ஆணாதிக்கத்தின் ஆதிக்க நிலையை இக்கவிதை அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஏழ்மை நிலை:-

காதல் திருமணம் கைகூடுவதென்பது ஏழ்மை நிலையிலுள்ள பெண்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. மனதிற்குள் காதலை மறைத்து வைத்து மறுகித் தவிக்கும் ஏழைப் பெண்ணின் நிலையைக் கவிஞரின் பாடல் அடிகள் வீறுடன் வெளிப்படுத்துகின்றன.

''உள் நெஞ்சுக்குள்ளே

ஒம்ம நான் முடிஞ்சிருக்க

எங்கே எத்திசையில்

எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?''

''தவிப்புக்கு ஒருத்தன்

தாலிக்கு வேறொருத்தன்

எத்தனையோ பெண்தலையில்

இப்படித்தான் எழுதிருக்கோ?''

என்ற பாடல் அடிகளில் ஏழ்மையின் காரணமாக எண்ணத்தில் வரித்தவனைக் கணவனாக அடைய முடியாமல், வாய்த்த கணவனை வரமாக ஏற்றுக்கொள்ள முடியாமல், தவிக்கும் பெண்ணின் அவலத்தைக் கவிஞர் அழகான உருவகத்தால், உருக்கமாகக் காட்டுகிறார்.

''ஏழப் பொம்பளைக

எதுவும் சொல்ல முடியாது

ரப்பர் வளவிக்குச்

சத்தமிட வாயேது''

என்னும் அடிகளில் ஏழைப் பெண்கள் தங்கள் ஆசைகளையோ, ஆதங்கங்களையோ வெளியிட முடியாத நிலையினைக் காட்டுகின்றார்.

நட்பு:-

இவ்வுலகில் ஒப்பில்லா உறவு நட்பே. இன்ப துன்பங்களோ, ஆசை நிராசைகளோ, மான அவமானங்களோ, விருப்பு வெறுப்புக்களோ, எதையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய அற்புத உறவு நட்பு. சாதியோ, மதமோ, வயதோ எதுவும் இதற்கிடையே நில்லாது.

இதையே வள்ளுவரும் ''செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்'' என வினவுகிறார்.

எந்தவொரு பெண்ணும் தன் உயிரணைய காதற் கணவனை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாள். ஆனால் தூய நட்பிற்கு முன் அந்த உன்னத உறவும், ஒன்றுமில்லாமற் போய்விடுவதைக் கவிஞரின்,

''ஒரு புருஷன் கட்டி

ஒரு வீட்டில் குடியிருந்து

சக்களத்தியா வாழச்

சம்மதிச்சோம் நெனவிருக்கா''

எனும் கவிதை அடிகள் உணர்த்துகின்றன. ''ஒரு தட்டில் சோறு தின்னு, ஒண்ணா வளர்ந்த'' தோழிகள் எந்நாளும் பிரியாதிருக்க ஒரே கட்டிலைப் பகிர்ந்து கொள்ளவும் முன்வருவதைப் பார்க்கும் பொழுது நட்பின் உயர்வு புலனாகிறது.

பொற்புடை மகளிர்:-

''எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற்

பொற்புடை நெறிமை இன்மை யான''

என்று பெண்மையின் இலக்கணம் இயம்புகிறது தொல்காப்பியம்.

கடலன்ன காமம் மிகுந்தாலும் பெண்கள் மடலேறுதல் நம் பண்பாட்டில் இல்லை. எவ்வளவுதான் ஆசை இருந்தாலும், அதை வெளிப்படையாகக் கூறாமல் நெஞ்சுக்குள் நிறுக்கும் நிறையுடையவள் நம் இந்தியப் பெண்.

மனதின் உள்ளிருக்கும் காதலை வெளிப்படுத்தாமல் பூட்டி வைக்கும் பெண்ணின் நிலையைக் கவிஞரும் தனது பாடல் அடிகள் மூலம் காட்டுகிறார்.

''காதல்தானடி

என்மீதுனக்கு?''

''பிறகேன்

வல்லரசின்

ராணுவ ரகசியம் போல்

வெளியிட மறுத்தாய்

இப்பொழுது கூட

நீயாய்ச் சொல்லவில்லை

நானாய்க் கண்டறிந்தேன்

காதல் மசக்கையில்

கசங்கும் உன் இதயத்தை''

என்று மசக்கையின் காரணமாக ஏற்படும் வாந்தி, தலைசுற்றல், உடல் சோர்வு போல, காதலியின் இமைகளின் தாழ்வில், வாக்கியம் உட்காரும் நீளத்தில், வார்த்தைகளுக்குள் விட்ட இடைவெளியில், தானே அவளது காதலைக் கண்டு கொண்டதாகக் கூறுகிறான் காதலன். நம் இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறாள் கவிஞரின் இக்கவிதைப் பெண்.

ஞானத்துணை:-

பெண்ணைச் சிற்றின்பத்தோடு மட்டுமே சிநேகப்படுத்திப் பார்ப்பது மானுட சமுதாயத்தின் மனோ நிலை. ஆனால் பேரின்பத்திற்கும் தாரமே ஆதாரம். இதை ஞானசம்பந்தரும்,

''மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே''

என்கிறார். இறைவனே தனதொரு பாகத்தைப் பெண்ணுக்குத் தந்தானெனில், அவனை அடையத் துடிக்கும் பக்தர்கள் பெண்ணை விலக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று நியாயம் கேட்கிறார் கவிஞர்.

''பெண்ணைச்

சிற்றின்பத்தோடு மட்டும்

சிநேகப்படுத்தாதீர்!

ஒவ்வொரு பெண்ணும்

ஞானத்துணை''

என்று வாழ்க்கைத் துணையானவளை ஞானத் துணையாக உயர்த்துகிறார். தன் கருத்துக்குத் துணையாக,

''அருந்ததி அணைத்த வசிட்டனும்

அகலிகை மணந்த கௌதமனும்

உலோபா கலந்த அகத்தியனும்

வீரப்பேற்றுக்கு விரோதிகள் அல்லரே''

என்று வசிட்டனையும், கௌதமனையும், அகத்தியனையும் ஆதாரமாக்குகிறார்.

''உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்

உயிரி னுக்குயி ராயின்ப மாகிடும்

உயிரினு மிந்தப் பெண்மை யினிதடா''

என்று உயிரினும் மேலான ஒன்றாய்ப் பெண்ணைப் படைத்துக் காட்டினான் பாரதி. கவிஞர் வைரமுத்துவும்,

''கண்ணை மூடி மோட்சம் காண

பெண்ணைப் படைத்தது பெரிய இயற்கை''

என்று பெண்ணை வீடுபேறு எனும் வீட்டிற்குள் நுழைவதற்குரிய வாசலாக வடித்துக் காட்டுகிறார்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து, தனது ''பெய்யெனப் பெய்யும் மழை'' எனும் கவிதைத் தொகுப்பில்,

1. காலங்காலமாகப் பெண்ணை அடிமைப்படுத்திப் பார்க்கும் ஆணாதிக்க சமுதாயத்தினைச் சுட்டிக் காட்டுகிறார்.

2. ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்களுக்குக் காதல் என்பது எட்டாத கனியாகவே இருப்பதைக் கவிதை வழி உணர்த்துகிறார்.

3. நட்பிற்கு முன் தாம்பத்திய உறவும் தோற்றுப் போகின்ற நிலையைக் காட்டுகிறார்.

4. மனதிற்குள் மிகுந்த, காதலிருந்த போதிலும், அதனை வெளிப்படையாக, வெளிப்படுத்தாத பெண்ணின் இயல்பைப் படைத்துக் காட்டுகிறார்.

5. சிற்றின்பச் சுகத்திற்கு மட்டுமல்லாமல், பேரின்பமாகிய வீடுபேற்றிற்கும் பெண் ஆதாரமாகத் திகழ்வதை ஆதாரத்துடன் சுட்டுகிறார்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை: