24/02/2012

இல்லறம் - க.ஆதிரை

இன்று இல்லறத்தில் மிகப்பெரிய சிக்கலாக இருப்பது மணமுறிவு. குறிஞ்சிப்பூப்போல் எப்பொழுதோ ஒருமுறை மணமுறிவு நிகழ்ந்த தமிழகத்தில், இன்று மணமுறிவு நீதிமன்றங்களில் ஓர் அங்கமாகிவிட்டது. இந்த மணமுறிவைத் தவிர்க்கக் குடும்பநல ஆலோசகர்கள் இன்று பல்கிப் பெருகியுள்ளனர். நம் திருவள்ளுவர் இவர்களிடையே இமயம் போல இலங்குகிறார். அவரது இல்லற இயலிலும் பிற பகுதிகளிலும் இறுதிவரை இல்லறம் உறுதியுடன் நிற்பதற்குப் பல்வேறு நெறிமுறைகளைப் பகர்ந்திருக்கிறார். அவர் கூறும் நெறிமுறைகள் எளிதானவை; இயல்பானவை; இதயம் சார்ந்தவை.

மணமுறிவுக்குக் காரணங்கள்

* தன்னலமற்ற அன்பின்மை * பொருள் பற்றாக்குறை * கூட்டுக்குடும்பம் மறைதலும் விருந்தினர்கள் குறைதலும்
* கனியிருப்பக் காய் கவர்தல் * நாவினால் சுட்டவடு * பொறுமையின்மை.


தன்னலமற்ற அன்பின்மை

இல்லறத்தின் எல்லா உடைமைகளுக்கும் அடிப்படையாய்த் திகழ்வது இல்லற இயலின் எட்டவதான அன்புடைமையே ஆகும். விட்டுக்கொடுத்தல் இல்லாததாலேயே இல்லறத்தின் வேர் வெட்டப்படுகிறது. இன்று, பெரும்பாலும் அன்பு என்பது தனதாக்கிக் கொள்ளும் அன்பாகவும், கணக்குப் பார்க்கும் அன்பாகவும் காணப்படுகிறது. கணவன் மனைவி இருவரிடத்திலும் இப்போக்கே காணப்படுவதால் மணமாலைகள் வாடி உதிர்கின்றன. அன்பிற்கு வள்ளுவர் கூறும் புது விளக்கத்தை வரும் குறள் வகுத்துரைக்கின்றது.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

தன்னையே பிறர்க்குத் தரும் இந்த அன்பே அன்பின் உச்சக்கட்டமாகும். தன் உடைமைகளைத் தருவது அன்பின் அடிவாரம். தன்னையே தருவதுதான் அன்பின் கொடுமுடியாம். இன்றோ, யாரும் தன்னைத் தருவதில்லை; அத்துடன் மட்டுமின்றித் தன் துணையைத் தன் ஏவலராக மாற்ற நினைக்கும் தன்னலமே தலைதூக்கி வருகிறது.

இன்னொரு குறளும் இதயங்கள் இணைவதற்கு மிக இன்றியமையாத குறளாகும்.

அன்புஈனும் ஆர்வம் உடைமை அஃதீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

திருமணமான புதிதில் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள ஆர்வம் முழுமையாய் இருக்கும். ஆனால் நாளடைவில் அந்த ஈர்ப்புக் குறையத் தொடங்கிவிடுகிறது. அதனாலேயே போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. ஆர்வம், ஆசை உள்ளவரை நட்பாய் இருந்தவர் அஃது அற்றுப் போனபின் பகைவராய் மாறுகின்றனர். உள்ளன்பு இல்லாத காரணத்தால் உட்பகை ஆங்கே உலாவரத் தொடங்குகின்றது. ஆக, நட்பினை ஆர்வந்தான் நல்குகின்றது. அந்த ஆர்வத்தையோ, அன்புதான் அடைகாத்துத் தருகின்றது. எனவே இல்லறத்தின் உயிர்நிலை அன்பின் வழியது என்ற பொய்யாமொழியை இல்லறத்தார் இதயத்தாற் கொண்டு ஒழுகினால் மணமுறிவுகள் மறைந்து போகும்.

பொருள் பற்றாக்குறை

வறுமை தலையெடுத்தால் அத்துணைத் துன்பங்களும் தலையெடுக்கும். வள்ளுவர் வாக்கின்படி வறுமை என்பது வருவாயின் அளவைப் பொறுத்தது அன்று. வீட்டின் செலவைப் பொறுத்ததே. கணவனின் வருவாய்க்குத் தக்க செலவு செய்து வளம் ஈட்டுபவளே சிறந்த வாழ்க்கைத் துணை ஆவாள். வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தின் முதற்குறளில், இக்கருத்தை வள்ளுவர் முத்திரையிடுகின்றார்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

ஆம்; பணப்போராட்டமே பல மனப்போராட்டங்களுக்கு ஆணிவேர். எனவேதான் வாழ்க்கைத் துணைநல அதிகாரத்தில் வறுமையைப் போக்கும் வழிமுறைகளை வள்ளுவர் வகுத்துரைத்தார் போலும்.

கூட்டுக்குடும்பங்கள் மறைதல் - விருந்தினர்கள் குறைதல்

இல்லறவியலில் இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தைத் தொடங்குகின்ற வள்ளுவர் இல்வாழ்வான் என்பான் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் என்பவற்றைப் பேணிக்காத்தல் வேண்டுமென்பதையும், விருந்தோம்பல் என்கின்ற ஒரு தனி அதிகாரத்தை வகுத்து

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

என்று இல்லறத்தின் இயல்பையும் விளக்குகின்றார். இவ்வாறு பெற்றோராலும் சுற்றத்தாராலும் விருந்தினராலும் வீடு நிரம்பி வழியும் பொழுது - கணவன் மனைவி - இருவர்க்கும் இடையே எழும் பிணக்குகளை அவர்கள் கண்டுகொள்வதற்கு நேரம் கிடைக்காது. மேலும் விருந்தினர் முன்பு தங்களை உராய்வுகளை மறைத்துக்கொள்ள வேண்டியமான உணர்ச்சியால் ஊடல்களும் பிணக்குகளும் சேர்ந்து குவியாமல் அரும்பிலேயே உதிர்ந்து விடுகின்றன. ஆனால் இன்றோ அடுக்குமாடி வீட்டில் முதியவரும் உறவினரும் செல்விருந்தும் வருவிருந்தும் இல்லாமையால் கடுகளவு முரண்பாடுகள் மலையளவு வளர்ந்து மணமுறிவு நிகழ்கிறது.

கனியிருப்பக் காய் கவர்தல்

இனியவை கூறலை இல்லற இயலில் இடம்பெறச் செய்த வள்ளுவரின் பேரறிவு வியத்தற்குரியது. இருவர்க்கும் இடையே எழும் சிறு கருத்து வேறுபாடுகள் இனியவை கூறல் இல்லாமையாலும் வாக்குவாதங்களில் பயன்படுத்தப்படும். நாக்கின் சவுக்கடியாலும் காட்டுத் தீ போல் மணமுறிவு வீட்டைச் சாம்பலாக்கி விடுகிறது; வாழ்வினை ஆக்குவதும் போக்குவதும் நாக்கின் சொற்கள் என்பதை வலியுறுத்த உடன்பாட்டு முறையால் இனியவை கூறலை எழுதிய திருவள்ளுவர் எதிர்மறை முறையிலே ''பயனில சொல்லாமை'' என்ற அதிகாரத்தையும் இல்லறவியலில் பயன்படுத்தியுள்ளார்.

நாவினால் சுட்ட வடு

இந்த உயிரோட்டம் உள்ள அடி, அடக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தும் இருவரிடத்திலும் அடக்கம் பெற்றிருந்தால் மணமுறிவு அடக்கம் செய்யப்பட்டு விடும். ''நிலையில் திரியாது'' அடங்கியிருக்கும் இல்லம், இமய மலையை விட உயர்ந்தோங்கி ஏற்றம் பெறும். இல்லறத்தில் இருபெரும் ஆணிவேராக அன்பினையும் அடக்க முடைமையையும் வள்ளுவர் போற்றுகிறார். அடக்கம் இருந்தால் தான் எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும் என்ற பேராசை எழாது. பேராசையால் ஏற்படும் மனமோதல்கள் மறையும்.

அடக்கமின்றித் ''தான்'' என்ற எண்ணம் தலைதூக்கும் பொழுது ஆணவச் சொற்களின் ஆரவாரம் ஒலிக்கின்றது. அவை, நாவினால் சுட்ட வடுவாக மாறி வாழ்வையே நாசப்படுத்தி விடுகின்றன. கணவனையோ மனைவியையோ மிகவும் காயப்படுத்துவது மற்ற எல்லா உதடுகளையும் விடத் தன் துணையின் உதடுகளே. இன்று பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாய்க் கூறப்படுபவை 1. ஒருவர் மற்றவரை மதிப்பதில்லை, 2. தூக்கி எறிந்து பேசுகிறார்கள், 3. தங்களைக் கவனிப்பதில்லை என்பவையே ஆகும். இந்த மூன்று குறைகளும் முகிழ்ப்பதற்குக் காரணம் அடக்கமின்மை அல்லவா?

பொறுமையின்மை

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்

மனையியல் என்பது இருவரின் மனஇயலே. மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி. கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். மனமும் மனம் சார்ந்த இடமும்தான் அன்பின் ஐந்தினையான இல்லறம். இதனை உய்த்துணர்ந்த வள்ளுவர் எழுதிய வாழ்வியலைப் பின்பற்றினால் மணமுறிவுகள் மறைந்து விடும் அல்லவா?

செல்வி . ஆதிரை
தகவல் தொழில்நுட்பம்
முதலாம் ஆண்டு ஜி பிரிவு
எஸ்.எஸ்.என்.பொறியியல் கல்லூரி
காலவாக்கம், சென்னை - 603 110

 2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள் இல்லை: