22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 26 : உலக நாடுகளில் தமிழ்!

 "சிலம்புச் செல்வர்' .பொ.சிவஞானம்

இந்தியப் பெருநாடு விடுதலை பெற்றதன் விளைவாகத் தமிழகத்திலே தமிழ் மொழிக்குப் புதுவாழ்வளிக்கத் தமிழர் திட்டமிட்டுப் பணியாற்றத் தொடங்கியதனால், உலக நாடுகளிலும் தமிழ் மொழிக்குப் பெருமை ஏற்படலானது. குறிப்பாக, தமிழர் குடியேறி வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளிலேயும் தமிழுக்குத் தனி அந்தஸ்து கிடைத்தது.


இலங்கை
இலங்கையின் பூர்வகுடித் தமிழர்கள் அத்தீவின் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பாலோராக வாழ்கின்றனர். அவை, தனியரசுப் பிரதேசமாக இயங்கக் கூடிய அளவுக்குத் தனித்தன்மை படைத்தவையாகும். இதனால்தான், இலங்கையைத் தமிழ் மாநிலமும் சிங்கள மாநிலமும் கொண்ட சமஷ்டி அரசு நாடாகச் செய்ய வேண்டுமென்று 30 ஆண்டுகளுக்கு முன்பே ஈழத் தமிழர்கள் கோரிக்கை எழுப்பினர். சிங்களத்தோடு சம அந்தஸ்துடன் தமிழையும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்றும் ஈழத் தமிழர்கள் கிளர்ச்சி தொடங்கினர். அதனை இன்றளவும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தமிழ் மாநிலக் கோரிக்கையானது ஈழத்திலே சுதந்திரத் தமிழகம் படைக்கும் புரட்சியாகவும் இன்று மாறியிருக்கக் காண்கிறோம். அந்த அரசியல் பிரச்சினை பற்றி இங்கு விவரிக்க நான் விரும்பவில்லை. அது ஈழத்தின் உள் நாட்டுப் பிரச்சினை. தமிழ்மொழி ஈழத்தின் சொந்த மொழிகளில் ஒன்று என்பதை மட்டும் இங்கு உறுதியாகச் சொல்ல விழைகின்றேன்.

பர்மா
பர்மாவிலும் பல லட்சக்கணக்கான தமிழர்கள் இரண்டாவது உலகப் பெரும் போருக்கு முன்னர் வாழ்ந்து கொண்டிருந்தனர். இவர்களிலே மிகப் பெரும்பாலோர் பர்மாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பின்னர் அங்கு குடியேறியவர்களாவர். மற்றவர்கள், பிற்காலச் சோழர் காலத்தில் குடியேற்றப்பட்டு, அந்த நாட்டின் சுதேசிகளாகிவிட்டனர். இவர்கள், மோல்மேன் போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் தமிழை மறக்கவில்லை.

சிங்கப்பூர் - மலேசியா
மலேசியாவின் மக்கள் தொகையில் தமிழர் எண்ணிக்கை 10 சதவிகிதமாகும். இந்த நாட்டிலும் தமிழானது ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மலேசிய சமஷ்டி ஆட்சியின் அமைச்சரவையிலே, அந்நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொடங்கித் தமிழரும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர்மலேசியா நாட்டிலுள்ள வானொலி நிலையம் ஒவ்வொன்றிலும் தமிழுக்கெனத் தனித்துறை இருந்து வருகிறது. இந்தியா சுதந்திரமடைந்ததையடுத்து மலேசியா சுதந்திரம் பெற்றது. இதன் விளைவுதான் அந்த நாட்டில் தமிழுக்குக் கிடைத்துள்ள அரசியல் அந்தஸ்து.

சோவியத் யூனியன்
சோவியத் யூனியனின் தலைநகரான மாஸ்கோவிலுள்ள வானொலி நிலையத்திலே தமிழுக்கெனத் தனியாக ஒரு துறை இருந்து வருகிறது. இந்தியத் தமிழரோடு மட்டுமன்றி, உலக நாடுகளிலுள்ள தமிழரோடெல்லாம் தொடர்பு கொள்ளவும் மாஸ்கோ வானொலி நிலையத்திலுள்ள தமிழ்த்துறை பயன்பட்டு வருகிறது.

ருஷ்யப் பெருநாடு சோஷலிச நாடாக மாறி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றாலும், இந்தியப் பெருநாடு விடுதலை பெற்ற பின்னர்தான் சோவியத் வானொலி நிலையத்திலே தமிழுக்குத் தனித்துறை கிடைத்திருக்கிறது. இந்தியா விடுதலை பெற்ற பின்னர்தான் அமெரிக்க வானொலியான "வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா'விலும் தமிழுக்குத் தனி இடம் தரப்பட்டது.
இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் வானொலி (பி.பி.ஸி.) நிலையத்திலே மிகவும் சக்தி படைத்த அமைப்பாக தமிழ்த்துறை இயங்கி வருகிறது.
பத்திரிகைகள் நாடு விடுதலை பெற்ற பின்னர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளேடுகளின் எண்ணிக்கை ஒன்றுக்கு நான்காகப் பெருகியிருக்கக் காண்கிறோம். வார, மாத இதழ்களின் எண்ணிக்கையும் கூடுதலாகியுள்ளன. தமிழர் குடியேறி வாழும் சிங்கப்பூர், மலேசியா, பர்மா ஆகிய நாடுகளிலும் தமிழ் நாளேடுகள் தமிழரால் நடத்தப்படுகின்றன. ஒன்றிரண்டு நாளேடுகள் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் குடியேற்றப் பகுதிகளல்லாத பிரிட்டன், சோவியத் ருஷ்யா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் ஏடுகள் வெளியிடப்படுகின்றன.

இலண்டன்
இலண்டனில் குடியேறி வாழும் தமிழர் தங்கள் சொந்த முயற்சியால் கடந்த ஆறு ஆண்டுகளாக "லண்டன் முரசு' என்ற பெயரில் தமிழ் மாத வெளியீடு ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

சோவியத் ஏடுகள்
சோவியத் ருஷ்யா "சோவியத் நாடு' என்னும் பெயரில் மாதமிருமுறை வெளியீடு ஒன்று தொடர்ந்து 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. "சோவியத் பலகணி' என்ற பெயரில் மற்றொரு மாத வெளியீடு ஒன்றும் கடந்த 26 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. உலகிலுள்ள தமிழ் மக்களோடு அவர்களின் தாய் மொழியான தமிழின் மூலமே உறவுகொள்ள வேண்டுமென்ற நன்னோக்கோடுதான் இந்த இதழ்களை அந்த நாடு நடத்தி வருகின்றன.

அமெரிக்கா
சோவியத் ருஷ்யாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் குடியரசின் சார்பில் செய்திப் பிரசுரங்களும், சித்தாந்தப் பிரசார நூல்களும் தமிழில் வெளியிடப்படுகின்றன. சோவியத், அமெரிக்க ஏடுகளும் நூல்களும் மிகவும் மலிவான விலையில் தமிழகத்தில் விற்கப்படுகின்றன.

யுனெஸ்கோ வெளியீடு
ருஷ்யாவின் தேசிய மொழியான ருஷ்ய மொழியில் தமிழ் இலக்கியங்களில் சிறந்தவை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் சிலப்பதிகாரம், பாரதியாரின் தேசிய கீதங்கள், தொல்காப்பியம் ஆகிய தமிழ் இலக்கிய - இலக்கண நூல்கள் மாஸ்கோவில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த நூல்கள் ருஷ்யாவின் பிரதேச மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ்
பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள சர்வதேச ஸ்தாபனமான யுனெஸ்கோவின் சார்பில் "கூரியர்' என்னும் பெயரில் 15 மொழிகளில் மாத இதழ் வெளியிடப்பட்டு வருகின்றது. டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா யுனெஸ்கோவின் துணை இயக்குநராக இருந்தபோது "கூரியர்' தமிழ் மாத வெளியீட்டைக் கொண்டுவர ஏற்பாடு செய்தார் என்பது நன்றியுடன் நினைவிற் கொள்ளத்தக்கதாகும். இந்திய மொழிகளில் தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளில் மட்டுமே "கூரியர்' வெளியிடப்பட்டு வருகிறது. இவற்றுள்ளும் முதன் முதலில் வெளிவந்தது "தமிழ் கூரியர்' தான். பத்தாண்டுகள் கழித்தே இந்தியில் வெளிவந்தது.

பிரிட்டிஷ் நூலகம்
உலகிலுள்ள நூலகங்களிலெல்லாம் மிகவும் பெரியது லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ள நூலகம். அதிலே, தமிழ் நூல்கள் - குறிப்பாக, பழைய ஓலைச் சுவடிகள் நிறைய சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய நூலகங்களில் தேடிக் கிடைக்காமல் போனவற்றை பிரிட்டிஷ் மியூசியத்தில் தாம் பெற்றதாக டாக்டர் .வே.சா. கூறியுள்ளார். பாரிசிலுள்ள நூலகத்திலும் தமிழ் ஓலைச் சுவடிகளைக்காண முடிகின்றது.

எங்கெங்கும் தமிழ்ச் சங்கம்
நியூயார்க், லண்டன், பாரிஸ் போன்ற பெருநகரங்களில் தொழில் காரணமாகக் குடியேறி வாழும் தமிழர்கள் தங்களுக்கெனத் தமிழ்ச் சங்கங்கள் அமைத்துக்கொண்டு தங்களிடையே தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயன்று வருகின்றனர். சர்வதேச ரீதியிலான தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைமை அலுவலகம் சென்னையில் இருந்துவரக் காண்கிறோம்.

இந்திய மொழிகளிலேயே சர்வதேச ரீதியில் வளர்ச்சிபெறும் வாய்ப்பு தமிழுக்குத்தான் அதிகமாகக் கிடைத்து வருகிறது என்பதனை நினைத்து தமிழ் மக்கள் பெருமிதம் கொள்ளலாம்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: