22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 13 : தமிழ்த் தெய்வம்!

புலவர் வடிவேல் முதலியார்

இயற்கை மொழி
உலகில் பல்வேறு மொழிகள் வழங்குகின்றன. அவற்றுள் எவையும் செந்தமிழ் மொழிபோல் அத்துணைச் சிறப்புற்ற இயற்கை மொழியாக விளங்கக் காண்கிலோம். மேல்நாடு முதல் எந்நாட்டிலுள்ள பசுவும் "அம்மா' என்று அகவுவது கொண்டு, செந்தமிழ் மொழியின் இயற்கைச் சிறப்புத் தெள்ளிதின் விளங்கும். அன்றியும், "தெய்வத்தமிழ்' என்று கூறுவதுபோல், எந்த மொழியுடனும் தெய்வத் தொடர்பை உடன் கூட்டிக் கூறக்காண்கிலோம். நிற்க; தமிழ்த் தெய்வமாக விளங்குவது யாது என்று ஆராயப்புகுவோம்.


 அருணகிரிநாதர்
 "திருப்புகழ் வித்தகர்' எனப் பாராட்டப்பெறும் அருணகிரிநாதர், முருகப்பெருமானைப் பின்வருமாறு துதிசெய்கிறார்.

 ""ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
 ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
 கூறுமடி யார்கள் வினை தீர்த்தமுக மொன்றே
 குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
 மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
 வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
 ஆறுமுக மானபொருள் நீஅருளல் வேண்டும்
 ஆதியருணாசல மமர்ந்த பெருமாளே''

 என்பதாம். இதற்குப் பலரும், ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு முகம் செய்வதாகக் கூறியுள்ளார் என்றே பொருள்கொள்வர். ஆனால், இறுதியடியில் ""ஆறுமுகமான பொருளே யருளல் வேண்டும்'' எனக் கூறியிருப்பாராயின் அனைவரும் கொள்ளும் பொருள் சரியெனக் கொள்ளலாம். அவ்வாறின்றிப் ""பொருள் நீ அருளல் வேண்டும்'' எனத் தனியாக "நீ' என விளி கொடுத்துக் கூறியிருப்பதால், புலவர் பெருமக்கள் பின்வருமாறு பொருள் கொள்கின்றனர்.

 புலவர் உரை
 "முருகப்பெருமானே! தேவரீர் மயில் மீது ஏறித் திருவிளையாடல் புரிந்தபோதும் ஒருமுகத்துடன் தானே இருந்திருக்கிறீர்; சிவபெருமானுக்கு அருமறை பகர்ந்தபொழுதும் ஒருமுகத்துடன் தானே இருந்திருக்கிறீர்; அடியார்களுடைய துன்பங்களைப் போக்கும்போதும் ஒருமுகத்துடன்தானே இருந்திருக்கிறீர்; கிரவுஞ்ச கிரியின் மீது வேலெறிந்தபோதும் ஒருமுகத்துடன் தானே இருந்திருக்கிறீர்; சூரபன்மனாதியரை வதை செய்தபோதும் ஒருமுகத்துடன்தானே இருந்திருக்கிறீர். இவ்வாறு ஒரே முகத்துடன் இருந்து பல திருவிளையாடல்கள் புரிந்த தேவரீர்! ஆறுமுகத்துடன் எழுந்தருளிய காரணம் யாது? அதனைத் தேவரீர் எனக்கு அருளிச் செய்ய வேண்டும்' என்பதே அதன் பொருளாகும். அவ்வாறாயின், முருகப்பெருமான் அருணகிரியாருக்கு அளிக்கும் விடை யாது?

 முருகப்பெருமான் அருணகிரியாருக்கு அளிக்கும் விடை
 ""அப்பனே நின்ஐயம் அனைவருமே யுணர
 ஆதாரம் ஆகையினால் அறைந்திடுவோம் கேண்மின்
 செப்புகின்ற அறுசமயத் தெய்வதமும் யாமே
 சிவன் அயன்மால் மூவர்களின் திரளுருவும் யாமே
 இப்புவியில் சிவம்சக்தி யெனுமுருவும் யாமே
 இயம்புகின்ற தமிழ்மொழியின் வடிவமும்யாம் என்னும்
 அப்பெரிய உண்மையினை அகிலமெலா முணர
 ஆறுமுகம் கொண்டிட்டோம் அறிந்திடுக நீயே''

 என்கிறார். இவற்றுள்: சைவம், வைணவம், சாக்தேயம், காணாபத்யம், கெüமாரம், செüரம் என்கின்ற ஆறு சமயத்திலுள்ள கடவுளும் யாமே என்கிறார். அன்றிச் சிவன் முகம் ஒன்று, பிரமன் முகம் நான்கு, மால் முகம் ஒன்று ஆக, மூவரின் உருவமும் திரண்டு ஆறுமுகம் கொண்டு விளங்குகிறோம் என்கிறார். அதுவேயுமன்றிச் சிவபெருமானுக்கு ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உள்ளன ஆகையால், அம்பிகையின் முகம் ஒன்றும் சேர்ந்து அம்மையப்பனாக ஆறுமுகம் கொண்டு விளங்குகின்றோமென்கிறார். இவைகள் நமக்கு ஒருவாறு விளங்குகின்றன. எனினும், அதற்கடுத்தாற்போல் "தமிழ் மொழியின் வடிவம் யாம்' என்பது என்ன என்பது சிந்திக்கற்பாலது.

 தமிழ்மொழியின் வடிவம்
 தமிழ் மொழியில் உயிரெழுத்துப் பன்னிரண்டு ஆகும். ஆறுமுகப் பெருமானுக்குள்ள பன்னிரண்டு விழிகளையும் பன்னிரண்டு உயிரெழுத்துகளாகக் கொள்ளலாம். ஆனால், உயிரெழுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அது, ஆறு ஆறாகப் பிரிக்கப்படாமல் குற்றெழுத்து ஐந்தும், நெட்டெழுத்து ஏழுமாகவுள்ளது; அவை எவ்வாறு பொருந்துமெனின்,

 உயிரெழுத்துகள்
 அம்மையப்பனாக விளங்கும் முருகப்பெருமானுக்கு உள்ளவற்றில் ஐந்து முகங்கள் அப்பனுடையதும் ஒரு முகம் அம்மையுடையதுமாகும். அர்த்தநாரீசுரனாக விளங்கும் சிவபெருமானது வலது பாகம் சிவபெருமானுக்கு உரியதாகையால், அதிக முயற்சியின்றியே உச்சரிக்குங்கால் குற்றெழுத்துகள் தோன்றுகின்றன. சக்திக்கு உரியதான நெட்டெழுத்துக்கு சிறிது முயற்சி வேண்டும் ஆகையால், வலது பக்கமுள்ள கண்களைக் குற்றெழுத்துகளாகவும், இடது பக்கமுள்ள கண்களை நெட்டெழுத்துகளாகவும் கொள்ளலாம். அவ்வாறு கணக்கிடின், ஐந்து குற்றெழுத்துகளும் ஐந்து நெட்டெழுத்துகளும் ஆகும். அடுத்துள்ள அம்பிகையின் கண்கள் இரண்டும் நெட்டெழுத்துகளாகையால் அம்முறையில் குற்றெழுத்துகள் ஐந்தும் நெட்டெழுத்துகள் ஏழுமாகக் கொள்ளக் கிடக்கின்றன.

 மெய்யெழுத்துகள்
 ஆறுமுகச் செவ்வேளின் திருமுகங்கள் ஆறும், இருபுறங்களிலும் ஆறு ஆறு ஆக, திருக்கரங்கள் பன்னிரண்டும் ஆகப் பதினெட்டும் மெய்யெழுத்துகளாகக் கொள்ளலாம். அவை முப்பிரிவுகளாகவே அமைந்துள்ளன.

 ஆய்த எழுத்து
 முருகப்பெருமான் திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதத்தையே ஆய்த எழுத்தாகக் கொள்ளலாம். இம்முறையில், முருகப்பெருமான் செந்தமிழின் வடிவமாக உள்ளார் என்பது மேற்கூறிய காரணங்களால் தெளிவாம். அதனை விளக்கும் பாடல் பின்வருவதாகும்:

 ""அந்தமிகு சென்னியில் இலங்குபன் னிருவிழியும்
 அகரமுத லாக வெண்ணி
 அலகிடும் குறிலைந்தும் நெடிலேழு மாகிய
 அமைந்தவுயிர் பன்னி ரண்டாய்ச்
 சிந்தனை செய் சென்னியோடு சேவகம் புரிகரமும்
 சேர்ந்துமுப் பிரிவ தாகச்
 செப்பிடும் வலியாறு மெலியாறு இடையாறு
 செய்யபதி னெட்டு மெய்யாய்
 குந்தமெனும் அயிலொன்றும் ஆயுதம தாக்கொண்ட
 குறைவிலாத் தமிழெ ழுத்தாய்க்
 கூறிடும் வடிவமுடன் ஆடல்செய்நின் பெருமை
 குவலயம் கூற வெளிதோ
 செந்தமிழின் வடிவான தெய்வமே வள்ளியொடு
 தெய்வானை மகிழும் அமுதே
 சேவேறு பரமனுமை மீதேறி விளையாடு
 திருவெண்ணெய் வடிவே லனே!''

 இக்கட்டுரையின் மூலம் அருணகிரிநாதர் பாடலுக்குப் புத்துரையும், முருகப்பெருமானே "தமிழ்த் தெய்வம்' என்பதும் அறிந்து மகிழ்வோமாக! (இக்கட்டுரை வெளியான ஆண்டு 21.8.1961)

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: