22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 5 : தமிழுக்கு முதல் இடம்!


டாக்டர் மு.வரதராசனார்


ஒரு நாட்டில் பெரும்பாலான மக்கள் என்ன மொழி பேசுகின்றார்களோ அந்த மொழியிலேயே ஆட்சி முதல் ஆடல் பாடல் வரையில் எல்லாம் நடைபெறுதல் வேண்டும். அப்படி இல்லையானால், அது அந்த நாட்டிற்கே தீமையாக விளையும். அந்த நாட்டு மொழி பல வகையிலும் குறைபாடு உடைய மொழியாகவும் இருக்கலாம். வேறு நாட்டுமொழி அதைவிடச் சிறப்பு உடையதாகவும் இருக்கலாம். ஆனாலும் அந்த நாட்டின் வாழ்வில் நாட்டு மொழிக்கே முதன்மையான இடம் இருக்க வேண்டும்.


ஓர் இரு துறைகளில் மட்டும் அல்லாமல் பல துறைகளிலும் முதல் இடம் இருக்க வேண்டும். வேற்று நாட்டு மொழி எவ்வளவு சிறப்பு உடையதாக இருந்தாலும் முதல் இடம் பெறக்கூடாது. அதனால் விளையும் பயன் கருதி அதற்கு இரண்டாம் இடம் தரலாம். அவ்வாறு செய்தால்தான் அந்த நாட்டு மக்களின் வாழ்வு உட்பகையும் பிளவும் குழப்பமும் இல்லாததாக இருக்க முடியும். குறிப்பிட்ட சில பயன் கருதி வேற்றுமொழிக்கு இடம் கொடுத்தால், நிகழ்காலத்தில் தீமையற்ற நன்மை விளைவதுபோல் தோன்றும். ஆனால், காலப்போக்கில் நன்மையும் தீமையாக மாறி விளைந்துவிடும். ஆகையால் அப்போதைக்கு ஏற்படும் பயனை மட்டும் கருதாமல் நாட்டின் எதிர்கால வாழ்வையும் கருதி நிலையான நன்மைக்கே வழி வகுக்க வேண்டும்.

பல நூற்றாண்டுக்கு முன்னே தமிழ்நாட்டில் கோயில்களில் தமிழ்மொழிக்கு இடம் தராமல் வடமொழியை அங்கு விளங்க வைத்தார்கள். அதனால் அன்று ஒரு தீமையும் ஏற்படவில்லை. அந்த விதை காலப்போக்கில் முளைத்து வளர்ந்து இன்று தீமைகளை விளைத்து வருகின்றது. தமிழ்நாட்டில் இன்று உள்ள வகுப்புப் பூசலுக்கும், வடமொழி - தென்மொழி போராட்டத்திற்கும் அன்று செய்த அந்தத் தவறே காரணம் எனலாம். அன்று விதையாக இருந்தது இன்று மரமாக வளர்ந்துள்ளது. இன்று காணும் இந்தப் பெரிய மரத்திற்கு அன்று கண்ட விதை காரணம் அன்று என்று சிலர் கருதலாம். வேறு காரணமும் கூற முயலலாம். அந்த முயற்சியால் பயன் இல்லை. உண்மையை உணர்ந்தால்தான் பயன் உண்டு. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழ்பாடி வளர்த்த அந்தக் கோயில்களில் தமிழுக்கு முதல் இடம் அளித்திருந்தால், இன்று எத்தனையோ வம்புகள் விளையாமல் தடுத்திருக்க முடியும். கோயில்களில் தமிழ் முழங்க வேண்டும் என்ற கிளர்ச்சிக்கே இடம் இல்லாமல், அதை ஒட்டி வளரும் பூசலுக்கும் இடம் இல்லாமல் அமைதி நிலவியிருக்கும்.

அன்று செய்த தவறு போலவே நேற்றும் ஒரு தவறு செய்தோம். இசைத் துறையில் தலைமுறை தலைமுறையாகத் தமிழ்நாடு வளர்த்து வந்த பண்கள் பல. அந்தத் தமிழ் இசை பிற்காலத்தில் கருநாடக சங்கீதமாக வளர்ந்து, மாறி இன்றும் போற்றப்பட்டு வருகின்றது. ஆனால் பழைய பெயர்கள் இல்லை. அதனால் புதியதொரு கலைபோல் பலர் மருள்கின்றார்கள். பழைய பண்களின் இலக்கணம் இன்று விளங்கவில்லை. அவற்றின் பெயர்களும் கேட்டறியாத புதுப்பெயர்கள்போல் உள்ளன. இங்குள்ள ராகங்களின் பெயர்களோ தமிழுக்குத் தொடர்பு இல்லாதவைகளாக உள்ளன. கருநாடகத்தைக் கண்டு பலர் மருளுதலுக்குக் காரணம் அதுதான். இவ்வளவு மாறுதலும் ஏற்பட்டதற்குக் காரணம், இசைத் துறையில் தமிழ்மொழிக்கு முதல் இடம் இல்லாமல்போன குறைதான். அன்று நேர்ந்த அந்தக் குறையே இன்று தமிழ் இசைப் போராட்டம் நடக்கக் காரணம் ஆயிற்று. அதன் தொடர்பாக ஏற்பட்டு இன்றும் அங்கங்கே இருந்துவரும் சிறு பூசல்களுக்கும் அதுவே காரணம் ஆகும்.

இராகங்களின் பெயர் மாறியது ஒரு புறம் நிற்க, அந்த ராகங்களுக்கு உரிய பாட்டு, தமிழர் பொருள் உணரக்கூடிய தமிழ்ப் பாட்டாக இல்லாமல் போனதுதான் குறை. கருநாடக சங்கீதத்தில் எல்லாப் பாட்டும் தமிழாக இருக்க வேண்டும் என்பது கருத்து அன்று. கருநாடக சங்கீதம், தெலுங்கு நாட்டில் வளரும்போது தெலுங்குப் பாட்டுக்களின் துணை வேண்டும். மைசூரில் வளரும்போது கன்னடப் பாட்டுக்களின் துணை வேண்டும். ஒருகால் வங்காள மாகாணத்தில் வளர்வதாக இருந்தால், வங்காளிப் பாட்டுக்களின் துணையே வேண்டும். தமிழ்நாட்டில் வளரும்போது தமிழ்ப் பாட்டுக்களின் துணையே வேண்டும் என்பதுதான் கருத்து ஆகும்.

கல்யாணி  ராகத்தைத் தமிழர்கள் தமிழ்ப் பாட்டின் துணைகொண்டு அனுபவிக்க வேண்டும். அதுபோலவே தெலுங்கு மக்கள் அனுபவிப்பதற்குத் தியாகராயர் பாடல் முதலான தெலுங்குப் பாட்டுக்கள் மிகுந்த நன்மை பயக்கும். இந்த அளவிற்குத் தெளிவும் உரிமையும் வளரவிட்டிருந்தால் இன்று இசைத்துறையில் மொழிப் போராட்டம் தலையெடுத்திருக்காது. போராட்டம் வளரும்போது போராடும் மக்களைப் பார்த்துக் குறை கூறுவதனால் பயன் இல்லை. அதற்குக் காரணமான தவறு முன்னமே நேர்ந்துவிட்டதை எண்ணி வருந்த வேண்டும். விளைத்தது விளைந்தே தீரும்அதற்குப் பிறகு நேர்ந்த தவறு ஆட்சித் துறையில் தமிழுக்கு முதல் இடம் அளிக்காமல் போனது ஆகும். அதற்காக நாம் யாரை நொந்துகொள்வது? ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் அடிமைத்தனத்தையே நொந்துகொள்ள வேண்டும். அடிமை வாழ்வு நீங்கி, உரிமை வாழ்வு பெற்றுள்ள நாம் இனியேனும் அந்தக் குறை தீர வழிவகுக்க வேண்டும். உரிமை பெற்ற எந்த நாட்டிலும் அந்நிய மொழி ஆட்சி மொழியாக இருப்பது இல்லை. ஆகவே இங்கும் இருப்பது பொருந்தாது.

ஆட்சி மொழிக்கு எப்போதும் செல்வாக்கு மிகுதி. ஒரு மொழி ஆட்சித் துறையைக் கைப்பற்றிவிட்டால் மற்ற துறைகள் தாமே வந்து அதனிடம் சேரும். ஒலியிலும் இலக்கணத்திலும் சொல் வகையிலும் மிக்க குறைபாடு உள்ள மொழியாக இருந்தும், ஆங்கிலம் உலக மொழியாக வளர்ந்துள்ளதற்குக் காரணம் அதுதான். "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி' என்ற பழமொழி மொழித் துறைகளுக்கும் பொருந்தும். ஆட்சித் துறையில் உள்ள எந்த மொழியோ அந்த மொழியே கல்வி, தொழில், வாணிபம், கலை, பொழுதுபோக்கு முதலான எல்லாத் துறைகளிலும் செல்வாக்குப் பெற்றுவிடும்.

நாடோடிகளாய்த் திரியும் நரிக்குறவர் மொழியாக இருந்தாலும் அதை ஆட்சிமொழி ஆக்கிவிட்டால், ஒரு நூற்றாண்டு அளவில் அதுவே பல துறைகளிலும் வளர்ந்த ஒரு மொழியாகிவிடும். அவ்வாறே எவ்வளவு சிறப்புடைய மொழியாக இருந்தாலும் ஆட்சித்துறையில் அதற்கு இடம் இல்லையென்றால் மற்ற துறைகளில் அதன் வாழ்வு தானாகவே மங்கிவிடும். அது இயற்கை.

தமிழ் நாட்டில் பத்திரிகைத் துறையில், நேற்று வரையில் தமிழ் பிற்போக்காக இருந்ததற்குக் காரணம், ஆட்சி மொழியான ஆங்கிலத்திற்கு இருந்த செல்வாக்கே ஆகும். இவ்வாறு பத்திரிகைத் துறையில் தமிழ் செல்வாக்குடன் விளங்க முடியாமல் இருந்ததனாலும் நாட்டிற்குத் தீமை விளைந்தது; இன்னும் விளைந்து வருகின்றது. என்ன தீமை? தமிழ்நாட்டில் ஆங்கிலப் பத்திரிகைகள்தான் மிகச் செம்மையாக வளர்ந்துள்ளன; பெரிய அளவில் விற்பனையும் ஆகின்றன. அந்தப் பத்திரிகைகள் நாட்டுமொழித் தொடர்பு இல்லாத காரணத்தால் நாட்டு மக்களின் உள்ளத் தொடர்பை இழந்துவிட்டன. அதனால் தமிழ்நாட்டுச் செய்திகளைவிட வெளி உலகச் செய்திகளுக்கே சிறப்பிடம் தருகின்றன; நாட்டில் நெருக்கடியான போராட்டம் நடக்கும்பொழுதும் தமிழ் மக்களின் நன்மையைப் பெரிதாகக் கருதாமல் வெளியுலகத்து மதிப்பையே பெரிதாகக் கருதி வாய்மூடிக் கிடக்கின்றன. அந்தப் பத்திரிகைகள் வாழ்வது தமிழ்நாட்டில்; ஆனால், தமிழ் மக்களின் போராட்டங்களில் அவை தீண்டாமையை மேற்கொள்கின்றன.

மொழி வழியாகத் தமிழ்நாடு அமைக்கும் முயற்சி, சென்னைத் தமிழருக்கு உரியதாக ஆக்கிய போராட்டம், வடக்கெல்லையாகிய சித்தூர் மாவட்டத் தமிழர்களின் கூக்குரல், தெற்கே நாஞ்சில் நாட்டுத் தமிழ் மக்களின் உரிமை வேட்கை, தமிழைக் கல்வி மொழியாக்கச் செய்யப்படும் முயற்சி முதலிய பலவற்றிலும் இந்த ஆங்கிலப் பத்திரிகைகள் அமாவாசை சாமியார்களாகவே நடந்துகொண்டன; நடந்துகொண்டு வருகின்றன.

இதன் பயனாக இன்று தமிழ் மக்கள் பெரும்பாலோர் உள்ளத்தில் அந்தப் பத்திரிகைகள் பற்றி நல்ல எண்ணம் இல்லாமல் போயிற்று. இவ்வளவிற்கும் காரணம் என்ன? பத்திரிகைத் துறையில் தமிழுக்கு முதல் இடம் இல்லாமல்போன குறைதான். ஆனால் இன்றைய நிலைமை நேர்மாறாக உள்ளது. சில தமிழ்ப் பத்திரிகைகளும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்குப் பின்பாட்டுப் பாடி அமாவாசை சாமியார்களாக வாழ முயல்கின்றன. இந்த நிலைமை நீடிக்காது என்பதை விரைவில் காண்போம்தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாகிவிட்டால், பத்திரிகைத் துறையிலும் தமிழ் முதல் இடம் பெற்றுவிடும். மேலே சொன்ன குறையும், கசப்பும் குழப்பமும் நீங்குவதற்கு வழி அதுதான்.

* (இக்கட்டுரை வெளிவந்த ஆண்டு ஜனவரி 1956)

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: