22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 15 : அழிந்துபோன அருந்தமிழ் நூல்கள்!

இயல் நூல்கள்
அகத்தியம், அடிநூல், அணிவியல், அவிநயம், அவிநந்த மாலை, ஆசிரிய மாலை, ஆசிரியமுறை, ஆசிரிய முறி, ஆன்மவியல், ஆட்சிநூல், இந்திரம், இந்திரகாளியம், இளந்திரையம், எதிர்நூல் ஐந்திரம், ஒப்பு நூல், ஓவிய நூல்.
கச்சபுடம், கடகண்டு, கணக்கியல், கலியாணகாதை, கலைக்கோண்டுதண்டி, கலிப்பாடல், கவிமயக்கிறை, களிரியாவிரை, களவு நூல், கனவு நூல், காலகேசி, காக்கைபாடினியம், குருகு, குண்டலகேசி, கோள் நூல், சங்க யாப்பு, சயந்தம், சாத வாகனம், சிந்தம், சிற்பநூல், சிறு குரீ இயுறை, செயன் முறை.
தந்திரவுரை, தகடூர்யாத்திரை, தும்பிப்பாட்டு, தேசிக மாலை, நாககுமாரகாவியம், நிலகேசி, பஞ்சமரபு, பதினாறு படலம், பரிநூல், பழைய பரிபாடல்கள், பல்காப்பியம், கல்காயம், பண்மணி மாலை, பன்னிரு படலம், பறவைப் பாட்டு, பாண்டியன் மரபு, பாட்டுமடை, பாண்டியன் பாரதம், பெருபாரதம், புணர்பாவை, புதையல் நூல், பூதபுராணம், பெரிய பமமம், பெருவல்லம், பெருவஞ்சி, போக்கியல்.


மணியாரம், மந்திர நூல், மயேச்சுரயாப்பு, மாபுராணம், மார்க்கண்ட காஞ்சி, முதுநாரை, முதுகுருகு, முத்தொள்ளாயிரம், முப்பெட்டுச் செய்யுள், மூவடி முப்பது, யயோதர காவியம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், வியாழமாலை, விசாகன் பாரதம், வீரமாலை, வீரவிளக்கம், வீரவணுக்கம், வெண்டாளி, வேந்தியன் முறை, வைப்பியம், வைரமாலை, வஞ்சத் தொள்ளாயிரம்.

இசை நூல்கள்
சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசை நுணுக்கம், இசை விளக்கம், பஞ்சமரபு, பஞ்சமாபாரதீயம், பண்ணமைதி, பண்விரி விளக்கம், பாட்டும் பண்ணும், ஆளத்தியமைப்பு, கருவியிலக்கணம், தாள சமுத்திரம், தாளவகை யோத்து, இசைக்கூறு, பாடற்பண்பு.

நாடக நூல்கள்
கூத்து வரிருள நூல், சயந்தம், செயிற்றியம், பரதம், பரதனோயதீபம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், முறுவல் விளக்கத்தார் கூத்து, அடிவைப்பு, அடிவரிசை, உறுப்பாட்சி, முத்திரை விளக்கம், மெய்ப்பாட்டியல், முகக்குறி முறை, கைக்குறி முறை தாளக்கட்டு, நாட்டிய விளக்கம், நிருத்த முறை.

மருத்துவ நூல்கள்
அகத்தியர் பன்னிரு காண்டம், போகர் எண்ணாயிரம், கோரக்கர் மூலிகைப்பயன் ஆயிரம், கொங்கணவர் மூவாயிரத்து நூறு, கோரக்கர் வெண்பா ஏழாயிரம், மச்சமுனி ஏழு காண்டம், சிவவாக்கியர் ஐந்து காண்டம், காசிபர் வண்ணம் ரோமமுனி வடுகம், ராமதேவர் சாந்தப்பா, நந்தீசர் சந்தம், சங்குமாமுனிக் கலித்துறை, திருமூலர் திருமந்திரம் எண்ணாயிரம், பதஞ்சலி ஏழு காண்டம், சட்டமுனி நிகண்டு, சட்டமுனி இரண்டாயிரத்து எழுநூறு, காலங்கிநாதர் நாலு காண்டம், போகர் எழுநூறு.
இந்நூல்கள் அனைத்தும் தமிழ் மொழியில், தமிழ் அறிஞர்களால் தோற்றுவிக்கப் பெற்றவை. இவை அனைத்தும் அழிந்துபோயின என்று சிற்சில பாடல்கள் கிடைத்திருப்பதினாலும், வேறு பல நூல்களில் மேற்கோள்களாக வந்து இருப்பதினாலும் அறிய முடிகிறது.
இதைத் தவிர இன்னும் எத்தனை நூல்கள் இருந்தனவோ? அவற்றின் ஆசிரியர் யார் யாரோ? அறிய முடியவில்லை. அவை அனைத்தும் இன்று இருந்திருந்தால் தமிழ் மொழி எத்தனை சிறப்பில் மின்னிக் கொண்டிருக்கும்?
தமிழர்களின் பொக்கிஷங்களாக விளங்கிய இந்த அரும்பெரும் நூல்கள் தமிழகத்தில் அடுத்தடுத்துத் தோன்றிய கடற்கோள்களால் அழிந்தவை சில! தமிழ் மன்னர்களின் ஆட்சி அழிந்தபோது அழிந்தவை சில! குறுநில மன்னர்களின் ஆட்சி அழிந்தபோது அழிந்தவை சில! பரம்பரைப் புலவர் பெருமக்கள் அழிந்தபோது அழிந்தவை சில! ஜாதி வெறியால் அழிந்தவை சில! சமய வெறியால் அழிந்தவை சில! மொழி வெறியால் அழிக்கப் பெற்றவை சில! நாலந்தா நூல் நிலையம் தீக்கு இரையானபோது எரிந்துபோனவை சில! கரையான்கள் தமிழ்ச் சுவடிகளைச் சுவைக்கத் தொடங்கியதால் அழிந்தவை சில!

பழஞ்சுவடிகளைக் கொண்டுபோய் ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் கொட்டினால், புண்ணியம் என்ற கொள்கை ஒன்று தமிழகத்தில் பரப்பப்பெற்று வந்ததால், தமிழர்கள் தங்கள் கையாலேயே அள்ளிக்கொண்டுபோய் ஆறுகளில் கொட்டிவந்த வழக்கத்தினால் அழிந்துபோனவை பல...பல...!
இந்நூல்கள் அழியத் தொடங்கி 2000, 3000, 5000, 7000, 11000 ஆண்டுகளாயின என்று பல பேராசிரியர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இவர்களுக்குத் துணை செய்து வருவது இலக்கியச் சான்றுகள். மேலை நாட்டு அறிஞர்கள் "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும்' என்று கூறுகின்றனர். இவர்களுக்குத் துணை செய்வது மொழியறிவும், வரலாற்று உண்மையும், கல்வெட்டுகளும், புதை பொருள் ஆராய்ச்சியும் ஆகும். எனினும், அவை அழிந்துபோன காலத்தைத் துணிந்து கூறியதாக இல்லை.

நம் தமிழ் நூல்கள் அழிந்த காலத்தையே அறியமுடியாதபோது, அவை தோன்றிய காலத்தை எவ்வாறு அறிந்து கூறுவது? ஒரு மொழிக்கு இலக்கணம் கூறுவதுதான் இறுதியாக இருக்கும். தமிழ் இலக்கண நூலாகிய "பேரகத்தியம்' தோன்றிய காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இல்லையென முடிவாகத் தெரிகிறது.

அதற்கு முன் அது தோன்றிய காலம் எப்போதோ? அதற்கு முன் இலக்கியங்கள் தோன்றிய காலம்? அதற்கு முன் உரைநடை தோன்றிய காலம்? அதற்கு முன் எழுத்துத் தோன்றிய காலம்? அதற்கு முன் மொழி தோன்றிய காலம் எப்போது? எவர் கண்டு கூறுவது? எவ்வாறு கூறமுடியும்?
தமிழ் நூல்களில் இறந்தன போக இன்று இருப்பவை 36 நூல்களே. அவை பத்துப்பாட்டு-எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு எனப் பெயர் பெறும் இவற்றுள்ளும் சில முழுவதும் இல்லை.

பரிபாடல்கள் 200-க்கு மேற்பட்டவை. இன்று கிடைத்திருப்பன 70 பாடல்களே. ஐம்பெரும் காப்பியங்களுள் ஐந்துக்கு இரண்டு பழுதாகிவிட்டது. 2700 பாடல்களைக் கொண்ட முத்தொள்ளாயிரத்தில் இன்று கிடைத்திருக்கும் பாடல்கள் 230 மட்டுமே. இவ்வளவு அழிந்துபோன பின்பும் தமிழ் அழியவில்லை.

எத்தனையோ மன்னர்கள் படையெடுத்து வந்தும், வேற்றுமொழி மக்கள் தமிழ் மக்களை ஆண்டும், எத்தனையோ மொழிகள் தமிழகத்தை ஆட்சி செய்து, எத்தனையோ பிறமொழிச் சொற்களும், பிறமொழி எழுத்துக்களும் தமிழ் மக்களின் சமய நூல்களில், வழிபாடுகளில், இலக்கியங்களில், கலைகளில், கல்வியில், தினசரி பத்திரிகைகளில் புகுத்தப் பெற்றும் தமிழ்மொழியானது எழிலும் வளமும் குன்றாது, இன்றும் அழியாது இருந்து வருவது வியப்புக்குரிய ஒன்று. இது தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும்!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: