05/02/2012

மொழிப் பயிற்சி – 77 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

மயலும் மையலும்!

துட்டம் (துஷ்டம்) – தீக்குணம். நட்டார் – உறவினர் என்று தொகையகராதியில் காணப்படுகின்றன. தொகுத்தபோது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம். நட்சத்திரம் – அசுவினி, பரணி தொடங்கி இருபத்தேழும் எழுதப்பட்டுள்ளன. தொகையகராதி என்பதால் இப்படிக் குறிப்பிட்டார் எனக் கொள்ளலாம். நட்சத்திரம் – விண்மீன் என்று இப்போது தமிழில் சொல்வோம் நாம்.
தமிழ், வடமொழி என்ற வேறுபாடின்றி இரண்டு நூற்றாண்டின் முன்னிருந்த நிலையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் இப்போதும் தமிழார்வலர்களும், ஏன் அறிஞர்களும் கூடப் படித்தறிய வேண்டிய நூல் என்பதும், இத்தகைய ஓர் அரிய செயலை ஓர் ஐரோப்பியர் செய்தார், நாம் யாரும் இத்தகு செயலாற்றவில்லை என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த நேரத்தில் மற்றொருவர் பற்றியும் அவரின் சீரிய கருத்தொன்று பற்றியும் அறிய வேண்டும். தமிழில் உரைநடையில் முதல் இலக்கண நூல் செய்தவர் ஜி.யு.போப் ஆவார். இவரே திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கில மொழியில் பெயர்த்தவரும் ஆவார். திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்தவருள் முதன்மையானவர். திருவாசகம் படித்து மனம் உருகி, உருகி நெகிழ்ந்தவர். தம் கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று எழுதச் சொன்னவர்.



“தமிழ்நாட்டு இளைஞர்கள் மிகவும் ஊக்கத்துடனும் திறமையுடனும் ஆங்கிலக் கல்வி பயில்கின்றனர். ஆனால் அவர்கள், வியக்கத்தக்கதும் இணையற்றதுமான தங்கள் தாய்மொழியைப் புறக்கணிப்பதை நோக்கி வருந்துகிறேன்”

இது ஜி.யு.போப் அன்று சொல்லி வருந்திய செய்தி. இன்றைக்கும் பொருந்தி நிற்கிறது. இதைப் படிக்கும் இளைஞர்கள் இனியாவது தம் தாய்மொழியில் நாட்டம் கொள்வாராக!

மயல் – மையல்
ஓர் ஊடகத்தில் மையல் கொண்டாள் என்பது போல் சொல்லும்போது, மையல் எனும் சொல் பிழையானது, அதனை மயல் என்றே சொல்ல வேண்டும் என்றுரைத்தார்கள்.

தமிழில் “போலி’ என்றோர் இலக்கணம் உள்ளது. இஃது எழுத்துப் போலியைக் குறிப்பதாகும். போலவே இருப்பது போலி. இப்போதும், போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று விளம்பரம் பார்க்கிறோம். விற்பனைப் பொருட்களும் போலிகள் தரம் குறைந்து இருக்கலாம். இலக்கணத்துள் அப்படியில்லை, இப்போலி, முதற்போலி, இடைப்போலி, கடைப் போலி என்று மூவகைப்படும். முதற்போலியில் அகரத்திற்கு ஐகாரம், ஐகாரத்திற்கு அகரம் போலியாக வரும். இதற்கு எடுத்துக் காட்டாகக் காட்டப்படும் சொல் மையல் – மயல் என்பதாகும். போலியாக வரும் எழுத்தால் பொருள் மாறுபடக் கூடாது.
இரண்டிற்கும் ஒரே பொருள். மயக்கம், மிக்க ஈடுபாடு, தன்னிலை மறத்தல் என்றெல்லாம் அகராதிகளில் பொருள் காணலாம். மயல் என்பதற்கு மையல் என்றும், மையல் என்பதற்கு மயல் என்றும் பொருள் எழுதியுள்ளார்கள். ஆதலின் மையல் என்னும் சொல் பிழையானது அன்று.

இடைப்போலிக்கு எடுத்துக் காட்டு: இடையன் – இடயன். பழைய – பழய எனக் கண்டு கொள்க. ஈற்றுப் போலி சற்று வேறுபட்டது. பந்தல் எனும் சொல்லில் இறுதியில் உள்ள “ல் ‘லுக்குப் பதிலாக “அர்’ சேர்த்து பந்தர் என்றெழுதுவது இது. வண்டு – வண்டர் என்பதும் உண்டு.
“நீலவிதானத்து நித்திலப் பூம் பந்தர்க்கீழ்’ (சிலம்பு) வழக்கம்போல், “இடர்பாடு ஏற்படும்’ என்று செய்தி படிக்கிறார்கள். இடர்ப்பாடு என்பதே சரியானது. இடர் (துன்பம்) ஆகிய பாடு (படுதல்) ஆகத் துன்பப்படுதல் என்பதோ இடர்ப்பாடு. இதனை இடர் பாடு என்றால் இடர் பற்றிப் பாடு என்று ஏவலாகின்றது. மாநாடைத் தொடங்கி வைத்து உரையாற்றினார் என்று செய்தி படித்தார்கள். மாநாட்டைத் தொடங்கி என்று இயல்பாகவே வரும் இலக்கணம் (ஒற்று இரட்டித்தல்) எப்படித்தான் தவறுகிறதோ!

ஆற்றுப்படையும் ஆறுபடை வீடுகளும்

பரிசில் (பொருள்) பெற்ற ஒருவர் மற்றவர்க்கு, “இன்னாரிட்டு செல்’ என்று வழிகாட்டுவதற்கு ஆற்றுப்படை எனப் பெயர்.
ஆறு – வழி, படை – படுத்துதல்
நக்கீரர், முருகப் பெருமானின் அருமை, பெருமைகளைச் சொல்லி அவன்பால் சென்றால் எத்தகைய நன்மைகளை அடையலாம் என்று வழிப்படுத்திய பாட்டே, பத்துப்பாட்டுள் முதலாவதாக இருக்கும் திருமுருகாற்றுப் படை. திருமுருகனிடம் (செல்லுமாறு) ஆற்றுப்படுத்துதல் என்பது இதன் பொருள். இந்த நெடிய பாட்டு, “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரும், பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு’ எனத் தொடங்கி, “பழமுதிர் சோலை மலை கிழவோனே’ என்று முடிகிறது.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: