13/02/2012

நேர்காணல் – சு.வெங்கடேசன்

1054 பக்கங்கள், 600 ஆண்டுகால தமிழகத்தின் மதுரை தொடங்கி, கண்டி, உதயகிரி, ராய்ச்சூர், புத்தாளம் என இலங்கை வரை 28 வாழ்விடங்களுக்குள் பயணித்து அழைத்துச் செல்லும் இளம் படைப்பாளிக்கு 2010-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது, நவீன தமிழ் இலக்கியத் தடத்துக்குக் கிடைத்த பெருமை எனலாம்.

கவிஞராக படைப்புலகுக்குள் நுழைந்து பத்தாண்டு காலம் களப்பணி செய்து “காவல் கோட்டம்’ படைப்பைத் தந்துள்ளார். இவ்விருதுக்குரிய சு.வெங்கடேசனின் இப்படைப்பு 2009-ல் நூலாக வெளிவந்து பெரும் வாசகத் தளத்தை உருவாக்கியது.
அடுத்த ஆண்டே சாகித்ய அகாடமி விருதுக்குரிய சிறப்பைப் பெற்றது பெருமைக்குரியதுதானே!.

கி.பி. 1310- 1910-ஆம் ஆண்டு வரை மதுரையைச் சுற்றிப் பயணிக்கும் “காவல் கோட்டம்’, அரசியல்- சமூகவியல்- இனவரைவியலில் போர்களையும் வன்முறைகளையும் பஞ்சங்களையும் இயற்கைப் பேரழிவுகளையும் மனிதன் தன் முயற்சியால் கடந்து செல்லும் ஊக்கமும் முனைப்பும் காட்டி படைத் தளித்திருக்கிறார்.

41 வயதான சு. வெங்கடேசன் திருப்பரங்குன்றம் ஹார்விப் பட்டியில் பிறந்தவர். தந்தை ரா. சுப்புராம், தாய் நல்லாமாள். ஹார்விப்பட்டியில் ஆரம்பக் கல்வி கற்று முக்குலத்தோர் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்தவர். தமிழ் மொழியின்பால் காதலுற்ற இவர் யாழினி- தமிழினி என இரு மகள்களுக்கு நல்ல தந்தை.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளராகச் செயலாற்றி வரும் இவர், “தமிழ்ச்சங்க விருது’, “ஆனந்த விகட’னின் “தமிழ் நாவலுக்கான விருது’, “நொய்யல் விருது’ பெற்ற படைப்பாளியும்கூட.

“கலாசாரத்தின் அரசியல்’, “ஆட்சித்தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை’, “மனிதர், நாட்கள், உலகங்கள்’, “சமயங்கடந்த தமிழ்’ களப்பணி காட்டும் ஏழு ஆய்வு நூல்களும்; “ஓட்டை இல்லாத புல்லாங்குழல்’, “திசையெல்லாம் சூரியன்’, “பாசி வெளிச்சம்’, “ஆதிபுதிர்’ ஆகிய நான்கு நூல்களில் கவிஞருக்குரிய தன் தனித்துவத்தை முன்வைக்கிறார்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் சட்டசபை உறுப்பினர் தேர்தலில், சுயேட்சையாக தேர்தல் களத்தில் குதித்ததுபோல், இ.கம்யூ கட்சி சார்பில் 2006-ல் திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தேர்தலில் நின்ற மக்கள் பிரதிநிதி.

நவீன மொழி ஆளுமையும், நவீன ஊடகத்தையும் கற்ற படைப்பாளி சு. வெங்கடேசன் அவர்களை சந்திக்கச் சென்ற வேளையில் ஊடக நிறுவனத்தில் கம்ப்யூட்டர்முன் அமர்ந்து தன் “கன’மான “காவல் கோட்டம்’ நூலினை மடியில் கிடத்தி ஒரு பகுதியை வாசித்தவாறு கணினியில் பதிவு செய்துகொண்டிருந்தவருடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். பத்து நிமிட பணிக்குப் பின், “இனிய உதய’த்துக்காகச் சந்தித்த வேளையில்…

உங்களை எழுதத் தூண்டியது எது?

“”என்னுடைய பள்ளி வாழ்க்கையில் தமிழாசிரியராய்த் திகழ்ந்த புலவர் இளங்குமரனாரின் தமிழ்ப் பயிற்றுவிப்புதான் மொழிசார்ந்த ஈர்ப்புக்குக் காரணமாயிற்று. ஹார்விப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி படிக்கும் காலத்திலேயே இலக்கணத்துடன்கூடிய மொழிவாசிப்பு என்னை கவிதை எழுதத் தூண்டியது. 14, 15 வயதில் கதை எழுதத் தொடங்கினேன். என் முதல் நாவல் “டயரிக்கு ஓர் உயிர்’ வெளிவந்தது. எனது இலக்கிய ஈடுபாடுப் பயணம் தொடர்கிறது.”

எத்தகைய அணுகு முறையில் இடதுசாரி இலக்கிய, படைப்புலக நட்பு கிட்டியது? அதன் மூலம் கற்றதும்- பெற்றதும்?

“”பொதுவாகவே எனக்கு தத்துவம் சார்ந்த எழுத்து விருப்பம். அது சார்ந்த பொதுவுடைமை சித்தாந்தம், மார்க்சிய தத்துவத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டது. மதுரையில் அதற்கான நண்பர் களம் நிறைய கிடைத் தது. இதன்மூலம் இடதுசாரி இயக்கத்தின் பக்கம் என் கவனம் திரும்பியது. சோவியத் இலக்கியம், அதன் மனித வாழ்வியலின் வெளிச்சப்பார்வை, வெளிப்பாடு, அதன் தாக்கம் என்னை முழுக்க முழுக்க மார்க்சியத்தின் பாலும் அதன்மூலம் அரிய நண்பர்களும் எனக்கு திசை வழி காட்டினர்; காட்டி வருகின்றனர்.”

வாசிப்பு – எழுத்தாற்றலின் உந்துதலுக்கு உள்ள உறவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“”ஒரு மனிதனின் சுவாசிப்பே வாசிப்புதான் என்பேன். நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம் நம் எண்ண ஓட்டத்தை விரிவு படுத்தி விருப்பு- வெறுப்புக்கு அப்பாற்பட்டு ஒரு புதிய மனிதனை உருவாக்குகிறது. கிராமியப் பின்னணியில் வளர்ந்த நான் அம் மக்களின் அவலங்களை- அவர்களின் அழகியல் கூறுகளை எப்படி எழுத வேண்டுமென்று கற்றுத் தந்தது வாசிப்பின் மூலமே என்று சொல்ல வேண்டும்.”

தங்களின் 600 ஆண்டுகால வரலாற்றுப் புதினமான “காவல் கோட்டம்’ எழுதத் தூண்டிய பின்புலம் என்ன?

“”இந்தியாவில்- தமிழகத்தில் வரலாற்றுப் புதினங்களை பலர் படைத்திருந்தாலும் என்னை இப்புதினத்தை எழுதத் தூண்டியது ஸ்வீடிஸ் எழுத்தாளர் செல்மா லாகர் லேவ் எழுதிய “மதகுரு’ என்ற புதினம்தான். ஏறக்குறைய காவியம்போல் ஒளிரும் வண்ணம் வடித்திருப்பார். நவீன இலக்கிய உத்திக்கும் பொருந்தும்படி புதினத்தை தலைமுறை காலங்களை வர்ணிக்கும் பாங்கு, இன்றைய இளைய தலைமுறையை ஈர்க்கும்படி செய்யும் புதினம்.

அடுத்து, யாசினியாவுடைய “மண்கட்டியை காற்று அடித்துப் போகாது’ என்ற சோவியத் ரஷ்யாவின் நிலம் சார்ந்த வாழ்வினை முதுகிழவன் மொழியில் நடைபயிலும் நாவல்.

இந்திய இலக்கியங்களில், இந்திய தேசத்தின் வளர்ச்சி, சமூகத்தின் மாற்றத்தையும் அதனுடைய நிலப்பிரபுத்துவ குறியீட்டை அசைத்த பாங்கையும் விவரிக்கும் நாவலான நீலகண்டரின் “பறவையைத் தேடி’ என்ற நாவல் போதித்தது.

அடுத்து மாஸ்தி வெங்கடேசய்யாவுடைய “சிக்கவீர ராஜேந்திரன்’ என்ற குடகு நாட்டை ஆண்ட கடைசி மன்னன் பற்றிய கதை. இவை என்னை ஒரு வரலாற்று நாவல் எழுதுவதற்கான ஆர்வத்தை உருவாக்கியது.”

“காவல் கோட்டம்’- உள்ளீடு என்ன?

“”நான் மதுரையில் பிறந்து வளர்ந்ததால் மதுரை மண்ணை 600 ஆண்டுகளுக்கு முன்னால் யோசித்துப் பார்த்தேன். இந்த நாற்சதுர வீதிகள், மனிதர்கள், அவர்கள் உருவாக்கிய கலை வடிவங்கள், அவர்கள் வாழ்வியல் அழகியல் கூறுகள் என விரிவாகச் சொல்ல, எழுத நினைத்தேன். அதற்கான களப்பணி பத்து ஆண்டு காலம். அந்தக் கனவில் பிறந்ததே “காவல் கோட்டம்’. மேலும் இந்நாவலை எழுதும் முன் பா. சிங்காரம் அவர்களின் “புயலிலே ஒரு தோணி’ என்ற புதினம் ஒரு முக்கியமான வரலாற்றுக் காலத்தைப் பற்றி பேசியது. அது எனக்கு மேலும் “காவல் கோட்ட’ புதின வடிவத்துக்கு நெறிப்படுத்தியது.

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். இவை வெறும் கதைகள் அல்ல; கதையும் வரலாறும் இணைபிரியா முதுமொழியில் சொல்லப்பட்டவை. அம்மொழியில் முளைத்து என் போக்கில் வளர முயன்ற ஆசைதான் இது.”

இந்நாவலின் துவக்கமாக – துவக்கப் புள்ளியாக அமைந்தது எது?

“”ஒரு நாவலை எழுதத் துவங்கும் புள்ளி ஆர்வத்தை மட்டுமே மையமாகக் கொண்டது. துவக்கப் புள்ளியைக் கடந்து உள் நுழையும்பொழுது நாம் சந்திக்கும் போதாமைகள் எண்ணற்றவை. நமது மொழி அறிவின் போதாமையில் துவங்கி நமது மொழியின் போதாமை வரை, நமது வரலாற்று அறிவின் போதாமையிலிருந்து நமது வரலாற்றுத் தரவுகளின் போதாமை வரை, நம்மைச் சுற்றியிருக்கும் போதாமைகளால் கவலைப்பட்டு நமது போதாமை கண்டு வெட்கப்படும் போது நாவலின் பிரம்மாண்ட சக்தியை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு நாவலை எழுத நாம் என்னவாகவெல்லாம் ஆக வேண்டியிருக்கிறது. அதுவாகவெல்லாம் ஆகும்பொழுதுதான் நமது மனதின் வீரியமிக்க பகுதியை நம்மால் கண்டுணர முடிகிறது. “காவல் கோட்டம்’ உருவான கதை பெரிது. இதில் எழுதப்பட்ட வரலாறு இதுவரை எழுதப்படாத வரலாறு.”

இந்த 600 ஆண்டுகால வரலாற்றில் தாங்கள் முன்வைத்தவை?

“”மதுரை நகரின், மதுரை அரசின், தென்தமிழகத்தின் 600 ஆண்டுகால வரலாற்றை கூறுகிறது.

விஜயநகர, பிரிட்டிஷ் பேரரசுகளின் விரிவாக்கம், ஆட்சி முறைகளை விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கிறது.

பத்தாண்டுகால கள ஆய்வு, நாட்டார் கதைகள், வாய்மொழி மரபு ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றின் விடுபட்ட கண்ணிகளை இணைக்கிறது.

வரலாற்றுப் போர்வையால் மறைக்கப்பட்டுவிட்ட முந்தைய வாழ்வியல் செய்திகளைப் பார்வைக்கு வைக்கிறது.

இதுவரை சொல்லப்படாத வரலாற்றுச் செய்திகள் சிலவும் வெளிச்சமிடப்படுகின்றன.

14-ஆம் நூற்றாண்டுக்குப்பின் தென்னிந்திய மண்ணில் நிகழ்ந்த பெரும்பாலான போர்களையும் அதிகார மாற்றங்களையும் விவரிக்கிறது.

நாவலின் முதல் பாகத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங் களும் நிகழ்வுகளும்கூட கற்பனையாக அன்றி வரலாற்றிலிருந்தே விரிக்கப்பட்டுள்ளன.

காலந்தோறும் மாறிவருகிற நாட்டு நிர்வாகத்தையும் நீதி முறையையும் படம்பிடிக்கிறது.

காலனி ஆட்சியின் மாற்றாந்தாய்ப் போக்குகளை ஆதாரங் களுடன் சுட்டுகிறது.

ஐரோப்பிய பாணிக் கல்வி, ரயில், மெட்டல் சாலைகள், காட்டன் மில், நவீன தொழில்நுட்பங்களின் வருகையை விரிவாகக் கூறுகிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கான திட்டமிடல், கட்டுமானம், பாசனப்பரப்பு உருவாக்கம், வைகை வடகரை மக்களின் புதிய வேளாண் செழிப்பைக் கொண்டாடுகிறது.

பழைய காவல்முறையை ஒழித்து அதன் புதைகுழியின்மேல் புதிய காவல்துறை உருவான கதை, இதனைத் தொடர்ந்து வந்த குற்றப் பரம்பரைச் சட்டம், காலனி அரசின் அடக்குமுறை ஆகியவற்றை ஆதாரப்படுத்துகிறது.

காலங்களினூடாக விரிவாக்கப்படுகிற மீனாட்சி கோவில், மதுரையின் வளர்சிதை மாற்றங்கள் அழகாகக் காட்சிப்படுகின்றன.

பெருமத- குலதெய்வ வழிபாடு, விழாக்கள், வாழ்க்கை வட்டச் சடங்குகளை விரிவாகக் கூறிச் செல்கிறது.

இரு பெரும் பஞ்சங்கள், வெள்ளம், கொள்ளை நோய்களால் நிகழ்ந்த பேரழிவுகளை மனம் பதைக்கப் புலம்புகிறது.

இனவரைவியல் பார்வையில் சமூகப்போக்குகளை விளக்குகிறது.

தமிழ்ச் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணையக்கூடாமல் ஒதுக்கப்பட்டு களவுக்குத் தள்ளப்பட்ட ஓர் இனக்குழுவின் வாழ்வியலை உயிர்த்துடிப்புடன் சித்தரிக்கிறது.

இடையூறுகளுக்கும் துன்ப துயரங்களுக்கும் நடுவில் வாழ்க்கையைக் கொண்டாடும் கோலங்களை நகைச்சுவை தொனிக்கச் சொல்கிறது.”

மூத்த படைப்பாளிகள் சாகித்ய விருதுக்குத் தகுதியானவர்கள் மத்தியில் உங்கள் 10 -ஆண்டுகால உழைப்புக்கு – இளம் படைப்பாளிக்கு இப்பெரும் விருது பெறுவது சிறப்புதான். வாழ்த்துகள். இதில் உங்கள் முன்னோடியாக எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்நிற்கிறார். அவரது எழுத்தாற்றலைப் எப்படிப் பார்க்கிறீர்கள்?

“”ஜெயகாந்தன் அவர்கள் ஓர் இயக்கம். அவர் தொடாத துறையே இல்லை. இலக்கியம்- கவிதை- அரசியல்- சினிமா- கலை- இசை- பேச்சாற்றல்- மொழிபெயர்ப்பு என பன்முகத் தன்மை கொண்டவர். தமிழ்நாவல் உலகில் தமிழுக்கு நவீன இலக்கியத் தடத்தின் முதலாமவர்.

அவர் காலத்தில் அச்சு, ஊடகத்தன்மைகள் வேறு. என் காலத்தின் அச்சு- ஊடக விரிவாக்கம் வேறு. அப்போதெல்லாம் பெரிய வரலாற்றுப் புதினங்கள் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்த பிறகே நூல் வடிவம் பெறும். ஏனெனில் அதற்கான அச்சு வசதியோ, விரைவோ கிடையாது. இன்று அப்படி அல்ல. நவீன விஞ்ஞான வளர்ச்சி ஒரு பெரும் வாசகப் பரப்பை உருவாக்கியுள்ளது. சமூகத்தின் வளர்ச்சியை- வீழ்ச்சியை என்னைப் போன்ற இளைஞர்கள் பதிவு செய்ய ஒரு வழிகாட்டுதலாக இந்தக் “காவல் கோட்டம்’ நாவல் ஓர் அடையாளம் என்பேன். மேலும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இத்தகைய ஊடக விரிவாக்கம் ஒரு கொடை என்றே சொல்ல வேண்டும்.”

“கவிதை உலகம் போயிற்று’ என்ற ஜெயகாந்தனின் கூற்றை ஒரு கவிஞராக எப்படி பார்க்கிறீர்கள்?

“”கவிதை என்றும் வாழும். தமிழ்க் கவிதை என்றும் காலத்தின் வடிவுக்கு ஏற்ப மாறும் தன்மையுடையது. புற்றீசல்போல் புறப் படுவதால் அதன் அழகும்- கவிதைத் தன்மையும் குறைபட்டுப் போயிருக்கிறது. நல்ல கவிதைகள் எப்போதும் பேசப்படும்.”

மரபிலிருந்து பிறந்த புதுக் கவிதையை புதிய இலக்கிய வடிவம்- புதிய இலக்கியப் படைப்பு என்றாலும் புதுக் கவிதை எழுதுகிறவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சொற்களை மடக்கிப் போட்டு எழுதுகிறார்கள். மரபுக்கு ஒரு பொது வடிவம்போல் புதுக் கவிதைக்கு இல்லையே?

“”தமிழ் மொழி ஆரம்ப காலத்தில் சொல்லப்பட்டது. பின்பு எழுதப்பட்டது. அதுவும் பாறைகளில் தொடங்கி ஓலை வரை உருவெடுத்தது. அதனதனுக்கு தக்கவடிவம் பெற்ற மரபாய் நின்றது; நிற்கிறது. நவீன புதுக் கவிதையில் செய்யுள் வடிவம் எதிர்பார்ப்பது தவறு. மொழியில்- மொழிநடையில் வடிவ மாற்றம்- உருவ மாற்றம் இலக்கியத்தில் உண்டு. அப்படி உருவானதே புதுக் கவிதை. அது என்ன சொல்கிறது என்பதே நவீன மொழி.”

அரசியல் களத்தில் – படைப்பாளராய் ஜெயகாந்தனுக்குப் பிறகு சட்டசபை தேர்தலில் மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் களம் இறங்கி னீர்கள். இதில் கற்றதும் – பெற்றதும்?

(“அப்படியா?’ என்றவர், எப்போது? எந்தத் தொகுதி, பெற்ற வாக்குகளை நம்மிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.) “”இன்றைய தேர்தல் முறை பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை ஒரு அணியின் சேர்க்கையைப் பொறுத்திருக்கிறது. அத்தகைய அணிபலத்தைக் கொண்டே மக்களும் வாக்களிக் கிறார்கள். இதில் தனிமனித ஆளுமை, படைப்பாளன், புத்திஜீவிகளுக்கு இடமில்லை. எந்த அணி வலுவானதோ அந்த அணி வேட்பாளரே வெற்றி பெறுகிறார். நான் படைப்பாளியாய் தேர்தல் களத்தில் குதிக்க வில்லை. என் கட்சி சார்ந்த அரசியலை முன்நிறுத்தியே தேர்தலில் நின்றேன். இதில் வெற்றியும் தோல்வியும் அணியைப் பொறுத்ததே தவிர, வேட்பாளர் அல்ல என்பதே நான் கற்றதும்- பெற்றதும்.”

இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வீழ்ச்சிக்கு அல்லது மக்களின் புறக்கணிப்புக்கு ஆளாகியிருப்பது கம்யூனிஸத்தின் வீழ்ச்சியா? கம்யூனிஸ்டுகளின் நடைமுறை நெறி தவறா?

“”இந்திய அரசியலில் நான்கு மாநிலங்களில் கம்யூனிஸ இயக்கம் பலத்தோடு இருக்கிறது. இந்தியா முழுவதும் கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ சித்தாந்த நெறியை விரும்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஓட்டு எண்ணிக்கையோ, எம்.எல்.ஏ., எம்.பி., பதவிதான் கம்யூனிஸத்தின் வளர்ச்சி, வீழ்ச்சியைக் கணிக்க முடியுமா என்றால் அது சரியான கணிப்பல்ல.

90-களில் இந்தியா உலகமயமாக்கலை நோக்கித் திரும்பியது.

அரசியலில் இருந்து நீக்கப்பட்ட இளைஞர்கள் சமூக லட்சியங்களை முன்னிறுத்தாமல் வணிகச் சந்தை, அவர்களின் உழைப்பில் ரத்தத்தை உறிஞ்சி பணங்களை அள்ளித் தந்து தன்னலம் சார்ந்த நிலைக்கு திசை திருப்பியிருக்கிறது. இந்தக் கோரப் பிடியிலிருந்து அவர்கள் விடுபடும் காலம் வெகு தொலைவில் இல்லை. எங்கள் திசைவழியில் லட்சிய நெறியில் நாங்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். சமூக நீதி, சமூகநெறிகளை முன்னிறுத்தி பல்வேறு விஷயங்களில் மக்களுக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறோம். போராடிப் போராடி தோற்றுக் கொண்டிருந்தாலும், உலகமயமாக்கல் கோரப் பிடியிலிருந்து மீட்டெடுக்க பலங்கொண்ட ராட்சஷனுடன் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.”

தலித் இலக்கியம் தலித்துக்களை உயர்த்தி விடுமா? தலித்துகளின் மேன்மைக்கு எவ்விதம் அவ்விலக்கியங்கள் விழுமியதாய் இருக்கிறது?

“”தலித் இலக்கியம் தலித்துகளின் வாழ்வியலை- ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டதன் பின்னணியை அதன் கூறுகளைப் படம் பிடிப்பதே. அதன் மூலம் பொதுவான சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்புவதும் அவர்களின் இருண்ட வாழ்க்கையிலிருந்து மீட்டெடுப்பதே தலித் இலக்கியம். தலித் மக்களின் பன்னூற்றாண்டு கால அவலங்களை- மிக முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்து வருகிறது என்பதே தலித் இலக்கியம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. தலித் இலக்கியம் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் இலக்கியத்தின் ஒரு பகுதியே.”

படைப்புலகில் தனித்தமிழ் நடை மக்களிடம் சென்றடையுமா?

“”சாத்தியமில்லை.”

“மக்களுக்கிடையே போட்டியை உண்டாக்குவது அறிவியல்; அன்புறவை ஏற்படுத்துவது இலக்கியம்’ என்ற கூற்றினை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“”சரியான பார்வைதான். அறிவியல் வளர்ச்சி ஆக்கத்துக்கே தவிர அழிவுக்கு அல்ல. அறிவியல் நோக்கம் தன்னையும் வளர்த்து, தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். இலக்கியம் ஆயினும், அறிவியல் ஆயினும் மனிதனை மேன்மைப்படுத்த வேண்டுமே தவிர அவர்களை கீழ்மைப்படுத்தவோ, அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லவோ கூடாது.”

உலகில் தாய்மொழி சிறப்பைப் பெற்ற தமிழினம் மொழி வளர்ச்சியில் மிகவும் பின்னடைந்துள்ளதே? இது ஏன்? இதிலிருந்து விடுபட வழி என்ன?

“”திராவிட இயக்கத்தவரின் மொழிக் கொள்கையே மொழிசார் வளர்ச்சிக்குப் பின்னடைவு ஏற்படக் காரணம் எனலாம். தமிழ்மொழி குறித்த விஞ்ஞானக் கண்ணோட்டமும் ஆங்கிலம் குறித்த மயக்கமற்ற பார்வையும் உருவாக்கப்பட வேண்டும். மாநில மொழிகள் அனைத்தும் மதிக்கும் வண்ணம் சமஉரிமை வாய்ப்பு தந்து, தமிழ் மொழியின் சிறப் பைப் பிற மொழிகள், நாடுகள் அறியும் வண்ணம் கொண்டு செல்லப்பட வேண்டும். தமிழ் அறிவிய லோடு சேர்ந்து நடைபயில அனைத்து முயற்சிகளும் செய்ய வேண்டும். இன்றைய நவீன கணினி காலத்தில் இவற்றை நிறைவேற்றுவது சாத்தியமே.”

இலக்கியவாதிகள்- படைப்பாளிகள் தமிழ்ச் சினிமா உலகில் பின்னடைவையே கண்டிருக்கிறார்கள். சினிமாவில் எழுத்தாளர்கள் நியாயமான வெற்றி அடைவதற்கு தடையாய் இருப்பது எது?

“”இரண்டு ஊடகங்களும் இருவேறு தன்மை கொண்டது.

அவற்றை புரிந்துகொண்டு பணி செய்யும்போது தடைகள் தகரும்.”

இன்றைய சூழலில் ஈழமக்களுக்கு- தனிஈழம் மட்டும் தீர்வு என்ற உரத்த குரல் மட்டுமே தீர்வாகுமா?

“”ஈழமக்களின் அரசியல் தீர்வு இங்கிருந்து பெறுவது அல்ல. இன்றைய சூழலில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும், தனித் தமிழீழம் கோருவோர் குரலுக்கும் இடையில் காத தூர இடைவெளி இருக்கிறது. ஈழமக்களுக்கு இன்றைய தேவை- அல்லலுற்று ஆற்றாது அழுது துயருரும் ஈழ தமிழ்மக்களின் நியாயமான உடனடி கோரிக்கைகளுக்குத் தீர்வு காண இலங்கை அரசை சர்வதேச சமூகத்தின் மூலமே நிர்ப்பந்திக்க முடியும்.

அந்த நிர்ப்பந்தத்தை இந்தியா முன்னிறுத்தி தீர்வு காண தயாராக இல்லை. இதனை இங்குள்ள ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த- அமர்ந்துள்ள திராவிடக் கட்சிகள் இந்திய அரசை நிர்ப்பந்தித்து ஈழமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்முயற்சி எடுக்க வேண்டும்.”

கவிஞர்- மக்கள் பிரதிநிதி- சரித்திரப் பதிவேடு புதினப் படைப்பாளி- மக்கள் வாழ்வியல் கள ஆய்வு- இடதுசாரி கலை இலக்கியப் பணி என பல தளங்களில் எப்படி பயணிக்க முடிகிறது? நீங்கள் முழுநேர எழுத்தாளரா?

“”நான் முழுநேர எழுத்தாளன் அல்ல. எழுத்து எனக்கு மிகவும் பிடித்த பணி. படைப்புலகின் ஊழியன் நான். எனவே, இதில் அணையாது- அகலாது துயருற்றா லும் தீக்காய்வேன்.”

விமர்சனங்கள் படைப் பாளிக்கு எத்தகைய வீச்சை ஏற்படுத்துகிறது?

“”விமர்சனம் படைப்பாளிக்கு மிகப்பெரிய சொத்து. விமர்சனம் எல்லாத் தரப்பு மக்களுக்கும், வாசகனுக்கு அருகில் கொண்டு போய் சேர்க்கிறது. விமர்சகன் + வாசகர் + படைப்பாளன் =
மற்றொரு புதிய விளைச்சல் என்றுகூட சொல்லலாம்.”

இலக்கிய உலகில் தலைமுறை இடைவெளி குறித்து?

“”தலைமுறை இடைவெளி இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் இலக்கியத் தளத்துக்குரிய பணி நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இடைவெளி என்பது அவரவர் பார்வையில் இருக்கிறது.”

கடந்த தலைமுறை எழுத்தாளர்களில் தங்களைப் பாதித்தவர்கள்? எத்தளத்தில்?

“”கு. அழகிரிசாமி, பா. சிங்காரம். வாழ்வைப் பற்றிய அவர்களது பார்வையும் மொழியைக் கையாளும் முறையும் அவர்களின் கதை படைப்புகள்.”

உங்கள் தலைமுறை படைப்புலகில் தங்களைப் பாதித்தவர் யார்? எத்தளத்தில்?

“”ஷோபா சக்தி- நாவலில்.”

தொகுப்பு : எழில்முத்து

நன்றி – இனிய உதயம்

கருத்துகள் இல்லை: