22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 4 : தமிழ்மொழியின் தொன்மையும் மாண்பும்!

 வித்துவான் பாலூர் து.கண்ணப்ப முதலியார்

தமிழ்மொழி தொன்மையானது என்பது வான்மீக ராமாயணமும், வியாசர் மகாபாரதமும் கூறுமாற்றால் அறியலாம். பாரதத்தில் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்பு வருகிறது. வானரங்களுக்குச் சுக்ரீவன், ""நீங்கள் மலைய மலையின் சிகரத்தில் அகத்தியரைக் காண்பீர்கள். அவர் ஆணை பெற்றுப் பாண்டியர்க்கு உரித்தான கபாடபுரத்தைக் காண்பீர்கள்'' என்று கூறிய குறிப்பு வான்மீக ராமாயணத்தில் வருதல் காண்க. பாண்டியர்களைப் பற்றிய குறிப்பு அந்நூலில் காணப்படுதலின், அவர்களின் மொழியாகிய தமிழின் பழமையும் இதன் வழி அறியவருகிறது. பாண்டியநாடு தமிழ் வளர்த்த நாடு என்பது,
""சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும்
செüந்தர பாண்டியன் எனும்தமிழ் நாடனும்
சங்கப் புலவரும் தழைத்தினி திருந்த
மங்கலப் பாண்டி வளநா டென்ப''
என்னும் செய்யுளால் தெரிகிறது. பாரதத்திலும் தமிழ்நாட்டின் சிறப்பும், பாண்டியர் தமிழ் நாட்டை ஆண்ட தொன்மையும் கூறப்பட்டுள்ளன. உதியஞ்சேரலாதன், பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கட்கு உணவு கொடுத்து ஊக்கியதைப் புறநானூறு,
""அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்''
என்கிறது. இந்நிகழ்ச்சியை அகநானூறு, ""முதியங் பேணிய உதியம் சேரல், பெருஞ்சோறு கொடுத்து ஞான்றை'' என்றும், சிலம்பு, ""ஓர் ஐவர் ஈர்ஐம்பதின்மர் உடன் எழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த சேரன்'' என்றும் கூறுதல் காண்க. இச்சேர மன்னன் நாட்டில் பேசிய மொழி தமிழே ஆகும். பதிற்றுப்பத்து என்னும் நூல் தமிழில் அமைந்திருத்தல் காண்க. சோழ நாட்டிலும் தமிழ் வளர்த்த நிலையினை,
""மன்ற வாணன் மலர்திரு அருளால்
தென்தமிழ் மகிமை சிவணிய செய்த
அடியவர் கூட்டமும் ஆதிச் சங்கமும்
படியின்மாப் பெருமை பரவுறு சோழனும்
சைவமா தவரும் தழைத்தினி திருந்த
மையறு சோழ வளநா டென்ப''
என ஒரு செய்யுள் கூறுதல் காண்க. இம் மூவேந்தர்களைப் பற்றிய குறிப்பினைத் தொல்காப்பியர்,
""போந்தை வேம்பே ஆர்என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்''
என்று மூவேந்தர் சூடிய மலர்களைக் குறித்துள்ளார். தொல்காப்பியம் தமிழ் மொழியால் ஆனது.
""வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைபிரிதல் இன்று''
என்று குறளின் விசேட உரையில் பரிமேலழகர், ""பழங்குடி தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார். தொன்று தொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்'' என்று விளக்கினார்.

அகத்தியர்க்கு இறைவர் தமிழ் மொழியை உணர்த்தினார் என்பது, ""ஆதியில் தமிழ் நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகன்'' என்றும்,
""விடைஉ கைத்தவன் பாணினிக் கிலக்கணம் மேனான்
வடமொ ழிக்குரைத் தாங்கியல் மலையமா முனிக்குத்
திடமு றுத்திஅம் மொழிக்குஎதிர் ஆக்கிய தென்சொல்''
என்றும் ""வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கு இணையாகத் தொடர்புடைய தென்மொழியைக் குறுமுனிக்கு வகுத்துரைத்தார் கொல்ஏற்றுப் பாகர்'' என்று வருதல் காண்க. இத்தமிழை முருகப்பெருமானும் அகத்தியருக்கு அறிவுறுத்தினார் என்பதை அருணகிரியார்,
""சிவனைநிகர் பொதியவரை முனிவன் அகம் மகிழஇரு
செவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே''
என்றும் பாடியிருக்கின்றனர்.

இனித் தமிழ் மொழியின் சிறப்பைக் காண்போம். முதலாவது இம்மொழி தெய்வீகத்தன்மை வாய்ந்தது. இறைவனே தமிழ் வடிவினன். இவற்றைத் தேவாரத்தாலும், பிரபந்தத்தாலும், பரஞ்சோதியார் வாக்காலும் அறியலாம்.
""தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை
உண்ட பாலனை அழைத்ததும், எலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண்ட தமிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்''
என்பது பரஞ்சோதியார் பாடல். வழிபாட்டிற்கும் இம்மொழி உரியது என்பதை ""தமிழ்ச் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர'' எனத் திருமந்திரத்தும், ""அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் நம்மேல் சொற்றமிழ் பாடுக'' என்று பெரியபுராணத்தும் கூறப்பட்டிருத்தல் காண்க. முத்திக்கு வித்தானது தமிழ் என்பதை,
""தித்திக்கும் தெள்ளமுதமாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியே என் முத்தமிழே''
எனத் தமிழ்விடுதூதும் கூறுதல் காண்க. தமிழ் மொழியினிடத்துத் தெய்வங்கட்குப் பெருவிருப்பம் உண்டு என்பது இலக்கியங்களால் அறிய வருகின்றன.

""கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ்''
என்பது பரஞ்சோதியார் வாக்கு. ""முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்'' என்பார் அருணகிரியார்.
""கடுக்க வின்பெறு கண்டனும் தென்திசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுவான் ஆடலின் இளைப்பு
விடுக்க ஆரம்மென் கால்திரு முகத்திடை வீசி
மடுக்க வும்தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ''
என்பது திருவிளையாடற் புராணம். ""பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே'' என்பது குமரகுருபரர் வாக்கு. இன்னோரன்ன காரணங்களால் தமிழ் தெய்வங்களால் பெரிதும் விரும்பப்பட்டதை நன்கு தெளியலாம்.
தமிழ் என்னும் சொல் தமிழே அன்றித் திராவிடம் என்னும் சொல்லின் திரிபன்று. தொல்காப்பியத்தில் ""தமிழெனும் கிளவி'' என்ற தொடரே தமிழ் என்னும் சொல் இருத்தலைக் காட்டுகிறது. "தமிழ் கூறும் நல்லுலகென்பதை' தொல்காப்பியப் பாயிரத்தும் காண்க. ""செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி'' என்னும் தொடரையும் காண்க.

""செந்திறத்த தமிழ் ஓசை வடசொல்லாகி'' என்னும் நாலாயிர திவ்யப் பிரபந்தத் தொடரால், வடமொழிக்கும் துணையாய் இருப்பது செந்தமிழ் என்பதையும் அறியவும். தமிழ்மொழியே தீராத ஐயங்களையும் தீர்க்கவல்லது என்பதை வேதாந்த தேசிகர்,
""செய்யதமிழ் மறைஅனைத்தும் தெளிய ஓதித்
தெரியாத மறைநிலங்கள் தெரிக்கின் றோமே''
என்று கூறுதல் காண்க. இதன் வழி, தமிழ் மறைகள் இருந்தமையும், உணர்வோமாக. கம்பர், ""ஆரணத்தின் மும்மைத் தமிழ்'' என்று அறிவித்தலை ஓர்க.

தமிழ்மொழி இனிமையானது என்பது இதில் அமைந்துள்ள சொற்களின் உச்சரிப்பு மூலம் அறியலாம்.
இஃது ஓதற்கெளிதாய், உணர்தற்கு இன்பமாய் அமைந்த மொழி. ஏன்? இனிமை என்னும் பொருளையே தரும் சொல்லாகவும் தமிழ்ச்சொல் திகழ்கிறது.
""இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்'' என்பது பிங்கல நிகண்டு. இக்கருத்தைக் கீழ்வரும் இலக்கியத் தொடர்களைக் கொண்டும் அறிந்துகொள்ளலாம்.

""தமிழ் தழீஇய சாயலவர்'' என்று சிந்தாமணியும், ""தமிழ் மாருதம்'' என்று பெரியபுராணமும், ""வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே'' என்று கம்பராமாயணமும் "தமிழ்' என்னும் சொல்லை "இனிமை' என்ற பொருளில் அமைத்திருத்தலைக் காண்க.

திரு.இராகவ ஐங்கார் அவர்கள், ""இனிமை என்னும் பொருள்படும் தமிழ் என்னும் சொல்லே, நம்நாட்டு மொழிகளுள் தொன்மையும், முதன்மையும் பெற்று இத்தென்னாட்டுத் தாய் மொழிக்குப் பெயராய்ப் பண்டைக்காலம் தொடங்கி வந்தது'' என்று கூறியுள்ளார்.

தமிழ்மொழி எழுத்து நுட்பமும், சொற் பெருக்கமும், பொருட்பொலிவும், யாப்பமைதியும், அணியழகும், ஒலி இனிமையும், தெய்வத் தன்மையும் அமைந்தது. தமிழ்மொழியின் மேன்மையைக் குறித்து மேற்கு நாட்டவர்கள் நன்கு சிறப்பித்துக் கூறியுள்ளனர்.

கார்டுவெல், கிரியர்ஸ்ன் போன்ற மொழிநூல் பேராசிரியர்கள், தமிழ்மொழியின் ஒலி அமைப்பு, வரி அமைப்பு முதலிய சிறப்பு இயல்புகளை மிக மிகப் பாராட்டி எழுதியுள்ளனர்.

தமிழ்மொழியின் சாயல் பிற மொழிகளிலும் சேர்ந்துள்ளது. ஹீப்ரு மொழியில் "துக்கி' எனப்படுவது "தோகை' என்னும் தமிழ்ச் சொல்லே ஆகும்.
இங்ஙனம் தமிழ்மொழி பிறமொழிகளில் கலந்திருப்பதை ரைஸ் டேவிஸ் (Rhys Davies) என்பவரும், ரெவ. ஹெரஸ் (Rev.Heras) என்பவரும் கூறியுள்ளனர்.
தமிழ் என்னும் சொல்லின் "' என்னும் வல்லினமும், "மி' என்னும் மெல்லினமும், "ழ்' என்னும் இடையினமும் சேர்ந்து "தமிழ்' மொழியின் ஓசையின் சிற்பியல்புகளை எடுத்துக் காட்டிக்கொண்டிருப்பதைக் காண்க; தமிழர்க்கே உரிய சிறப்பெழுத்துக்களாகிய , , , என்பனவற்றுள் "' எம்மொழியிலும் இல்லாச் சிறப்புடன் துலங்குதலை உணர்க.
இன்னோரன்ன வளமிக்க தமிழ் மொழியையும், தமிழகத்தையும், தமிழ் நூல்களையும் சிறப்பாகப் பாதுகாத்துக் கொள்வதோடு, பொதுவாக இந்தியாவையும் எவர் கையகத்தும் அகப்படாதவாறு முன்னணியில் நின்று எல்லா வகையாலும் காக்க வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: