22/02/2012

"தமிழ்' - ஆட்சிமொழியாக முதலில் குரல் கொடுத்தவர்! - இடைப்பாடி அமுதன்

டாக்டர் பிரான்சிஸ் புகானன் (15.2.1762-15.6.1829) ஓர் ஆங்கில மருத்துவர்; ஓர் அரசு அதிகாரி. அவர் 1800-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து மேற்குக் கடற்கரையிலுள்ள கனரா வரை, தரை வழியே பயணம் மேற்கொண்டார். அவருடைய பயண நோக்கம்: திப்பு சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர் கைப்பற்றிய பகுதிகளின் விவசாயம், கலை மற்றும் வணிகம்; மக்களின் சமயம், பழக்க-வழக்கங்கள், வரலாறு, புராதனம் போன்றவற்றைக் கண்டறிவது. உத்தரவு செய்தவர்: கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஜெனரல் வெல்லஸ்லி.


 அன்றைய காலத்தில் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பல மன்னர்களின் ஆட்சி நிலவியது. அவர்களின் ஆட்சிமொழி தமிழ் மட்டுமல்லாது பாரசீகம், உருது, கன்னடம், மராத்தி, தெலுங்கு என்று மன்னருக்கு ஏற்ப மாறுபட்டிருந்தது. உதாரணமாக, அன்றைய சேலம் ஜில்லாவில் மட்டும் (18-ஆம் நூற்றாண்டின் இறுதியில்; இன்றைய சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கியது) கன்னடம், பாரசீகம், மராத்தி ஆகியவை ஆட்சி மொழிகளாக விளங்கின. ஊத்தங்கரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் தாலுகாக்களில் கணிசமான அளவில் அலுவல் பணிகள் மராத்தியில் நடைபெற்றன. (Salem District Gazetteer by Richards, vol-1, pg.93)
 1851-இல் தான் அந்த நிலையை மாற்ற உத்தரவிட்டது கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர், சேலம் ஜில்லா நீதிமன்றங்களில் பாரசீக மொழி, வழக்கு மொழியாக இருந்ததை மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளை மட்டும் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகளால், ஆட்சியைச் சிறப்பாக நடத்த இயலாது என்பதை உணர்ந்த கம்பெனி அரசு, கலெக்டர், நீதிபதி, காவல்துறை அதிகாரிகள் போன்றோர் உள்ளூர் மொழியைக் கற்க வேண்டும்; அதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும் என்று 1800-ஆம் ஆண்டிலேயே உத்தரவைப் பிறப்பித்தது. (Guide to Records, Coimbatore District, pg.139)   தேர்ச்சி பெறுபவருக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது. 1796-ஆம் ஆண்டு முதல் கலெக்டர் பதவியில் நியமிக்கப்படுபவருக்கு உள்ளூர் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்று சென்னை கவர்னர் உத்தரவு பிறப்பித்தார். உள்ளூர் மொழிகள் தெரிந்திருந்தால், மக்களின் பிரச்னைகளை அதிகாரிகள் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும்; தெரிந்தும், தெரியாமலும் மொழிபெயர்ப்பாளர்கள் செய்யும் குளறுபடிகளுக்கு ஆளாகாமல் இருக்கலாம் என்பன போன்றவை கம்பெனி அரசின் எதிர்பார்ப்பாக இருந்தது.

 இந்தப் பின்னணியில் புகானன் மேற்கொண்ட பயணத்தின் ஒரு சிறு பகுதியைப்  பார்ப்போம். ஸ்ரீரங்கப்பட்டணத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு கிழக்கில் பயணித்து, மாதேஸ்வரன் மலை வழியாக தமிழ் நாட்டுக்குள் ("சேர நாடு' எனக் குறிப்பிடுகிறார்) வந்தார் புகானன். காவிரிக் கரையின் மேற்குப் பகுதிகளைப் பார்த்து வந்தவர், 1800 அக்டோபர் 15, 16, 17 தேதிகள் பவானியில் முகாமிட்டார். அம்மூன்று நாள்களில் பவானி பகுதியில் விளைந்த விவசாயப் பொருள்கள், வாழ்க்கை நிலை, கம்பெனியின் மாவட்ட ஆட்சியமைப்பு முறை, நீட்டலளவை, முகத்தலளவை, எடையளவை, காசு வகைகள், தமிழ் மாதங்கள்-ஆண்டுகள் அவற்றுக்கான ஆங்கில மாதப் பெயர்கள், பவானி கோயில் வரலாறு ஆகியவற்றை விரிவாக எழுதியுள்ளார். அவ்வாறு எழுதி வந்தவர், அரசின் கணக்கு, வழக்கிலிருந்து ஆட்சிமொழியைப் பற்றிக் குறிப்பிட்டு, தன் கருத்தையும் தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு எழுதியுள்ளார்:

 "ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவர்; பரம்பரைத் தலைவர்; மணியக்காரர் என்று பெயர். இரண்டு அல்லது மூன்று கிராமங்களுக்கு அல்லது ஒவ்வொரு பெரிய கிராமத்திற்கும் ஒரு கணக்குப் பிள்ளை உண்டு. கணக்குகள் முன்பு கன்னட மொழியில் எழுதப்பட்டன; இப்போது கம்பெனி ஆட்சிக்குப் பின்னர் (1799-க்குப் பின்) மராத்திய மொழியில் எழுதப்பட்டன. ஆனால், கணக்குகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும்; ஏனெனில், தமிழ்தான் இப்பகுதி மக்களின் மொழி; அதோடு, சென்னையிலுள்ள (மதராஸ்) வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு வேற்றுமொழி (மராத்தி) தெரிந்தவரின் அவசியம் தேவைப்படாது...' இவ்வாறு எழுதியுள்ளார் பிரான்சிஸ் புகானன். "மக்களின் மொழிதான் ஆட்சிமொழியாக இருத்தல் வேண்டும்' என்று அவர் சரியாகத்தான் கூறியுள்ளார். அவர் கூற்று  1956-இல் தான் முழுமை நிலையை எட்ட முடிந்தது - தமிழ் நாட்டில் "தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்' அப்போதுதான் நிறைவேறியது. தமிழ் ஆட்சிமொழியாக முதன் முதலில் குரலெழுப்பியவர் பிராசிஸ் புகானன்தான் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய செய்தி!

கருத்துகள் இல்லை: