13/02/2012

தமிழ் பவனம் வேண்டும்! - அமரர் கல்கி

தாகூரின் நூற்றி ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நினைவுகூறல்.
டாக்டர் தாகூரை பிரார்த்தனை மண்டபத்திலே மட்டும் நான் பார்க்கவில்லை. சாந்தினிகேதனத்திலுள்ள ஒவ்வொரு கட்டடத்திலும் குடிசையிலும் அவரைப் பார்த்தேன். ஒவ்வொரு செடியிலும், கொடியிலும், ஒவ்வொரு மரத்திலும் மலரிலும் அவரைப் பார்த்தேன். ஒவ்வொரு ஆசிரியரிடத்தும் ஒவ்வொரு மாணவரிடத்தும் அவரைப் பார்த்தேன். ஒவ்வொரு சிற்பத்திலும் சித்திரத்திலும் பார்த்தேன். ஒவ்வொரு விழாவிலும் வைபவத்திலும் பார்த்தேன். எங்கே திரும்பினாலும் மகாகவி தாகூரின் சாந்தம் குடிகொண்ட திருமுகம் தோன்றிக் கொண்டிருந்தது. அவருடைய அமுதக் கவிதைகள், அங்குள்ள மாஞ்செடிகளின் மர்மா சப்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவருடைய ஆத்மாவின் தபோசக்தி காற்று வெளியெல்லாம் பரவிச் சூழ்ந்து, அந்தப் பிரதேசத்துக்கே தூய்மை அளித்துக் கொண்டிருக்கிறது. டாக்டர் தாகூர் ஒரு மகாகவி மட்டுமல்ல; மகாஞானி; மகா தேசபக்தர். மகா தியாகி; மகா தபஸ்வி. காந்தி மகாத்மாவினால் "குருதேவர்' என்று போற்றப்பட்ட ஆத்ம சக்திவாய்ந்த பெரியார். அவரால் ஸ்தாபிக்கப்பட்ட சர்வ தேச ஸ்தாபனத்தில் தெய்வத் தமிழ் மொழிக்கு ஓர் இடம் இருப்பது மிக அவசியம். சீனபவனத்தைப் போல் தமிழ் பவனம் அல்லது தக்ஷிணபவனம் அங்கு ஏற்பட்டால் மிகவும் மேன்மையாயிருக்கும்.

செட்டிநாட்டு அரசர் தமிழ் பவனத்துக்கு அஸ்திவாரம் அமைத்திருக்கிறார். அதாவது தமிழ்ப் புத்தக நன்கொடை அளித்திருக்கிறார். அந்தப் புத்தகங்களை வைக்க ஒரு தனிக் கட்டடம் அந்தக் கட்டடத்திலே ஒரு தமிழ் ஆசிரியரும் அடுத்தபடியாக வேண்டும். தமிழ் ஆசிரியருக்கு உதவியாக இன்னொரு ஆசிரியரும், அவர்களுடைய உதவி கொண்டு ஆராய்ச்சி நடத்தும் மாணவர்களும் பின்னால் சேர்வார்கள். இப்படியாக செட்டிநாட்டு அரசரின் புத்தக நன்கொடை ஒரு தமிழ் பவனமாக வளர்ந்துவிட வேண்டும் என்பது பலருடைய மனோரதம். தெய்வத் தமிழின் சிறப்பை உலகம் அறியச் செய்ய வேண்டுமென்றால், மகாபுருஷர் டாகூர் அமைத்த சாந்தினி கேதனத்தில் தமிழ் பவனம் ஏற்பட வேண்டும்.
- கல்கி, பொங்கல் மலர் - 1947.

கருத்துகள் இல்லை: