22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 3 : தமிழ்ச் சொல்லியல்!

 வித்துவான் .இராசமாணிக்கனார்

மலைமீது ஏரினேன்' என்றெழுதியிருந்தான் மாணவன் ஒருவன். "ஏறினேன்' என்னும் சொல்லின் பகுதியை மட்டும் தனித்து எழுது எனக் கேட்டேன். "ஏறு' எனத் தன்னை அறியாமலேயே எழுதித் தான் செய்த தவற்றினையும் உணர்ந்தான் போன்று நின்றான்.


 "ஏறு' என்னும் சொல்லின் வளர்ந்த நிலைதான் ஏறினேன் என்பது; ஆகவே, வல்லினமிட்டே எழுதவேண்டுமென்றேன். இந்தச் சொல் மட்டுமன்று, எந்தச் சொல்லாயினும் சரி; எழுதும்பொழுது ஐயந்தோன்றுமேயானால் பகுதியை மட்டும் எழுதிப் பாருங்கள்; ஐயம் உங்களிடமிருந்து விடைபெறுமென்றேன். ஓரளவு தெளிவு பெற்றான் போன்றே அவன் காணப்பட்டான். ஆனால், அவனருகிலிருந்த நண்பன் ஒருவன் எழுந்து, """ஏறு' என்பதற்கு ஏன் வல்லினமிட்டு எழுதவேண்டும்; "ஏரு' வென எழுதினால் வரும் இழுக்கென்ன?'' என்றான்.

 வினா நல்ல வினாவே. ஏறுதலும் இறங்குதலும் எளிய செயல்களல்ல; உயிருக்கு இறுதியை விளைவிக்கக் கூடிய கடிய செயல்களே. ஆகவே அவற்றை எழுதும்பொழுது வல்லினமிட்டுத்தான் எழுதவேண்டும்.

இறத்தலும் பிறத்தலும் இவற்றைப் போன்று அரிய செயல்களே. அவற்றின் கடுமையை உணர்ந்துதான் அடியவர்கள் அனைவரும் பிறப்பும் வேண்டேன்; இறப்பும் வேண்டேன் எனப் பாடியிருக்கின்றார்கள். ஆகவே, அவற்றை எழுதும்பொழுது வல்லினமிட்டுத்தானே எழுதவேண்டும்! பெரியவர்கள் என்னும் சொல்லை ஆராய்ந்து பாருங்கள். மென்குணம் வாய்ந்தவர்கள் என்னும் பொருளைத் தருகின்றதன்றோ! பெரியவர்கள் என எழுதும்பொழுது இடையினமிட்டுத்தானே எழுதவேண்டும்? சிறியோர் என்பது சிறுமைக்குணமும், கடிய பண்பும் வாய்ந்தவர்களெனப் பொருள் தருதலால், அதை வல்லினமிட்டே எழுதவேண்டும்.

 "அறைந்தான்' என்னும் சொல் உள்ளத்திற் பதிய வன்மையாக உரைத்தான் என்னும் பொருள் தருதலால், அறைந்தான் என்பதற்கு வல்லினமிட்டே எழுதவேண்டியிருக்கின்றது.

 "செய்தி பரவியது' என்னும் தொடரில் வரும் பரவியதற்கு இடையினமிட்டு எழுதுகின்றோம். செய்தி எவ்வாறு பரவும்? ஒருவரிடமிருந்து ஒவ்வொருவரிடமாக மெல்லப் பரவுமன்றோ? மெல்ல விரிந்தது என்னும் பொருளைத் தருதலால் பரவியதற்கு இடையினமிட்டு எழுதுகின்றோம். அரம் அரிக்குமே யன்றி அறுத்தல் செய்யாது. அரிவாளும் அரிக்குமே யன்றி அறுத்தலைச் செய்யாது. ஆகவே அவற்றை எழுதும்பொழுது இடையின ரகரம் எழுதுகின்றோம். மனம் இரங்கினார் என்னுமிடத்தும், "இரங்குதல்' என்பது, உள்ளங் கசிந்துருகும் மென்மை உணர்த்துவதால் இடையின ரகரமே
 இடம்பெறுகின்றது.

 சலசலப்பு என்னும் சொல்லைக் கேட்கும்பொழுதே ஓசை நினைவு உண்டாகின்றதன்றோ! தமிழே அறியாத வேற்று மொழியாளரிடத்துச் சலசலப்பு, விறுவிறுப்பு முதலிய சொற்களைச் சொல்லி, அவற்றின் பொருளாக அவர்கள் அறிவன யாவை என அறிந்து பாருங்கள்.

 "ஏர்' என்னும் சொல்லின் முதலெழுத்தில் நீங்கள் உழுக்கலப்பையைக் காண்கின்றீர்களன்றோ! "குடம்' என்னும் சொல்லின் முதலெழுத்தைக் கண்ட அளிவிலேயே குடத்தின் உருவம் உங்கள் முன் வரத்தான் செய்யும். "ஒட்டகம்' என்னும் சொல்லின் முதலெழுத்து ஒட்டகத்தை உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றதன்றோ! "மறவர்கள்' என்னும் சொல்லைக் கேட்ட அளவிலேயே, கடிய பண்புடைய வீரர்கள் உங்களின் நினைவில் இடம்பெறுவார்கள். "' என்னும் சொல்லைக் காணும்பொழுது இரப்போனின் முகக்காட்சி உங்கள் கண்ணெதிரே நிற்கின்றதன்றோ! "பறை'யென்னும் சொல்லைக் கேட்ட அளவிலேயே அதிலிருந்து வரும் வலிய ஓசை உங்கள் காதுகளைத் துன்புறுத்தும்.

 தமிழ்ச் சொற்களிலே அவற்றாற் குறிக்கப்படும் பொருள்கள் இவ்வாறு பொதிந்து கிடக்கின்றன. சொல்லைக் கேட்ட அளிவிலேயே பொருளின் உருவமோ, பண்போ உளக்கண்முன் ஓடி வருகின்றது. இன்ன பொருளை இன்ன சொல்லாற் குறிக்க வேண்டுமெனக் காரணமின்றி வரும் இடுகுறிச் சொற்களல்ல, தமிழ்ச்சொற்கள். பொருளின் உருவங்களையோ பண்புகளையோ அடிப்படையாகக் கொண்டெழுந்தனவே அனைத்தும்.

 முதல் முதலில் பொருள்கட்குப் பெயரிட்ட மக்களின் உள்ளங்களை அப்பொருள்களின் உருவங்களோ பண்புகளோ கொள்ளை கொண்டிருக்கும். அவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் அவற்றிற்குப் பெயரிட்டிருப்பர்.

 தமிழ் எழுத்துக்களைத் சித்திர எழுத்துக்களின் வகையின என்பர். "' என்னும் எழுத்தைப் பாருங்கள். பெரியவர் ஒருவர் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருக்கும் காட்சியைக் காணுகின்றீர்களன்றோ! "' என்னும் எழுத்தும் அதைப்போன்றே ஆவும் கன்றும் அணைந்து செல்கின்ற காட்சியைக் கொண்டு வருகின்றதன்றோ! அவையே பிற்காலத்தில் ஓரெழுத்தொரு மொழிகள் எனப்பட்டன. குடத்தினை முன்னாளில்
 "கு' வென்ற எழுத்தால் குறித்திருப்பர். பின்னாளில் அவ்வுருவெழுத்து வளர்ந்து குடம் என்றானது. தமிழ்ச் சொற்கள் அனைத்தும் தம்மால் உணர்த்தப்படும் பொருள்களின் உருவத்தையோ பண்பையோ சித்திரம் போன்று நம் கண்முன் காட்டுகின்றன. ஆகவே தமிழ்ச் சொற்களைச் சித்திரச் சொற்கள் எனக் கூறுவதில் தடையேதுமன்று. எழுத்துக்கள் சித்திர எழுத்துக்களாயின், சொற்களும் சித்திரச் சொற்களாகவே அமைந்திருக்கும் அல்லவா!

 தமிழ் மிகப்பழைய மொழியாயினமையால் அதன்கண் பயிலும் சொற்களுள் பலவற்றிற்கு இன்று நம்மால் பொருள் அறிந்துகொள்ள இயலவில்லை. காரணமின்றி எழுந்தனவோ இவை என்று ஐயுறும் அளவிற்குப் பல சொற்கள் திரிபுகளைப் பெற்றுவிட்டன. எனினும் குறிப்பாகவேனும் அவை பொருள்களை உணர்த்தலின்றும் நீங்கா. அணி அன்னும் சொல்லின் பொருளைத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றோம்.

 மரம் என்பதற்குரிய பொருளை நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லையே என்பதைத் தவிர, மரம் என்னும் சொற்குக் காரணமில்லை என்பதன்று. மரம் என்னும் சொல் உருவத்தையோ பண்பையோ வெளிப்படையாகக் காட்டிய காலம் ஒன்றிருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் இன்று அது குறிப்பாகப் பொருளை உணர்த்தும் நிலையை அடைந்திருக்கின்றது. மரம் என்னும் சொல் தென்னை மரம், மாமரம் முதலிய நிற்கும் பொருள்கள் அனைத்தினும் சேர்ந்து வருகின்றது. உலக வழக்கிலேயும் அசைதலின்றி நிலைத்து நின்றானை "மரம்போல் நின்றான்' என வழங்கக் காண்கின்றோம். எனவே மரம் என்னும் சொல் நிலையாக நிற்கும் பொருளை உணர்த்துவது என்பதைக் குறிப்பால் அறியலாம். இதைப்போன்றே தென்னை என்னும் சொல்லும் குறிப்பால் பொருள் உணர்த்துதலைக் காணலாம். தேன் என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது தென்னை என்பதை அறியலாமன்றோ! இங்ஙனம் சொற்கள் பொருள்களைக் குறிப்பாக அறிவிக்கின்றன என்றே கொள்ளல் வேண்டும். அங்ஙனம் கொண்டாலன்றிச் சொற்களின் பொருள்களை நுணித்தறியும் ஊக்கந் தோன்றாது.

 இடுகுறிப் பெயரென்றோ, காரணப் பெயரென்றோ பெயர்களைக் குறித்தல் நுணித்தறிய விரும்பும் நுழைப்புலத்திற்குக் கதவடைத்தல் செய்வது போலாம். எனவே சொற்கள் பொருள்களை உணர்த்தும் நெறி இருவகைப்படும். வெளிப்படை, குறிப்பு என்பனவே அவை என்று கொள்ள வேண்டும். இது பெயர் வினையாகிய இரண்டிற்கும் ஏற்கும். வினையின் கண் செயல் வெளிப்படையாகவே புலப்படுகின்றமையால் வினைச்சொற்கள் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் உணர்த்தும் என்பது காலத்தையேயாகும். வெளிப்படையாகக் காலங்காட்டி வரும் வினைகளைத் தெரிநிலைவினை எனவும், குறிப்பாகக் காலங்காட்டி வரும் வினைகளைக் குறிப்புவினை எனவும் கூறுவர். பெயராயின் காரணத்தை வெளிப்படையாகக் காட்டுவனவும் குறிப்பாகக் காட்டுவனவும் என இருவகைப்படும். இதுவே தொல்காப்பியர் போன்ற பேராசிரியர்களுக்கும் உடன்பாடாகும்.

 ""எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே'' என்பார் தொல்காப்பியர். எனவே பொருள் குறியாது வரும் - இடுகுறியாய் வரும் சொல் ஒன்று மின்று என்பது அவர் கருத்தாகின்றது. பின்னும் அவரே, ""மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா'' என்று கூறியிருத்தலால் தெளிவாகச் சில சொற்களுக்குக் காரணம் அறியப்படும்; குறிப்பாகச் சில சொற்களுக்குக் காரணம் புலப்படும் என்பது தெளிவாகின்றது. எனவே, இடுகுறிச் சொல்லென எதனையும் பெயரிட்டழைத்தல் ஆசிரியருக்குக் கருத்தன்று என்பதறியப்படும்.

 ""எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே'' என்று தொடங்கிய ஆசிரியர் சொல் பொருளை உணர்த்தும் நெறியினை,

 ""தெரிபுவேறு கிளத்தலும் குறிப்பிற்றோன்றலும்
 இருபாற்றென்ப பொருண்மை நிலையே''

 என்று விளக்கினார். பெயர்கள் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் பொருளைத் தோற்றுவிக்கும் இருநிலைகளை உடையன என்பதே இதன் பொருள். சுருங்கச் சொல்வதானால் வெளிப்படைப் பெயர், குறிப்புப் பெயர், எனப் பெயரிட வேண்டுமென ஆசிரியர் நினைத்தார் என்பதற்கு ஏது (.கா) யாண்டுமில்லை.

 குறிப்பாகக் காலங்காட்டும் வினையைக் குறிப்புவினை எனவும், வெளிப்படையாகக் காலங்காட்டும் வினையயைத் தெரிநிலைவினை எனவும் கொண்ட பிற்கால ஆசிரியர்கள், காரணத்தைக் குறிப்பாகக் காட்டும் பெயரைக் குறிப்புப் பெயரெனவும், வெளிப்படையாகக் காட்டுவனவற்றைத் தெரிநிலைப் பெயரெனவும் கொள்ளாது போயினர்; பெயரை இடுகுறிப் பெயரெனவும் காரணப் பெயரெனவும் வகுத்து மொழி வளர்ச்சிக்கு ஒரு வகையில் ஊறு தேடினர்.

 சொற்களின் பொருளை மக்கள் நன்றாக உணர்ந்தாலன்றிச் சொற்கள் வளர்ச்சியடைதல் இல. சொற்களின் பொருள்களை மக்கள் உணரவும் வேண்டும். உணர்வதற்குரிய ஊக்கத்தையும் ஆசிரியர்கள் அளித்தல் வேண்டும். குறிப்புப் பெயரெனின் அதைப் பற்றி யாரும் கவலையுறார். காலப்போக்கில் அத்தகைய சொற்கள் இறந்துபடும். பொருள்களோடு வழங்கும் சொற்களே என்றும் நிலைபெறும். பொருளற்ற சொற்கள் எனக் கூறப்படுவன விரைவில் அழிந்துபோகும்.
 இம்முறையில் இடுகுறிப்பெயரென ஒருவகையினைக் கொள்வது மொழி வளர்ச்சிக்கு ஏலாத தொன்றென்றே கொள்ள வேண்டும். அங்ஙனம் வகுத்தார் சொற்களுக்கு வருத்தத்தை வகுத்தாரே யாவர்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: