28/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 29 : அறிவியலும் தமிழும்!

 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இந்த நூற்றாண்டு விஞ்ஞான நூற்றாண்டு. விந்தைமிகு சாதனைகள் பற்பல நிகழும் காலம். விண்ணையும் வியன் மண்டலத்தையும் வலம்வந்து வாழும் காலம். உலகில் பல்மொழிகள் சிறப்பாக ஆங்கிலம், ஜெர்மன், உருசியா ஆகிய மொழிகள் அறிவியல் துறையில் நாளும் வளர்ந்து வருகின்றன. பாரதியே,

""புத்தம் புதிய கலைகள்
மெத்த வளருது மேற்கே''


என்கிறார். இங்ஙனம் பிற நாடுகளில் விஞ்ஞானம் விண்ணை முட்டி வளரும்போது தமிழில் அறிவியலைச் சொல்லிக் கொடுக்கலாமா, கூடாதா? என்ற ஆராய்ச்சியில் சிலர் இறங்கியிருக்கின்ற நிலை இரங்கத்தக்கது. சிலர் தமிழில் அறிவியல் வராது, ஆங்கிலமே அறிவியலுக்குரிய தென்கிறார்கள். இவர்களைப் பாரதி "பேதை' என்று சாடுகிறார்.

இன்ன மொழியில்தான் அறிவியல் வரும் அல்லது வளரும் என்று ஏதேனும் விதி உண்டா? சாத்திரமுண்டா? அல்லது கடவுள்தான் அப்படிச் செய்திருக்கிறாரா? எம்மொழிக்கும் உரியது அறிவியல். மொழிவழிப் பட்ட மக்களின் சிந்தனை முயற்சி இவற்றை ஒட்டித்தானே மொழி வளர்கிறது; கலை வளர்கிறது; அறிவியல் வளர்கிறது. அவ்வாறு இருக்க, தமிழில் அறிவியல் வாராதென்று தமிழ் மீது பழியைச் சுமத்துவானேன்? உண்மையைச் சொன்னால், மற்ற மொழிகளைவிட அறிவியலை முறையாகச் சொல்லத் தமிழில் முடியும். அறிவியல் பருப்பொருளைப் பற்றியதேயாம்.

தமிழ், பண்டு தொட்டே நுணுக்கமான உயிரியல் கலை ஞானத்தில் வளர்ந்து, தத்துவ மொழியாகத் தழைத்தோங்கி வளர்வதை யாரே மறுக்க முடியும்? காணாப் பொருளைச் சொன்ன தமிழுக்குக் காணும் பொருளை ஆராய்தல் முடியாதா? நமது குறையை மொழியின் மீதேற்றுதல் மன்னிக்க முடியாதது.
அதுமட்டுமன்றி, தமிழில் பழங்காலந்தொட்டே அறிவியற் கருத்துக்கள் முகிழ்த்துக் கால்விட்டிருக்கும் அத்துறையில் நாம் தொடர்ந்து சிந்திக்காததாலேயே பின்தங்கிப் போனோம். அப்படிச் சிந்திக்காமற் போனதற்குக் காரணம், அறிவியல் வளர்ச்சி சமய அறிவுக்கு மாறுபட்டது என்று பிழைபடக் கருதியதேயாம். ஏன்? எதனால்? என்று கேள்வி கேட்பது பாவம் என்று கருதியதால் ஆகும். ஆனால், உண்மையான மெஞ்ஞானம் விஞ்ஞானத்தால் வளம் பெறுகிறது; உரம் பெறுகிறது; வாழ்கிறது; வாழ்வும் அளிக்கிறது.

அதுபோலவே உண்மையான விஞ்ஞானம் பரிபூரணத்தை நோக்கி, வளர்ந்துகொண்டே இருக்கிறது. அப்பரிபூரணத்துவத்தை விளக்கி, நிறைவான வாழ்க்கை அளிப்பதிலேயே நாட்டம் செலுத்துகிறது. அதை மறந்த தமிழர்கள் தமிழில் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தியே, அறிவியற் கருத்துக்கள் அரும்பியிருந்தும் அத்துறையை முறையாகத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள்.

தாவர இயலை (பாட்டனி) எடுத்துக்கொண்டால், இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னர் எழுந்த தொல்காப்பியம், செடி கொடிகளுக்கு உயிர் உண்டென உணர்த்தியது. அவ்வழியிலேயே வள்ளல் பாரியும், முல்லைக் கொடியின் துன்ப அனுபவத்தை உணர்ந்து நெடுந்தேரினை நிறுத்தினான். ஏன்? முள்ளிச் செடிக்கு வீடுபேறும் கொடுத்தது நம் தமிழ் நாகரிகம். இங்ஙனமிருந்தும், தமிழில் பூரண தாவர தத்துவ நூல்கள் வளரவில்லை - நாம் வளர்க்கவுமில்லை. விண்ணிலே பறக்க முடியுமென்ற கருத்துத் தமிழர்களிடத்துப் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமேயே தோன்றிவிட்டது.

புறநானூற்றுக் காலத்தில் வாழ்ந்த புலவர் ""வலவன் ஏவா வான ஊர்தி'' என்று குறிப்பிடுகின்றார். இன்றைய விஞ்ஞானம் புறநானூற்றுத் தமிழன் கண்ட அளவிற்கு வளரவில்லை. ஏனெனில், இன்று ஆளோட்டும் விமானமே இருக்கிறது. ஓட்டுவாரின்றித் தானே பறக்கும் விமானமே ""வலவன் ஏவா வான ஊர்தி''. பின்னர் வந்த கம்பன், இராவணன் வானவீதி வழியே பூத்தேரில் சென்றதாகச் சொல்லுகிறார். திருத்தக்கதேவர், ""மயிற் பொறி'' என்ற பெயரால் ஒரு வான ஊர்தி பற்றி விளக்கிச் சொல்கிறார்.

இக்கருத்துக்களை முன்னோர் வழிப்பெற்ற தமிழர்கள் அவற்றைப் பார்த்து ரசித்தனர். நடைமுறைக்குக் கொண்டுவர மறுத்தார்கள். அக்கருத்துக்கள் கொண்ட பாடல்களை ரசித்தனர். அனுபவத்திற்குக் கொண்டு வரவில்லை. கதாகாலட்úக்ஷபம் செய்து காலங்கழித்தனர். கவிஞரின் கருத்தைச் செயல்படுத்தவில்லை. போதும் போதாததற்கு அறிவையும், முயற்சியையும் நம்பாத பிற்போக்கு மனம் படைத்த திண்ணைத் தூங்கி மதவாதிகள், இராவணன் வான வீதியில் பறப்பதற்குக் காரணம் அவன் சிவபெருமானிடம் பெற்ற வரமே என்று சமாதானம் கூறி, மனித சக்தியை அறியாமையில் ஆழ்த்தினர்.

அன்று இராவணன் பறந்ததற்குச் சிவபெருமான் தந்த வரம் காரணம் என்றால், இன்று சிவபெருமானையே நம்பாத - தவம் செய்யாத - செய்ய மனமில்லாத "காகரின்' வான வெளியிற் பறந்து திரிந்து வந்திருக்கிறானே, என்ன சமாதானம் சொல்ல முடியும்? இது போலவே, இந்த நூற்றாண்டில் அணுவைப்பற்றி அதிகமாகப் பேசப்பெறுகிறது. இந்த யுகத்தை "அணுயுகம்' என்றே சொல்லலாம். இந்த அணுவைப் பற்றி நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மாணிக்கவாசகர் தெளிவாகப் பேசுகிறார். அணு தேய்ந்து தேய்ந்து செல்லக்கூடியதே எனக் குறிப்பிடுகிறார்.
""சென்று தேய்ந்து தேய்ந்து அணுவாம்'' என்கிறார். இந்த அற்புதமானக் கருத்தை - இக்கருத்து நிரம்பிய பாடல்களைப் பரகதிக்குப் பாதைகாட்டும் பாடல்களாக மட்டும் நினைத்தோமேயொழிய, பாரினை வளமாக்கப் பயன்படும் என நினைத்தோமில்லை. கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அழும் கதையாக முடிந்தது.
தமிழ் வளர்ந்த-வளமான மொழி. தமிழர்கள், தாம் முயன்று தமிழில் அறிவியலை - தாவர இயலை - உள இயலை வளர்க்காத குறையை மொழிமீது சுமத்த வேண்டாம். இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. முடியுமா முடியாதா என்ற சண்டையை நிறுத்திவிட்டு, தமிழுக்கு அறிவியலைக் கொண்டுவந்து சேர்ப்போம் என்ற முழு உணர்வுடன் முயற்சிப்போம். அங்ஙனம் முயற்சிப்போமானால், எண்ணிச் சில ஆண்டுகளுக்குள்ளாகவே தமிழில் அறிவியல் வளம் கொழிக்கும். மேற்கத்தியர் அறிவியல் கற்கத் தமிழ் பயிலத் தொடங்குவர். நம்மால் முடியும். அறிவும் திறமையும் வழிவழியாக நம்மைத் தொடர்ந்து வருவன.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: