22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 27 : தமிழ்மொழியின் தாழ்நிலைக்குக் காரணமும் அதை விருத்தி செய்யும் விதமும்!

 பண்டிதர் .கோபாலகிருஷ்ணன்

தம்மை ஒரு ஜாதியார் என்றும், ஒரு கட்டுக்கடங்கியரென்றும் யோக்கியர்களென்றும், தேசாபிமானிகளென்றும் காட்டக் கூடியதும், நமது முன்னோர்களின் அருமை பெருமையை நாம் அறியவும், நமது காரியங்களை நமக்குப் பின்னால் வருபவர் அறியவும் ஏதுவாயுள்ளதும், நமது சொந்த பாஷையே'' இவ்வுண்மையை ஓர்ந்து, மேற்றிசையோரும், கீழ்த் திசையோராகிய ஜப்பானியரும் தத்தம் பாஷைகளை எவ்வளவோ கெüரவமாகப் பொன்போற் போற்றி அபிவிருத்தி செய்துவர, நம்மவருட் பெரும்பான்மையோர், தேசாபிமானமும் பாஷாபிமானமும் இல்லாராய்த் தமது தாய்ப் பாஷையாகிய அமிழ்தினுமினிய "தமிழ் முதுமொழியை' அநாதரவு செய்து, கேவலம் உத்தியோகப் பதவி, பொருளீட்டல் முதலியனவே கருதி அந்நிய பாஷையாகிய ஆங்கிலமாதியவே கற்று வருவது காலக்கொடுமையோ? ஞாலக்கொடுமையோ? அறியேம்!


தங்கள் கையெழுத்துக்களைக் கூடப் பிழையற எழுதத்தெரியாதார் எத்துணை பேர்கள் இருக்கிறார்கள்! தமிழ்ப் பாஷை தெரியாமலிருப்பது தங்களுக்குப் பெருங் கெüரவமென்றும், எவ்வளவுக் கெவ்வளவு அது தெரியவில்லையோ, அவ்வளவுக்கெவ்வளவு தங்களுக்கு ஆங்கில பாஷை ஞானம் அதிகமாக உண்டென உலகு நினைக்கும் என்றும் எண்ணும் பேதைமாக்கள் எத்துணை பேர்கள்! தமிழில் பேசினும் முக்காற்பங்கு இங்கிலீஷும் காற்பங்கு தமிழுமாக மணிப்பிரவாள நடையில் பொழிந்து தீர்த்து, ஹாஸ்ய ரசம் அனுபவிக்கச் செய்வோர் எத்துணை பேர்கள்!
 தமிழ் தளர் நிலை அடைந்ததேன்?

 முற்காலத்தில் செழித்தோங்கி வளங்கள் யாவும் குறையற வாய்ந்து விளங்கிய நம் தமிழ்மொழி, வளர் நிலைக் குன்றித் தளர்நிலை எய்தியதற்குக் காரணங்கள் யாவென ஆராய்வோம்:

 * தமக்குப்பின் வருபவர்களுக்கென்று எவ்வளவோ வருந்திப் பாடுபட்டு, ஊண் உறக்கங்களை ஒழித்துக் காடுகளிலும் மலைகளிலும் குடிசைகளிலுமிருந்து, கடின ஏரைப்பிடித்துக் கற்பாறையில் உழுதல் போல் இரும்பெழுத்தாணிகளைக் கட்டை விரல் நுனியில் ஓலை ஓலையாகச் சாய்த்து எழுதித் தம் உயிரினும் மேலாக நம் முன்னோர்கள் காப்பாற்றிய எண்ணிறந்த சுவடிகள், இருமுறை கடற்கிரையானது யாவரும் அறிந்ததே.
 *தமிழ் ஒழிந்த தேசத்தார் பலர் தமிழகத்தை அடிமைப்படுத்தியது இரண்டாவது காரணமாகும்.
 *தமிழை ஆதரிப்போர் அருகியதும் அதனால் நேர்ந்த தமிழ்ப் புலவரின் வறுமையுமே மூன்றாவது காரணமாகும்.
 *இராமபாணம் என்ற சின்னஞ்சிறுபூச்சி, கோடானுகோடி நூல்களைத் துளைத்துத் தவிடுபொடியாக்கிப் பாழாக்குவது நாம் கண்கூடாகக்கண்ட விஷயமன்றோ? இதுபோல் கவலை சிறிதுமின்றிச் சிதலைக்கும் பாச்சைக்கும், இரையாக விடப்பட்டவை எண்ணிறந்தவையன்றோ?
 * ""நெருப்பறியும், நீர் அறியும் நிலமறியும் தமிழின் இயல்'' என ஸ்ரீஞானசம்பந்தப்பெருமான் போன்றாரது தமிழ்ப் பாசுர மகிமைகளைப் பற்றிச் சிலாகித்துக் கூறப்பட்ட விஷயம் ஒரு விதமாய் பார்க்கின், இக்காலத்தும் முற்றும் உண்மையேயாகும். எங்ஙனமெனில், அரும் பொருள் அனைத்திலும் அரிய தமிழ் ஏடுகள் பல, அவற்றின் அருமை பெருமை அறியும் ஆற்றல் இல்லார் கைவசப்பட்டு, அகஸ்மாத்தாக தீக்கிரையாயும், அறிவிலிகளாகிய அவரது மனைவி-மக்களால் அடுப்பெரிக்கப்பட்டும் வருவதால் நெருப்பும்; பதினெட்டாம் பெருக்கன்று பிரதி வருடமும் ஆற்றில் விடப்பட்டு வருவதால் நீரும்; மட்கி மண்ணோடு மண்ணாகப்போம்படி விடப்பட்டு வருவதால் நிலமும்; தமிழின் இயலை நன்கறியும் அன்றோ? முற்கூறிய பலவிதத்தும் பாழடைந்து இறந்துபட்டொழிந்த ஏடுகளில் தனித்தமிழ் நூல்கள் சிலவேனும் இருந்திருக்க வேண்டுமென அறிஞர் பலர் அபிப்பிராயப்படுகின்றனர்.
 * பொருள் வருவாய்க்குரிய கல்வி, தமிழ்ப் பாஷையில் இல்லாமல் தற்காலம் ஆங்கிலத்திலேயே உள்ளன ஆதலின், புலவர் வழித்தோன்றியோரும் நம் நாட்டுச் சிறாரும் தமிழை அறவே மறந்து, வயிற்றுக் கொடுமையைத் தணிக்கவும், புகழ் கருதியும் வேறு தொழில்களைப் புரியவும் ஆங்கிலம் கற்க ஆரம்பித்தனர். ஆங்கிலம் தங்கி வளரவும், தமிழ் மங்கித்தளரவும் நேர்ந்ததற்குக் காரணம் இதுவே.
 தமிழை அபிவிருத்தி செய்யும் விதம்
 *நாம் நல்லொழுக்கத்துக்கும் தமிழ் அபிவிருத்திக்கும் ஏதுவான யாவும் குறையறவாய்ந்த சங்கங்களை ஏற்படுத்தி, அதனைச் சார்ந்து தேச நன்மைக்கடுத்த நற்காரியங்களையும், மற்றும் விவேக விருத்திக்கின்றியமையாத நானா விஷயங்களையும், கல்வி கேள்விகனிற் றேர்ச்சிபெற்ற வித்துவ சிரேஷ்டர்களின் பிரசங்கங்கள் மூலமாகக் கேட்டுணர்ந்து, அதன்படி ஒழுக வேண்டும்.
 *முற்கூறிய பிரசங்கங்களில் அதிமுக்கியமானவற்றைக் கற்றோரேயன்றி மற்றோரும் எளிதிற் பொருளுணர்ந்து கொள்ளும் வண்ணம் எளிய நடையில் எழுதுவித்து, அச்சியற்றிச் சிறு துண்டுப் பத்திரிகைகள் ரூபமாய் பலர்க்கும் தரவேண்டும்.
 *சுயபாஷாபிவிர்த்தியின் பொருட்டு ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சங்கங்களின் அங்கத்தவராகியேனும், ஆங்குப் பிரசங்கம் நடக்குந்தோறும் வலியச் சென்றேனும் நமக்குத் தெரிந்ததைப் பிறர்குரைக்கவும், பிறர் கூற்றை நாமுணரவும் வேண்டும்.
 *வயிற்றுப் பிழைப்பின் நிமித்தமும், அரசாட்சி முறையை ஐயமற அறியவும் ஆங்கிலம் அவசியமே எனினும், வீட்டிலும் பிற இடங்களிலும் அனாவசியமாக அப்பாஷையைப் பேசவும் எழுதவும் பழகிய துர்வாடிக்கையை அறவொழித்து, கூடியமட்டில் சுத்தத் தமிழ் மொழியில் (திரிபுடைச் சொற்கள் ஏதுமின்றி) பேசவும் எழுதவும் பழகவேண்டும்.
 *நமக்கு விதிக்கப்பட்டுள்ள பாடல்களின் அருமை பெருமைகள் மேல்வகுப்புகளுக்குப் போகப் போகத்தான் நன்றாய் விளங்கும். ஆதலின், கீழ் வகுப்புப் பாடல்களையும் (ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்றவை) சமயம் நேர்ந்துழி ஆவலோடு கற்றுணர வேண்டும்.
 *இலக்கிய வல்லார்க்கு இலக்கணப் பயிற்சி எளிதில் அமைவது இயல்பாதலின், ஒவ்வொருவரும் தமிழில் பிழையின்றி எழுதக் கற்றுத் தேறவும், வாசகப் புஸ்தகங்களிற் சிறந்தனவாய் உள்ளவற்றைப் பொருள் உணர்ந்து கற்கவும் வேண்டும். கற்கவே சிறிது தமிழறிவேனும் உண்டாகும். அறிவு உண்டாகவே, சிறிது பாஷாபிமானமும் விரைவினில் உதிக்கும். அபிமானம் உதிக்கவே, தமிழிற் சிறந்துள ஏனை அரும்பெரும் நூல்களை உபாத்தியாயர்களின் உதவி கொண்டேனும், நாமாகவேனும் படித்து, மதியூகிகளாவோம் என்பதிற் றடையின்று.
 *தக்க வித்துவான்களைக்கொண்டு உரைபெறாத நூல்கட்கு உரை எழுதுவிக்க வேண்டும்.
 *பண்டை நூலாசிரியர்க்கும் உரையாசிரியர்க்கும் அவர்கள் பிறந்த ஊரிலும், இருந்து பிரசித்திபெற்ற ஊரிலும் ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்த வேண்டும்.

எனது அன்பார்ந்த சகோதரர்களே! யான் இவ்வளவு தூரம் தமிழின் அருமை, பெருமை, தளர்ச்சி, வளர்ச்சி, பழமை, கிழமை முதலியன எடுத்துக்காட்டியது, அவற்றை அறியாதார் அறியவும், அபிமானம் அற்றார் அபிமானம் உற்றாராகவும், ஆர்வம் உள்ளார் ஆர்வமிக்காராகவும், ஆர்வம் மிக்கார் மன எழுச்சிமேலிட்டு மீண்டும் மீண்டும் தமிழ் வளர்ச்சி செய்யவும் வேண்டியே! இவ்வாறு தமிழை மேம்படுத்துவோர் தம்மைத் தாமே மேம்படுத்திக் கொண்டோராவர். இதனை மறுத்துக்கூற எவராலும் இயலாது. ஆதலின் நாம் இனியேனும் நமது பொறுப்பை நன்குணர்ந்து நம் ஜனன தேசத்திற்கும், பின்னோர்க்கும், தாய்மொழிக்கும் கண்ணியத்தை உண்டாக்கும் புண்ணியத்தைக் கைப்பற்றுவோமாக!

 (இக்கட்டுரையாளர் .கோபாலகிருஷ்ணன் (1878-1927), மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பர். தன் நண்பர் நடத்திவந்த "சுதேசமித்திரன்' பத்திரிகையின் உதவி ஆசிரியராக பாரதியாரை சென்னைக்கு அனுப்பிவைத்தவர் இவரே. இக்கட்டுரைக்கான தரவுகளைத் தந்து உதவியவர்: ஆய்வாளர் பெ.சு.மணி)

கருத்துகள் இல்லை: