24/02/2012

திருக்குறள் - மனுதர்மம் அரசியல் நெறிகள் ஒப்பியலாய்வு - இரா.சந்திரசேகரன்

அரசன் நாட்டினை ஆளுவதற்கு எற்ற வழிமுறைகளைக் கூறும் வகையில் அரசனின் கடமை, அமைச்சர்கள், தூதர்கள் ஒற்றர்கள், வெளிஉறவு, நீதி, வரி, படை, போர், நாடு, நிருவாகம் முதலானவற்றைப் பற்றித் திருக்குறளும், மனுதர்மமும் விரிவாகப் பேசுகின்றன.

அரசன்

சங்ககாலத்தில் மக்களைக் காத்து முறையாக நீதி வழங்குகின்றவனே சிறந்த அரசன் என்றும், அத்தகையவனே இறைவனுக்குச் சமம் என்றும் கருதப்பட்டான். அரச தர்மத்தைக் காப்பது மட்டும் அரசனுடைய கடமையில்லை. பொருளுதவி வேண்டி நிற்போர்க்குப் பொருளுதவி அளித்தலும், தன் பாதுகாப்பின்கீழ் இருப்போரை அன்புடன் நடத்தலும், பாகுபாடின்றி நீதி வழங்குதலும், மக்களுக்குத் தக்க பாதுகாப்பு அளித்தலும் அரசர்களின் தலையாய கடமைகள் எனக் குறிப்பிடும் திருவள்ளுவர், அவ்வாறு கடமைகளை நிறைவேற்றுவோனை மிகச் சிறந்த அரசனாகவும் கருதுகிறார்.


முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

என்னும் குறட்பாவில் குறிப்பிட்டுள்ளது இங்கு நோக்கத்தக்கது.

மனுதர்மத்தில் அரசனைப் பற்றிக் கூறும்போது நான்கு வருணத்தாரும், அவர் தம் ஒழுக்கமும் காக்கப்படுவதற்காகவே அரசன் படைக்கப்பட்டான். அரசன் இல்லையேல் எளியோர் வலியவருக்கு அஞ்சிடவே அழிந்திடுவர் என்கிறார்.

வேந்தனுக்கு அமைய வேண்டிய குணங்களாக அஞ்சாமையும், ஈகையும், அறிவும், தளரா உறுதியும் கூறப்படுகின்றன. இக்குணங்கள் வாய்ந்த அரசன் அறத்திலிருந்து தவறாது நடந்து, வீரத்துடன் தன்னையும், குடிகளையும் காத்தல் வேண்டும். மனுவை ஒட்டி வள்ளுவர் குறளும் பொருள் வரும் வழிகளை இயற்றிப் பொருளை மேன்மேலும் சேர்த்து, அதனைப் பாதுகாத்து, அப்பொருளை அறவழியில் பயன்படுத்துதலை அரசனின் கடமையாகக் குறிப்பிடுகிறது. இனிய சொல்லும், இரக்கச் சிந்தனையும், செங்கோன்மையும் கொண்டு அறநெறிப்படி மக்களை ஆள்பவனே அனைவராலும் விரும்பப்படுவான் என்கிறார். அரசன் பிறப்பினாலோ, அரியணைமீது இருப்பதனாலோ தெய்வத் தன்மை கொண்டவன் ஆகான். குணத்தினாலும் செங்கோன்மையினாலும் மக்களைக் காத்தல், தருமத்தை நிலைநிறுத்தல், தீயவரை அழித்தல் ஆகிய பணிகளைச் செய்வதனாலும் மட்டுமே கடவுளின் தன்மைக்கு அவன் உயர்த்திக் கூறப்படுகிறான்.

மனுவும் அரசனைப் பற்றிக் கூறுகையில், அரசனானவன் நண்பரிடத்து வஞ்சகமின்றிப் பழகியும் பகைவரை ஒறுத்தும். மேலோர் சிறுபிழை பொறுத்தும், முறைதவறாது குடிமக்களை வருத்தாமல் ஆண்டு வரவேண்டும். அத்தகைய சிறந்த அரசன் வயலில் உதிர்ந்த நெல்லைப் பொறுக்கிச் சேர்த்துண்ணும் வறுமையை அடைந்தானாயினும் அவன் புகழ் குறையாது. நீரில் மிதக்கும் எண்ணெய் போல் அவன் புகழ்பரவும். அவனே தெய்வங்களின் கூட்டு ஆற்றல் பெற்றவன் என்கிறார்.

ஒருவனைச் சிறந்த அரசனாய்க் கருத வேண்டுமாயின் அவன் சிறந்த படையினையும், வளம் மிக்க மக்களையும், பெருகுகின்ற செல்வத்தையும், நம்பிக்கைக்குரிய அமைச்சர்களையும், சிறந்த நண்பர்களையும் பெற்றிருக்க வேண்டும். சமுதாயத்தின் காவலன் அரசன். ஆகையால் அதற்குரிய விதிமுறையிலிருந்து வழுவாமல் நடப்பதே அரசனின் முக்கியப் பணியாயிற்று. சமுதாயத்தைக் காக்கின்ற பணியில் ஈடுபட்டுள்ளபோது ஏற்படுகின்ற இடையூறுகள், தொல்லைகள், துன்பங்கள் ஆகியவற்றை அரசன் மிகவும் கவனமாக நோக்கி ஆவன செய்தல் வேண்டும். அரசனுடைய கடமை அரச கருமத்தை நிலைநிறுத்துவது. இக்கருத்தினைத் திருவள்ளுவர் மட்டுமின்றி மனுவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசன் காமத்தில் பற்றுக் கொண்டால் அறம், பொருள் இரண்டையும் இழப்பான். சினம் கொண்டால் தன்னையே இழப்பான். புலனடக்கம் அரசனுக்கு வலிமையாம். அவனுக்குக் குடிமக்களும் அடங்கி வாழ்வர். இரவும் பகலும் எப்போதும் அரசன் புலனடக்கம் உடையவனாய்த் திகழ வேண்டும் என்று மனு அரசனின் ஒழுக்கத்திற்கு இலக்கணம் தந்துள்ளார். இதனையே வள்ளுவர், அரசன் கல்வி, கேள்வி, அறிவு ஆகியவை மிகுந்து, பெரியோரின் துணைக்கொண்டு, காமம், வெகுளி, செருக்கு ஆகியவற்றால் ஏற்படும் குற்றங்களைக் களைந்து, தீயவரின் நட்பை நீக்கி இரண்டுமே இல்லாதவனாவான் என்று நாட்டின் ஆட்சியாளனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் இவையெனப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

அமைச்சர்கள்

நாட்டின் நிருவாகத்தில் அரசனுக்கு உதவக் கல்வி கேள்விகளிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களை நியமித்து ஆலோசனை கேட்பதே பெரும்பாலும் வழக்கில் இருந்தது. இவர்கள் அரசனுக்கு உண்மையாய் நடந்து கொள்வர்களாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் கருதப்பட்டது. அவர்களே அமைச்சர்களாகக் கருதப்பட்டார்கள். இவர்கள் தான் நிருவாக அலுவல்களைக் கவனித்து ஆவன செய்யும் பொறுப்பைக் கவனித்து வந்தார்கள். இத்தகைய அமைச்சர்களுக்கு மனு தனது நூலில் சில இலக்கணங்களையும் கூறியிருப்பதைக் காணலாம். அமைச்சரவை இவ்வளவுதான் இருக்கவேண்டும் எனத் திட்டமாகக் கூறியுள்ளார். சிறு குடும்பத்தை நடத்துவதே கடினம். பெரியதொரு நாட்டை அரசன் தனியே நிருவகிப்பது இயலாது. எனவே எழுவர் அல்லது எண்மர் கொண்ட அமைச்சரவையை அரசன் துணைக்கொள்க என்கிறார். மேலும் பரம்பரையாக அறம், வேதாந்தம், மந்திரம், நற்குடிப் பிறந்தவராய் அமைச்சர்கள் அமைய வேண்டும். அவர்களுடன் நாடு, நகர், வளம், கொடை கருவூலம், போர், அமைதி, படை இவை குறித்து அரசன் ஆலோசனை கொள்ள வேண்டும் என மனு அமைச்சர்களுக்கான இலக்கத்தை வரையறுத்துள்ளார்.

திருவள்ளுவர் அமைச்சர்களுக்கான விதிமுறைகளைக் கூறியுள்ளது மனு கூறிய இலக்கணங்களிலிருந்து விரிவாகவும், முறையாகவும் இருப்பதைக் காணலாம். அமைச்சருக்கான குண, மன, இன நலன்களைப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளார்.

ஒரு செயலைச் செய்வதற்குரிய கருவி, அதனைச் செய்வதற்குரிய காலம், செய்யும் செயல், செயலைச் செய்யும் திறம் ஆகியவை அமைச்சனுக்கு வேண்டும். இதோடு அச்சமின்மையும், குடிகாத்தலுக்கும், கல்வியும், முயற்சியும் அமைச்சனுக்கு இன்றியமையாதனவாம். தேவைக்கேற்ப போரினையும், அமைதியையும் ஏற்படுத்தும் பொருட்டு நட்பையும், பகையையும் ஏற்படுத்த வலிமை பெற்றவனே அமைச்சனாவான். அவனுக்கு இயற்கையான நுண்ணறிவுடன், நூலறிவும் வேண்டும். அறத்தினை உணர்ந்தவனாகவும், சூழ்ச்சிகளை அறிபவனாகவும் அவன் இருக்க வேண்டும். அரசனுக்கு உண்மையுள்ளவனாகவும், நன்கு ஆராய்ந்து அரசனுக்குத் துணை செய்பவர்களாகவும் அமைச்சர் இருத்தல் வேண்டும். குறளில் அமைச்சனது பிறப்பு, உயர்வு, அமைச்சுத் தொழில் பிறப்புரிமையாக வருவது போன்றவை கூறப்படவில்லை. எத்தனை அமைச்சர்கள் தேவை என்பதையும் கூறவில்லை. ஆனால் அமைச்சருக்கு அமைய வேண்டிய தன்மைகள் இவை இவை என வள்ளுவர் விரிவாகக் கூறியுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.

தூதர்கள்

பன்னாட்டு அரசியல் தூதுவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். தற்காலத்தில் பல நாடுகளும் தொலைபேசி, கம்பியில்லாத் தந்தி, இணையம், விமானங்கள் மற்றும் இத்தகைய பல முன்னேற்றங்களினால் தூதுவரின் சமயோசித அதிகாரமும், செயலும் குறைந்து காணப்பட்டு, ஒவ்வொன்றிற்கும் தன்மேலிடத்து உத்தரவை எதிர்நோக்கியிருப்பது என்பது இயற்கையாய்ப் போய்விட்டது. வள்ளுவரின் காலத்தில் நாடுகளுக்கிடையே உள்ள தூரம் குறுகலாயிருந்தாலும், பல இயற்கை இடர்பாடுகளைத் தாண்டிக் கால்நடையாகவும் சுமக்கும் மிருகங்களையும் நம்பியும் கடந்து சென்று வேற்றரசர் நாட்டிலிருந்து கொண்டு தன்நாட்டின் நலனை முன்னேறச் செய்வதென்பது அவ்வளவு எளிதான செயலன்று என்பது புலப்படும். பகையை நட்பாகவும், நட்பைப் பகையாகவும் ஆக்குபவன் தூதன். போரும் அமைதியும் வருவன அவனால்தான் என்னும் மனுவின் கருத்துக்குச் செயல் வடிவம் கொடுத்துள்ளார் வள்ளுவர். தூது குறித்துத் திருக்குறளில் ஓர் அதிகாரமே உள்ளது. அவ்வதிகாரத்தில் தூதர்களின் தகுதிகள் யாவை என விளக்கப்பட்டுள்ளன.

ஒற்றர்கள்

பழங்காலத் தமிழ் மன்னர்கள் உளவாளிகளை நியமித்திருந்தனர். உளவாளிகள் எனப்பட்டோர் ஒற்றர் எனவும், வேவு பார்த்தல் வேய் அல்லது ஒற்று எனவும் அழைக்கப்பட்டன. நட்பும், பகையும் வெளியுறவின் இருகொள்கைகளாக இருந்தன. நாட்டின் நலன் கருதி மனப்பிணைப்பினால் பகை நீக்கமும், பலம் தேடுவதும் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களாக விளங்கின. போர் நிகழ்த்துங்கால் எதிரியின் வலிமை, போர் நிகழும் இடம், காலம் இவற்றை அறிந்தும், ஒற்றர் மூலம் பகைவர்களைப் பற்றிய செய்திகளை அறிந்தும் போர் நிகழ்த்த வேண்டுமென்பது அறியப்பட்டிருந்தது. மன ஒற்றர்களைப் பற்றி நேரடியாகக் கூறாவிடினும் வள்ளுவர் ஒற்றர்களின் நிலை, செயல்கள் ஆகியவை குறித்து விளக்கமான குறிப்புகளைக் கொடுத்துள்ளார். அயல்நாட்டில் என்ன நடந்தது என்பதனை அறிய மட்டுமின்றி, உள்நாட்டிலும் என்ன நடந்தது என்பதை அறிய ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்டனர். திருக்குறளில் ஒற்றாடல் என்ற அதிகாரத்தில் ஒற்றர்களுக்கான குறிப்புகளைக் கொடுத்துள்ளார்.

ஒற்றொற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்

என்று ஒற்றர்க்கென வள்ளுவர் கூறும் இலக்கணம் இன்றைக்கும் பொருந்தும் வகையில் உள்ளதைக் காணலாம்.

படைச்சிறப்பு

சங்ககாலத் தமிழர்கள் போர் நடவடிக்கைகளில் ஒரு வகையான ஒழுங்கியலைக் கொண்டிருந்தனர். மேலும் சங்க கால அரசர்கள் போருக்குத் தேவையான படையினையும் படைக்கலங்களையும் பராமரித்து வந்தனர். காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை ஆகியவை நாற் பெரும்படை என அழைக்கப்பட்டன. மனு படையைப் பற்றிக் கூறும்போது, நாற்படையும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்தகைய அரசனே சிறந்த பாதுகாப்பான ஆட்சியைத் தரவல்ல அரசனாவான் என்கிறார். மேலும் ஆமை தன் உறுப்பை உள்ளடக்கி இருப்பதுபோல அரசன் தன் படை வலிமையை மறைத்துக் காத்திடுக என்கிறார். வள்ளுவர் படையைப் பற்றிக் கூறுகையில் ஊறுபடுவதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதான படையே அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையாய செல்வம் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறிய படையாய் இருப்பினும் அது அஞ்சாது நின்று தாக்கும் வன்கண்மையுடையதாக இருத்தல் வேண்டும். அத்தகைய வீரம் அரசனின் மரபுப் படைக்கே உரியதாகும். இவ்வாறு படைபற்றிப் பல்வேறு கருத்துக்களை வள்ளுவர் குறிப்பிடுவதைக் காணலாம்.

தற்காப்புத் திட்டங்கள்

ஒரு நாட்டின் தற்காப்பானது அரண், படை இவற்றின் வலிமையைச் சார்ந்தே விளங்கும். அரண் அமைக்கும் விதத்தை மனுவும், வள்ளுவரும் கூறுகின்றனர். அகழிகள், பாலங்கள், பொறிகள், இவற்றால் காக்கப்பட்டு, நால்வகைப் படைகளும் நல்லமுறையில் போரிடும் வண்ணம் அரணமைப்பு இருக்க வேண்டும் என்கின்றனர்.

நாட்டின் தற்காப்பு வெளிநாட்டுக் கொள்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அந்நியரின் ஆதிக்கத்தை எவ்விதம் தகர்ப்பது, எவ்வெப்பொழுது சமாதான உடன்படிக்கை செய்து கொள்வது, எப்போது போர் செய்வது. எவ்விதக் கொள்கைகளைக் கையாள்வதன் மூலம் நாட்டின் எல்லைகளைப் பெருக்கமுடியும் என்பனவற்றைப் பற்றி இருவரும் கூறியுள்ளனர்.

மனுதர்மம் தரும சாத்திரங்களில் முதன்மையானதாகவும், புகழ் பெற்றதாகவும் விளங்குகிறது. பல துறைகளைப் பற்றி விவரித்துள்ள மனு அரசியல் தொடர்பாகவும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். இவர் கூறியுள்ள அரசியல் செய்திகள் அக்கால ஆட்சியாளர்களுக்குப் பெரிதும் துணைபுரிவதாக அமைந்திருந்தன. மனுதர்மத்தைப் போன்றே வள்ளுவரும் அரசியல் துறையில் சிறந்த பணிபுரிந்த சான்றோராய் விளங்கியுள்ளதை இவருடைய திருக்குறள் வழி அறியமுடிகிறது. மேலும் தமிழ் இனமானது தன்னெழுச்சியினையும், மேம்பாட்டினையும் கொண்டு நீண்ட சரித்திரப் பின்னணியை உடையதாக இருந்திருக்கின்றது என்பதும் புலனாகின்றன. வடமொழியில் மனு தான் எழுதிய நூலில் அரசியலுக்கு வகுத்த இலக்கணத்தைப் போன்று தமிழில் தமிழர்கென வள்ளுவரும் சிலநெறிகளை வகுத்துள்ளார். ஆனால் மனுதர்ம அரசியல் நெறிகளைக் காட்டிலும் வள்ளுவர் கூறும் அரசியல் நெறிகள் விரிவாகவும், சிறப்பாகவும், கோவையாகவும் அமைந்துள்ளன எனலாம்.

துணை நூல்கள்

1. தமிழ்நாடன், மனுதர்மம் தமிழில், குயில் பண்ணை, சேலம், 1993.

2. . பரதன், பழங்கால இந்தியாவில் அரசியல் சிந்தனையும் ஆட்சிமுறையும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1977.

3. பரிமேலழகர் உரை, திருக்குறள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1993.

4. மதுரை இளங்குமரன், வள்ளுவர் வழியில் நல்ல ஆட்சியராக, குறளாயம், ஈரோடு - 1, 1991.

5. சு. வித்தியானந்தன், தமிழர் சால்பு, பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 1985.

6. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1977.

முனைவர் இரா. சந்திரசேகரன்
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ரெங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு - 637 209

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள் இல்லை: