22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 22 : தமிழின் தொன்மை திராவிட மொழிகள்

முனைவர் மா.இராசமாணிக்கனார்

இப்போது இந்தியாவில் உள்ள திராவிட மொழிகள் பன்னிரண்டு என்பது கால்டுவெல் கருத்து. அவற்றுள் ஆறு செப்பம் செய்யப்பெற்றவை, ஆறு செப்பம் செய்யப்பெறாதவை. செப்பம் செய்யப்பெற்றவை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு.

 செப்பம் செய்யப்பெறாதவை: துதவர் மொழி, கொத்தர் மொழி, கொந்த், கூ (கந்த்), ஒரொவன், ராஜ்மகால் என்பன.

 இம்மொழிகள் அனைத்தும் பழைய திராவிடமொழி ஒன்றிலிருந்து பிரிந்தன என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இவை அனைத்திலும் சிறந்தது தமிழே என்றும், அதனிடந்தான் பழைய திராவிட மொழிக்குரிய அமைப்புகள் முற்றக் காணக் கிடைக்கின்றன என்றும் கால்டுவெல் கூறியுள்ளார்.


 சென்னைப் பல்கலைக்கழகச் சார்பில் வெளிவந்துள்ள திராவிட ஒப்பியல் அகராதியில் இரண்டாயிரம் சொற்கள் வெளிவந்துள்ளன. அவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளில் பொதுவாக வழங்கப்படுபவை. அவை, இம்மொழிகள் ஒரே இனத்தவை என்னும் உண்மையை நன்கு உணர்த்துகின்றன.

 மலையாள நாடே தமிழ் நாடாக இளங்கோ அடிகள் காலத்தில் இருந்தது என்பது இலக்கியம் கண்ட சான்று. கன்னடத்தின் தொடர்பாலும், கிரந்த எழுத்துக்களின் வன்மையாலும், நம்பூத்ரிகள் செல்வாக்காலும், பெüத்த-சமண சமயப் பிரசாரம் வடமொழி கலந்த தமிழில் செய்யப்பட்டமையாலும், அங்கிருந்த தமிழ் "கொடுந்தமிழாகி' மிகப் பிற்பட்ட காலத்தே வேறு பிரிந்தது. இதனைத் தமிழின் உடன் பிறந்தாள் என்பதைவிட "மகள்' எனக் கூறலே மாண்புடையது.

 வடஇந்தியாவில் திராவிடம்
 "பிராஹுய்' என்னும் மொழியை மலைவாணர் பேசுகின்றனர். அது திராவிட மொழியைச் சேர்ந்தது என்று கூறுதலே ஏற்புடையது எனக் கால்டுவெல் கூறுதல் கவனிக்கத்தக்கது.

 தமிழுக்குரிய பால்பகா அஃறிணைப்பெயர் இம்மொழியில் காணப்படலும், இப் பிராஹுய் பேசுவோர் தென்னிந்தியத் தமிழ் மக்களை எல்லாக் கூறுகளிலும் ஒத்துள்ளமையும் அவர்கள் தமிழரே எனக் கூறத் துணிவு தருகிறது. 1911-இல் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கிலும் பிராஹுய் மொழி திராவிட மொழிகளிலேயே சேர்க்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது. பிராஹுய் திராவிடமொழி எனக் கூறவில்லை; ஆயினும், அது திராவிட மொழியின் உயிர்நாடியைப் பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை. எனவே, பலுசிஸ்தானத்துக்கு அருகில் மிகப்பழைய திராவிட நாகரிகம் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

 ""யான்-நான்' என்பன தமிழ், மலையாளம், கூ, கோந்த் மொழிகளில் இருத்தல் - மிகப்பழைய மொழிகள் எனப்படுவனவற்றின் கால எல்லையையும் கடந்து செல்கிறது. இன்றுள்ள நூல்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை உடையவை. இக்காலத்தைப்போல மூன்று மடங்கு காலம்-அதாவது, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு பண்டைத் தமிழரும் கோந்த் மக்களும் வட இந்தியாவில் ஒன்றுபட்டு இருந்து ஒரே மொழியைப் பேசிவந்த காலத்திற்கு "நான்-யான்' என்பன நம்மை அழைத்துச் செல்கின்றன''- இது கால்டுவெல் கூற்று.

 இப்போதுள்ள தமிழ் நூல்களில் பழைமையானது தொல்காப்பியம். கால்டுவெல் காலத்தில் தொல்காப்பியம் வெளிப்படவில்லை. அதன் காலம் சுமார் 2300 ஆண்டுகட்கு முற்பட்டதெனக் கொள்ளலாம். அக்காலத்துக்கு மும்முறை மிகுதிப்பட்ட காலத்தே பண்டைத் தமிழரும் கோந்த் மக்களும் வடஇந்தியாவில் ஒன்றுபட்டு இருந்து ஒரே மொழியைப் பேசிவந்த காலத்துக்கு "நான்-யான்' என்பன நம்மை அழைத்துச் செல்கின்றன என்ற கால்டுவெல் கூற்றை நாம் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்.
 இங்குக் கூறப்பெற்ற மக்களுள் கோந்த் வகுப்பினர் பழைய தமிழ்ப் பழக்க-வழக்கங்களை இன்றும் விட்டிலர் என்பதை அறிதல் வேண்டும். அவர்கள் நிலமகளைத் "தரி(ரை)ப் பெண்' என்று அழைக்கின்றனர்; வழிபடுகின்றனர். தொல்காப்பியம் சற்றேறக்குறைய 2300 ஆண்டுகட்கு முற்பட்டது. அதைவிட இரண்டு மடங்கு காலம் சென்றிருக்க வேண்டும் என்னும் கூற்றால் சுமார் 7000 ஆண்டுகட்கு முன்னரே தமிழர்-கோந்த் மொழியினர் முதலியோர் ஒன்றாக நடு இந்தியாவில் வாழ்ந்து வந்தனராதல் வேண்டும் என்னும் கால்டுவெல் கூற்று நோக்கத்தக்கது.

 "பிராக்ருத மொழிகள் இப்போதுள்ள வடஇந்திய மொழிகளாக மாறுவதற்கு நெடுங்கால முன்பு "கூ' வகுப்பாரும் தமிழரும் நடு இந்தியாவில் ஒன்றுபட்டவராய் ஒரே மொழி பேசியவராய் (வரலாற்று காலத்துக்கு நெடுங்காலம் முன்பு) இருந்திருத்தல் வேண்டும். "கூ' மொழியிலும் பன்மையைக் குறிக்கப் பிரதிபெயர் சொற்களில் "ம்' (நாம்-தாம்) வழங்கப்பட்டிருத்தலே போதிய சான்றாதலின் என்க.

 திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் (கோந்த் பேசுவோர், "கூ' பேசுவோர் முதலியோர்) நடு இந்தியாவிலும் வங்காளத்தின் அருகிலும் இன்னும் காணப்படல்-இந்தியாவின் பெரும் பகுதியில் திராவிட மக்கள் இருந்தமையை இனிது விளக்குவதாகும்.

 வங்காள மக்களிடையே மிகப்பரந்த அளவில் திராவிடக் கலப்பு ஏற்பட்டுள்ளது. வங்காளத்திலும் சூடிய நாகபுரி, ஒரிஸ்ஸô போன்ற இடங்களிலும் பரவியுள்ள "ப்ரூஹியர்' திராவிடர்களே ஆவர். "காக்' என்பவரும் இவ்வினத்தையே சேர்ந்தவர். இவ்விருவர் தொகை ஏறக்குறைய நாற்பது லட்சம் ஆகும்.

 இதுகாறும் கூறியவற்றால், ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியா முழுமையிலும் திராவிடமொழி பரவியிருந்தது என்பது நன்கு புலனாயிருக்கும். இங்ஙனம் பரவியிருந்தமை உண்மை என்பதைப் பின்வரும் உண்மைகளும் மெய்ப்பித்தல் காண்க.

 ""வடமொழியில் சில சொற்கள் வேற்று முகத்துடன் காணப்படுகின்றன. அவற்றின் பகுதி முதலியவற்றை வடமொழித் துணைகொண்டு அறியக் கூடவில்லை. அவை வடமொழி அல்லாத பழைய இந்திய மொழியைச் சேர்ந்தவையாக இருத்தல் வேண்டும். பழைய மொழி ஒன்று வடமொழியின் உயிர் நாடியிலேயே கை வைத்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்'' (டாக்டர் பீம்ஸ்).

 கோட்டா (கோடா) (Ghota) என்பது குதிரையைக் குறிக்கும் வடசொல், ஙர்ரம்-தெலுங்கு, குதிரை-தமிழ், குதிர-மலையாளம், குதுரெ-கன்னடம், த்ரெ-துளு, குதிரை இந்தியாவில் உள்ளது. எனவே, வடசொல் (கோடா) திராவிடச் சொல்லில் இருந்தே வந்திருக்க வேண்டும். அங்ஙனமாயின், தக்கணப் பகுதிக்குத் தென்பால் உள்ள திராவிட மொழிகள் ஒரு காலத்தில் வட இந்தியாவில் (ஆரியர் வந்தபோது) இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகும். எனவே, இந்தியாவில் ஆரியமொழிக்கு முற்பட்டது திராவிட மொழியாகும்'' (pre-ariyan and pre-Dravidian in India pg.47-49).

 வடமொழியும் திராவிட மொழியும் நீண்ட காலம் ஒன்றோடொன்று நெருங்கி இருந்தன என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

 விசிறி-தமிழ், விசனகர்-தெலுங்கு, வீசரி-மலையாளம், பீசணிகெ-கன்னடம், வீஜன, வயஜன-வடசொற்கள். இச்சொல்லும் திராவிட மொழியினின்றும் கடன் வாங்கப்பட்டதே. இங்ஙனமே மயூரம் (மயில்), பல (பழம்), ஓடா (ஓடம்), முக்தா (முத்தம்) என்பன.

 ஆரியர் வேற்று நாட்டிலிருந்து வந்தவர். ஆதலின் அவர்கள் இந்தியாவில் கண்ட புதிய செடிகட்கும் மரங்கட்கும் வேறு பொருள்கட்கும் உரிய சொற்களைக் கடன் பெற்றிருத்தல் இயல்பே. எனவே, அவர்கள் பஞ்சாப் பகுதியில் குடியேறியதும்,

 அங்கிருந்த திராவிடரோடு கலப்புண்டு திராவிடச் சொற்கள் பலவற்றைப் பெற்றிருத்தல் இயல்பே. ஆரியரது முதல் வேதமாகிய ரிக் வேதத்திலேயே பல திராவிடச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவை கதலி (வாழை), ஓடா (ஓடம்), முக்தா (முத்தம்), தாம்பூலா (தமல-ஆக்கு-தெலுங்கு) முதலியன. லிங்க (லிங்கம்) என்பது ஆரியச்சொல் ஆகாது.

 மலைய, வளைய, பட்டின, கடம்ப என்பவை தமிழ்ச் சொற்கள். ஆரியர் வருகைக்கு நீண்ட காலம் முன்னரே திராவிடர் இந்தியா முழுமையும் பரவியிருந்தனர் என்பதில் ஐயமில்லை'' (சி.நாராயணராவ்)
 "", - இவற்றை முதலாகக் கொண்ட சொற்கள் சிந்திமொழியில் ஆரியச் சொற்களாகக் காணப்பட்டில. ", ' இரண்டுமே ஆரியத்துக்குப் புதியவை. எனவே, இவை பழைய இந்தியமொழி ஒன்றிலிருந்து கடன் பெற்றனவாதல் வேண்டும். இவை திராவிட மொழிக்கே  (Dravific studies part iii pg.58)

முடிவுரை
 மேலே கூறப்பெற்ற ஆராய்ச்சியாளர் கூற்றுக்களைக்கொண்ட - ஆரியர் வருகைக்கு முன்பு வட இந்தியாவிலும் திராவிட மொழி பரவி இருந்தது என்பதும், ஆரியர் வந்து ரிக்வேதம் செய்த காலத்தில் அந்நூலுள் திராவிடச் சொற்களும் இடம்பெற்றன என்பதும், திராவிட மொழியின் அமைப்பைப் பெரும்பாலும் காட்டவல்லது தமிழ் என்பதும் நன்கு புலனாதலைக் காணலாம்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: