24/06/2010

வள்ளுவர் கண்ட ஒப்புரவு ஒரு புதிய தத்துவம் - பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரனார்

திருவள்ளுவர் மனித வாழ்க்கையை ஆழமாக அலசி, தெளிவாக உணர்ந்து மக்களின் நல்வாழ்வுக்காகப் பல வழிகளை நமக்குக் குறளமுத வடிவில் தந்துள்ளார். அவ்வாறு தந்த பலவகைக் கருத்துகளில் ஒப்புரவு என்பது மிக உயர்ந்த ஒரு கருத்தாக உள்ளது.

உலக மொழிகளிலுள்ள பலவகையான நூல்களிலும் காணப்படாத ஒரு பெரிய உண்மையை இந்த ஒப்புரவறிதலில் அவர் விளக்குகிறார். ஈகை என்பது தன்னை நாடி வந்த வறியவர்க்குச் செய்யப்படும் உதவியாகும். அதை வடமொழியில் "தருமம்' என்பர். தருமத்தைப்பற்றி எல்லா மொழிகளிலும் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது. ஆனால் திருவள்ளுவர் "ஒப்புர'விற்கு ஒரு தனி இடத்தைக் கொடுத்துள்ளார். அதிலிருந்து ஈகையை வேறுபடுத்தியும் தனி அழகோடு ஒப்புரவைப் பிரித்துக் காட்டியும் மக்களுக்குப் பண்பட்ட நாகரிகமான உயர்ந்த நெறியைக் காட்டுகிறார். "ஒப்புரவு' என்னும் சொல் இப்போது பொது மக்களுக்குப் புரிகிற சொல்லாகப் புழக்கத்தில் இல்லை. அதனால் அதனுடைய விளக்கத்தை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஊரெல்லாம் ஒன்று எனக் கருதி ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதுதான் ஒப்புரவாகும்.

சுருக்கமாச் சொன்னால் சமூகத்திற்கு ஒருவன் செய்யும் நன்மைகளே ஒப்புரவு எனலாம். ""பிறருக்கு என்னுடைய செல்வத்திலே இருந்து ஏன் கொடுக்க வேண்டும்? நான் எதற்காக ஒருவனுக்குதவி செய்ய வேண்டும்? நாம் செய்வோமானால் அவர்கள் என்ன திருப்பிச் செய்வார்கள்?'' என்றெல்லாம் மனத்திலே நினைத்து அவனுடைய வாழ்க்கைக்கு வேலி போட்டுக் கொள்பவன் அறிவுடையவனாகமாட்டான்.மருந்து மரம் திருவள்ளுவர் உலகிலே காணப்படுகின்ற இயற்கையான அனுபவத்தை நமக்கு ஓர் எளிமையான உவமை மூலம் தெளிவாக விளக்குகிறார். உலகில் மக்களுக்கு நோய்கள் வருவது இயற்கை. நோய்கள் வந்தால், அவை அவர்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கும் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. நோய்களில் பலவகையுள்ளன. கண்நோய், வயிற்றுநோய், எதிர்பாராமல் ஏற்படும் புண்கள், காய்ச்சல் , தலைவலி இவை போன்ற பலவகை நோய்கள் உள்ளன. இவற்றிலிருந்து விடுபடுவதற்கு மருந்தைத் தேடி மனிதன் செல்கிறான். பக்கத்திலேயே ஒரு மரம் நிற்கிறது. கைக்கு எட்டும் தூரத்தில் அந்த மரம் இலைகளையும், காய்களையும் கனிகளையும் கொண்டு நிற்கிறது. எப்பொழுதும் அந்த மரத்தினுடயை பாகங்கள் மனிதனுக்கு உதவி செய்யக் காத்துக்கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நோயைப் போக்கக்கூடிய ஆற்றலுடையது. அந்தப் பாகத்தை மனிதன் உட்கொண்டால் அந்த நோய் நீங்கிவிடும்.

வேப்பமரத்தை எடுத்துக்காட்டாக நாம் கவனிப்போம். தோலில் கொப்புளங்கள் தோன்றினால் வேப்ப இலையைச் சாந்தாக அரைத்துப் பூசினால் அவை நீங்கிவிடுகின்றன. வேப்பம் பூவை உட்கொள்வோமேயானால் வயிற்றிலுள்ள புழுக்கள் சாகின்றன.வேப்பம் பட்டையை எடுத்து அதில் சாறு இறக்கிப் பக்குவப்படுத்திக் குடித்தால் தொற்றுக் காய்ச்சல் அடியோடு நீங்கிவிடுகின்றது. இவ்வாறு பலவித நோய்களுக்கும் பல வகையாக வேப்பமரம் பயன்படுகிறது. இதைப் போலவே நல்ல மனமும், உயர்ந்த பண்பும், தெளிந்த அறிவும் கொண்ட ஒருவனிடம் செல்வமானது இருக்குமானால் சமூகத்திலுள்ள ஒருவொருவருக்கும் அவரவர் துன்பங்களுக்கு ஏற்றவாறு உதவியாக இருந்து அது அந்தந்தத் துன்பங்களைப் போக்கிவிடும். அவ்வாறு ஒருவன் தன்னைச் சுற்றிலுமுள்ள மக்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களைப் போக்குவதற்குரியவாறு தன் செல்வத்தைத் தந்து உதவுவானானால் அவன் மிக உயர்ந்த பேரறிவாளனாகவே இருப்பான். அப்படிச் செய்யக் கூடியவனைப் பெருந்தகையாளன் என வள்ளுவர் குறிப்பிடுகிறார். பெருந்தகையாளனிடம் செல்வம் இருந்தால், அந்தச் செல்வம், நோயுடைய மக்களுக்கு அருகிலேயே எளிமையாக எப்போதும் மருந்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மரம் போலப் பயன்படும்.

""மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்''என்பது வள்ளுவர் வாக்கு. மருந்தாகும் மரம் தன் பகுதியை இழந்து பிறர்க்குக் கொடுத்துப் பிறரை வாழ வைப்பதுபோல ஒப்புரவாளனும் தனக்குரியதையும் தந்து தன் நலத்தையும் குறைத்துக்கொண்டு பிறர்க்கு உதவுகின்றான். கடனறி காட்சியர் வாழ்க்கை எல்லோருக்கும் எப்பொழுதும் ஒரே சீராக அமைவதில்லை. மேலே இருப்பது கீழேயும் கீழே இருப்பது மேலேயும் மாறி மாறிச் சென்று கொண்டிருப்பது உலக நியதி. இதனை மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார். ""கால மென்பது கறங்குபோற் சுழன்றுமேலது கீழா கீழது மேலாமாற்றிடும் தோற்றம்''எனச் சுந்தர முனிவர் வாயிலாகப் பேசுகின்றாரன்றோ?செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் வண்டியின் சக்கரம் போலச் சுழன்றுகொண்டே இருக்கும் என நாலடியார் கூறுகின்றது. நம் பெரியோர்கள் செல்வத்தின் நிலையாமைபற்றி நன்றாக எடுத்துக் கூறியுள்ளார்கள். செல்வன் ஒருவன் ஒப்புரவாளனாக இருக்கின்றான். ஆனால் இயற்கை நியதிப்படி அவன் செல்வம் குறைகிறது. பின் எப்படி உதவுவது? தனக்குப் பின்தானே தான தருமம். ஆனால், ஒப்புரவுக் கொள்கையைக் கடைபிடித்துப் பழக்கப்பட்ட மனம் அவ்வாறு தளர்வதில்லை. மேலும் மேலும் ஒப்புரவு செய்யவே அம்மனம் விரும்பிச் செயல்படுகிறது. அவர்களுடைய அறிவு அவர்களின் மனத்தை தளர விடுவதில்லை. மாறாக அறிவு மனத்திற்கு ஊக்கமூட்டுகிறது. உற்சாகத்தைக் கிளறிவிடுகிறது; மனத்தை உறுதிப்படுத்துகிறது.

உலக இயற்கையுடன் போராட்டம் நடத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டை அறிவு மனத்திற்கு ஊட்டுகிறது. உலகில் தான் செய்ய வேண்டியவை எவை என்பதை அறிவு மனத்திற்கு நன்கு எடுத்துக் காட்டுகிறது; இன்னும் வலுவாகச் செய்வதற்கு மனத்தில் ஊக்கமூட்டுகிறவாறு அறிவு ஊட்டச்சத்தினை மனத்திற்குத் தந்து தெம்பூட்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். செல்வம் குறையுமானால் செலவினங்களைக் குறைக்கவேண்டிய கட்டாயம் வரும் எனச் சொல்லவேண்டியதில்லை. ஆவால், எந்தச் செலவினங்களைக் குறைப்பது? ஒப்புரவையா? இல்லை. எல்லாச் செலவுகளையும் முழுவதும் குறைத்தாலும் ஒப்புரவுக்கு ஆகும் செலவை அறிவுடையவர்கள் குறைக்கமாட்டார்கள். ஏனெனில் ஒப்புரவுப் பண்பு மனிதப் பண்பின் அடிப்படையாக அமைய வேண்டிய ஒன்றாகும். ஒப்புரவு செய்வது இன்னகாலத்தில் இப்படித்தான் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் அடங்குவதில்லை. சமுதாயத்திற்குச் செய்யும் நன்மைகளைக் காலம் பார்த்துக்கொண்டு காலம் போக்காமல் காலாகாலத்தில் அவ்வப்போது உடனுக்குடன் செய்ய வேண்டும். தீராப்பசியுடைய ஒருவன் வந்தால் அவனை இரண்டு நாள்கள் கழித்து வா எனக் கூறலாமா? அப்பொழுதுதான் என்னால் ஆகும் எனச் சொன்னால் அவன் நிலை என்ன? செல்வம் இல்லையாயினும் தன்னாலியன்ற அளவு தன்னிடம் உள்ள உணவைத் தந்து அவன் துன்பத்தைப் போக்க நினைப்பான். இளையான்குடி மாற நாயனார் வரலாற்றைப் பெரும்பாலான தமிழர் அறிவர். எவ்வளவோ துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தும் விருந்தினர்க்கு உணவு தரவேண்டும் என்பதற்காக எத்தனை துன்பங்களை எதிர்த்துப் போராடினார். சமுதாயத்திற்கு நன்மைகள் செய்வதில் என்றும் பின்வாங்காமல் உறுதியாக நிற்றல் திண்மையான அறிவுடையார் செயலாகும்.""இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடனறி காட்சி யவர்'' என்பது வள்ளுவர் குறள். ஒருவன் தன் வாழ்க்கையில் செய்யவேண்டியவை இவை இவை எனச் சிந்தனை செய்து, உண்மைகளை உணர்ந்து அறிவுச்சுடரால் ஒளிவிடுபவனானால் அவன் தன்னிடம் செல்வம், மிகக் குறைந்துகொண்டு இருப்பதை அறிந்தாலும் சமுதாயத்திற்கு உதவும் முறைகளில் தளர்ச்சியடைய மாட்டான். சமுதாய நன்மைகளை எந்த நிலையிலிருந்தாலும் எப்பாடுபட்டாவது செய்பவனே நுண்ணிய அறிவுடையவனாவான்.

தமிழ்நாட்டில் குமணன் என்ற குறுநில அரசன் வாழ்ந்தான். அவன் தம்பி இளங்குமணன் அவனைக் கொன்றுவிட்டு, தான் அரச பதவியைப் பெறச் சூழ்ச்சி செய்தான். அதனால், குமணன் காட்டிற்குச் சென்று மறைந்து வாழ்ந்தான். அப்பொழுது அவனிடம் சிறிது செல்வமும் இல்லை. அந்த நேரத்தில் புலவர் ஒருவர் அவனைப் பார்க்கப் போனார். அப் புலவர் வறுமையால் மிகவும் துன்புறுவதை உணர்ந்த குமணன் உள்ளம் குமுறியது. இடமோ காடு. பருவமோ செல்வமில்லாத காலம். உள்ளமோ ஒப்புரவு உள்ளம். ஆதலால் புலவரைப் பார்த்துத் தன் தலையைத் தன் தம்பியிடம் கொடுத்து அதன் மூலம் புலவருடைய துன்பத்தைப் போக்கிக் கொள்ளுமாறு குமணன் வேண்டுகிறான். ஆகவே இடமும் காலமும் பாராமல் ஒப்புரவுள்ளம் படைத்தவர்கள் தம் நலத்தையும் மறந்து பிறர் நலத்திற்காகவே வாழ நினைக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதன்றோ?ஒப்புரவாளனுடைய வறுமை மனிதனுக்குக் கிடைத்த பெரும் ஆற்றல்களில் சிந்தனை தலைமையானதும் முதன்மையானதும் ஆகும். மற்ற உயிரினங்களுக்குக் கிடைக்காத பெரும் ஆற்றல் அது. விலங்குகளோ பறவைகளோ மற்ற உயிரினங்களுக்கு வரும் இன்ப துன்பங்களுக்குரிய காரணங்களை அறியா. ஆனால் மனிதன் அவற்றை அறிந்து உணரும் ஆற்றல் பெற்றுள்ளமை அவனின் தனிப்பேறாகும். ஒவ்வொருவனும் தான்தான் அனுபவிக்க வேண்டியன என நினைத்து அவற்றை நுகரும்போது, எதிர்பார்த்தது கிடைக்கவில்லையானால் அவன் அப்பொருளை அடையாததனால் வறுமையுடையவனாகத் தன்னை எண்ணித் துன்புறுகின்றான்.

ஒரு செல்வனுக்குப் பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பது, அவனளவில் அது "சர்க்கரை வறுமை'யாகும். ஓர் ஏழை கூழுக்கு உப்பில்லை என வருந்துவது, அவனளவில் அது "உப்பு வறுமை'யாகும்.இவை போலவே ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான பொருள், அனுபவிப்பதற்குக் கிடைக்காத போது, அதனால் வறுமையுற்றவராகவே கருதி வாழ்வது சாதாரண மக்கள் இயல்பு. ஆகவே வறுமைகள் பலவகைப்பட்டுள்ளன. ஆயினும் இங்கு வள்ளுவர் காட்டும் வறுமை மிகப் புதுமையானது. ஒரு குடும்பத்தார்க்குப் பல ஆண்டுகள் குழந்தைப்பேறே கிடைக்கவில்லை. குழந்தையில்லா வறுமை அவர்களை வாட்டியது ஆண்டுகள் உருண்டன. பிறகு அவர்களுக்கு ஒரு பெண் பிறந்தது. எவ்வளவு மகிழ்ச்சி! அதனை " நல்கூர்ந்தார் செல்வமகள் ' எனக் கலித்தொகை பேசுகிறது. வறுமை நீங்கினால் கிடைக்கும் மகிழ்ச்சி அளவற்றது. பிறர் துன்பம் கண்டு, மனம் கசிந்து உடனே அவருக்கு அதனை நீக்க நினைக்கும் இயல்பான அறிவு கொண்ட ஒப்புரவாளனுக்கு, எது வறுமை என்பதை மிக அழகாக வள்ளுவர் காட்டுகிறார். தனக்கு ஒன்று இல்லை என அவன் மனம் வருந்தவில்லை. தனக்குக் கிடைக்காததால் வறுமையுள்ளதாக அவன் கருதவும் இல்லை. ஆனால் பிறர் துன்பமுறும்போது அதனைப் போக்கமுடியாத நிலை அவனுக்கு ஏற்படுமானால் அதனையே அவன் மிகமிக வறுமையாகக் கருதுகிறான். தன்னால் பிறருடைய துன்பத்தை போக்க இயலவில்லையே என வருந்தி அவ்வாறு இயலாத நிலையையே வறுமையாக கருதுகிறான். அதாவது தன்னிடத்தில் இல்லாமை, போதாமை, காரணமாகத் தான் வருந்துவதுபற்றி அவன் கவலைப்படவில்லை. அவற்றை வறுமையாகவும் அவன் நினைக்கவில்லை. ஆனால் தான் பிறர்க்கு உதவ இயலாத நிலையில் இருப்பதையே வறுமையாகக் கருதுகிறான். ஆகையால் வள்ளுவர், ""நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீரசெய்யாது அமைகலா ஆறு''என எடுத்துக்காட்டுகிறார்.

தான் அனுபவிக்க வேண்டியதைத் தன்னால் அனுபவிக்க இயலவில்லையே என்பதை நல்ல பண்பாளன் வறுமையாக நினைப்பதும் இல்லை. ஆனால் பிறர்க்கு உதவி அவர்களின் துன்பத்தைப் போக்க இயலவில்லை என்பதையே அவன் வறுமையாகக் கருதுவான் என்கிறார் வள்ளுவர். கணவன் தன்னைவிட்டுப் பிரிந்து போய்த் தனக்கு மகிழ்ச்சி தாராமல் துன்பம் தருகிறானே என்பது கண்ணகிக்கு வருத்தமாய்த் தெரியவில்லை. கணவன் தன்னுடன் இன்மையால் ஒப்புரவு செய்ய இயலவில்லையே என வருந்துவதை நாமறிவோம். எனவே தனக்கு வரும் துன்பத்தைப்பற்றிச் சிறிதும் எண்ணாமல் பிறர் துன்பத்தை நீக்க இயலாத நிலையில் இருப்பதே வறுமையாகும் என நினைப்பது உயரிய நெறியாகும். ""தன் துயர் காணாத் தகையால் பூங்கொடி'' எனக் கவுந்தியடிகள் கண்ணகியைப் பாராட்டுகிறார் அன்றோ? கோவலன், தன் மகள் மணிமேகலைக்குப் பெயர் சூட்டும் நாளில் ஒரு துயரக் காட்சியைக் காண்கிறான். ஒரு வயது முதிர்ந்த கிழவனை ஒரு யானை துதிக்கையால் பிடித்துத் துன்புறுத்தியது கண்டு கொதித்தெழுந்து, ஓடோடிப் போய்த் தன் உயிரைப்பற்றிச் சிறிதும் எண்ணாமல் அவனை விடுவிக்க முயன்றமை ஒப்புரவுப் பண்பினாலன்றோ? பொய்க் கரியாளனுக்குப் பதிலாகக் கோவலன் தன்னுயிரைத் தர நினைப்பது எப்பண்பால்? இவ்வாறு மக்கள் ஒவ்வொருவரும் தன்துயர் காணாமல் பிறர் துன்பம் கண்டு அதைப் போக்காமையே வறுமை என நினைத்து அவ் வறுமையைப் போக்க நினைந்து விடுவார்களானால் சமுதாயம் எவ்வளவு உயர்ந்துவிடும் ! அரசு சமுதாயத்திற்கு உதவுகிறது. அவ்வாறிருக்க நாம் ஏன் செய்ய வேண்டும் எனத் தோன்றலாம். சட்டங்கள் அச்சத்தால் மனிதனை சீராக்க முயல்கின்றன. அது முழுவெற்றி பெறுவதில்லை. ஆனால் மனத்தால் ஒவ்வொருவரும் ஒப்புரவுப் பண்பைக் கொண்டவராய் இருந்தால் சமுதாயம் எவ்வளவு இனிமையாய் இருக்கும். தன்னை மறந்து பிறர்க்கு நன்மை செய்யும் தியாகப் பண்பைக் கொள்ளாதிருத்தலே வறுமை என வள்ளுவர் கூறும் உயரிய கருத்தை வாழ்க்கையில் ஊன்றி நினைத்து கடைபிடித்துத் தியாகிகளாக வாழ மனிதர் முயலவேண்டும்.

தன்னையும் விற்றல் ஒருவன், தன்னைப்பற்றிச் சிறிதும் எண்ணாமல் எப்பொழுதும் பிறருக்கே உதவி செய்துகொண்டு பிறர் துன்பத்தையே போக்கிக்கொண்டு இருப்பானானால் அவனுக்குக் கேடு வந்துவிடாதா? தான் வறுமையடைந்து துன்புற மாட்டானா? அந்தக் கேடுகளை எப்படி நீக்குவது? அவன் செல்வமும் அழிந்துவிடுமே! இவ்வாறு ஒருவன் மனம் ஓடுவது இயற்கை. ஒருவன் தான் நன்றாக வாழவேண்டும் எனத் தன்னலத்தால் தான் நுகர்வதற்குப் பலவகையான வாழ்க்கை வசதிகளையும் பெருக்கிக்கொள்ள நினைந்து, முயற்சி செய்கிறான். அவ் வசதிகளைப் பெறுவதற்குத் தன்னை விற்கவும் தயாராகின்றான். தன்னை விற்று அதனால் வரும் பொருளைத் தன் துன்பத்தை நீக்குவதற்குப் பயன்படுத்த நினைக்கிறான். அப்பேர்ப்பட்டவனைத் திருவள்ளுவர் "கயவன்' எனக் குறிப்பிடுகிறார். "" எற்றிற் குரியர் கயவர்ஓன் றுற்றக்கால்விற்றற் குரியர் விரைந்து''என்பது அவர் கருத்து. தன் துன்பத்தை நீக்கப் பிறர்க்கடிமையாய் நிற்க அவன் அஞ்சுவதில்லை. ஆகவே தனக்காக அடிமையாய் வாழ நினைப்போரைக் கயவர் என இழித்தும் பழித்தும் அடித்தும் கூறுகின்றார். ஆனால், ஒருவன் பிறர் துன்பத்தைப் போக்குவதற்காகத் தன்னை விற்று அடிமைப்படுத்திக் கொண்டு இருப்பானே ஆனால் , அது மிக உயர்ந்தது என்பது வள்ளுவர் வழியாம். ஆகவே ஒப்பரவு செய்வதால் கேடு வந்தாலும் அக் கேட்டைத் தன்னை விற்றாவது போக்கிக் கொள்ளலாம் என்கிறார் அவர். அதாவது தன்னை விற்று அடிமையாக மாறுவது இழிசெயல். ஆனால் பிறருக்காகச் செய்யப்படுமேயானால் மிக உயர்ந்ததே அன்றி இழிந்ததன்று. பழிக்கத் தக்கதாயினும் அது ஏற்றுச் செய்யத் தக்கதே. அவர் குறளைப் பார்ப்போம்.""ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து''

சிவபெருமானுக்குத் தியாகராசன் என்றும் பெயர் உண்டு. கடலைக் கடைந்த காலத்தில் நஞ்சும் அமிழ்தும் தோன்றின. நஞ்சை உண்ண யாரும் முன்வரவில்லை. அது துன்பம் தரும் என்பதை எல்லோரும் அறிவார்கள். அது உண்பாரைக் கொல்லக்கூடியது என்று அறிந்தும் பிறர் துன்பத்தைப் போக்குவதற்காகச் சிவபெருமான் அந்நஞ்சினை உண்டார் என்பர். அதனால் அவர் தியாகராசன் ஆனார். அது உயரிய ஒப்புரவுப் பண்பை விளக்கும். பிறருக்காக ஒருவன் சாவது மேலுலகைத் தரும் எனக் கம்பன் கூறுகின்றான்.""ஆவுக் காயினும் அந்தணர்க் காயினும்யாவர்க் காயினும் எளியவர்க் காயினும்சாவப் பெற்றவ ரேதகை வானுறை தேவருந்தொழுந் தேவர் களாகுவர்''எவர் துன்புற்றாலும் அவருக்கு உதவி செய்யவேண்டும். துன்பத்தை நீக்க அவர் உயிரையும் தருவது உயர்ந்ததாம் என்பதே இதன் கருத்தாம். இராவணன் இராமசேனையோடு போர் புரிந்து கொண்டிருந்தான். அவன் படைகளை எல்லாம் வீபீடணன் உதவியால் அறிந்த இலக்குவன் எளிதாக விலக்கிக் கொண்டிருந்தான். அதை அறிந்த இராவணன் வீபீடணன் மீது அம்பை விட்டான். அச் சமயத்தில் வீபீடணனைக் காப்பதற்காகத் தான் முன்பு போய் அம்பை ஏற்றுச் சுருண்டான். இவ்வாறு இலக்குவன் ""மன் உயிர் கொடுத்த வன்மை''யை இராமன் பாராட்டிப் பேசினான்.

""புறவொன்றின் பொருட்டாக யாக்கை புண்ணுற வரிந்த புத்தேள்அறவனு மைய நின்னை நிகர்க்கில னப்பால் நின்ற பிறவினை யுரைப்ப தென்னே பேரரு ளாள ரென்பார்கறவையுங் கன்று மொப்பார் தமர்க்கிடர் காண்கி லென்றார்''எனவே தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத் துன்பம் வரின் கறவையும் கன்றும் போல் ஒன்றுபட்டுத் துன்பம் போக்குவர் என்பது கருத்து. தியாகத்தின் உச்சகட்டத்தை எய்தியவர் புறாவுக்காகத் தன்னுடலை அரிந்து தந்த சிபிமன்னன் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆனால் இலக்குவனுக்கு அந்தச் சிபியும் நிகரில்லை என இராமன் எடுத்துக் காட்டுகிறான். இக்காலத்தில் சமுதாய நன்மைக்காத் தம் துன்பத்தையும் பாராமல் பிறருக்காக உதவுபவர் பலரைக் காண்கிறோம். இரத்தம் ஒருவர் வாழ்வதற்கு மிகமிக இன்றியமையாதது.இனனொருவரை வாழ்விப்பதற்காகத் தம் இரத்தத்தைக் கொடுப்பவர் ஒப்புரவாளரல்லரோ? ஒருவர்க்குச் சிறுநீரகம் இரண்டு உண்டு. அவற்றுள் ஒன்றிருந்தா<லும் போதும். அதனால் துன்புறும் ஒருவருக்குத் தம்மிடமுள்ள ஒரு சிறுநீரகத்தை மற்றவர்க்கு எடுத்து வைப்பதற்காகக் கொடுப்பவரை இன்றைய உலகில் காண்கின்றோமன்றோ? வாடிய பயிரைக் கண்டாலும் அவ் வாட்டத்தைப் போக்க முயலும் ஈர நெஞ்சினர் பண்பை எப்படிப் போற்றுவது? ஈகை வேறு, ஒப்புரவு வேறு. ஈகை என்பது வறியவர்க்குத் தருவது; மறு உலகில் நலமாய் வாழலாம் என்ற எண்ணத்தில் செய்வது. ஆனால், ஒப்புரவு இப்பூமியில் துன்புறுவார் துன்பத்தைத் துடைக்க எழுவது; பயன் எதிர்பாராதது. சமுதாயக் கூட்டுறவுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் இப்பண்பு மிக உதவுவது. சோசலிச சமுதாயத்தை அரசியல் சட்டமில்லாமல் மன வளர்ச்சியால் காட்டுகிறாரோ! இது வள்ளுவர் கண்ட புதிய ததத்துவம்.

கருத்துகள் இல்லை: