24/06/2010

தமிழ் இலக்கியங்கள் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்

இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும். கிரேக்க மொழியிலும், ஜெர்மன் மொழியிலும், பிற மொழிகளிலும் தமிழியல் குறித்தும் தமிழினம் குறித்தும் எழுதப் பெற்றுள்ளவை அனைத்தும் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு உலகில் எந்த பகுதியில் உள்ளவரும் அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும். வகை வகையாய் அகராதிகளும், தொகை தொகையாய்க் கலைக் களஞ்சியங்களும் வர வேண்டும்.

தமிழுக்கு இன்னும் என்னென்ன வேண்டும் என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கும் அறிஞர்கள் எடுத்துச் சொல்லி இந்த அரசுக்கு ஆணையிட வேண்டும்.

புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரன் என்பதை தமிழன் முதலில் உணர வேண்டும். பிறருக்கும் அதை உணர்த்த வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், தமிழ், தமிழ் இனம், தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம் என்று ஒவ்வொரு துறையிலும் பதித்துள்ள முத்திரைகள், சாதித்துள்ள சாதனைகளை எல்லாம் ஒவ்வொரு தமிழனுக்கும் பூரிப்பையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தக் கூடியவை. இருந்தாலும் அத்துடன் நின்றுவிடாமல், தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் ஆற்ற வேண்டியவை இன்னும் ஏராளமாக உள்ளன என்பதை உணர வேண்டும்.

காலந்தோளும் தமிழ், தமிழர்கள் கொண்டுள்ள எண்ணற்ற சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள்தான் வெளிநாட்டவர்க்கு எடுத்துரைக்க வேண்டும். ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர் அவற்றைத் தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலைதான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

தமிழ் மொழியின் தொன்மையைப் பொருத்தவரை தொல்காப்பியம் போன்றதோர் பழைமை இலக்கணம் எந்த மொழியிலும் இல்லை. அகம், புறம் என்னும் பொருண்மைப் பகுப்பும், திணை, துறை வகுப்பும், சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாதவாறும், கூற்றுநிலையில் அமைந்திடுமாறும் உள்ள அகப்பாடல்களும், பொய்யும் வழுவும் விரவா மெய்யான தூய காதலைப் போற்றும் மரபும், மகேசனை மையப்படுத்தாமல் மனிதனை மையப்படுத்தும் பாடல்களும் கொண்ட சங்க இலக்கியம் போன்றதோர் தொல்லிலக்கியம் எந்த மொழியிலும் இல்லை.

திருக்குறள் போல உலகப் பொதுமையான அற இலக்கியமும் எந்த மொழியிலும் இல்லை. கடவுளை விடுத்துக் குடிமக்களைத் தலைமக்களாகக் கொண்ட சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியமும் எந்த மொழியிலும் இல்லை. ஆசியா முழுவதும் கோலோச்சிய பௌத்த சமயத்திற்கு மணிமேகலை போல ஒரு காப்பியம் பாலி மொழியிலும் இல்லை. எல்லா சமயங்களையும் - சைவ, வைணவ சமயங்களையும் - சமண, பௌத்த சமயங்களையும் - கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களையும் இதயத்திலே ஏந்திக் கொண்ட மொழி தமிழ்.

எல்லா மெய்ப் பொருள் தத்துவங்களையும் விளக்கும் மொழி அது

கருத்துகள் இல்லை: