24/06/2010

வெளியிலே நிலவொளி வீட்டிலே இருள் !

பூம்புகார் என்ற இந்தத் திருப்பெயரைக் கேட்டபோதோ, நம் நினைவு எங்கோ சென்றிருக்கும்
அன்று எத்துணைச் சிறப்பாக வாழ்ந்தோம் - இப்போது எத்துணை இடர்ப்பாடுகளில் சிக்கித் தவிக்கிறோம்!
அன்று வளமாக வாழ்ந்தோம்: இன்று வறுமைப் பள்ளத்தில் வீழ்ந்திருக்கிறோம். அன்று உலகத்தார் பாராட்டிட வாழ்ந்தோம்; இன்று நம்மிடம் உள்ளதைப் பறிக்க, பிறர் வரும் நிலையையும் பார்க்கிறோம்.
வானத்தில் பால் நிலவு காய்கின்ற வேளை- அந்த நிலவொளி பட்டதால் கவிதை உணர்ச்சி உள்ளத்தில் பொங்கி எழுகிறது! யாப்புத் தெரியாவிடினும், இலக்கணம் புரியாவிடினும் பால் நிலவொளி மேனியில் பட்டு இன்பம் பெருக்கிய காரணத்தால் - கவிதை உணர்ந்த நமது வாழ்வு விளக்காம் தமிழைப் பாடிட நினைக்கிறோம்.
அது முடிந்து இல்லத்தில் உள்ளே செல்லும்போது இல்லத்தில் இருக்கும் ஒரே விளக்கும் எண்ணெய் இல்லாத காரணத்தால் ஒளிகுன்றி அணைந்திட, இல்லத்தில் இருள் சூழ்ந்தால் உள்ளம் என்ன பாடுபடும்!
வெளியிலே நிலவொளி; உள்ளே இருள் ! வெளியே உணர்ச்சிப் பெருக்கு ; உள்ளே மனம் உடைந்த நிலை! தத்தளிப்பு! தவிப்பு!
பத்து நாள்களும் தமிழ்ப் பெருமக்கள் தந்த விளக்கம் கேட்டு , பால் நிலவு ஒளியில் தோன்றிய பெருமித உணர்ச்சியை அடைகிறோம். நிகழ்காலம் பற்றி நினைக்கும்போது விளக்கு அணைந்த வீடுபோல் நம் உள்ளம் மாறுகிறது. உன்னதத் தமிழைப் பெற்ற உங்களை வாழ்த்துவதா? அத்தகைய தமிழ் இருந்தும் வாழ்வில் வளம் அடைய முடியாத நிலை குறித்து வருந்துவதா ? எனத் தெரியவில்லை. ஐம்பெருங்காப்பியங்களும் காவியங்களும் படைத்த தமிழ்மொழியின் இருப்பது கண்டு வருந்துவதா? எனத் தெரியவில்லை
மழலைக் குழந்தைகளுடன் மாநாட்டில் தாய்மார்கள்
தமிழ்ச் சமுதாயம் தமிழ் மொழியின் அடிப்படையில் தான் இயங்குகிறது. இதை உணர்ந்திருந்தாலும், எடுத்துச் சொல்ல முடியாமல் எடுத்துச் சொல்லும் வகை அறியாது நாம் இருக்கலாம்.
ஆனால் தமிழ் வாழ்ந்தால் தான் தமிழர் வாழ முடியும்; தமிழர் வாழ்ந்தால் தான் தமிழ்ச் சமுதாயம் வாழமுடியும் என்று உள்ளுர நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் மொழிக்காக ஒரு மாநாடு என்றால் , தமிழாசிரியர் மட்டும் - புலவர்கள் மட்டும் - கற்றறிந்த கலிவாணர் மட்டும் இந்த மாநாட்டுக்கு வரவில்லை, தமிழர் அனைவரும் வந்திருக்கிறார்கள்.
அவர்களே ஒரு கவிதையாக விளங்குகிறார்கள்; அவர்களே ஒரு கவிதையாக விளங்குகிறார்கள்; அவர்கள் பேச்சிலே ஒரு பட்டொளி! அவர்கள் மூச்சிலே தமிழ் எழுச்சி! அவர்கள் நடமாடும்போது , வீரத் தமிழகமே நடமாடுவது போன்ற ஒர் உணர்வு இங்கே தோன்றுகிறது.
இங்கே ஆடவரும் வந்திருக்கிறார்கள்; ஆரணங்குகளும் வந்திருக்கிறார்கள்: இளைஞர்களும் வந்திருக்கிறார்கள்; முதியவர்களும் வந்திருக்கிறார்கள்; தாய்மார்கள் தாங்கள் பெற்றெடுத்த வெற்றியான குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள்.
தமிழ் இன்பத்தைத் தாங்கள் செவிமடுப்பதோடு - தஙகள் குழந்தைகளுக்குக் கருத்து விளங்கினாலும் , விளங்காவிட்டாலும் , தமிழ் ஒசை இன்பம் அந்தக் குழந்தைகளின் செவிவழிப் புகுந்து, ரத்ததோடு ரத்தமாய் - மழலையோடு மழலையாய் - மாறட்டும் என்ற நினைப்பில் இடுப்பில் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள் தாய்மார்கள்.

கருத்துகள் இல்லை: