24/06/2010

நட்பின் இயல்பு - கி.ஆ.பெ. விசுவநாதம்

வாழ்வுக்கு இன்றியமையாதது நட்பென்றும், நண்பர்களோடு பழகுவதும், பேசுவதும், வாழ்வதும், எவர்க்கும் மகிழ்ச்சியை அளிக்குமென்றும் அறிஞர்கள் கூறுவது உண்டு. எவருடனாவது நட்புக் கொள்ளுமுன், அவரைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். அல்லது,""நாம் கூறுவதையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார்; நம்முடைய கொள்கைகளையும் அவர் பின்பற்ற மாட்டார்'' என்ற முடிவில் தான் எவரோடும் நட்புக் கொள்ள வேண்டும். இன்றேல், இந்த நட்பு நிலைக்காது; நிலைக்காதது மட்டுமன்று, பகைமையையும் உண்டாக்கிவிடும்.

ஒரு குடும்பத்தில் பத்துப் பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பத்துப் பேர்களுக்கும் கண்,காது, மூக்கு, வாய்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒருவர்க்கு இருப்பதுபோல் மற்றவர்க்கு இருப்பதில்லை. அதுபோலத்தான் மனிதனுடைய உள்ளுறுப்புகளும். அவற்றில் ஒன்று தான் "மனம்', மனம் ஒருவர்க்கு இருப்பதுபோல் மற்றவர்க்கு இருப்பதில்லை. இந்த உண்மையை உணர்ந்துகொண்ட பின்புதான் எவரோடும் நட்புக் கொள்ள வேண்டும். பறங்கிக்காய்க்கு - பறங்கிவிதை; புடலங்காய்க்கு - புடலைவிதை; பாகற்காய்க்கு - பாகல் விதை; பகைக்கு எது விதை? பகைக்கு விதை பகையன்று. பகைக்கு விதை நட்பு. "நட்பு' என்ற விதை இல்லாமல் " பகை' என்ற செடி முளைப்பதே இல்லை. நாம் வீட்டில் இருக்கிறோம். சாலையில் ஆயிரம்பேர் நடக்கின்றனர். அவர்களில் எவரும் நமக்குப் பகையில்லை. ஏன்? காரணம் அவர்களில் எவரோடும் நாம் நட்புக் கொண்டிருக்கவில்லை. இதைப் படிக்கும் அன்பர்களுக்கு எவராவது பகைவராக இருந்தால், ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். அவர்கள் எல்லாரும் ஒருகாலத்தில் உங்கள் நண்பராகத்தான் இருந்திருப்பர். ஆகவே "பகை' என்ற செடி முளைப்பது "நட்பு' என்ற விதையிலிருந்து தான் என்று தெரிகிறது.

உலக மொழியறிஞர்கள் பலர் எதை எதையோ முன்வைத்து அவற்றிற்கென இலக்கியங்களைச் செய்து தந்தள்ளனர். ஆனால் மனிதனை முன்வைத்து மனிதனுக்கென ஒரு தனி இலக்கியம் செய்து தந்த புலவர் வள்ளுவர் ஒருவரே. ஒரு மனிதன் தன்னைப் போன்ற பிற மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதைத் துருவி ஆராய்ந்து, நட்பு, தீநட்பு, கூடாநட்பு, பழைமை, நட்பாராய்தல், சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைக்கோடல் ஆகிய ஏழு அழகிய தலைப்புகளில் எழுபது குறள்களை அவர் எழுதிக் குவித்திருக்கிறார். இந்த எழுபது குறள்களிலும் கூறாத ஒரு கருத்தை, " நிலையாமை' என்னும் அதிகாரத்தில் 338ஆம் குறளில் கூறியிருப்பது நமக்கு வியப்பை அளிக்கிறது. அது உடம்புக்கும் உயிருக்கும் இடையே உள்ள நட்புதான் "நட்பு' என்பதாம். ஆம்; உடம்பில் ஊசி குத்தினால் உயிர் துடியாய்த் துடிக்கிறது. உயிர் கவலைப்பட்டால் உடம்பு இளைக்கிறது. அதுமட்டுமன்று; உடம்பு அழிந்தால் உயிரும் மறைந்துவிடுகிறது. உயிர் பிரிந்து போனால் உடலும் அழிந்து போகிறது. ஆதலால் இத்தகைய நட்புதான் உயர்ந்த நட்பென்று தெரிகிறது.

வள்ளுவர் இதனோடு விட்டுவிடவில்லை. இத்தகைய உயர்ந்த நட்பும் நிலைக்காது; கூட்டை விட்டுப் பறவை பறந்து ஓடிவருவதைப் போல, இந்த உடலைவிட்டு உயிரும் ஒருநாள் ஓடிப்போய்விடும் என்று நம்மை எச்சரிக்கை செய்கிறார் அவர். "" குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றேஉடம்போ(டு) உயிரிடை நட்பு'' - திருக்குறள், 338என்பது அக்குறள். இத்தகைய நட்பே "நிலைக்காது' என்பது உண்மையானால், பின் எவருடைய நட்பு நிலைக்கப் போகிறது என்று நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது இக்குறள். எப்படி இந்த நட்பின் இயல்பு! வள்ளுவர் இந்த அளவிலும் நம்மை விட்டுவிடவில்லை. ""நிலையான நட்பு ஒன்று உண்டு'' எனக் கூறி அதற்குரிய வழியையும் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.

உலக மக்கள் அனைவரும் துன்பமின்றி வாழவே விரும்புகின்றனர். ஆனால் பாவம்; அவர்கள் துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்கின்றனர். காரணம், துன்பம் வருவது எதனால் எவரும் உணர்வதில்லை. சில பொருட்களை விரும்புவதாலும், சில பொருட்களை வெறுப்பதாலும் தான் துன்பங்கள் வருகின்றன. சில மனிதர்களை விரும்புவதாலும், சில மனிதர்களை வெறுப்பதாலும்தான் துன்பங்கள் வருகின்றன. இதனால் துன்பமின்றி வாழவேண்டுமானால் "" விருப்பு வெறுப்பின்றி'' வாழ வேண்டும் என்று தெரிகிறது. இப்படி வாழ நம்மால் முடியுமா? முடியாது. நமக்கு அந்த ஆற்றல் இல்லை. ஆனால் அத்தகைய விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கையைப் பெற்றாக வேண்டும். அதை எப்படிப் பெறுவது? அதற்குரிய வழி - "நெல்' வேண்டுமானால் களஞ்சியத்திற்குப் போக வேண்டும். பணம் வேண்டுமானால் வங்கிக்குப் போகவேண்டும். விருப்பு வெறுப்பின்றி வாழவேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிற ஒருவரது நட்பைப் பெற வேண்டும். அந்த நட்புதான் உயர்ந்த நட்பும், அழியாத நட்பும் ஆகும். அத்தகைய நட்பை ஒருவர் பெற்றுவிட்டால் ஒருநாள் - இருநாள் அல்ல; ஒருமாதம்- இருமாதம் அல்ல; ஓராண்டு- ஈராண்டு அல்ல; பிறப்பு முதல் இறப்புவரை துன்பமின்றி வாழமுடியும் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

அவர் யாரென்றா கேட்கிறீர்கள்? அவன்தான் இறைவன். இறைவன் ஒருவன்தான் விருப்பு வெறுப்பின்றி வாழ்ந்து வருபவன். அவனுடைய நட்பை நாம் பெற்றால் தான் இவ்வுலகில் துன்பமின்றி வாழமுடியும். "" வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல'' -குறள்என்பதே அக் குறள். எடுங்கள் குறளை! படியுங்கள் ஆழ்ந்து!! பட்டம் பெற, பதவி பெற, எழுத்தாளனாக, பேச்சாளனாக, மேற்கோள்கள் காட்ட என்று படிக்காமல்,"" அதன்படி நடக்க '' என்றும் படியுங்கள். உங்கள் வாழ்வில் "ஓர் ஒளி ' வீசும்.

கருத்துகள் இல்லை: