24/06/2010

அணி

செய்யுளுக்கு அழகு செய்து நிற்பது அணி எனப்படும். அது தன்மை, உவமை, உருவகம், சிலேடை, மடக்கு, வேற்றுப் பொருள் வைப்பு எனப் பலவகைப்படும். அவற்றுள் சிலவற்றின் விவரங்களை இங்கு காண்போம்.


1. தன்மை அணி
``வானத்தில் மிகத் தாழ்ந்து செல்லும் மேகம் இம்மலையுச்சியில் படிகிறது.'' - இம்மலை மேக மண்டலத்தை முட்டுகிறது' என்று மிகைப்டக் கூறாமல், உள்ளதை உள்ளவாறு கூறியதனால் இது தன்மை நவிற்சி அணி எனப்படும். இஃது இயல்பு நவிற்சி என்றும் கூறப்படும். இதற்கு மாறுபட்டது உயர்வு நவிற்சியணி.


``உள்ளங் குளிர வுரோமஞ் சிலிர்த்துரையுந்
தள்ளவிழி நீரரும்பத் தன்மறந்தாள் - புள்ளைலைக்குத்
தேந்தா மரைவல்சூழ் தில்லைத் திருநடஞ்செய்
பூந்தா மரை தொழுத பொன்.''

இச்செய்யுளில் தன்மையணி அமைந்துள்ளதைக் காண்க.

2. உவமையணி
மதிபோன்ற வட்டமுகம் - இதில், மதி - உவமை; முகம் - பொருள் (உவமேயம்); வட்டம் - பொதுத் தன்மை, போன்ற - உவம உருபு. இவ்வாறு உவமை, பொருள், பொதுத் தன்மை, உவம உருபு என்னும் நான்கும் அமையும்படி அல்லது மூன்று அமையும்படி, அல்லது உவமையும் பொருளும் அமையும்படி கூறுவது உவமை அணியாகும்.


``பால்போலும் இன்சொற் பவளம்போற் செந்துவர்வாய்
சேல்போல் பிறழுந் திருநெடுங்கண் - மேலாம்
புயல்போற் கொடைக்கைப் புனனாடன் கொல்லி
அயல்போலும் வாழ்வ தவர்.''

இவ்வெண்பாவில் உவமையணி அமைந்திருத்தலைக் காண்க.

3. உருவக அணி
முகமதி - இது `முகம் ஆகிய மதி' என விரியும். இவ்வாறு உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் வரும்படி அமைவது உருவக அணி எனப்படும்.


``இன்சொல் விளைநிலமா வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.''

இப்பாடலுள்,
இன்சொல் - நிலமாகவும்
வன்சொல் - களையாகவும்
வாய்மை - எருவாகவும்
அன்பு - நீராகவும்
அறம் - கதிராகவும்

உருவகப்படுத்தப்பட்டுள்ளன.


4. பின்வரு நிலையணி
ஒரு செய்யுளில் முன்வந்த சொல்லும் பொருளும் தனித்தனியேனும் கூடியேனும் பல இடங்களில் பின்வருமாயின், அது பின்வரு நிலையணி எனப்படும்.

எனவே, சொற் பின்வரு நிலையணி, பொருட் பின்வரு நிலையணி, சொற்பொருட் பின்வரு நிலையணி என இவ்வணி மூவகைப்படும் என்பது தெரிகிறது.


``மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ்
மால்வரைத்தோ ளாதரித்த மாலையார் மாலிருள்சூழ்
மாலையின் மால்கள மார்ப்ப மதன்றொடுக்கும்
மாலையின் வாளி மலர்.''

இச்செய்யுளில் முன்னர் வந்த `மால்' என்னும் சொல்லே பின்னும் பல இடங்களில் வந்துள்ளமை காண்க.

5. வேற்றுப்பொருள் வைப்பணி
``அநுமன் கடல் கடந்தான், பெரியோர்க்கு அரியது யாது?'' - இதில் பெரியோர்க்கு அரியது யாது என்பது உலகறிந்த பொதுப் பொருள்; அநுமன் கடல் கடந்தான் என்பது சிறப்புப் பொருள்.

இவ்வாறு ஒன்றைக் கூறத் தொடங்கிப் பின்னர் அது முடித்தற்கு உலகம் அறிந்த வலிமை உடைய வேறொரு பொருளை வைத்து மொழிவது வேற்றுப் பொருள் வைப்பணி எனப்படும்.


``புறந்தந் திருளிரியப் பொன்னேமி யுய்த்துச்
சிறந்த வொளிவளர்க்குந் தேரோன் - மறைந்தான்;
புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
இறவாது வாழ்கின்றார் யார்.''

இதன் கண் முன்னிரண்டு அடிகளில் சிறப்புப் பொருளும், பின்னிரண்டு அடிகளில் பொதுப் பொருளும் வந்தமை காண்க.

6. வேற்றுமையணி

``சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே
நின்றளவி லின்ப நிறைப்பவற்றுள் - ஒன்று
மலரிவருங் கூந்தலார் மாதர்நோக் கொன்று
மலரிவருங் கூத்தன்றன் வாக்கு.''

இச்செய்யுளில் முன் இரண்டு அடிகளால் வெளிப்படையாக இரு பொருளுக்கு ஒப்புமை கூறி, பின்பு, ஒன்று `மாதர் நோக்கு,' ஒன்று `கூத்தன்றன் வாக்கு' என அவ்விரு பொருள்களுக்கும் வேறுபாடு கூறப்பட்டது. ஆதலால் இது வேற்றுமையணி எனப்படும்.
கூற்றினாலாவது, குறிப்பினலாவது, ஒப்புடைய இரு பொருள்களை ஒரு பொருளாக வைத்து, அவற்றைத் தம்முள் வேற்றுமைப்படச் சொல்வது வேற்றுமையணி எனப்படும்.


7. பிறிது மொழிதலணி
``எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.'' - நாகம் சிறிது விழித்தெழ எலிப்பகை அழிந்துவிடும் என்பது இதன் கருத்து. இதனை வீரனொருவன் கூறுகின்றான். இங்ஙனம் கூறுவதன் கருத்து யாது? தான் எழுந்த மாத்திரத்தில் வீரர் அல்லாதார் பலர் அழிவர் என்பதை மறைத்து, அதனை வெளிப்படுத்ததுவதற்குப் பொருத்தமான மேற்சொல்லப்பட்ட செய்தியைக் கூறுகிறான். இவ்வாறு ஒருவன் தான் கருதிய பொருளை மறைத்து, அதனை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற பிறிதொன்றைச் சொல்லுதல் பிறிது மொழிதல் அணி எனப்படும்.


``உண்ணிலவு நீர்மைத்தாய் ஓவாப் பயன்சுரந்து
தண்ணளி தாங்கு மலர்முகத்துக் - கண்ணெகிழ்ந்து
நீங்க அரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கே
ஓங்கியதோர் சோலை யுளது.''

இச்செய்யுள் ஒரு வள்ளலுக்கும் ஒரு சோலைக்கும் பொருந்தும்படி அடையப் பொதுவாக்கிப் பொருள் வேறு பட மொழியப்பட்டுள்ளது.

1.மனத்தில் நல்ல குணமுடையதாய், பலர்க்கும் உதவி செய்து அருளுடையதாகி விரிந்த முகத்தையும் கண்ணோட்டத்தையும் உடையதாய்ப் பிரிதற்கரிய சாயலோடு கூடி நிற்பது என ஒரு வள்ளல்மீது ஏற்றிப் பொருள் உரைக்கலாம்.

2.உள் பொருந்திய நீரையுடையதாய், மாறாது பல வளங்களைக் கொடுத்து, வண்டுகளைத் தாங்கிய குளிர்ந்த மலர்களையுடையதாய், மதுச்சேர்ந்து நிழல் உடையதாய் ஓங்கி நிற்பது என ஒரு சோலைக்குப் பொருந்தவும் பொருள் கூறலாம்.

இதில் பிறிது மொழிதல் அணி அமைந்துள்ளமை காண்க. இஃது ஒட்டணி என்றும் பெயர் பெறும்.

8. தற்குறிப்பேற்ற அணி
``திரௌபதியை மணக்கச் சென்ற பாண்டவர் காட்டு வழியே போனபோது, `திரௌபதியின் திருமணத்திற்கு அரசர் எல்லோரும் வந்துவிட்டனர். நீங்கள் விரைந்து வாருங்கள்.' என்று சொல்வன போலக் குயில்கள் கூவின.''

காட்டில் குயில் கூவுதல் இயற்கை. அந்த இயற்கை நிகழ்ச்சியில், புலவன் தன் குறிப்பை ஏற்றிக் கூறியிருத்தல் காண்க. இங்ஙனம் கூறுதல் தற்குறிப்பேற்ற அணியாகும்.


``மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து
பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉந்
தேயுந் தெளிவிசும்பி னின்று.''

சந்திரன் தேய்தல் அதன்கண் இயல்பாக நிகழும் தன்மையாகும். கவிஞன் இதனை ஒழித்து, சோழனது மதயானை பகையரசர் குடையைச் சிதைத்த சீற்றத்தினைக் கண்டு, தன் மீதும் பாயுமோ என்று அஞ்சித் தேயும் என்று கூறியது தற்குறிப்பேற்ற அணி.

9. சுவையணி
வீரம், அச்சம், இழிப்பு (இளிவரல்), வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை (இவை தண்டியலங்கார ஆசிரியர் தரும் பெயர்கள்) என்று சுவை எட்டு வகைப்படும். இவற்றைத் தொல்காப்பியர் முறையே பெருமிதம், அச்சம், இளிவரல், மருட்கை, உவகை, அழுகை, வெகுளி, நகை என்பர்.

இவற்றுள் ஒவ்வொன்றும் அமைந்து வரும் செய்யுள் சுவையணி அமைந்த செய்யுள் என்று சொல்லப்படும்.


1.வீரச்சுவை

``சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
ஈர்ந்திட்(டு) உயர்துலைதான் ஏறினான் - நேர்ந்த
கொடைவீர மோமெய்ந் நிறைகுறையா வன்கட்
படைவீர மோசென்னி பண்பு.''

இச்செய்யுளில் சிபி என்னும் சோழனது கொடை வீரம் பாராட்டப்பட்டமை காண்க. வீரம் - கல்வி, தறுகண், புகழ், கொடை என்னும் நான்கும் பற்றிப் பிறக்கும் என்று தொல்காப்பியர் கூறுவர்.

2.அச்சுச் சுவை

``கைநெரிந்து வெய்துயிர்ப்பக் கால்தளர்ந்து மெய்பனிப்ப
மையரிக்க ணீர்ததும்ப வாய்புலர்ந்தேன் - வெய்ய
சினவேல் விடலையால் கையிழந்த செங்கட்
புனவேழம் மேல்வந்த போது.''

இங்கு யானையைக் கண்ட அச்சம் காரணமாகச் சுவை தோன்றியவாறு காண்க. இச்சுவை அணங்கு, விலங்கு, கள்வர், இறை என்னும் நான்கும் பற்றிப் பிறக்கும் என்று தொல்காப்பியர் கூறுவர்.

3.இழிப்புச் சுவை
இழிப்பு - அருவருப்பு. தொல்காப்பியர் இதனை இளிவரல் என்பர். மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்னும் நான்கும் காரணமாக இச்சுவை பிறக்கும் என்பர்.


``உடைதலையும் மூளையும் ஊன்றடியும் என்புங்
குடருங் கொழுங்குருதி யீர்ப்ப - மிடைபேய்
பெருநடஞ்சேர் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி
கருநடரைச சீறுங் களம்.''

இச்செய்யுளில் உடைந்த `தலை' `மூளை' முதலியவைகளால் இழிப்புச் சுவை தோன்றுவதை அறிக.

4.வியப்புச் சுவை
இது புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் நான்கும் காரணமாகப் பிறக்கும் என்று தொல்காப்பியர் கூறுவர்.


``முத்தரும்பிச் செம்பொன் முறிததைந்து பைந்துகிரின்
தொத்தலர்ந்து பல்கலனுஞ் சூழ்ந்தொளிருங் - கொத்தின தாம்
பொன்னேர் மணிகொழிக்கும் பூங்கா விரிநாடன்
தன்னேர் பொழியுந் தரு.''

இச்செய்யுளில் தருவின்கண் `முத்தரும்புல்' முதலியவற்றால் வியப்புச் சுவை தோன்றுதல் காண்க.

5.காமச் சுவை
தொல்காப்பியர் இதனை உவகைச் சுவை என்பர்; இது செல்வம், அறிவு, புணர்ச்சி, விளையாட்டு என்னும் நான்கும் காரணமாகத் தோன்றும் என்பர்.


``இகலிலர் எஃகுடையார் தம்முட் சூழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம்'' - நாலடியார்

இங்கு அறிவு பொருளாக உவகை பிறந்தமை காண்க.

6.அவலச் சுவை
தனக்குப் பற்றுள்ள ஒன்றினைப் பிரிதலால் அல்லது பற்றில்லாத ஒன்றினை அடைதலால் தோன்றும் மன வருத்தம் அவலம் எனப்படும். தொல்காப்பியர் இதனை அழுகை என்பர்; இளிவு, இழவு, அசைவுவறுமை என்னும் நான்கும் பற்றி இச்சுவை தோன்றும் என்பர்.


``கழல்சேர்ந்த தாள்விடலை காதலிமெய் தீண்டும்
அழல்சேர்ந்து தன்னெஞ் சயர்ந்தான் - குழல்சேர்ந்த
தாமந் தரியா தசையுந் தளிர்மேனி
இங்கு, மனைவியை இழந்த அவலத்தினால் சுவை தோன்றியவாறு காண்க.

7.உருத்திரச் சுவை
தனக்கு நன்மை தராத செயலினால் உண்டாகும் மனக்கொதிப்பு உருத்திரம் எனப்படும். இதனைத் தொல்காப்பியர் வெகுளி என்பர்; இஃது உறுப்பறை (உறுப்புச் சேதம்), குடிகோள், அலை, கொலை என்னும் நான்கும் பற்றிப் பிறக்கும் என்பர்.


``கைபிசையா வாயமடியாக் கண்சிவவா வெய்துயிரா
மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான் வெய்யபோர்த்
தார்வேய்ந்த தோளான் மகளைத் தருகென்று
போர்வேந்தன் தூதிசைத்த போது''

இங்கு, `மகளைத் தருக' என்று கேட்டலாகிய செயலால் வெகுளிச்சுவை தோன்றியவாறு காண்க.

8.நகைச் சுவை
நகை - வேறுபாடான வடிவம். வேடம், சொல் முதலியவைகளைக் காணும் பொழுதும் கேட்கும்பொழுதும் உண்டாகும் சிரிப்பு. இஃது எள்ளுதல், இளமை, பேதைமை, மடம் என்னும் நான்கும் பற்றித் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறுவர்.


``நகையா கின்றே தோழி
மம்மர் நெஞ்சினன் தொழுதுநின் றதுவே.''

இதில் பிறன் பேதைமையால் நகைச்சுவை தோன்றுதலை அறிக.

10. சிலேடையணி
சிலேடை - தழுவுதல் உடையது; பல பொருள்கள் இணைந்து நிற்பது. உச்சரித்தற்கண் ஒரு வடிவாக நின்ற சொற்றொடர், பல பொருள் உடையதாக வருவது சிலேடை ஆகும். இது செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இரு வகைப்படும்.


1.செம்மொழிச் சிலேடை: பிரிக்கப்படுதல் இல்லாதனவாய் நேரே நின்று பல பொருள் உணர்த்தும் சொற்களால் ஆய தொடர் செம்மொழிச் சிலேடை எனப்படும்.

``செங்கரங்க ளானிரவு நீக்குந் திறம்புரிந்து
பங்கய மாதர் நலம்பயிலப் - பொங்குதயத்
தோராழி வெய்யோன் உயர்ந்த நெறியொழுகும்
நீராழி நீணிலத்து மேல்''

இது சூரியனுக்கும் சோழனுக்கும் சிலேடை. இங்கே `கரம்' `இரவு' முதலியே சொற்கள் நேரே நின்று இரு பொருள் தந்தமை காண்க.

2.பிரிமொழிச் சிலேடை: பிரிக்கப்பட்டு பல பொருள் தரும் சொற்களாலாகிய தொடர் பிரிமொழிச் சிலேடை எனப்படும்.

``புண்ணியமெய்ப் பண்ணவரும் பொன்னனையார் பூங்குழலும்
கண்ணிவா சஞ்செய் கலைசையே - எண்ணியொரு
மன்னாகமத்தினான் வாரிகடைந் தோர்க்கிரங்கும்
மன்னாக மத்தினான் வாழ்வு.''

இதில் வந்துள்ள சில தொடர்களைக் கீழ்வருமாறு பிரித்துப் பொருள் காணவேண்டும்.

1.கண்ணி வாசம் = கண்ணி + வாசம் - மதித்து வாழ்தல்
= கள் + நிவாசம் - தேன் பொருந்தியிருத்தல்

2.மன்னாக மத்தினான் = மன் + நாகம் + மத்தினான் - வலிய மந்தரமலை என்னும் மத்தினால்;
= மன் + ஆகமத்தினான் - நிலைபெற்ற ஆகம நூல்களைத் தந்தருளிய சிவன்.

11. உள்ளுறை உவமை
உள்ளுறை - உட்கருத்து உவமையோடு உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாகக் கூறாது, கருத்தினால் இன்ன பொருளுக்கு இஃது உவமம் ஆயிற்று என்பதை நுட்பமாக உணர்த்துவது உள்ளுறை உவமம் எனப்படும். இஃது அகப்பொருட் செய்யுட்களில் மிகுதியாகப் பயின்று வரும்.


``கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை
சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர!
புதல்வன் ஈன்றஎம் முயங்கல்
அதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே''.

`தாமரையை விளைப்பதற்கு அன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே விளைந்த தாமரை வண்டின் பசிதீர்க்கும் ஊரனே' என்பது, முதல் இரண்டு அடிகளின் பொருள். இவ்வாறு தன் தலைவனை நோக்கிக் கூறிய தலைவியின் கருத்து யாது? பாத்தி, கரும்பு நடுதற்கென்றே அமைக்கப்பட்டது ஆயின், அதில் தாமரை தானாக விளையலாயிற்று. அது வண்டினை வயலுக்கு அழைத்து அதன் பசியைத் தீர்க்கின்றது. அது போலக் காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்க்கும் என்று அமைக்கப்பட்டுள்ள கோயிலுள் யாமும் இருந்து இல்லறம் பூண்டு விருந்து ஓம்புகின்றோம் என்பது கருத்து.
இங்கு, `கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை, சுரும்பு பசிகளையும்' என்னும் அடிகளில் உள்ளுறுத்த பொருளை, உவமையும் பொருளுமாக வைத்து வெளிப்படையாகக் கூறாமல், குறிப்பாகப் புலப்படுத்தமை காண்க. இவ்வாறு கூறுவதே உள்ளுறை உவமம் என அறிக.


12. இறைச்சிப் பொருள்
இறைச்சிப் பொருள் - கருப்பொருளின் உள்ளே கொள்ளும் பொருள், கூறவேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப்பட்டு, அதற்கு உபகாரப்படும் பொருள் தன்மையுடையது இறைச்சி என்று சொல்லப்படும்.


``இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்து
வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற
சூள்பேணாள் பொய்த்தான் மலை.''

இங்குச் `சூள் பொய்த்தான்' என்பதே கூறவேண்டும் பொருள். அதன் புறத்தே. இங்ஙனம் பொய்த்தான் மலையில் நீர் திகழ்கிறது என இறைச்சிப் பொருள் தோன்றியவாறு காண்க.

கருத்துகள் இல்லை: