26/06/2010

தேனிலவு - சுஜாதா

கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல வாசனை கலந்திருந்தது. போலீஸ்காரர்கள் கறுப்பாகக் கோட்டு அணிந்திருந்தார்கள். தொப்பி வைத்துக்கொண்டு மைசூர்த்தனத்துடன் சிற்சிலர் கூடைகளில் சிவப்பு சிவப்பாகப் பழம் விற்றார்கள்.

சோபனாவுக்கு நிறுத்தி வாங்க வேண்டும் போலிருந்தது. நிறுத்திப் பூப்பறிக்க வேண்டும் போலிருந்தது. அந்தத் துல்லியமான காற்றை நெஞ்சு பூரா நிரப்பிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.



காருக்குள் ரவி சோபனா என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. ரவி ஒரு கையால் கார் ஓட்டிக்கொண்டு இருந்தான். மற்றொரு கை...

அதை விலக்கி ''ஏதாவது பாட்டுப் போடுங்களேன்'' என்றாள் சோபனா. அவன் காருக்குள் இருந்த கேஸட் ரிக்கார்டரைத் தட்ட, கீச்சுக்குரல் ஒலித்தது.

'அட அபிஷ்ட்டு
நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி
பாத்துக்க உம் மூஞ்சி!'

''எப்படி பாட்டு?'' என்று ரவி சிரித்தான்.

''வேற இல்லியா?''

''சிரி சிரி மாமா, இருக்கு'' என்றான் ரவி.

''சம்சா! சம்சா! சம்சா!'' என்றது டேப்.

''பெரிசா வெக்கட்டுமா?''

''நிறுத்திடுங்க.''

''புடிக்கலியா? உனக்கு சினிமா பாட்டு யார்து புடிக்கும். ஜானகியா? ஈஸ்வரியா? சுசீலாவா?''

''ஜோன் பேயஸ் இருக்கா?''

''அது யாரு? ஊட்டில கிடைக் கும்னா வாங்கிடலாம்.''

சோபனா வெளியே பார்த்தாள். மலைச்சரிவு குளிருக்குப் பச்சைப் போர்வை போர்த்திருந்தது. ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் கவிதை ஞாபகம் வந்தது.

சோபனாவுக்கு மலைப்பாக இருந்தது. இரண்டு தினங்களில் எத்தனை புதுசான சமாசாரங்கள், எத்தனை புதிய முகங்கள், உறவுகள்... ரவியின் இடக்கை மறுபடி அவளை நாடியது. அதை எடுத்து ஸ்டீயரிங் சக்கரத்தின் மேல் வைத்து ''ரெண்டு கையாலயும் ஓட்டுங்க'' என்றாள்.

''நான் என்வி சாப்பிடுவேன். ஸ்மோக் பண்ணுவேன். தெரியுமில்ல?'' என்றான் ரவி.

''தெரியும். சொன்னீங்களே!''

''ஆரம்பத்திலேயே இதை எல்லாம் சொல்லிடணும் பாரு! உனக்கு ஆட்சேபனை இல்லையே!''

''இல்லை.''

முட்டையைப் பார்த்தாலே குமட்டும் சோபனாவுக்கு.

''யூரோப் போனபோது கத்துக்கிட்டேன். அங்கெல்லாம் நான் வெஜ் இல்லாம உயிர் வாழ முடியாது.''

''எத்தனை நாள் போயிருந்தீங்க?''

''ஒரு வாரம். நாம ஃபாரின் போகலாமா சோபனா?''

''ம்.''

''எங்கே போகணும் சொல்லு? கம்பெனில எக்ஸ்போர்ட் பண்றதால எந்த கன்ட்ரி வேணும்னாலும் போகலாம்.''

''சரி, யோசிச்சுச் சொல்றேன்.''

மலை ஏறிக் கொஞ்சம் இறங்கிச் சரிந்து வளைந்து சென்ற பாதையில் உயர்ந்து தனியாகத் தெரிந்தது அந்த ஓட்டல்.

''ஏ.ஸி. ரூம் இல்லீங்களா?''

''ஊட்டில ஏ.ஸி. ரூம் எதுக் குங்க. ஊரே ஏ.ஸிதானே!''

''சரி, இருக்கிறதுக்குள்ளேயே டீலக்ஸ் பார்த்துக் கொடுங்க. ரெண்டு பேப்பர் ரோஸ்ட் அனுப்பிடுங்க.''

''டிபன் செக்ஷன் ஆரம்பிக்கிறதுக்கு மூணரை ஆயிடுங்க.'' அலுத்துக்கொண்டான். ''க்ளார்க்ஸ் போயிரலாமா சோபனா?''

''இங்கேயே பரவாயில்லை'' என்றாள்.

''உனக்காகப் போனாப்போறதுன்னு இந்த ஓட்டல்ல இருக் கலாம்!''

அறைக்குள் புதிய பெயின்ட் வாசனை அடித்தது. கீழே கயிற்றுப் பாய் விரித்து, சுவர்களில் மர யானை முகங்கள் கோட் ஸ்டாண்டுகளாக நின்றன. ஒரு மஹா மஹா படுக்கை காத்திருந்தது. அதில் படுத்துக்கொண்டு ரவி, ''வா சோபனா'' என்றான். சோபனா ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்தாள்.

''ரவி, இங்க பாருங்க. ப்யூட்டிஃபுல்!''

''வா சோபனா!''

''ரவி, இங்கேருந்து கீழே பெரிய குதிரைப் பந்தய மைதானம் தெரியுது. குதிரையெல்லாம் சுத்திச் சுத்தி வந்து நடை பழகுது. ஊர் பூராத் தெரியுது. அங்கங்கே அட்டைப்பெட்டி சொருகிச் சொருகி வெச்சாப்பல வீடுகள்.''

''அட்டைப்பெட்டி கிடக்கட்டும் சோபனா. இப்ப வர்றியா இல்லியா நீ?''

''ஏரிக்குப் போகலாம் ரவி!''

''க்ளிக்!'' ஆஸாஹி பென்டாக்ஸ் அவளை நோக்கிக் கண் சிமிட்டியது. விசைப் படகில் ஏரியில் அவளை அவன் அணைத்துக்கொண்டு இருக்க, எதிரே படகுக்காரன் எடுத்த 'க்ளிக்' ''ஆட்டோவைப் போட்டுட்டாப் போதும். யார் வேணா எடுக்கலாம். நாலாயிரம் ரூபா. லென்ஸே நாலாயிரம் ஆச்சு!'' ரவி அதை வாங்கிக்கொண்டு அதன் கழுத்தைப் பல கோணங்களில் திருகி, சோபனாவை வரிசையாக க்ளிக் க்ளிக் என்று தட்டிக் கொண்டு இருந்தான்.

''வீட்ல ஒரு போலராய்ட் இருக்கு. ஃபிலிம் ஆப்படலை!''

சோபனா தன் விரல்களால் நீரைத் தொட்டுப் பார்த்தாள். சில்லென்று எதிர்பாராத குளிர்ச்சி.

''கொஞ்சம் பெரிய எடம் போலிருக்கே! நமக்குச் சரிப்பட்டு வருமா?''

''பையன் பொண்ணைப் பார்த்துப் புடிச்சுப்போய் அவனே கேக்கறான். ரொம்பப் பணக் காராடி அவா!''

''நம்ம சோபனாவுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தைப் பார்த்திங்களா! இருந்தாலும் அவளை ஒரு வார்த்தை கேட்டுர்றது நல்லதில்லையா?''

''பால் பாயசம் சாப்பிடறதுக்குச் சம்மதம் கேக்கணுமா என்ன? என்னடி சோபனா?''

''...........''

''எப்பவாவது அவ வாயைத் திறந்து பதில் சொல்லியிருக்காளா?''

''அவங்க வீட்டிலே மூணு கார் இருக்குக்கா!''

''க்ளிக். ஏ.எஸ்.ஏ.நம்பர் செட் பண்ணிட்டாப் போதும். பாக்கி எல்லாத்தையும் கேமராவே பாத்துக்கும். உள்ளுக்குள்ள எல்லாமே எலெக்ட்ரிக் வேலை... இதை ரிப்பேர் பண்றதுக்கு ஜப்பான்லதான் முடியும்! ரூமுக்குப் போக லாமா சோபனா?''

''இல்லை. பொட்டானிக்கல் கார்டன் போகலாம்.''

புல்வெளியில் புரள வேண்டும் போல இருந்தது. சரிவில் சின்னக் குழந்தை போல உருள வேண்டும் போல இருந்தது. ஒரே மாதிரி உடை அணிந்து ஏறக்குறைய ஒரே வயசுள்ள குழந்தைகள் வரிசையாக உட்கார்ந்திருக்க, அவர்களுடன் தானும் உட்கார்ந்து பிஸ்கட்டோ ஏதோ சாப்பிட வேண்டும் போல இருந்தது.

''ரூமுக்குப் போகலாமா சோபனா?''

''இப்பவேயா?''

''ஆரம்பிச்சதை முடிச்சுட வேண்டாம்?''

''இந்தப் பூக்கள் எல்லாம் எவ்வளவு நல்லா இருக்கு?''

''நிக்கறயா, ஒரு க்ளிக் எடுத் துடறேன்.''

''கொஞ்ச நேரம் நடக்கலாமே!''

''உன் இஷ்டம். நீ சொன்னா சரி'' என்று கடிகாரத்தைப் பார்த் தான்.

சரியாக ஒரு நிமிஷம் நடந்ததும், ''நடந்தது போதுமா?'' என்றான்.

''எங்கே போகலாம்?''

''காருக்குப் போய் கேஸட் போட்டுக் கேட்கலாம். அப்புறம் ரூம்ல போய் டிபன் சாப்பிட்டுட்டு ராத்திரி ஃபிலிம் போகலாம்.''

'''லட்சுமி' ஓடுது. நான் இன்னும் பார்க்கலை. நீ பாத்தியோ?''

''என்ன?''

''லட்சுமி; ஒரு குரங்கு டாப்ஸா ஆக்ட் பண்ணியிருக்காம்!''

''அப்படியா?''

''ஒரு ஸாங் நல்லா இருக்குன்னு எழுதியிருந்தான்.''

''அப்படியா? ரவி இங்க கொஞ்ச நேரம் உட்காரலாமே.''

''உக்காந்து போட்டோ எடுக்கலாமா?''

''இல்லை, படிக்கலாம்.''

பைக்குள்ளிருந்து அவள் கலீல் கிப்ரானின் 'A Jear and a Smile' என்கிற புத்தகத்தை எடுத்தாள். அவன் ஒரு வாரப் பத்திரிகையை எடுத்து சிகரெட் பற்றவைத்துக்கொண்டான்.

I freed myself yesterday from the clamour of the city and walked in the quiet fields until I gained the heights which nature had clothed in her choicest garments.

''இதோ இப்படித்தான்'' என்று இளவரசன் தன் கூர்வாளை உறையிலிருந்து உருவி சிறைக்கூடத்தின் தரைப்பாகத்தில் சில இடங்களை வாள்முனையால் தட்டிப் பார்த்தான்...''

''மனசுக்குள்ள படிங்க?''

''இந்தத் தொடர்கதை படிக்கறியோ? டாப்பா இருக்குது.''

''இல்லை.''

''ரஜினி மறுபடி நடிக்க வந்துட்டான், தெரியுமா?''

''அப்படியா?''

Sleep then, my child, for your father looks down upon us from eternal pastures.

''தீர சாகசம் புரிந்த வீர இளைஞனே வருக...''

''ரெண்டு ஜாதகமும் என்னமாப் பொருந்தியிருக்குங்கறேள்!''

''சோபனா வாயேன். ரூமுக்குப் போயிரலாம். எத்தனை நேரம் பூவையே பாத்துக்கிட்டு... புஸ்தகம் படிச்சுக்கிட்டு... ரூமுக்கு ஒரு நாளைக்கு நூறு ரூபா கொடுத்துட்டு... கொஞ்ச நேரமாவது இருக்கலாமே!''

அறையில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான் ரவி.

''என் மீசை உனக்குப் பிடிச்சிருக்கா?''

''ம்.''

''ஸ்டெப் கட்?''

''ம்?''

''இதுக்குன்னே சலூன்ல அஞ்சு ரூபா வாங்கறான்.''

''அப்படியா?''

ரவி தன் உடம்பெல்லாம் பர்ஃப்யூம் அடித்துக்கொண்டான்.

''புடிச்சிருக்கில்ல!''

''ம்!''

''இந்தா, இதை மாத்திக்கிட்டு வந்துரு! பாரிஸ்ல வாங்கினது இது, போ, வெக்கப்படாதே. கட்டின புருசன்கிட்ட என்ன வெக்கம்!''

சோபனா பாத்ரூம் பக்கம் சென்றாள்.

ரவி தன் சட்டையைக் கழற்றினான்.

''சோபனா! சொர்க்கம்னா இதுதான் இல்லையா? இந்த மாதிரி க்ளைமேட்! இந்த மாதிரி ரூம்! இந்த மாதிரி மனைவி! சோபனா! 'நினைத்தாலே இனிக்கும்' கேட்டிருக்கியா?''

''சோபனா...''

''சோபனா...''

ரவி சற்றுக் கவலைப்பட்டு பாத்ரூம் கதவைத் தட்டினான்.

கதவு திறந்துகொண்டது.

சோபனா தரையில் உட்கார்ந்துகொண்டு விசித்து விசித்து அழுது கொண்டு இருந்தாள்.

மலை வாசஸ்தலமான உதக மண்டலத்துக்குக் கல்யாண சீஸ னின்போது தினம் நூறு ஜோடிகள் தேனிலவுக்கக வருகிறார்கள்!

கருத்துகள் இல்லை: