26/06/2010

நிதர்சனம் - சுஜாதா

திரும்பி வந்துகொண்டு இருந்தபோது, ஆபீஸர்ஸ் கிளப்பை அடுத்து இருந்த ஹாஸ்டல் வாசலில் கூட்டமாக இருந்தது. கம்பெனி லாரி நின்றிருந்தது. செக்யூரிட்டி ஆசாமிகள் சிகரெட் புகைத்தபடி அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பேசாமல் வீட்டுக்குப் போயிருக்கலாம்.

ஏதாவது திருட்டாக இருக்கலாம் என்று அருகே சென்று விசாரித்தேன்.

''மேலே போய்ப் பாருங்க! மாடில வலது பக்கம் கடைசி ரூம்.''

தயக்கத்துடன் மாடி ஏறினேன். எதிர்பார்த்ததை மனசு விரும்பவில்லை. உடம்பு பூரா ஒரு தரிசனத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்க, படிப்படியாக இஷ்டமின்றி ஒருவிதமான குரூர ஆர்வத்துடன் மேலே சென்றேன். காரிடாரில் மௌனமாகச் சிலர் நின்றிருந்தார்கள். ஓரிரண்டு பரிச்சய முகங்கள். எதையோ யாரோ செய்வதற்கு எல்லாரும் காத்திருந்தார்கள் போலத் தோன்றினார்கள்.



கடைசி அறை வாசலில் அவனை இறக்கிப் படுக்க வைத்திருந்தார்கள். முகம் கறுப்பாக இருந்தது. கழுத்தில் படுக்கைக் கயிறு இறுக்கியிருந்த இடத்தில் நீலம் பாரித்திருந்தது. கன்னங்கள் சற்று உப்பியிருந்தன. கண்கள் சொருகிப்போய் வெண்ணிற விழிகள் மட்டும் தெரிந்தன. கட்டம் போட்ட சட்டையும் டெரிகாட் பேன்ட்டும் அணிந்திருந்தான். கரிய தலைமயிர். கையில் கட்டியிருந்த டிஜிட்டல் கடிகாரம் இன்னும் உயிரோடு இருந்தது.

''எப்பப்பா?'' என்றேன் அதிர்ந்து.

''ரெண்டு நாளாயிருக்கும்போலத் தோணுது. இன்னிக்குத்தான் கதவை உடைச்சுத் திறந்து பார்த்திருக்காங்க!''

நான் தயக்கத்துடன் கால்மாட்டுக்குச் சென்று அவன் முகத்தை நேராகப் பார்த்தேன். ''மை காட்! நான் இவனைச் சந்தித்திருக்கிறேன். இவனிடம் பேசியிருக்கிறேன்.''

மத்தியானம் இரண்டு மணிக்கு (சென்ற வாரம் என்று ஞாபகம்) அவன் என் அறைக்குள் கதவைத் தட்டாமல் நுழைந்தான். அன்றைக்குக் கொடுத்தாக வேண்டிய அவசர ரிப்போர்ட் டில் இருந்தேன்.

''வாட் டு யூ வான்ட்?'' என்றேன் கோபத்துடன்.

''உங்ககிட்ட பேசணும் சார்'' என்றான் சன்னமான குரலில்.

''வெய்ட் அவுட்ஸைட், ஐ'ல் கால் யூ.''

''அஞ்சு நிமிஷம் சார்.''

''ஐ ஸெட் வெய்ட்!''

அவனை நான் உடனே கவனித்திருக்க வேண்டுமோ? காத்திரு என்று சொன்னது தப்போ?

அரை மணிக்கு அப்புறம் அவனை மறந்தே போய்விட்டேன். மறுபடி எட்டிப்பார்த்து ''கேன் ஐ ஸி யூ நௌ?''

''ஆல்ரைட், அஞ்சு நிமிஷம்தான்'' என்றேன். உள்ளே வந்து என்னைச் சற்று நேரம் பார்த்தான்.

''சார், என் பெயர் தர்மராஜன். எனக்கு உங்கள் டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றல் வேண்டும்.''

''இப்ப எந்த டிபார்ட்மென்ட்டில் இருக்கிறாய்?''

''டி.பியில்.''

''அங்கே என்ன செய்கிறாய்?''

''ப்ரொகிராமிங்.''

''எதற்காக மாற்றல் வேண்டும் என்று கேட்கிறாய்?''

''அங்கே எனக்குப் பிடிக்கவில்லை.''

''என்ன பிடிக்கவில்லை?''

''வேலை.''

''ஏன்?''

''அந்த வேலை என் திறமைக்குச் சவாலாக இல்லை.''

அந்த நிமிஷமே அவன் வேறு பட்டவன் என்று உணர்ந்திருக்க வேண்டுமோ?

''நீ என்ன படித்திருக்கிறாய்?''

''படிப்பு முக்கியமானால், நான் பி டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ்.''

''கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறாய். ப்ரொகிராமிங் செய்கிறாய். சரியான வேலையில்தானே இருக்கிறாய்?''

''அது எனக்குச் சரியான வேலையில்லை. மாடசாமிக்கும் முனுசாமிக்கும் சம்பளம், பிடிப்பு எல்லாவற்றையும் கணக்கிட கோபால் ப்ரொகிராம் எழுதுவது என் திறமைக்குத் தாழ்மையான செயலாக, என் திறமையை அவமானப்படுத்துவதாகப்படுகிறது. எனக்கு உரிய வேலை உங்கள் டிபார்ட்மென்ட்டில்இருக் கும் என்று தோன்றுகிறது.''

அவன் என் மேஜை மேல் பொருள்களை ஆராய்ந்தான். நகத்தைக் கடித்தான். ''கேன் ஐ ஸ்மோக்?'' என்றான். நான் உயர் அதிகாரி. என் ஆபீஸ் வம்சாவளியில் எனக்கு அதி ஜூனியர், ஜூனியர்கள் சாதாரணமாக என் முன் சிகரெட் பிடிப்பதில்லை.

அவன், என் அனுமதிக்குக் காத்திராமல் பற்றவைக்கத் துவங்கியது, எனக்கு அவன் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது. நான்கு தீக்குச்சிகள் செலவு செய்து, பற்ற வைப்பதை மிகச் சிக்கலான காரியமாக்கி, மிக ஆழமாகப் புகையை இழுத்து வெளிவிட்டான். பிடிவாதக்காரனை நிமிர்ந்து பார்த்தேன். சிறிய உடலமைப்பு. பிரதானமான மூக்கு. சற்றுத் தூக்கலான பற்கள். உயர்ந்த ரகத் துணியில் சட்டை அணிந்திருந்தான். கண்கள் என்னைச் சந்திக்க மறுத்து குத்துமதிப்பாக என் சட்டையின் இரண்டாவது பட்டனில் பதிந்திருந்தன.

''சார், ஒரு கம்ப்யூட்டரை டிஸைன் பண்ற அளவுக்கு என்னிடம் திறமை இருக்கிறது'' என்றான்.

''என் டிபார்ட்மென்ட்டுக்கு அந்தத் திறமை தேவையில்லை. கம்ப்யூட்டரை உபயோகப்படுத் தும் திறமை போதும்.''

''ட்டிரிங் மெஷின் பற்றிய என் கட்டுரையை நீங்கள் வாசிக்க வேண்டும்.''

''அதெல்லாம் கம்ப்யூட்டர் வேதாந்தம். எனக்குத் தேவை நடைமுறை அனுபவம்.''

''உங்கள் டிபார்ட்மென்ட் டுக்கே பெருமை தரக்கூடியதாகச் சில விஷயங்களைச் செய்துகாட்டு வேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்.''

''என் டிபார்ட்மென்ட்டில் இப்போது வேகன்ஸி இல்லை.''

''சமீபத்தில் சந்திரகுமார்னு ஒருத்தனை எடுத்துக்கொண்டீர்களே?''

எனக்கு உறுத்தியது. ''சந்திரகுமார் கேஸ் வேற.''

''எப்படி?''

''எப்படி என்று விஸ்தாரமாகச் சொல்ல எனக்குச் சமயமில்லை.''

அவன் சற்று நேரம் மௌனமாக இருந்தான்.

''நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்தேன்.''

''வேகன்ஸி இல்லை.''

''வேகன்ஸி எப்போது வரும்?''

''ஆறு மாசம் ஆகும்.''

''நான் என் வேகன்ஸியுடன் டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு வந்தால் எடுத்துக்கொள்வீர்களா?''

''லுக் ஹியர், யங் மேன்! எல்லோருக்கும் அவர்கள் மன உசிதப்படி வேலை அமைவது இல்லை. இந்தத் தொழிற்சாலை ஒரு மிகப் பெரிய மெஷின். இதில் நானும் நீயும் சின்னப் பல் சக்கரங்கள். விதித்த நியதிப்படி நாமிருவரும் சுழன்றாக வேண்டும். நீ இப்போது இருக்கும் வேலையிலேயே தொழிற்சாலைக்கு உபயோகமாக எவ்வளவோ செய்யலாம். அதை யோசித்துப்பார்த் தாயா?''

அவன் யோசிக்கவில்லை.''ஒரே தொழிற்சாலை; ஒரு டிபார்ட் மென்ட்டிலிருந்து இன்னொரு டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றிக் கேட்கிறேன். எனக்குக் கிடைப்பது உபதேசம்!'' என்றான்.

''ஆல்ரைட்! யூ மே கோ நௌ!''

''உங்கள் மூக்கின் மேல் கறுப்பாக ஏதோ ஒட்டிக்கொண்டுஇருக் கிறது'' என்றான்.

நான் தன்னுணர்வுடன் மூக்கைத் தடவிக்கொண்டேன்.

''பத்து ரூபாய்க்குச் சில்லறை இருக்குமா?'' என்றான்.

''வாட் டு யூ மீன்?''

''நாம் எல்லோரும் இந்த உலகத்தை ஆள வேண்டிய நேரம் வரப்போகிறது'' என்றான்.

அதே சமயம், டெலிபோன் மணி அடித்து எம்.டி. என்னைக் கூப்பிட்டதால் அவனுடைய அந்த கடைசி மூன்று வாக்கியங்களின் சமகால அபத்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் அப்போதே அவனை மறந்து போனேன்.

மறுதினம் டி.பி. டிபார்ட்மென்ட் கோவர்த்தனை கான்டீனில் சந்தித்தேன். ஏதோ பேச்சை ஆரம்பிப்பதற்காக ''தர்மராஜன்னு ஒரு பையன்...''

''எ க்ராக். அவன் உங்ககிட்டயும் வந்துட்டானா?''

''ம். நேற்று வந்து டிரான்ஸ்ஃபர் கேட்டான்.''

''சரிதான். என் டிபார்ட்மென்ட்டுக்கு வந்து ஒரு மாசம்கூட ஆகலை. இதுவரைக்கும் மூணு டிபார்ட்மென்ட் மாறி இருக்கிறான். முதல்ல ஆர் அண்ட் டியில் இருந்தான். அப்புறம் ஹெட் ஆபீஸ் போனான், மேனேஜ்மென்ட் சர்வீசுக்கு. அப்புறம் டெக்னாலஜி டெவலப்மென்ட். பூனைக் குட்டியை மாத்தற மாதிரி...''

''பையன் ஒரு மாதிரி நெர்வஸா இருந்தான்.''

''இல்லை, திமிர். கொடுத்த வேலையை நல்லாவே செய்துடறான். அப்புறம் மேஜை மேல் காலை நீட்டிண்டு ஃபிரெஞ்சு புஸ்தகம் படிப்பான். எதிர்த்தாப்பல ஒரு பெண் உட்கார்ந்திருந்தா. அவளையே வெச்ச கண் வாங்காம ஒரு மணி நேரம் பார்த்துண்டு இருந்தானாம். அப்புறம் ''போய் காலை அலம்பிண்டு வா'' என்றானாம். அந்தப் பெண் உடனே வேற இடம் கேட்டு மாத்திண்டு போயிடுத்து. வேலையில் கெட்டிக்காரன்தான். ஆனா, ரெஸ்ட்லஸ். நீ வேணா எடுத்துக்கறியா, தாராளமா போஸ்ட்டோட டிரான்ஸ்ஃபர் பண்ணி அனுப்பறேன்.''

''சேச்சே, எனக்கு வேண்டாம்பா.''

அடுத்த முறை அவனை ஆபீஸர்ஸ் கிளப் மெஸ்ஸில் பார்த்தேன். ஒரு ஓரத்தில் காபிக் கோப்பை, சிகரெட் சகிதமாக 'டைம்' படித்துக்கொண்டு இருந்தான்.

என்னைக் கண்டவுடன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்குச் சென்றான்.

அவ்வளவுதான் அவனுக்கும் எனக்கும் ஏற்பட்ட சம்பந்தங்கள். இப்போது அவனைத் தரையில் கிடத்திப் பார்க்கிறேன்.

செக்யூரிட்டி ஆபீஸர் என்னை அடையாளம் கண்டுகொண்டு அருகில் வந்தார். ''ரூம் உள்ளே பூட்டியிருந்தது, சார். கதவைத் திறந்தோம். நீங்க அவன் ரூமைப் பார்க்க வேண்டும்.''

''ஏதாவது கடிதம் எழுதி வெச்சிருந்தானா?''

''இல்லை.''

''காதல் கீதல் என்று...''

''ம்ஹ¨ம்! அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.''

''ஆஸ்பிடலில் அவன் ரிக்கார்டைப் பார்த்தீர்களா? தீராத வயிற்றுவலி என்று ஏதாவது?''

''இல்லை.''

தயக்கத்துடன் அவனைத் தாண்டி அறைக்குள் நுழைந்தேன்.

அறையில் மேல்நாட்டுச் சாதனங்கள் அத்தனையும் இருந்தன. ரேடியோ, கேசட் ரிக்கார்ட் பிளேயர், ஸ்டீரியோ, சுவர்களில் வண்ண வண்ணப் படங்களில் காட்டுக் குதிரைகள் ஓடின. ஏராளமாகப் புத்தகங்கள். திறந்திருந்த மேஜையின் இழுப்பறையில் நூறு ரூபாய் நோட்டுக்கள். பிரகாசமான விளக்குகள். புதிய மின் விசிறி.

''போனவாரம்தான் வாங்கியிருக்கான் சார். பில் கிடக்குது.''

அவன் தொங்கின விட்டத்து வளையத்தைப் பார்த்தேன்.

''கட்டில்ல இருந்து இரண்டு இன்ச் தள்ளி அவன் கால் மட்டம் இருந்தது. எந்த நேரமும் அவன் தற்கொலையை ரத்து பண்ணி கட்டில்ல ஏறி நின்றிருக்க முடியும்.''

அறை முழுவதும் பார்த்தேன். ஏதாவது ஒரு பெண், ஏதாவது ஒரு காதல் கடிதம், ஏதாவது ஒரு வியாதி... ஏதாவது ஒரு சம்பிரதாயமான காரணம்?

ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். பக்கத்து கிராமங்களில் செய்தி பரவி, அவசரஅவசரமாகப் பார்த்துவிட்டுப் போக வந்துகொண்டு இருந்தார்கள். பெண்கள் தலையில் செவ்வந்திப் பூ வைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டுஇருந்தார்கள்.

''அவன் தற்கொலைக்கு நானா காரணம்! சே அபத்தம்.''

வீட்டுக்குச் செல்லும்போது என்னை அறியாமல் என் விரல் மூக்கை அழுந்த அழுந்தத் தேய்த்தது.

கருத்துகள் இல்லை: