23/06/2010

ஆஷாட பூதி - புதுமைப்பித்தன்

பிரெஞ்சு மூலம்: மோலியர்

கடவுளைச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டால் உலகத்தின் கண்ணில் மண்ணைவாரிப் போடலாம்; திருடுவது, பொய் சொல்லுவது முதலிய கெட்ட செயல்களில் தலையிடுவதைவிட வேதத்தையும் ஒழுக்கத்தையும் ஒரு வியாபாரமாக நடத்தினால், உலகில் பெரும்பாலோரை ஏமாற்றிவிடலாம். அவ்விதம் ஏமாற்றப்படுவதாக அவர்கள் மனத்துயர் அடையவும் மாட்டார்கள். இவற்றை எல்லாம் உணர்ந்துதான் டார்ட்டுப் கடவுள் கட்சியில் சேர்ந்து கொண்டான். அவன் வாய் வேதம் பேசும்; கிருஸ்துவின் உபதேசங்களை நயம் குன்றாமல் சொல்லும்; உலகத்தின் பாபச் சுமையை முதுகில் ஏந்தி நடப்பது போல், மனித வர்க்கத்தின் முன் பணிவுடன் நடப்பான். டார்ட்டுப்பாவை உலகத்துக்கு வழி தவறி வந்துவிட்ட தேவதூதன் என்றெல்லாம் புகழ்வார்கள், நெருங்கிப் பழகாதவர்கள் மனித குணோபாவங்களை வெகு கூர்மையாக ஊன்றிக் கவனிக்காதவர்கள். டார்ட்டுப்புக்கு வறுமை ஒரு உபயோககரமான அணிகலனாக இருந்தது; உடல் வாடாமல் பார்த்துக் கொள்ளும் மருந்தாகவும் இருந்தது. நாள்தோறும் நீண்ட நேரப் பிரார்த்தனை; காட்டுக் குதிரை போலத் தறிகெட்டு ஓடும் புலனறிவை ஒடுக்கிக்கொள்ளக் கசையடி, -இவை யாவும் உலகத்தின் இன்பப் பேறுகளைப் பெறுவதற்கு விரிக்கப்பட்ட நடை பாவாடையாக அமைந்தன...

ஆர்க்கான் என்பவன் நல்ல பணக்காரன், பிறப்பிலேயே பணக்காரன். பூர்வீக ஆஸ்தியுடன் தன்னுழைப்பால் செல்வத்தையும் திரட்டியவன். அத்தனை காலமும் இகத்தில் தெய்வம் சுகத்தைக் கொடுத்துவிட்டது. மோட்சத்திலும் இடம் நிச்சயப்படுத்திக் கொள்ள அவனுக்கு நிரம்ப ஆசை. அந்த உலகத்து விவகாரத்தையும் ஆபத்துக்கிடமில்லாமல் பண்ணிக்கொள்ள மார்க்கமுண்டா என்று தேடிவரும் நாளில் டார்ட்டுப்பைச் சந்தித்தான்; வாக்கிலே தெய்வம் தேங்கிக் கிடப்பதைக் கண்டான். பரிச்சயம் தோழமையாயிற்று. ஆஷாடபூதி வந்து போவதாக இருந்தது. கடைசியில் ஆர்க்கான் வீட்டிலேயே வேரூன்றினான். அவன் தாயார் மகனுடைய தெய்வபக்தியை மெச்சினாள். டார்ட்டுப் வருகையால் வீடே பரமபதமாகிவிட்டதாக நினைத்து விட்டாள். தாயும் மகனும் டார்ட்டுப் மனங் கோணாமல் நடந்து உபதேசத்தைப் பவித்திரமாகக் கேட்டு ஆனந்த சாகரத்தில் ஆழ்ந்தார்கள். வெகு சீக்கிரத்தில் சாக வேண்டிய கிழவிக்கும், அனுபவித்த பணமே முடிவில் ஆபத்தாக முடியுமோ என்று பயந்த ஆர்க்கானுக்கும் மோட்சத்தில் இடம் நிச்சயமாகக் கிடைக்கும் என்று தோன்றிவிட்டால் ஆனந்தம் ஏன் வராது?

ஆர்க்கானுக்கு வெறும் பொருட் செல்வம் மட்டும் இல்லை. மனைவி, பிள்ளை குட்டிகள் செல்வமும் இருந்தது. அவர்களுக்கு மோட்ச மோக விவகாரம் அத்தனை அவசரமாகப் படவில்லை. டார்ட்டுப்புக்காக உலகமே திரண்டு சேவை செய்யவேண்டும் என்று நினைக்கும் குடும்பத் தலைவன் தொல்லை பொறுக்க முடியவில்லை.

ஆர்க்கானுக்கு வயது வந்த மகனும், மகளும், அழகிற் சிறந்த மனைவியும் உண்டு. மகன் பெயர் டேமிஸ். மகள் பெயர் மேரியாஞ்; மனைவி எல்மைரா. மைத்துனன் ஒருவன் உண்டு; அவன் பெயர் கிளியாந்தஸ். இவர்கள் அத்தனை பேருக்குமே டார்ட்டுப் அயோக்கியப் பயலுக்கு வால் பிடித்துக்கொண்டு நடப்பது சற்றும் பிடிக்கவில்லை. மகள் மேரியாவை வலரி என்ற வாலிபனுக்குக் கலியாணம் செய்து கொடுப்பது என்று நிச்சயமாயிருந்தது. தவிரவும் இவர்கள் இரண்டு பேரும் மணவினையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆஷாடபூதி வீட்டில் குடியேறியதிலிருந்து அப்பாவுக்கு உலக விவகாரத்திலேயே கண் சூன்யமாகிப் போய்விட்டதில் அவளுக்குக் கோபம். எல்மைராவுக்கோ வீட்டு விவகாரங்கள் போகிற போக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அல்லும் பகலும் டார்ட்டுப் ஜபம், டார்ட்டுப் வேதாந்த விசாரம் தன் அழகைப் பாழக்குகிறது என்à®
± கோபம்.

வீட்டிலே விவகாரம் எல்லாம் புரட்சி மயமாக இருக்கிறது என்பது ஆர்க்கானுக்குத் தெரியும். மோட்ச சாம்ராஜ்யத்தில் சற்றும் கவலையில்லாத இந்த ஜந்துக்களைக் கட்டிப் பிடித்தாவது அங்கே கொண்டுபோய்ச் சேர்த்து விட வேண்டும் என்று உறுதி கொண்டுவிட்டான். குடும்பத்தின் எதிர்ப்பு டார்ட்டுப்புடன் பந்தத்தைப் பலப்படுத்தியது. அவனே தன் வாழ்வுக்கு வழிகாட்ட வந்த பெரியார் என்று நிச்சயப்படுத்திவிட்டான். மகளை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்துச் சொத்தையும் அவன் வசம் ஒப்புவிப்பதைப் போல நியாயமான காரியம் வேறில்லை என்று முடிவு கட்டினான்.

டார்ட்டுப்புக்குக் கவலையற்ற சாப்பாடு, கண்மூடித்தனமான பக்தி, உடம்பில் தெம்பேறி விட்டது. கண் நாலு பக்கமும் சுழல ஆரம்பித்து விட்டது. எல்மைராவின் அழகின் மேல் இலக்குவைத்தான். அவள் தனியேயிருக்கும் நேரம் பார்த்து அருகில் சென்று உட்கார்ந்து, வேதாந்தம் பேசினான்; வேட்கையை வெளியிட்டுக் கையெட்டிப் பிடித்தான். எல்மைராவுக்குப் போக்கிரியின் கோணல் புத்தியைக் கூப்பாடு போட்டு உலகறியச் செய்வதால், தன் பேரிலும் அழுக்குப்படும் என்று பட்டது. இந்த மாதிரி ஆசை வைத்து வட்டமிடாதே என்று எச்சரித்து, புத்தியாய்ப் பிழைக்காவிட்டால் புருஷனிடம் சொல்லுவேன் என்றாள்.

டார்ட்டுப் மேல் சந்தேகம் கொண்ட டேமிஸ், அந்த இடத்துக்கு வருகிறான். பயலைச் சந்திக்கிழுத்தால் தான் சாயம் வெளுக்கும் என்று தான் ஒளிந்து நின்று அயோக்கியன் போக்கைக் கண்டதாகவும் சொல்லுகிறான்.

தற்செயலாக அந்தத் திசையில் வந்த அப்பாவிடம் ஆத்திரத்தோடு சொல்லுகிறான்.

ஆர்க்கான் காதும் செவிடாகிவிட்டது. தன் குடும்பமே யோக்கியனை அநியாயமாகப் பழிகூறி விரட்டப் பார்க்கிறது என்று சந்தேகப்பட்டான். பையன் பேரில் அடங்காச் சினம் எழுகிறது. திட்டுகிற டேமிஸைப் பார்த்து, "அப்பா குழந்தை, என்னை என்னவேண்டுமானாலும் திட்டு. இந்தச் சடலத்துக்கு அத்தனையும் வேண்டும்; ஊத்தைச் சடலம் அப்பா, ஒரு கோடி அழுக்குண்டு" என்று மாய்மாலம் பண்ணுகிறான் டார்ட்டுப்.

தகப்பனுக்குச் சினம் கொழுந்து விடுகிறது; "அடே, வீட்டை விட்டுப் போ. இப்பொழுதே போ" என்று மகனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகிறான். மகானுக்கு மனம் புண்ணாகிவிட்டதே; அதற்கு என்ன செய்து அதை ஆற்றுவது? ஆர்க்கானுக்கு ஒரே வழிதான் தோன்றுகிறது. தன்னுடைய சொத்து முழுவதையும் அவர் பாதத்தில் வைத்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவது என்று தீர்மானிக்கிறான். இரவோடிரவாக, அவசர அவசரமாக, டார்ட்டுப்பைத் தனது ஏகவாரிசாக்கிச் சொத்தை அவன் பெயருக்கு மாற்றி உரிமைப் பத்திரங்கள் தயாரித்து டார்ட்டுப் வசம் ஒப்படைக்கிறான். "என் மகளையும் கலியாணம் செய்து கொள்ள வேண்டும்" என்று கெஞ்சுகிறான்.

"தெய்வ சித்தம் இப்படிப் போலும்" என்ற தமது சம்மதத்தைத் தெரிவிக்கிறார் ஆஷாடபூதி. சொத்து வந்துவிட்டது. வேறு என்ன வேண்டும்?

எல்மைரா புருஷனிடம் வந்து ஆஷாடபூதி யோக்கியதையைப் பரிசீலனை செய்து பார்க்கும்படி கெஞ்சுகிறாள். நடந்த சம்பவம் வாஸ்தவம் என்கிறாள். "கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்" என்கிறான் ஆர்க்கான். டார்ட்டுப் மேல் அவ்வளவு நிச்சயமான நம்பிக்கை அவனுக்கு.

"ஆம். தீர விசாரித்துப் பாரும்; அவனை இங்கே அழைத்து இசைவதுபோல் பாவனை செய்கிறேன். அப்பொழுது நேரில் நீரே பார்த்து முடிவு கட்டும்" என்கிறாள். ஒளித்து வைத்துவிட்டு டார்ட்டுப்புக்கு அழைப்பு விடுகிறாள். ஆர்க்கான் கள்ளனைக் கையும் களவுமாகக் கண்டுபிடிக்கிறான். கண் திறக்கிறது; ஆனால் கையில் பலமில்லை.

டார்ட்டுப் பத்திரத்தைக் காட்டி "சொத்தà
¯ நம்முடையது. வீட்டை விட்டு வெளியில் இறங்கும்" என்று சுய குணத்தைக் காட்டுகிறான். குடுமி கையில் சிக்கிவிட்ட பிறகு வேதம் எதற்கு? வேஷம் எதற்கு?

சட்டப்படி வீட்டைக் காலிசெய்யும்படி உத்யோகஸ்தனை அனுப்பிக் கெடுபிடி செய்கிறான்.

குய்யோ முறையோவென்று ஆர்க்கான் குடும்பத்துடன் வெளியேறுகிறான். டார்ட்டுப் கடைசி ஆயுதத்தையும் பிரயோகித்து ஆர்க்கானைக் கைது செய்யும்படியும் ஏற்பாடு பண்ணிவிடுகிறான். ஆர்க்கானுடைய நண்பன் ஒருவன் ராஜ கோபத்துக்காளாகி சில பத்திரங்களை இவன் வசம் ஒப்படைத்துவிட்டுத் தலைமறைவாக ஓடிப் போனான். டார்ட்டுப்பை நம்பியிருந்த காலத்தில் ஆர்க்கான் அந்த இரகசியத்தை ஆஷாடபூதியிடம் ஒப்படைத்திருந்தான். அது அவனுக்குக் கடைசி ஆயுதமாயிற்று. இந்த நிலையில் ராஜசேவகர்கள் திடீரென்று பிரவேசிக்கிறார்கள். அயோக்கியன் கடைசியாக அகப்பட்டுக் கொள்ளுகிறான். தெய்வ கோபம் காத்திருக்கையில் ராஜ ஆக்ஞை அவனை அடக்கிவிடுகிறது.

ஆர்க்கானுக்கு மறுபடியும் சொத்துக் கிடைக்கிறது. மகளை நிச்சயித்த வரனுக்கே கொடுத்து மகனை மீண்டும் வீட்டுக்கு அழைத்துக் கொள்ளுகிறான்.

மோலியர் (1622-1673)

பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால், வளமுறைப்படி அந்திமக் கிரியைகள் கூட அனுமதிக்கப்பட மாட்டா. பவித்திர நிலத்தில் (கல்லறைத் தோட்டத்தில்) அவனைப் புதைக்க அனுமதிக்கமாட்டார்கள். சாத்தானின் குழந்தை என்று அவனைத் தண்ணீர் தெளித்து விட்டுவிடுவார்கள். இவ்வளவும் தெரிந்திருந்தும் ஜீன் - பாப்டிஸ்டே போக்லின் என்ற மோலியர் அந்தத் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டார். நடிகனாகவும் நாடகாசிரியனாகவும் வாழ்வைக் கழித்து ஒரு நாடகத்தில் நடிக்கும்போது திடீரென்று நோயுற்று, சில மணி நேரங்களில் மாண்டார்.

மோலியர் பிறப்பில் பாரிஸ்வாசி. அவருடைய நாடகக் கோஷ்டி முதலில் ட்யூக் ஆப் ஆர்லியான் ஆதரவில் நாடகம் போட்டு வந்தது. யுத்தத்தின் அழைப்பு ட்யூக்கை போர்க்களத்துக்கு அனுப்பிவிட நாடகக் கம்பெனி வறுமையுடன் தோழமை கொண்டது. பாரிஸிலிருந்து பிரான்ஸ் முழுமையும் சுற்றி வந்தது. வறுமையின் தோழமையை உதறித்தள்ள முடியவில்லை. பாரிஸுக்குத் திரும்பி வந்தபொழுது, மோலியருக்கு ராஜ ஆதரவு கிட்டியது. 'நானே பிரான்ஸ்' என்று மகா இடும்புடன் ஒரு முறை சொல்லிய பதினாலாவது லூயி நல்ல ரசிகன். மோலியருடன் தோழமை கொண்டான். அந்த ஆதரவிலே தழைத்த பெரும் நாடகங்கள் பல. கடைசி மூச்சு ஓடும்வரை மோலியர் நாடகக் கலைக்குச் சேவை செய்தார்.

உலகத்தின் பிரபல ஹாஸ்ய நாடகக் கர்த்தர்களில் இவரும் ஒருவர். இவரிடத்திலே ஷேக்ஸ்பியரின் மேதையை, கதை வளர்க்கும் திறமையைக் காண முடியாது. ரயிலுக்குப் போகும் அவசரத்தில் கட்டினதுபோல் வார்ப்பு இறுகியிராமல் உருக்குலைந்து கோணிக்கொண்டு நிற்கும். ஆனால் போலிகளை, விஷமிகளை நையாண்டி செய்வதில் அதிசமர்த்தர். அவரது சிரிப்பு சிந்தனையைக் கிளர்த்தி விட ஒரு வியாஜ்யம்.

கருத்துகள் இல்லை: