02/03/2013

இலங்கைக் ‘கலாநிதி’ ம.மு.உவைஸ் - மானா மக்கீன்


தமிழகத்தில் "டாக்டர்' என்றும், "முனைவர்' என்றும் அழைக்கப்படுகின்ற, கற்றுத் தேர்ந்த பேரறிஞர்கள் இலங்கையில் "கலாநிதி' எனத் திகழ்கிறார்கள். அங்கே "டாக்டர்' என்றால் மருத்துவர்களே! "முனைவர்' என்றால் பலருக்கும் புரியாது. 

33 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் "இஸ்லாமியத் தமிழிலக்கியத் துறைத் தலைவர்' என மகுடம் சூட்டப்பட்ட நிலையில், மாபெரும் இலக்கியப் புதையல்களைக் கண்டெடுத்து தமிழ் உள்ளங்களுக்கு உவந்தளித்தவர் "கலாநிதி' ம.மு.உவைஸ். 

அன்று ம.மு.உவைஸ் வகித்த பதவியில் இன்று வீற்றிருக்கும் பீ.மு.அஜ்மல்கான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "பேராசிரியர் டாக்டர் உவைஸின் இஸ்லாமியத் தமிழிலக்கியத் திறனாய்வுப் பணிக்குச் சிகரமாக அமைந்துள்ள பணி அன்னாரின் "இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றின்' உருவாக்கமே என்று கூறலாம். தமிழிலக்கிய வரலாற்றுக்கே இதுபோன்ற விரிவான இலக்கிய வரலாறு உருவாக்கப்படவில்லை என்று கூறி பாராட்டும் வகையில் பல்கலைக்கழக வெளியீடாக வந்துள்ளது. 

"உமறுப்புலவரின் சீறாப்புராணம், குணங்குடி மஸ்தான் சாகிபுப் பாடல்கள் பங்களிப்பு தவிர இஸ்லாமிய இலக்கியங்கள் உண்டா?'' என 50-களின் துவக்கம் வரையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அடுத்த 30 ஆண்டுகளில் நான்மாடக்கூடல் பல்கலைக்கழகத்தை வைத்தே ஓர் இலங்கைத் தமிழறிஞரான உவைஸ் நன்றாகவே பதில் சொன்னார், ""இரண்டல்ல, இரண்டாயிரத்திற்கும் மேலேயே இருக்கின்றன'' என்று! 

இத்தகைய இலங்கைக் கலாநிதி ஒருவர் கடந்து வந்த கல்விப் பாலத்தைக் கவனிப்போம். கொழும்பிலிருந்து தெற்கே, வெள்ளவத்தையை அடுத்துள்ள பாணந்துறையில் (பாணன்துறை) பெரும்பான்மை சிங்களருடன் வாழ்ந்த முஸ்லிம் சமூகக் குடும்பங்களில் ஒன்று இவருடையது. 

அப்பகுதியில் தமிழ்க் கல்விக்கு இடமில்லாமல் சிங்களமும் ஆங்கிலமும் ஆக்கிரமித்திருந்த சூழலில், அந்த 20-ஆம் நூற்றாண்டு ஆரம்பப் பகுதியில் அவர்தம் தந்தையார் "மஹ்மூது லெப்பை' ஒரு தமிழ்ப் பாடசாலையை உருவாக்க ஆர்வப்பட்டு, ஒரு சிறு தமிழ் அறிவுக்கூடம் அமைக்க, அதில் "கார்த்திகேசு' எனும் இருவர் முக்கிய அங்கமாகினர். ஒரே கிராமத்தையும் ஒரே பெயரையும் கொண்ட அவர்கள் யாழ் வாசிகள். கரவெட்டி கிராமத்தவர்! அதிலும் ஒருவர், "சிவத்தம்பி' என்பாரின் அருமைத் தந்தை. 

இந்தத் "தம்பி' வேறுயாருமல்லர், தமிழ்வல்லப் பேராசிரியார் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பிதான்! இவ்விரு கார்த்திகேசுகளுடன், பண்டிதர் கந்தையா, செல்லையா ஆகியோரும் ஆரம்பக் கல்வியை வழங்கி தமிழறிவு வழங்கினர். 

பேரா.கா.சிவத்தம்பிப் பெரியார் தமது 1976-இல் வெளிவந்த கட்டுரை ஒன்றில் இவற்றையெல்லாம் வெளிச்சமிட்டுவிட்டு, "ஜனாப் உவைஸ் அவர்களது நெறிப்பாடான தமிழ் வளர்ச்சிக்கு கரவெட்டி ஊர் வழிகோலிற்று என்பது வெறும் புகழுரையாகாது'' என்று பதித்துள்ளார். இப்பதிவுப் பத்திரமாக ஏற்கப்பட வேண்டியதே! 

அப்பொழுது (1946) இலங்கை முழுவதற்கும் ஒரு பல்கலைக்கழகமே இருந்த நிலையில், உள் நுழையும் பேறு பெற்ற உவைஸ்க்குக் கிடைத்த "தமிழ் மணிகள்' ஐவர்! 

ஒருவர், அப்பல்கலைக்கழகத்திலேயே தமிழ் கற்று, விரிவுரையாளராகி, பேராசிரியராக உயர்ந்த கலாநிதி சு.வித்தியானந்தன் அன்னாரின் பிரதான ஆசிரியரானார். அடுத்தவர் சுவாமி விபுலானந்தர். அவரே தமிழைச் சிறப்புப் பாடமாக எடுக்க இவரை ஊக்குவித்தவர். மற்றும் பேராசிரியர்கள் க.கணபதிபிள்ளை, வி.செல்வநாயகம், து.சதாசிவம் முதலியோர். 

பட்டதாரியான பின் கலாநிதி (முனைவர்) சனதுக்காக (பட்டத்துக்காக) ஆய்வுப்பணி மேற்கொண்டு தமிழ் நாட்டுக்கு வந்த சமயங்களில் அவர் பெற்ற அனுபவங்கள் பல மிகவும் தனித்துவமானவை. 

1968-இல் அறிஞர் அண்ணா நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கில் "தமிழிலுள்ள முஸ்லிம் பிரபந்தங்கள்' எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்த இவருக்கு, மாநாட்டு முடிவில் பிற அகதிகள், ஆய்வாளர்களுடன் இணைத்து, பல சுற்றுலா இடங்களுடன் திருவாரூர் திருத்தலமும் செல்ல வாய்ப்பு கிடைத்தது. 

அப்பொழுது அவர் பார்வையில் பட்ட "திருவாரூர் திருத்தலக் காட்சிகள்' கட்டுரையாக மலர்ந்தது. அந்தக் கட்டுரை இலங்கையில் பிரபல நாளிதழ் "வீரகேசரி'யில் வெளியானபோது அனைத்து தமிழன்பர்களும் வியந்தனர். 

"இந்த அளவுக்கு ஒரு முஸ்லிம், "கலைமக'ளில் பாஸ்கர தொண்டைமான் எழுதிய திருத்தல வரலாறுகளைப் போல; "விகட'னில் பரணீதரன் எழுதிவந்தத் திருத்தலப் பெருமைகளைப்போல எப்படி எழுத முடிந்தது?' என்று கேள்விக் கணையிட்டு விடை கிடைக்காமல் தவித்தனர். அத்தகைய புலமை கைவரப்பெற்றிருந்தார் உவைஸ். 

1996 மார்ச் 25-ஆம் தேதி உவைஸ் "நிரந்தர ஓய்வுறக்கம்' கண்டார். 

மறுநாள், இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரு நாளேட்டில் இவர் மறைவு குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அவ்விதழின் பிரதம ஆசிரியர் ஒரு தலையங்கத்தின் மூலம் இவ்வாறு கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருந்தார். 

"ஒரு வரலாறு வற்றிவிட்டது. கலாநிதி உவைஸின் மறைவை இப்படித்தான் வர்ணிக்கலாம். மறைந்து போயிருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் செழுமைகளை எல்லாம் தேடியெடுத்துத் தூசு தட்டி, முழு உலகுக்கும் வெளிக்கொணர்ந்த மாபெரும் இலக்கியக் கடல் அவர். தமிழ், சிங்கள மக்களின், இலக்கியச் செழுமையின் இணைப்புப் பாலமாகவும் திகழ்ந்தார். ஒன்று இரண்டல்ல, எழுபதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதித் தள்ளியிருக்கிறார். சுவாமி விபுலானந்தருக்குப் பின் இந்தியப் பல்கலைக்கழக மொன்றினால் கெளரவிக்கப்பட்ட இலங்கையரான இந்தப் பேரறிஞர் சாகமாட்டார். அவரது எழுத்துக்கள் என்றும் அவரது உயிர் மூச்சை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும்''! 

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: