24/03/2013

இலக்கியம் படைத்த கல்வியாளர் - கே.ஆர்.ஸ்ரீநிவாச ஐயங்கார்! - திருப்பூர் கிருஷ்ணன்


அரவிந்தரது ஆன்மிகச் சிந்தனைகளில் நாட்டம் உடையவர்கள் ஒருபோதும் (கோடகநல்லூர் ராமஸ்வாமி ஸ்ரீநிவாச ஐயங்கார் என்கிற) கே.ஆர்.ஸ்ரீநிவாச ஐயங்கார் பெயரை மறக்க முடியாது. தற்கால இலக்கியத்தில் நாட்டம் உள்ளவர்களும் கூட அவர் பெயரை மறக்கமுடியாதுதான். அரவிந்த இலக்கியத்திற்கும் தற்கால இலக்கியத்திற்கும் அவர் செய்த தொண்டு அளப்பரியது. (வாழ்ந்த காலம் 1908 முதல் 1999 வரை - 91 ஆண்டுகள்)

1969 முதல் 1978 வரை சுமார் எட்டாண்டு காலம், ஆங்கிலப் பேராசிரியர் கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் சாகித்ய அகாதெமியின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். சில பொறுப்புகளைச் சில பொருத்தமானவர்கள் அலங்கரிக்கும் போதுதானே அந்தப் பொறுப்புக்கே ஒரு பெருமையும் முக்கியத்துவமும் ஏற்படுகின்றன. தற்காலத் தமிழிலக்கியத்தின் சிறப்பை இந்தியா அதிக அளவில் உணர்ந்தது அவரது சாகித்ய அகாதெமி பதவிக் காலத்தில்தான். ஏராளமான உயர்தரத் தமிழ் இலக்கியப் படைப்புகளை இந்தியாவின் பல்வேறு மொழிகளில் கொண்டுவர அவரது பதவி அவருக்கு உதவியது.

படிப்பு என்றால் சாமான்யமான படிப்பு அல்ல அவர் படித்தது. வாழ்நாள் முழுதும் படித்துக்கொண்டே இருந்தார். அவரை நினைக்கும்போது, அவரோடு அவர் கையில் ஒரு புத்தகமும் இருப்பதாகத்தான் பலரும் நினைவுகூர முடியும். பற்பல நூலகங்களில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவர்.

அவரது இல்லத்திலேயே மிக அருமையானதொரு நூலகத்தையும் வைத்திருந்தார். அவரது இல்ல நூலகத்தை அலங்கரித்த புத்தகங்கள் எல்லாம் அவர் படித்துக் குறிப்பெடுத்தவை. அந்த நூல்களை அவர் இல்லம் செல்பவர்கள் ஒரு பார்வை பார்த்தாலே அவரது அபார மேதைமையைப் புரிந்துகொள்ள முடியும். (வாழ்வின் கடைசி நான்கு ஆண்டுகள், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் போலவே இவரும் பார்வையிழந்த நிலையில் வாழ்ந்தார். அப்போதும் புத்தகங்களைக் கையில் வைத்துத் தடவிக் கொடுத்தவாறிருப்பார். கேட்டால், "புத்தகம் கையில் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாகவும், பழைய நினைவுகளில் மூழ்குவதாகவும்' அவர் மனம் நெகிழ்ந்து சொல்வதுண்டு.)

பட்டங்கள் பல பெற்ற சிறந்த கல்வியாளரும் கூட. சென்னைப் பல்கலையில் ஆங்கிலத்தில் எம்.ஏ., பட்டமும், சென்னை, ஆந்திரப் பல்கலைக்கழகங்களில் டி.லிட்., பட்டமும் பெற்றவர். பற்பல இடங்களில் ஆங்கிலப் பேராசிரியராய்ப் பதவி வகித்தவர். அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் கூட அவர் பேராசிரியராகப் பணிபுரிந்ததுண்டு. அவருடைய மாணவர்கள் உலகெங்கும் உள்ளனர்.

புதுவை ஸ்ரீஅரவிந்தரது தத்துவங்களில் சரண்புகுந்து வாழ்ந்தவர் கே.ஆர்.ஸ்ரீ. பகவான் ஸ்ரீஅரவிந்தர், அன்னை ஆகிய இருபெரும் ஆன்மிகச் சிங்கங்களின் தத்துவத்தைப் புரிந்துகொண்டு, அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே நூல் எழுதி, அவர்களின் ஆசியைப் பெற்றவர். அரவிந்தரது "சாவித்திரி' காப்பியத்தின் தத்துவப் பொருள்கள் குறித்து விளக்கியும் நூல்கள் இயற்றியிருக்கிறார். ஆங்கிலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

உலக அளவில் ஷேக்ஸ்பியரின் 400-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் இங்கிலாந்தில் நடைபெற்றபோது, ஆசியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே ஆங்கில அறிஞர் இவர்தான். இவரது ஆங்கிலப் புலமையின் பெருமை கடல்கடந்தும் பரவியிருந்தது.

ஆங்கில இலக்கியத்திற்கு இந்தியர்கள் அளித்த கொடை, ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய இலக்கியம் எனலாம். தமிழ் எழுத்தாளர்களில் கா.சி. வெங்கடரமணி, க.நா.சு., ஆதவன் சுந்தரம், ஆர். சூடாமணி (சூடாமணி ராகவன்), சங்கரராம் முதலிய பலர் ஆங்கிலத்திலும் எழுதியவர்கள். (அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர் தற்போது அவ்வகையில் இயங்கி வருகிறார்கள்)

அவ்வரிசையில் கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்காரின் பெயர் முக்கியமானது. சங்கரர், விவேகானந்தர், தாகூர் பற்றிய இவருடைய ஆங்கில நூல்கள் குறிப்பிடத்தக்கவை. வால்மீகியின் சுந்தரகாண்ட மொழிபெயர்ப்பு, கிருஷ்ண கீதம் முதலிய இவருடைய ஆங்கில நூல்கள் உலக அளவில் பேசப்பட்டவை. பல நூல்களின் பதிப்பாசிரியரும் கூட. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கிலக் கவிதைகள் நூல் அவற்றில் முக்கியமானது.

பற்பல உயர்நிலைப் பதவிகளை வகித்த பெருமைக்குரிய கே.ஆர்.ஸ்ரீ., ஆந்திரப் பல்கலையின் துணைவேந்தராகவும், ஆங்கிலம் மற்றும் மேலை மொழிகள் நிறுவனத்தின் உறுப்பினராகவும், ஐக்கிய அமெரிக்காவின் நவீன மொழிக் கூட்டமைப்பின் கௌரவ உறுப்பினராகவும், அகில இந்திய ஆங்கிலப் பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தவர்.

மிகச் சிறந்த ஆய்வாளர். ஒப்பீட்டு அழகியல் ஆய்வு, ஒப்பீட்டு இலக்கிய ஆய்வு போன்ற துறைகளில் இவரது பங்களிப்பு கணிசமானது. இந்திய அமெரிக்க இலக்கியங்களை ஒப்பிட்டு இவர் செய்துள்ள ஒப்பாய்வுகள் குறிப்பிடத்தக்கவை. 25 ஆண்டுகளுக்கு மேல் பற்பல ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து அவர்களை வழிநடத்தி, பல முனைவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

இவருடைய ஒரே புதல்வர் பேராசிரியர் எஸ். அம்பிராஜன், உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். ஒரு புதல்வியான டாக்டர் பிரேமா நந்தகுமார், மேடைப்பேச்சிலும் திறனாய்விலும் புகழ்பெற்று விளங்குகிறார். (டாக்டர் பிரேமா நந்தகுமாரின் மாமியார் தான் புகழ்பெற்ற எழுத்தாளரான அமரர் குமுதினி)

தமிழில் செழித்துவரும் ஆன்மிக இலக்கியமும் தற்கால இலக்கியமும் அந்தத் துறைகளுக்கு வித்திட்டு வளர்த்த கே.ஆர்.ஸ்ரீநிவாச ஐயங்காரின் பெயரை என்றென்றும் சொல்லிக்கொண்டிருக்கும். 

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: