02/03/2013

எழுத்துச் சித்தர் லா.ச.ராமாமிர்தம்

வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது என்று என்னைக் கேட்டால் எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது. நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில்தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அழகான எண்ணங்கள் நமக்கு இருக்கின்றன. நாம்தான் அந்த எண்ணங்களை உருவாக மாற்ற வேண்டும். அவ்வளவுதான் எனக்கு வாழ்க்கையைப் பற்றித் தெரிந்தது எல்லாம்'' என்று தனது வாழ்க்கைப் பயணம் பற்றியும், அந்தப் பயணத்தில் உடன் பயணிக்கும் சக பயணிகளை நேசிக்கவும் கற்றுக்கொடுத்த மிச்சிறந்த கலைஞன் லா.ச.ரா.

லா.ச.ரா. என்று அழைக்கப்பட்ட லா.ச.ராமாமிர்தம், திருச்சியை அடுத்துள்ள லால்குடியில், 1916-ஆம் ஆண்டு சப்தரிஷி- ஸ்ரீமதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ஊர் மற்றும் தந்தை பெயரை இணைத்துக்கொண்டு லா.ச.ராமாமிர்தம் என்னும் பெயரில் 16 வயதிலேயே கதைகள் பல எழுதத் தொடங்கியவர். இவரது தந்தை பள்ளி ஆசிரியர். லால்குடியில் பிறந்தாரே தவிர, தந்தையின் வேலை காரணமாக வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரம் அருகிலுள்ள அய்யம்பேட்டை என்ற கிராமத்தில்தான்.

இவரது மனைவி பெயர் ஹைமாவதி. இவருக்கும் இவரது மனைவிக்கும் பன்னிரண்டு வயது வித்தியாசம். திருமணம் நடைபெற்றபோது இவருக்கு வயது முப்பது. மனைவிக்கு பதினெட்டு. இவர்களுக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

 "எழுதிப் புகழ் அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்ததில்லை. ஆனால், எழுதாமலும் என்னால் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் பைசா தேவைப்பட்டதால் எழுதினேன். அற்புறம் காசின் மேல் ருசி விட்டுவிட்டது. என்னுடைய சாதனை என்னவென்றால், நான் எழுதி எதுவுமே வீணாக ஆனதில்லை என்பதுதான். எல்லாம் பிரசுரமாகிவிட்டன. தி.ஜ.ரங்கநாதன்தான் எனக்கு குரு. ""நீ எதை எழுதினாலும் போடுகிறேன்டா'' என்று அவர் சொன்னார். என்னுடைய எழுத்தில் உயிர் இருந்தது என்று அவர் அடையாளம் கண்டுகொண்டு விட்டார். ""நீ என்னைவிட நன்றாக எழுதுகிறேடா'' என்பார்.

 நான் ஜனரஞ்சகமான எழுத்தாளன் இல்லை, புரியாத எழுத்தாளர் என்ற பெயரைச் சம்பாதித்துக்கொண்டு அப்படியே-அதனாலேயே பிரபலமாகி விட்டவன்'' என்று தனது எழுத்து அனுபவம் குறித்து, ஒரு வார இதழில் வெளியான நேர்காணல் ஒன்றில் பெருமிதமாகக் கூறியுள்ளார் லா.ச.ரா.

லா.ச.ரா. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றியவர். அவரது வங்கி அனுபவங்கள்தான் பல சிறுகதைகளாக உருவாகியுள்ளன. லா.ச.ரா. ஒரு தனிமைப் பிரியர்; இயற்கை தாசர். தென்காசியில் பணியாற்றிய காலத்தில், குற்றால அருவியும், தாமிரபரணி ஆற்று வாழ்க்கையும் இவரது மனக்கிளர்ச்சிக்கு ஊக்கமளித்து பல கதைகளில் இயற்கைக் காட்சிகளாய் வலம் வந்திருக்கின்றன. இவர் தனிமையையும் இயற்கையையும் பெரிதும் விரும்புபவர் என்பதால், இவருக்கும் இயற்கைக்குமான உறவுக்கு இடையே இடைத்தரகர்களாக இவர் எவரையும் அனுமதித்ததில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. வாழ்க்கையில் தான் கண்டவை, அனுபவித்தவை, அவஸ்தைகள், அவலங்கள் என அவைகளையே கதைக்களமாக்கியிருப்பார்.

 லா.ச.ரா. ஓர் அம்பாள் உபாசகர். ""நான் ஒரு செüந்தர்ய உபாசகன். அழகு என்பதை தனியாக வரையறுத்துவிட முடியாது. அந்தந்த சமயத்தில் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் அழகு'' என்று கூறியுள்ள லா.ச.ரா., ""நான் நேரத்தைப் பார்ப்பது கிடையாது. எழுதுவதற்காகத் தனியாக இடம் தேடுவது கிடையாது. நீங்கள் பேசிக்கொண்டே இருந்தாலும், நான் எழுதிக்கொண்டே இருப்பேன். டீ தேவையில்லை; டேபிள் தேவையில்லை. பேப்பரும் பேனாவும் மையும் மட்டும் போதும். எந்த நிமிஷம் ஆரம்பிக்க வேண்டுமோ, அந்த நிமிஷம் ஆரம்பிக்க முடியும். அதனாலேயே என்னைக் "கோயில் மாடு' என்று கூடச் சொல்வார்கள்'' என்பது தன்னைப் பற்றிய லா.ச.ரா.வின் பதிவு.

தாயாரின் தரிசனத்தில் அம்பாளையும் அம்பாளின் தரிசனத்தில் தாயாரையும் கண்டு தரிசித்தவர் லா.ச.ரா. தனது தாய்-தந்தையைத் தவிர வேறு எவரையும் வணங்க வேண்டியது இல்லை என்பதில் தீர்மானமாக இருந்தவர்.

"அம்மாதான் என்மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவள். வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பதை அவள்தான் கற்றுக்கொடுத்தாள். அம்மாவுக்கு வாழ்க்கையில் கசப்பே கிடையாது. ஆனால், மிகவும் கசந்த வாழ்க்கை அவளுடையது. ஆனால், கசக்கவில்லை அவள். அவள் மாதிரிதான் நானும் இருக்கிறேன். எவ்வளவோ ஏமாற்றங்கள் அவளுக்கு நேர்ந்தது போலவே எனக்கும் நேர்ந்திருக்கிறது. அதற்காக நான் ஒன்றும் பயப்படவில்லை'' என தனது தாயாரைப் பற்றிக் கூறியுள்ள லா.ச.ரா. என்ற அகராதியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் எத்தனை எத்தனையோ உள்ளன.

இவரை ஒரு எழுத்துச் சித்தர் என்றுகூடச் சொல்லலாம். ஆம்! தன் நெஞ்சிலிருந்து பிறர் நெஞ்சுக்குக் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைக் (சித்துக்கலை) கற்று, அதை தனது எழுத்துகள் மூலம் செய்தும் காட்டியவர்.

இவரது "சிந்தாநதி' என்ற நாவல் "தினமணி கதிரில்' தொடராக வெளியானது. பின்னர் அந்நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது 1989-இல் கிடைத்தது.

இவரது புத்ர, அபிதா, கல் சிரிக்கிறது, பிராயச்சித்தம், கழுகு ஆகிய நாவல்களும், பாற்கடல், சிந்தாநதி ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் இரண்டும், முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம் ஆகிய கட்டுரைத் தொகுதிகள் இரண்டும் முத்திரை பதித்த படைப்புகள்.

இவை தவிர, நேசம், தயா, ஜனனி, உத்தராயணம், அலைகள், அவள், பிராயச்சித்தம், விளிம்பில், கல் சிரிக்கிறது, த்வனி, அலைகள் ஓய்வதில்லை, நான், செüந்தர்ய, என் பிரியமுள்ள சினேகிதனுக்கு ஆகிய அனைத்துமே தனித்துவம் வாய்ந்த படைப்புகள். ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக் குவித்துள்ளார் லா.ச.ரா.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய அயல் மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் அத்தனையையும் தமது படைப்பில் அழகாகக் கொண்டுவந்து இணைத்திருப்பார்.

 லா.ச.ரா., தமது படைப்புகளுக்காக பல ஆண்டுகள், (நேரம் வாய்க்கும்வரை) காத்திருந்துள்ளார் என்பதை அறியமுடிகிறது. அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி. பொறுமையாகக் காத்திருந்துள்ளார். "அபிதா'வுக்கு இரண்டு ஆண்டும், "புத்ர'வுக்கு இரண்டு ஆண்டும், "அஞ்சலி'க்கு எட்டு ஆண்டும், "கழுகு'க்கு பத்து ஆண்டுமாக காத்திருந்த பிறகுதான் கைவசப்பட்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார். இவரது பாற்கடல் படைப்பை தலையாயதாகக் குறிப்பிடுவர். இவரது புத்ர மற்றும் அபிதா நாவல்கள் மொழி நடையால் தனித்து விளங்கும் கட்டுரை நூல்கள். சிந்தாநதி, இயல்பான குறியீட்டு நடையில் எழுதப்பட்ட பிரமிக்கத்தக்க கட்டுரைத் தொடர்.

"நெருப்புன்னு எழுதினா பொசுங்கற வாசனை வரவழைக்கத் துப்பில்லன்னா எழுதாதே'' என்பது லா.ச.ரா.வின் அறிவுரை. எழுதுவதற்கென்றே பிறப்பெடுத்து வந்ததுபோல இவ்வுலகில் பிறந்து, படைப்பிலக்கிய உலகுக்கு பல பொக்கிஷங்களை வாரி வழங்கி எழுதிக்கொண்டே இருந்தார் லா.ச.ரா.

 "என்னுடைய முப்பத்தைந்து வயதிலிருந்தே மரணம் என் அண்டை வீட்டுக்காரனாக இருக்கிறான். தொடர்ந்து தெரிந்தவர்கள் யாராவது ஒருத்தர் போய்க்கொண்டே இருக்காங்க. உறவினர்களைவிட நண்பர்கள் போகும்போது பார்த்துக் கொண்டிருப்பதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. என் பங்குக்கு வாழ்க்கையின் கோப்பையில் என்ன என்ன இருந்ததோ, அது எல்லாவற்றையும் நான் பருகியாகிவிட்டது. இப்போது நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான். ஒரு நாடகமேடை போன்ற இந்த அமைப்பில், எந்தப் பக்கமாக நான் வெளியேறப் போகிறேன் என்பதுதான் அது'' என்று மரணம் குறித்த லா.ச.ரா.வின் கணிப்பு, ஒருநாள் அரங்கேறியது.

பல நோய்களுக்கு ஆளாகியிருந்த லா.ச.ரா., 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி, தமது 91-வது வயதில் மரணமடைந்தார்.

பத்து, பன்னிரண்டு விருதுகள், சாகித்ய அகாதெமி, கலைமாமணி, காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் விருது, டாக்டர் பட்டம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... இவருக்குக் கிடைத்த விருதுகளையும் பாராட்டுகளையும்.

இவரது மரணம் சிறுகதை, நாடக இலக்கிய மற்றும் தமிழ் படைப்பிலக்கிய உலகுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: